بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
இந்த ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்கியுள்ளநிலையில், நம்முடைய மாணவமணிகள் கல்விச்சாலையை நோக்கி அணியணியாய் செல்லும் அழகு காட்சிகள். வருங்கால இஸ்லாத்தையும்- வருங்கால இந்தியாவையும் தீர்மானிக்கும் சிற்பிகளான இந்த மாணவமணிகளை அழகுற வார்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அதிலும் குறிப்பாக இஸ்லாமிய பெற்றோர்களுக்கு உண்டு. ஏனெனில், வேறு எந்த சித்தாந்தங்களும் சொல்லாத அளவுக்கு கல்வியை வலியுறுத்துவதோடு, கற்பவர்களுக்கு சிறப்பையும், நன்மைகளையும் வழங்குவதாக இஸ்லாம் பறை சாற்றுகிறது.
கல்வி கற்ப்பித்தவன் இறைவனே!
மனித குலத்திற்கு வழிகாட்டியாக அனுப்பபட்ட மாநபி[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் இறக்கிய முதல் வசனமே 'படிப்பீராக' என்பதாகும்.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (96:1)
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். (96:2)
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. (96:3)
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96:4)
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96:5)
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். (96:2)
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. (96:3)
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96:4)
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96:5)
மற்றொரு வசனத்தில்,ஆதிமனிதரும், நபியும், அனைத்து மாந்தர்களின் மூல தந்தையுமான ஆதம்[ அலை] அவர்களுக்கு அல்லாஹ் கல்வி கற்றுத்தந்ததை குறிப்பிடுகின்றான்.
"ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான். (2:33)
அது மட்டுமன்றி, கல்வியில் இருவகை உண்டு. ஒன்று படிப்பதன் மூலம் அறிவது. மற்றொன்று சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிடுவதன் மூலம் அறிவது. அதனால்தான் பல்வேறு கல்வி நிலையங்களில் மாணவர்களை பயிற்றுவிக்கும் வகையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விளக்குவதை நாம் பார்க்கலாம். இப்படிப்பட்ட படிப்பினை பெறக்கூடிய பயணத்தை மேற்கொள்ளுமாறும் அல்லாஹ் தன் அருள்மறையில் பல இடங்களில் சொல்லிக்காட்டுகின்றான்;
உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள். (3:137)
கற்றவர்களே சிறந்தவர்கள்;
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்; "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்." (39:9)
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
உமர் இப்னு கத்தாப்(ரலி) எப்போதும் தன்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள் (பலர்) இருக்கிறார்களே (அவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்வதில்லையே ஏன்?)" என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) அவை, 'அது உங்களுக்குத் தெரிகிற (அவர் ஒரு கல்வியாளர் என்ற) காரணத்தால் தான்" என்று பதிலளித்தார்கள்.[புஹாரி]
உமர் இப்னு கத்தாப்(ரலி) எப்போதும் தன்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள் (பலர்) இருக்கிறார்களே (அவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்வதில்லையே ஏன்?)" என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) அவை, 'அது உங்களுக்குத் தெரிகிற (அவர் ஒரு கல்வியாளர் என்ற) காரணத்தால் தான்" என்று பதிலளித்தார்கள்.[புஹாரி]
கற்றவர்க்கு கிடைக்கும் பரிசு;
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (58:11)
இத்தகைய சிறப்புகளை பெற்றுத்தரும் கல்வி எது என்பதை பார்ப்போம்.
கல்வியில் மூன்று வகை உண்டு;
*மார்க்க கல்வி
*மார்க்கம் அனுமதித்த உலக கல்வி
*மார்க்கம் தடை செய்த உதவாக்கல்வி
மார்க்க கல்வியை பொறுத்தவரையில் அது இம்மைக்கும்-மறுமைக்கும் பயனளிப்பவையாகும். ஆனால் இஸ்லாமிய சமூகம் மார்க்க கல்விக்கு இரண்டாம் இடத்தை வழங்கிவிட்டு, உலக கல்விக்கு முதலிடத்தை வழங்கி முக்கியத்துவம் அளிக்கிறது. காரணம் மார்க்க கல்வியை கற்பதால் பொருளாதார ரீதியில் என்ன பலன் என்ற கணக்கு போடுவதுதான். தன்னுடைய பிள்ளையை எல்.கே.ஜி.யில் சேர்க்க இரவு பகலாக முயற்ச்சிக்கும் பெற்றோர், மதரசாவில் சேர்ப்பதற்கு பெரிய அளவில் 'ரிஸ்க்' எடுப்பதில்லை.
சில ஊர்களில் காலையில் பள்ளிவாசல் இமாம் ஓதிக்கொடுக்கும் மதரசாவிற்கு செல்லும் பிள்ளைகளை பார்த்தால் தூங்கிய முகத்தோடு, கிழிந்த அல்-குர்ஆணை எடுத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக செல்வதை பார்க்கலாம். அதே நேரத்தில் உலக கல்வி கற்க பள்ளிக்கு செல்லும்போது குளித்துமுழுகி, பவுடரடித்து, சீருடை அணிந்து அழகாக செல்வதை காணலாம். இதற்கு காரணம் அந்த பிள்ளைகளல்ல; பெற்றவர்கள்தான். உலக கல்விக்கு தரும் இந்த முக்கியத்துவத்தை மார்க்க கல்விக்கும் தரவேண்டும். உலக கல்வியின் பலன் இந்த உலகத்தோடு முற்றுப்பெற்று விடும். மார்க்க கல்வி ஒன்றே மறுமைவரை துணையிருக்கும் என்பதையும், என்னதான் உலக கல்வியில் உச்சத்திற்கு சென்றாலும் மார்க்ககல்வி கற்றவர்களால்தான் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் தங்களின் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் பெற்றோர்களும் உணரவேண்டும். பிள்ளைகளும் உணரவேண்டும்.
அன்று அருமை சகாபாக்கள்மார்க்கத்தை கற்பதில் எந்த அளவுக்கு ஆர்வமாய் இருந்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சான்று;
உமர்[ரலி] அறிவித்தார்கள்;
'நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார்.[புஹாரி]
பெண்களின் ஆர்வம்;
(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்.[புஹாரி]
மேற்கண்ட இரு நபி மொழிகளும் மார்க்கத்தை அறிந்து கொள்வதில் சத்திய சகாபாக்களுக்கு இருந்த ஆர்வத்தை படம்பிடித்து காட்டுகிறது. அதுபோல் நாமும் மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
உலக கல்வி;
உலக கல்வியை பொறுத்தவரையில் மார்க்கத்திற்கு உட்பட்டு அதை கற்பதில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் கல்வியை தூண்டக்கூடிய மார்க்கத்திற்கு சொந்தக்காரர்களாகிய நம் சமுதாயம், ஏனைய சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. இதற்கு காரணம் அறியாமை ஒருபுறம். வறுமை மறுபுறம். நம் பிள்ளை என்னத்த படிச்சாலும் நமக்கு என்ன அரசாங்க உத்தியோகமா கெடைக்க போகுது என்ற விரக்தி நம் மக்கள் மத்தியில் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அரசாங்கம் வேலை வாய்ப்பு தந்தால், அதை ஏற்கும் தகுதியுடைய கல்விமான்களாக நாம் தயாராக வேண்டும் எனபதை ஏனோ மறந்து விட்டோம். எதோ கையெழுத்து போடும் அளவுக்கு படிப்பது; மீசை வளர்ந்தவுடன் பாஸ்போர்ட் எடுப்பது; வளமான இளமையை வளைகுடாவில் தொலைப்பது; இப்படியே நம் சமுதாய மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது. இந்த நிலை மாறவேண்டும். இட ஒதுக்கீடு கொடு என்று கேட்பதற்கு முன்னால், அந்த இடத்திற்கு தகுதியானவர்களாக நாம் மாறவேண்டும்.
நம் சமுதாயம் கல்வியில் பின் தங்கியிருப்பதற்கு வறுமை காரணம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். அரசாங்கம் இலவசமாக புத்தகம் வழங்கினாலும், தன் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட மற்ற பொருட்கள் வாங்கி கொடுப்பதற்கு இயலாத எத்துணையோ பெற்றோர்கள் இருக்கிறார்கள். மேலும் மேல்படிப்பிற்கு செலவு செய்ய முடியாத பெற்றோர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை இடை நிறுத்தம் செய்துவிடாமல் கண்காணித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும். கோடிகளை கொட்டி மாநாடு நடத்தும் பணத்தில் குறைந்த பட்சம் நூறு பட்டதாரிகளை உருவாக்கிவிடலாம். உப்பு சப்பில்லாத விசயத்திற்கு கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யும் பணத்தில் பல நூறு பட்டதாரிகளை உருவாக்கிவிடலாம். இதையெல்லாம், சமுதாயத்தில் உள்ளவர்களிடம் வசூல் செய்து அமைப்பு நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் வறிய நிலையில் உள்ள முஸ்லீம் மாணவமணிகளுக்கு இலவச/குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க முன்வரவேண்டும்.
உதவா கல்வி;
சில வசதி படைத்த முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ் இதுபோன்ற மார்க்கம் தடுத்த கல்விகளுக்கு பயிற்றுவிக்கிறார்கள் . நிச்சயமாக இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இந்த கல்வி நன்மைக்கு பதிலாக தீமையையே பெற்றுத்தரும் எனபதை விளங்கவேண்டும்.
கல்விக்காக பிராத்தியுங்கள்;
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (20:114)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தைச் மார்க்க கல்வியிலும்-உலக கல்வியிலும் தேர்ந்த சமுதாயமாக ஆக்கி அருள்வானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக