அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 25 ஜூலை, 2010

இருந்த நிம்மதியையும் பறித்த அவுலியா[!]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மரணித்து மண்ணோடு மக்கிப் போன மகான்[!]களுக்கு எந்த 'பவரும்' இல்லை என்பதற்கு ஏர்வாடியில் கரிக்கட்டையாகிப் போனவர்கள் சரித்திர சான்றாக இருந்து கொண்டிருக்க, அதையெல்லாம் புறந்தள்ளி 'இன்னும் கெடுவோம் என்ன பந்தயம்' என்ற ரீதியில் மக்களில் ஒரு சாரார் தர்காக்களை நோக்கி படையெடுப்பதை பார்க்கிறோம்.

இப்படித்தான், மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த கவுஸ் பாட்ஷா விபத்தில் இறந்துவிடுகிறார். கணவனை இழந்த ஒரு முஸ்லிம் பெண்மணி செய்யவேண்டியது என்ன..? பொறுமையை கைகொண்டு அதோடு, 'இறைவா! என்னிடமிருந்து எடுத்துக் கொண்டதை விட சிறந்ததை தந்தருள்வாயாக' என்று அல்லாஹ்விடம் துஆ செய்துவிட்டு அவனது ஆதரவை நாடி வாழ்க்கையை தொடர்ந்திருக்கவேண்டும். ஆனால் அப்பெண்ணோ கோரிப்பாளையம் தர்காவில் தனது பச்சிளம் பாலகனுடன் நிம்மதியை[!] நாடி தங்கியிருக்கிறார். அப்போது அதே தர்காவில் தங்கியிருந்த முஸ்லிம் மந்திரவாதி[!] அந்த பாலகனை கடத்திச்சென்று அதை துண்டு துண்டாக வெட்டி அதன் ரத்தத்தையும் குடித்துள்ளான் அந்த பாவி. இவ்வாறு செய்ததற்கு காரணம் கனவில் அசரீரி கேட்டதுதான் என்கிறான் இந்த பாவி.

மார்க்கம் அனுமதிக்காத இடத்தில் நிம்மதியை நாடி சென்ற பெண், தனது பாலகனை பறிகொடுத்து இருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியையும் இழந்து தவிக்கிறார். தன்னிடம் நிம்மதியை நாடி வந்த பெண்ணுக்கு நிம்மதியை தர முடிந்ததா இந்த அவுலியாவால்..? என்பதை அவுலியா பக்தர்கள் சிந்திக்கவேண்டும். எவ்வித பாதுகாப்பின்றி தன்னை மட்டுமே பாதுகாப்பாக கருதி தனது தளத்தில் தங்கிய அபலைப் பெண்ணின் பாலகனை 'நரபலி'யில் இருந்து பாதுகாக்க முடிந்ததா இந்த அவுலியாவால்..? பச்சிளம் பாலகனை இரக்கமின்றி கொல்லச்சொல்லும் அசரீரி ஒரு இறைநேசர் சொன்னதாக இருக்குமா..? ஷைத்தான் மட்டுமே இத்தகைய செயலை செய்யுமாறு தூண்டுவான். [நாம் கோரிப்பாளயத்தாரை ஷைத்தான் என்று சொல்லவில்லை] மார்க்கம் சொல்லாத இடத்தில் அமைதியோ, அருளோ நாடி சென்றால் இதுதான் நடக்கும் என்பதற்கு ஏர்வாடிக்கு அடுத்த சான்றாக இந்த சம்பவம் திகழ்கிறது. இத்தகைய முஸ்லிம்களின் பார்வைக்கு ஒரு வசனம்;



அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீமையை நாடினால், அவனிடமிருந்து உங்களை பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் [அதை தடுப்பவர் யார்?] அல்லாஹ்வையன்றி [வேறு யாரையும்] பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள் என்று [நபியே] நீர் கூறுவீராக.
[அல் குர்ஆன் 33 ;17 ]

அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக!