அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 31 மார்ச், 2009

வாரித்தெளிக்கும் வாக்குறுதிகளும் வல்லோனின் விசாரணையும்!

கோடைக்காலம், குளிர்காலம், மழைகாலம் என்று மாறிவரும் பருவகாலங்களை போல் இது வாக்குறுதி காலம். தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டு திருமண[கூட்டணி] விவாகரத்து[கூட்டனிமுறிவு]கள் முடிவு செய்யப்பட்டு, படை பரிவாரங்களோடு பாமர மக்களை சந்தித்து அவர்களின் ஒரே சொத்தாக இருக்கக்கூடிய வாக்கு எனும் சொத்தை பறிக்க, 'சொத்தை' வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்க அரசியல்வாதிகள் கிளம்பிவிட்டார்கள். இந்த அரசியல்வாதிகள் அணியில் முஸ்லீம் சமுதாய அணிகளும் உண்டு.இந்த தேர்தலில் இலவச இணைப்பாக 'அரசியல் சாக்கடையை சந்தனமனம் கமழும் இடமாக மாற்றப்போகிறோம்' என்று புதிய அரசியல் அவதாரம் எடுத்துள்ள சமுதாய அமைப்புகளும் உண்டு. இவர்களில் அனைவருமே வாக்குறுதிகளை தந்தால்தான் வாக்குகளை அறுவடை செய்யமுடியும் எனவே, வாக்குறுதிகளை தாராளமாக வாரிவழங்க தயங்கமாட்டார்கள். ஏனெனில், ஜெயித்து அரியாசனத்தில் அமர்ந்துவிட்டால் வாக்களித்தவர்களுக்கு வழக்கம்போல 'அல்வா' கொடுத்துவிடலாம் என்ற நினைப்புதான். ஆனால் ஒரு முஸ்லீம் வாக்குறுதி விஷயத்தில் எப்படியிருக்கவேண்டும் இதோ அல்லாஹ் கூறுகின்றான்;

وَلاَ تَقْرَبُواْ مَالَ الْيَتِيمِ إِلاَّ بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُواْ بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْؤُولاً
அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.17:34

வாக்குறுதியின் வகைகள்;
வாக்குறுதி இரு வகைப்படும். 1. மார்க்கத்திற்கு உட்பட்டது.2. மார்க்கத்திற்கு முரணானது.
இதில் மார்க்கத்திற்கு உட்பட்ட வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படல் வேண்டும். அதே நேரத்தில் மார்க்கத்திற்கு முரணான வாக்குறுதி தரக்கூடாது அப்படி தந்தால் அதை நிறைவேற்றக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு முஸ்லீம் நான் கோவிலை புனர் நிர்மாணம் செய்து தருவேன் என்று வாக்குறுதியளித்தால் அதை நிறைவேற்றக்கூடாது. நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒருவர் ஒரு செயலை செய்வதாக வாக்குறுதி தந்த பிறகு அதைவிட சிறந்ததை கண்டால், சிறந்ததையே நிறைவேற்றுங்கள்.
நூல்;முஸ்லிம்.

சின்ன சின்ன வாக்குறுதியாயினும் நிறைவேற்றவேண்டும்;
அப்துல்லாஹ்இப்னு ஆமிர்[ரலி] அவர்கள் கூறுகிறார்கள்; நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் வீட்டுக்கு நபி[ஸல்]அவர்கள் வந்தார்கள். நான் விளையாடிக்கொண்டிருந்தபோது என் தாயார், அப்துல்லாஹ்வே! இங்கே வா உனக்கு ஒரு பொருள் தருகிறேன் என்றார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள் என் தாயாரிடம், உண்மையிலேயே உமது மகனுக்கு தருவீர்களா? எனக்கேட்டார்கள். அப்போது என் தாயார் ஆம்! என்மகனுக்கு தருவதற்காக பேரீத்தம்பழம் வைத்துள்ளேன் என்றார்கள்.அப்போது நபியவர்கள், நீங்கள் சொன்னபடி வழங்கவில்லைஎனில் வாக்குறுதி மாறியவராவீர் என்றார்கள்.
நூல்;

சகாபாக்கள் நிறைவேற்றிய வாக்குறுதி;
அனஸ்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், 'இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), 'ஸஅத் இப்னு முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்" என்று கூறினார். ஸஅத்(ரலி) இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, 'அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவரின் சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் சகோதரி கூட அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது. "அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்." என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.
நூல்;புஹாரி,எண் 2805

பயபக்தியுடையவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களே!

بَلَى مَنْ أَوْفَى بِعَهْدِهِ وَاتَّقَى فَإِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.3:76 .

வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் நயவஞ்சகர்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
நூல்;புஹாரி,எண் 3178

பிரார்த்தனை;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துன}ப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
நூல்;புஹாரி,எண் 6306

வாக்குகளை அள்ள வாக்குறுதி அளிக்கும் முன் வல்ல இறைவனை முஸ்லிம்கள் அஞ்சிக்கொள்வதுதான் இம்மை மறுமை பயனளிக்கும்!

வெள்ளி, 20 மார்ச், 2009

தாய்சொல்லை தட்டமாட்டான் தவ்ஹீத்வாதி! எப்போது....?


மனிதர்களாகப்பிறந்த ஒவ்வொருவரும் பாவங்களை செய்யக்கூடியவர்கள்தான். செய்யக்கூடிய பாவங்களுக்கு மத்தியில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இருக்கும். சிலவிஷயங்கள் பாவம் என்று தெளிவாகவே தெரிந்து கொண்டு செய்யும் பாவங்களும் உண்டு. உதாரணமாக, மது-மாது-புகைப்பழக்கம் இதுபோன்ற பாவங்களை செய்பவர்களிடம் 'உங்களின் இந்த செயல் பாவமா? அல்லது நன்மை பயக்கக்கூடியதா? என்று கேள்வி எழுப்பினால், இது தவறுதான்! பாவம்தான்! ஆனாலும் விட முடியவில்லை என்று கூறுவதை காணலாம்.
இன்னும் சில பாவங்கள் பாவம் என்று சமூகம் அறியாமலேயே செய்யக்கூடியவைகளும் உண்டு. அவைகளில் ஒன்றுதான் பெண்ணிடம் திருமணத்தின்போது, வரதட்சனை என்றபெயரில் பணமாக, பொருளாக, சொத்துக்களாக பெண்வீட்டாரிடமிருந்து பெறுவது. இந்த செயல் பரவலாக படித்தவர் பாமரர், சாதி- மதம் கடந்து பெரும்பான்மை மக்களை ஆட்கொண்டுள்ளது. இப்படி திருமணத்தின்போது பெண்ணிடம் ஒரு ஆண்மகன் கையேந்துவது சரியா? என்ற வினாவை இவர்களை நோக்கி நாம் முன்வைத்தால், இவர்கள் சொல்லும் பதில் 'ஊரு ஒலகத்துல யாரும் செய்யாததையா நாங்க செஞ்சுப்புட்டோம்' என்று சாதாரணமாக சொல்வதை காணலாம். இவ்வாறு அவர்கள் சொல்வதற்கு காரணம் வரதட்சனை என்பது சகஜம் அது ஒரு பாவமான செயல் அல்ல. என்பது அவர்களின் எண்ணம். நாம் இந்த ஆக்கத்தில் வரதட்சனை பாவம் என்று அறியாத மக்களை பற்றி எழுதவரவில்லை. மாறாக, வரதட்சனை வாங்குவது பாவம், அப்பட்டமான இறைக்கட்டளை மீறல், என்றெல்லாம் திருமறையின் வசனத்தை 'வீராவேசமாக' முழங்கிவிட்டு தனது திருமணத்தின்போது, 'தாய்சொல்லை தட்ட முடியவில்லை' என்று வரதட்சனை வாங்கி 'பித்'அத்' திருமணம் செய்யும் தவ்ஹீத் வாதி[வியாதி]களைத்தான் இந்த கட்டுரையின் மைய கருத்தாக வைத்துள்ளோம்.
அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்;
وَآتُواْ النَّسَاء صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.4:4

இந்த வசனம் அனைத்து தவ்ஹீத்வாதிகளுக்கும் அத்துப்படி. ஆனாலும் திருமண நேரத்தில் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு வழக்கமான வரதட்சனை திருமணம் செய்வது ஏன்? இப்படி கேட்டால்நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்ணுனேன் நபிவழியில் மஹர் கொடுத்துதான் திருமணம் செய்யனும்னு. ஆனா எங்கம்மா' டேய்ய்! நான் சொல்றமாதிரி ஊரு ஒலகத்துல நடக்குறது மாதிரி நீ கல்யாணம் பண்ணலைன்னா நான் செத்துருவேன் என்று பிடிவாதமா சொன்னாங்க! அதுனால வேற வழியில்லாம 'நிர்பந்தத்துல' அப்படி பன்னவேண்டியதா போச்சு! என்று சொல்வதை பார்க்கிறோம்.

பெற்றோரை கண்ணியப்படுத்தவேண்டும், அவர்களுக்குரிய கடமையை செய்யவேண்டும் என்பதை வேறு எந்த மதமும் சொல்லமுடியாத அளவுக்கு இஸ்லாம் அளவுக்கு அதிகமாகவே சொல்லிக்காட்டுகிறது. அல்லாஹ் கூறுகின்றான்;
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!17:23

இந்த அளவுக்கு பெற்றோரை கண்ணியப்படுத்துமாறு நமக்கு கட்டளையிடும் வல்ல இறைவன், இறைவனது- இறைத்தூதரின் கட்டளைக்கு மாற்றமான ஒன்றை செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தினால், அப்போது நம் பெற்றோருக்கு கட்டுப்படாமல், நம்பெற்றோரையும் நம்மையும் இந்த உலகையும் மற்றும் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வுக்கே கட்டுப்படவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."31:15

மேற்கண்ட இந்த வசனம் மட்டும் தவ்ஹீத்வாதிகளுக்கு மறந்ததேன்! அப்ப தவ்ஹீத் என்றால், தர்காவுக்கு செல்லக்கூடாது, பாத்திஹா ஓதக்கூடாது, தொழுகையில் விரலசைக்கணும், பள்ளிவாசல் சுவர் கீறல்விழும் அளவுக்கு ஆமீன் என்று அலரனும். இவைதான் தவ்ஹீத் என்ற குறுகிய வட்டத்தில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் நபி[ஸல்] அவர்களால் உருவாக்கப்பட்ட சத்தியசகாபாக்கள், பெற்றோருக்கு பணிவிடை செய்வதிலும், எந்த குறையும் வைக்கமாட்டார்கள். அதே நேரத்தில் இறைக்கட்டளைக்கு மாற்றமான ஒன்றை பெற்றோர் செய்யத்தூன்டினால், பெற்றோரை புறக்கணிப்பார்கலேயன்றி, இறைக்கட்டளையை புறக்கனிக்கமாட்டார்கள். இதோ! ஸ'அத் இப்னு அபீவக்காஸ் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி;
நான்[ஸ'அத்] இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை என்னுடன் பேசமாட்டேன் என்றும், உன்னவும் பருகவும் மாட்டேன் என்றும் என்தாயார் சத்தியம் செய்துவிட்டார்.மேலும் என்தாய், உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். நான் உன்தாய். நான்தான் இவ்வாறு[ இஸ்லாத்தை விட்டுவிடுமாறு] கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் என்தாயார் மயக்கமுற்றுவிட்டார்கள். அப்போது அவரது உமாரா எனப்படும் மகன், என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார்.அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார். அப்போது அல்லாஹ்,
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
ஆகிய வசனங்களை அருளினான். என்று ஸ'அத் இப்னு அபீவக்காஸ்[ரலி] அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் 4789. ஹதீஸாக பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில், தன்னுடைய தாய் மூன்று நாட்கள் உணவருந்தாமல், பருகாமல் மயக்கமுற்றபோதும், ஸ'அத் [ரலி] அவர்கள், தன்னுடைய தாயின் கட்டளையைவிட இறைக்கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்த அந்த உறுதி இன்றைய தவ்ஹீத்வாதிகளிடம் காணாமல் போனதேன்..?

இறுதியாக உபதேசம் ஊருக்குத்தான்;பேசும் எங்களுக்கல்ல.என்று கருதுபவர்களே! இதோ! அல்லாஹ்வின்கூற்றை கவனியுங்கள்;


يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (61:2)كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَநீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:3)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை சொல்லிலும், செயலிலும் தவ்ஹீத்வாதிகளாக வாழ்ந்து மரனிக்கச்செய்வானாக!

ஞாயிறு, 15 மார்ச், 2009

இஸ்லாம் கூறும் அழகியகடன்!

உலகில் வாழும் அன்றாடங்காச்சி முதல் அரசாட்சி செய்யும் ஆட்சியாளர்கள் வரை ஒவ்வொருவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டே வருகின்றனர். இவர்களின் கொடுக்கல்- வாங்கல்கள், கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மத்தியில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக பிளவை ஏற்ப்படுத்துவதையும், பிரச்சினைகள் ஏற்பட்டு கோர்ட் படியேறுவதையும், சில வேளைகளில் கொலையில் போய் முடிவதையும் பார்க்கிறோம்.இதற்கு அடிப்படை காரணம் கொடுக்கல்-வாங்கலில், இவர்கள் இஸ்லாமிய வழிமுறையை கடைபிடிப்பதில்லை. இறைவனை வணங்கும் விஷயத்திலிருந்து மனிதனின் அன்றாட வாழ்க்கை வரை வழிகாட்டும் வல்ல இறைவனின் மார்க்கம் இதற்கும் ஒரு அற்புதமான வழியை காட்டுகிறது.

முதலில் யாருக்கு கடன் கொடுக்கவேண்டும்;
நம்மிடத்தில் ஒருவர் கடன் கேட்கிறார் என்றால் கேட்டவுடன் தூக்கிக்கொடுத்துவிடக்கூடாது. அவர் எந்த விஷயத்திற்காக கடன் கேட்கிறார் என்பதை அறிய வேண்டும். கடன் கேட்பவர்களில் மூன்று சாரார் உண்டு.
* கல்வி-மருத்துவம்-உணவு, உடை, இருப்பிடம்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள்.
*மது- சூதாட்டம் போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்.
*ஊர் மெச்சவேண்டும் என்பதற்க்காக ஆடம்பர திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பெயர் சூட்டுவிழா, கந்தூரிவிழா இதுபோன்ற இன்னும் பல பித்அத்தான காரியங்களை செய்வதற்காக கடனுதவி கேட்பவர்கள்.
இவர்களில் முதல் சாரார் மட்டுமே நாம் கடன் வழங்க தகுதியானவர்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்;
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.5:2.
கடன் கொடுப்பவர்கள் கடைபிடிக்கவேண்டியவை;
இன்று கொடுக்கல்-வாங்கலில் பெரும்பாலும் நம்மவர்கள் எழுதி வைத்துக்கொள்வதில்லை.மேலும், கடன் கொடுக்கும்போது சாட்சிகளும் வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இதுதான். அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلاَ يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لاَ يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُواْ شَهِيدَيْنِ من رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاء أَن تَضِلَّ إْحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الأُخْرَى وَلاَ يَأْبَ الشُّهَدَاء إِذَا مَا دُعُواْ وَلاَ تَسْأَمُوْاْ أَن تَكْتُبُوْهُ صَغِيرًا أَو كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِندَ اللّهِ وَأَقْومُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلاَّ تَرْتَابُواْ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلاَّ تَكْتُبُوهَا وَأَشْهِدُوْاْ إِذَا تَبَايَعْتُمْ وَلاَ يُضَآرَّ كَاتِبٌ وَلاَ شَهِيدٌ وَإِن تَفْعَلُواْ فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَيُعَلِّمُكُمُ اللّهُ وَاللّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.2:282.
* தேவைப்படின் அடமான பொருளை வாங்கிக்கொண்டு கடன் கொடுத்தல் சிறந்தது;
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُواْ كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ تَكْتُمُواْ الشَّهَادَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.2:283.

மேலும்,ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள்.நூல்;புஹாரி,எண் 2513

கடன் கொடுத்தவர் கஷ்டத்தில் இருந்தால், கடனை பாதியாக குறைப்பது; அவகாசம் அளிப்பது; தள்ளுபடி செய்வது.
*பாதியை குறைத்தல்;
கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃப் இப்னு மாலிக்! கஃபே' என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே! என்றேன். 'பாதியைத் தள்ளுபடி செய்வீராக! என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி 'எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!" என்று நபி(ஸல்) கூறினார்கள். நூல்;புஹாரி,எண் 471

*அவகாசம் அளித்தல்[அல்லது]தள்ளுபடி செய்தல்;
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُواْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.2:280.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி,எண் 2391

கடனை அதிகாரமாக கேட்பதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு;
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு" என்று கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி,எண் 2401
கடன் வாங்கியவர்களின் கடமைகள்;
நம்மில் பெரும்பாலோர் கடன் வாங்கும்போது அதை திரும்பச்செலுத்தும் எண்ணத்துடன் வாங்குவதில்லை. 'அல்வா' கொடுக்கும்நோக்கத்தோடு கடன் வாங்குபவர்களும் உண்டு. ஆனால் ஒரு உண்மையான முஸ்லீம் கடனை திரும்பச்செலுத்தும் நோக்கத்துடனே கடன் வாங்கவேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.நூல்;புஹாரி,எண் 2387

வாங்கிய கடனை விரைவாக திருப்பி செலுத்துதல்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். நூல்;புஹாரி,எண் 2400

கடனாளிக்கு தொழுகை நடத்த மறுத்த நபி[ஸல்] அவர்கள்.
தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை!" என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்!" என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!" என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!" என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்;புஹாரி,எண் 2295
கடனிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு தேடல்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். நூல்; புஹாரி,எண் 2397

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை கடன் வாங்குவதிலிருந்து பாதுகாத்து, இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ அருள்புரிவானாக!

வியாழன், 12 மார்ச், 2009

உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்!

இன்று முஸ்லிம்களில் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளுடன் வாழ்பவர்களை அதிகமானோரை பார்க்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கும் முஸ்லிம்களையும் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் போய், 'நீங்கள் உங்கள் உறவினரோடு சேர்ந்து வாழக்கூடாதா?' என்று நாம் சொன்னால், அட! போங்க!! அவன் வீட்லயா எனக்கு சாப்பாடு! என்று சாதாரணமாக உறவுகளை உதாசீனப்படுத்துவதை பார்க்கிறோம்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார்.நூல்;புஹாரி,எண் 6237

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இவ்வாறு கூறியிருக்ககல்யாண வீட்டில் எனக்கு பந்தியில் எலும்பைத்தான் போட்டான்' என்ற உப்பு சப்பில்லாத விஷயத்திற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல், உறவினர்களை உதாசீனம் செய்பவர்கள் சிந்திக்கவேண்டும்.
உறவை சேர்த்து வாழ்வது என்றால் என்ன?
நம்மோடு யார் கொஞ்சி குலாவுகிரார்களோ அவர்களோடு உறவாக இருப்பதா? இல்லை.
இதோ! நபி[ஸல்] கூறும் உறவின் இலக்கணம் பாரீர்;
உக்பா இப்னு ஆமிர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் வந்து, யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது எனவினவ, அதற்கு நபி[ஸல்]அவர்கள் இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார் என்று நபியவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லீம் 4640.

மேலும், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் போதுமென்று சொல்லாத விஷயங்கள் இரண்டுதான். 1. செல்வம் 2 .ஆயுள். கோடிக்கணக்கில் செல்வத்தை சேர்த்து வைத்துள்ளவனிடம், இன்னொரு கோடியை காட்டிஇது வேணுமா? என்றால் ஆமா! வேணும் என்றுதான் சொல்வான். அதுபோல நூறுவயசு குடுகுடு கிழவனிடம் அவன் உயிர் பிரியும் நேரத்தில் உனக்கு இறுதி ஆசை என்ன? என்றால் இன்னொரு பத்து வருஷம் வாழ்ந்தால் நல்லாருக்குமே என்பான்!
நாம் விரும்பும் செல்வமும்-ஆயுளும் அதிகமாக வேண்டுமெனில் இதோ நபியவர்களின் பொன்மொழி பாரீர்!

தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணிவாழட்டும்.நூல்;புஹாரி,எண் 5985

நம்முடைய உறவுக்கு உதவுவதால் நமக்கு கிடைக்கும் இரட்டிப்பு பரிசுகளை பாரீர்;
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார். பள்ளிவாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'எந்த ஸைனப்?' எனக் கேட்டதும் பிலால்(ரலி), 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) 'ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்திற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" எனக் கூறினார்கள். நூல்;புஹாரி,எண் 1466

உறவை சேர்த்து வாழ்ந்தால்த்தான் நம்முடைய இலக்கான சொர்க்கத்தை அடைய முடியும்;
ஒரு மனிதர் நபி[ஸல்]அவர்களிடம் வந்து, 'சொர்க்கத்தில் என்னை சேர்ப்பிக்கக்கூடிய நற்செயலை எனக்கு அறிவித்து தாருங்கள் என வினவ, அதற்கு நபியவர்கள்,*அல்லாஹ்வை வனங்கு.*அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கதே!*தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தை வழங்கு.*உறவினரை சேர்த்து வாழ்வீராக!என்று கூறினார்கள்.
இம்மையிலேயே தண்டனைதர தகுதியான பாவம்!
இந்த உலகில் பல்வேறு பாவங்களை செய்கிறோம். நாம் செய்யும் பாவங்களுக்காக அல்லாஹ், உடனுக்குடன் தன்டிக்கநினைத்தால் நாம் யாருமே தப்பமுடியாது. நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனையை மறுமைவரை தள்ளிவைத்துள்ளான். இருப்பினும்,
நபியவர்கள் கூறினார்கள்;
மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு முன் இம்மையிலும் துரிதமாக தண்டனை அளிப்பதற்கு ஏற்ற பாவங்கள்; அநியாயமும், உறவை முறிப்பதும்தான்.
நூல்;அபூதாவூத்

சொர்க்கத்தின் திறவுகோல் உறவு;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
நூல்;புஹாரி,எண் 5984

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொர்க்கமே இலக்கு! அந்த சொர்க்கத்தை அடைய பழுதடைந்திருக்கும் நமது 'உறவு' பாலத்தை இன்றே புதுப்பிப்போம்! இறையருள் பெறுவோம்!!

புதன், 11 மார்ச், 2009

அமைப்புக்கொரு பள்ளிவாசல் எழுப்புவது சரியா?-சம்சுதீன்காசிமியின் பதில்!

'பெருகி வரும் தனிப்பள்ளிகளும், அருகிவரும் ஒற்றுமையும்' என்ற தலைப்பில் இரு பாகங்கள் அடங்கிய கட்டுரை நமது தளத்தில் வெளியிடப்பட்டது. தனிப்பள்ளி எழுப்புவது மார்க்க அடிப்படையில் சரியா? என்ற கேள்வியை மவ்லவி சம்சுதீன் காசிமி அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்களின் பதில் அவர்களது வலைதளத்தில்[மக்கா மஸ்ஜித்.காம்] வெளியிட்டுள்ளார்கள். மத்ஹப்சம்மந்தமான அவர்களின் பதிலில் நமக்கு உடன்பாடில்லை. அதே நேரத்தில் 'தனிப்பள்ளிவாசல்' விசயத்தில் அவர்களின் கருத்து எமக்கு சரியெனப்படுகிறது. இதோ உங்களின் பார்வைக்கும்;
http://makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=166:qanda-online&catid=75:others&directory=105

செவ்வாய், 10 மார்ச், 2009

உலக மனிதனே இஸ்லாத்தின் சாரம்! தினமணியின் அற்புதமான கட்டுரை!


குறிப்பு; செய்தியின்மீது க்ளிக் செய்து படிக்கவும்.
மீலாது மேடைகளிலும், வாழ்த்துச்செய்தியிலும் தங்களுடைய அறியாமையின் காரணமாக, இஸ்லாத்திற்கு மாற்றமாக கருத்துச்சொல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இஸ்லாம் சம்மந்தமாக மிக அற்புதமான கட்டுரையை திரு. பழ.கருப்பையா அவர்கள் வடித்துள்ளார்கள். அதை தினமணி இதழிலிருந்து எடுத்து நன்றியுடன் வெளியிட்டுள்ளோம். கட்டுரையாசிரியர் அவர்களுக்கும், தினமணி குழுமத்திற்கும் அல்லாஹ், நேர்வழிகாட்ட துஆ செய்வோம்.

வெள்ளி, 6 மார்ச், 2009

கொள்கைப்பிரிவும்- கோஷ்டிப்பிரிவும் ஒன்றா?

சமீபத்தில் ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அதில் கேள்விநேரத்தின் போது ஒருவர், 'ஆக்,ஜாக், த.மு.மு.க, அனைத்து தவ்ஹீத் ஜமாஅத், த.த.ஜ., இ.த.ஜ. இப்படி பல்வேறு பிரிவுகளாக பிரிவது சரியா? என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்தவர் 'இந்த பிரிவுகள் என்ன? இன்னும் ஒரு லட்சம் பிரிவுகள் ஏற்ப்பட்டாலும் கவலைப்படக்கூடாது. ஏனெனில், நாம் கொள்கைக்காகவே பிரிந்தோம் என்று கூறிவிட்டு, நபி[ஸல்]அவர்களும் பிளவை ஏற்ப்படுத்தினார்கள்[நவூதுபில்லாஹ்]. நபி[ஸல்]அவர்கள் கொள்கையை சொன்ன காரணத்தால் குடும்பத்திற்குள் கூட பிளவை ஏற்ப்படுத்தினார்கள். தந்தைக்கும் மகனுக்கும் மத்தியில் பிளவு ஏற்ப்பட்டது உதாரணம்; அபூபக்கர்[ரலி], அப்துர்ரஹ்மான்[ரலி] எனவே, கொள்கையை சொன்னால் ஏற்படும் பிளவு தவறில்லை என்று பதிலளித்தார்.

தவ்ஹீத் கொள்கையைச்சொன்னால் பிளவு ஏற்ப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இயக்கப்பிரிவுக்கு இது ஆதாரமாகுமா? என்பதுதான் நமது கேள்வி. ரசூல்[ஸல்] அவர்கள், அறியாமைக்கால மக்களிடம் சத்திய மார்க்கத்தை எடுத்தியம்பியபோது அங்கே பிரிவு ஏற்ப்பட்டது. எப்படிப்பட்ட பிரிவு? ஒரு பிரிவு முஸ்லிம்கள். இன்னொரு பிரிவு காஃபிர்கள்/ இணைவைப்பாளர்கள். இதைத்தாண்டி வேறு பிரிவு ஏற்ப்படவில்லை. இன்று என்ன நடக்கிறது? முஸ்லிம்களுக்குள் முதலில் பிரிவு வந்து தவ்ஹீத்வாதிகள் உதயம். இந்தப்பிரிவு வரவேற்கத்தக்கதே! அடுத்து தவ்ஹீத்வாதிகளுக்குள் ஆறு பிரிவு வந்தது ஏன்? இந்தப்பிரிவு கொள்கைக்காக வந்தது என்று வெளியிலே சொல்லிக்கொண்டாலும், உண்மை அதுவல்ல. நிர்வாகம்/ மற்றும் உலக ரீதியான மோதல்கள்தான் என்பதுதான் உண்மை.

பிரிந்த இவர்கள் தங்களின் பிரிவுக்கு காபிர்களிடமிருந்து ஒரு கூட்டத்தை முஸ்லிம்களாக மாற்றிய நபியவர்களின் செயலை ஆதாரமாக காட்டுவதுதான் வேடிக்கை. நபி[ஸல்] அவர்களின் காலத்திலும், சத்திய சகாபாக்கள் காலத்திலும் இதுபோன்று இயக்கரீதியாக பிரிந்ததற்கான சான்று உண்டா? மிஞ்சிப்போனால் அலி[ரலி]-ஆயிஷா[ரலி]; அலி[ரலி]-முஆவியா[ரலி] ஆகியோருக்கு மத்தியில் நடந்த போரை ஆதாரமாக காட்டுவார்கள். இந்த போர்கள் மார்க்கத்தில் அலி[ரலி] அவர்கள் 'தடம்புரண்டுவிட்டார்கள்' என்று ஆயிஷா[ ரலி] போர் தொடுத்தார்களா? மார்க்கத்தில் முஆவியா[ரலி] அவர்கள் 'தடம் புரண்டுவிட்டார்கள்' என்று அலி[ரலி] போர் தொடுத்தார்களா? இல்லையே! ஆளுக்கொரு ஜமாத்தை உருவாக்கிக்கொண்டு ஒருவரையொருவர் வசைமாரி பொழிந்துகொண்டார்களா? இல்லையே! போரில் ஆயிஷா[ரலி] தோல்வியை தழுவியதும் அவர்களை அலி[ரலி]அவர்கள் கண்ணியமாக, பாதுகாப்பாக அனுப்பவில்லையா? அலி[ரலி]அவர்களுக்கு எதிராக போர்தொடுத்தது தவறு என்று பின்னாளில் ஆயிஷா[ரலி] வருந்தவில்லையா?

எனவே, நாம் சொல்லவருவது ரசூல்[ஸல்] அவர்கள் காபிர்களிடமிருந்து முஸ்லிம்கள் என்ற பிரிவை தோற்றுவித்தார்களேயன்றி, முஸ்லிம்களுக்குள் இயக்கப்பிரிவை ஒருபோதும் உருவாக்கவில்லை. எனவே, இயக்கப்பிரிவுக்கு இது ஆதாரமாகாது.

அல்லா கூறுகின்றான்;
إِنَّ الَّذِينَ فَرَّقُواْ دِينَهُمْ وَكَانُواْ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَفْعَلُونَ
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)
شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاء وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13)

செவ்வாய், 3 மார்ச், 2009

மறுமையின் வெற்றி பொறுமையில்!

மனிதனின் இம்மை மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பொறுமைதான். அன்றாடம் நம்வாழ்வில் நிகழ்த்தும் காரியங்கலானாலும், நாம் எதிர்நோக்கும் பிரச்சினையானாலும், நம்மை படைத்த இறைவனை வணங்கும் விசயமானாலும் அனைத்திலும் பொறுமை இருந்தால்தான் வெற்றிபெறமுடியும். அவசரப்பட்டு செய்யும் எந்த காரியமானாலும் அதில் முழுமையிருக்காது. ஏதேனும் ஒரு செயலை நாம் செய்து அதனால் நாம் பாதிப்பை உணரும்போது, 'ஒருநிமிஷம் நான் பொறுமையா இருந்திருக்கக்கூடாதா?' என்று புலம்புவதையும் நம் வாழ்வில் சந்தித்தே வருகிறோம். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்;

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.2:153 .
தொழுகையில் பொறுமை;
.......................................................
இன்று அவசரயுகத்தில் அல்லாஹ்வை வணங்குவதும் ஜெட் வேகத்தில்தான். குறிப்பாக ரமலான் மாதத்தில் இரவுத்தொழுகையில் இருபது ரக்'அத் தொழுகிறோம் என்ற பெயரில், பொறுமையின்றி மின்னல்வேக தொழுகை தொழுவதை பார்க்கிறோம்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.நூல்;புஹாரி,எண் 994 ,

ஸஜ்தாவிற்கு மட்டும் ஐம்பத்து வசனங்கள் ஓதும் நேரம் சுமார் பத்து நிமிடங்கள் என்றால், இன்று இருபது ரக்'அத்துகளை இருபத்து நிமிடத்தில் தொழுபவர்கள் சிந்திக்கவேண்டும்.
பிரார்த்தனையில் பொறுமை;
.............................................................
நம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்போது, அந்த தேவையை அல்லாஹ் தாமதமாக நிறைவேற்ற நாடினால், நம்மில்சிலர் அல்லாஹ்வின் மீது நிராசையடைவதை பார்க்கிறோம். நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.
நூல்;புஹாரி,எண் 6340

போரில் தேவை பொறுமை;
...........................................................
அல்லாஹ் கூறுகின்றான்;
நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்). 8:65.

நோயின் போது தேவை பொறுமை;
.............................................................................
நமக்கு நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்வதோடு, நோயை நீக்குமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும். ஆனால் இன்று மருத்துவம் பார்க்கிறோம் அதில் தீரவில்லையானால் மந்திரவாதிகளை நாடி ஓடுகிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கும் நோயின் மூலம் நன்மையையும் சுவனத்தையும் அளிக்கிறான்.
அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்;புஹாரி,எண் 5652
துன்பத்திலும் தேவை பொறுமை;
.........................................................................
கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள்.நூல்; புஹாரி,எண் 6943
பிரியமானவரை இழக்கும் நிலையிலும் பொறுமை;
...........................................................................................................
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.நூல்;புஹாரி,எண் 6424
வறுமையிலும் பொறுமை;
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை' என்று கூறினார்கள். நூல்;புஹாரி, எண் 6470

பொறுமை பற்றி ஏராளமான செய்திகள் உண்டு. படிப்பவர்களின் 'பொறுமையை' சோதிக்கக்கூடாது எனபதற்காக சுருக்கமாக தந்துள்ளோம். அல்லாஹ் நம்மை பொருமையாளர்களாக வாழ்ந்து மரணிக்கச்செய்து, பொறுமையாலர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தில் சேர்த்தருள்வானாக!