அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

இஸ்லாமிய புத்தாண்டும்-இதர புத்தாண்டுகளும்.




உலக அளவில் இனரீதியாக மதரீதியாக புத்தாண்டுகள் ஏற்படுத்தப்பட்டு அவை கொண்டாடப்பட்டு வருவதை நாம்பார்க்கிறோம். தமிழ் மொழியை முன்னிலைப்படுத்தி சித்திரை முதல்தேதி கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு இப்போது தைமாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. உலகில் பெரும்பாலோரால் கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு ஜனவரி முதல்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பெரும்பாலோர் நடத்தும் கூத்துக்கள் சொல்லி மாளாது. நட்சத்திர ஹோட்டல்களில், மதுபார்களில், சூதாட்டக்கிளப்புகளில் இவர்களது புத்தாண்டுகள் நிறைவடையும்.


கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற நம் நாட்டிலேயே இந்த லட்சனம் எனில், மேற்கத்திய நாடுகளை சொல்லவே வேண்டாம். பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் மேலே உள்ள படத்தை பார்த்தே நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.ஆனால் தனக்கென உள்ள புத்தாண்டை மறந்த சமுதாயம் முஸ்லீம் சமுதாயம் மட்டுமே.

நம்முடைய முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஆங்கில புத்தாண்டு கொண்டாடிவருகிறார்கள். அன்றைய தினம் கணினி, மொபைல் மூலமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதையும் பார்க்கிறோம். பெரும்பாலோர்க்கு ஹிஜ்ரி ஆண்டு என்றால் பத்திரிகைகளில் போடுவதற்கு மட்டுமே என எண்ணிக்கொண்டுள்ளனர். ஆங்கில ஆண்டையும், மாதங்களையும் சரியாக நினைவில் வைத்துள்ள நம்மவர்களிடம், ஹிஜ்ரி ஆண்டையும் இஸ்லாமிய மாதங்களின் பெயரையும் கேட்டால் முழிப்பவர்கள்ஏராளம். நம்சமுதாய பெண்களில் இஸ்லாமிய மாதங்களின் பெயரை கேட்டால், முஹர்ரம் சபர் என்று பதில்வராது மைதீன் ஆண்டவுக பிறை, ஏர்வாடி இபுரமுசா பிறை என்று பட்டியல் போடுவார்கள்.

ஹிஜ்ரி1430 துவங்கும் நாம், ஹிஜ்ரிஆண்டு உருவான வரலாற்றை அறிந்துகொள்வது அவசியமாகும்.நபி[ஸல்]அவர்கள் காலத்தில் ஹிஜ்ரி ஆண்டு நடைமுறையில் இருக்கவில்லை.நபி[ஸல்]அவர்களின் மறைவுக்கு பின் இரண்டாவது அமீராக பொறுப்பேற்ற சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட உமர்[ரலி]அவர்கள், நமக்கென ஒரு நாள்காட்டி அவசியமென கருதி ஏனைய சகாபாக்களோடு ஆலோசனை செய்தார்கள். எந்த நாளை முன் வைத்து நாம் ஆண்டை உருவாக்குவது என்ற விவாதத்தில்,

ரசூல்[ஸல்] பிறந்த நாளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உருவாக்கலாம் என்று ஒருசாராரும்,

ரசூல்[ஸல்]நபியாக்கப்பட்ட நாளை முன்வைத்து உருவாக்கலாம் என்றுஒரு சாராரும்,

இஸ்லாத்திற்காக நடைபெற்ற முதல் தியாகப்பயனமான அபிசீனியா ஹிஜ்ரத் நாளை முன்வைத்து உருவாக்கலாம் என்று ஒருசாராரும்,

ரசூல்[ஸல்]அவர்கள் மதீனா ஹிஜ்ரத் நாளை முன்வைத்து ஒருசாராரும் கருத்து கூற இறுதியாக நபியவர்களின் மதீனா ஹிஜ்ரத் நாளை மய்யமாக கொண்டு உமர்[ரலி] அவர்கள் ஹிஜ்ரி ஆண்டை உருவாக்கினார்கள். அன்றைய சகாபாக்கள் தொட்டு இன்றைய முஸ்லீம் உலகம்வரை இதை அங்கீகரித்து வந்துள்ளது.


ஹிஜ்ரி 1430ல்.அடியெடுத்து வைக்கும் நாம், இந்த நாளை மற்றவர்களைப்போல் கொண்டாடவேன்டியா நாளா? என்றால் இல்லை! மாறாக சபதமேர்க்கும் நாளாகும்.


சத்திய இஸ்லாம் மார்க்கத்திற்காக நபியவர்களும், சகாபாக்களும் தான் பிறந்த ஊரை/உறவை/சொத்தை இழந்தார்களோ அதுபோல் இந்த மார்க்கத்திர்க்காக எதையும் இழப்போம்!

சத்திய மார்க்கத்திற்காக எங்கள் இன்னுயிரை இழக்கும் நிலைவந்தால் அதற்கும் நாங்கள் தயார்!

அல்-குர்'ஆணையும்-ஹதீசையும் மட்டும் பின்பற்றும் உண்மை முஸ்லீம்களாக வாழ்வோம்!

இம்மையை விற்று மறுமையை விலைக்கு வாங்கிய சத்திய சகாபாக்களை உயர்வாக மதிப்போம்! அவர்களை நையாண்டி செய்பவர்களை புறக்கணிப்போம்!

அல்-குர்'ஆணுக்கும், ஹதீஸுக்கும் உட்பட்ட கருத்தை எவர் சொன்னாலும் ஏற்போம்! இவையிரண்டுக்கும் மாறுபட்ட கருத்தை எவர் சொன்னாலும் புறக்கணிப்போம்!

என்றைக்கும் எந்த தனிமனிதருக்காகவோ/இனத்திற்காகவோ பரிந்து கொண்டு நீதிக்கும்,நியாயத்திற்கும் மாற்றமாக நடக்கமாட்டோம்!

இதுதான் இந்த புத்தாண்டின் நமது உறுதி மொழியாக இருக்கவேண்டும்.
படம்[மேல்]நன்றி;தினத்தந்தி.
குறிப்பு;இந்தபடத்தை மேற்கத்திய நாடுகளின் கலாச்சார சீரழிவை காட்டுவதற்காகவே நமது தளத்தில் வெளியிட்டுள்ளோம்.

புதன், 24 டிசம்பர், 2008

முப்படைத்தலைவர்கள்[?] பதிலளிப்பார்களா..?


சகோதரர்களே,

'ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்'என்ற பழமொழிக்கேற்ப தவ்ஹீத்வாதிகளாகிய நாம் இயக்கத்தின் பெயரால் பிரிந்துகிடப்பது அசத்தியவாதிகளுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் உள்ளது. அந்நஜாத் டிசம்பர் இதழில் வெளியான ஷேக் அப்துல்லாஹ்ஜமாலிக்கு பகிரங்க அறைகூவல் என்ற அபுஅப்துல்லாஹ்வின் விவாத அழைப்பை நாம் பிரசுரித்திருந்தோம் அதற்க்கு பதிலாக சகோதரர் முஹம்மது அல்பாஸி என்பவர் பதில் அனுப்பியுள்ளார். அதில் சிலவற்றை தங்களின் பார்வைக்குத்தருகிறோம். அவரது கொள்கையில் எமக்கு உடன்பாடில்லை எனினும், அவர் வைக்கும் கேள்விகள் நியாயமானதாக எமக்கு தோன்றுகிறது.--ஆசிரியர்.
......................................................................


அபூ அப்தில்லாஹ் அவர்கள் ஜைனுல் ஆபிதீனுடனும் கமாலுதீன் மதனியுடனும் முதலில் விவாதம் செய்யட்டும் அபூ அப்தில்லாஹ் (அந்நஜாத் ஆசிரியர்) அவர்கள் மௌலவி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களுக்கு பகிரங்க அறை கூவல் விடுப்பதற்கு முன்னால் அவரை அவர் நிரூபித்துக்கொள்ளவேண்டும்.

சுன்னத் ஜமாஅத்தை எதிர்த்தவர்கள், மத்ஹபு கொள்கையை எதிர்த்தவர்கள் இன்று சிதறிக்கிடக்கிறார்கள். மார்க்கத்தை துண்டாக்குகிறார்கள் என்று சுன்னத் ஜமாஅத்தைப் பார்த்து கூக்குரலிட்டவர்கள் துண்டு துண்டாக உடைந்திருக்கிறார்கள்.அல்லாஹ் ஒருவன், குர்ஆன் ஒன்று, இஸ்லாம் ஒன்று மத்ஹபு மட்டும் நான்கா? என்று கேட்டவர்கள் இப்போது எண்ணிக்கையில்லாமல் பிரிந்து ஒவ்வொருவருக்கும் தனித் தனிக் கொள்கை வைத்திருக்கிறார்கள்.

இம்மூவரும் ஒன்றாக இருந்துதான் மத்ஹபு மட்டும் நான்கா? என்று ஓலமிட்டவர்கள். சுன்னத் ஜமாஅத்தை எதிர்த்த இம்மூவரும் மூன்று மத்ஹபுகளாக உருவெடுத்து நட'மாடு'கிறார்கள்.நண்டு ஒரு மத்ஹபுக்கு கூடும் இன்னொரு மத்ஹபுக்கு கூடாது என்று கிண்டலடித்த, சுன்னத் ஜமாஅத்தை எதிர்த்த ஜைனுல் ஆபிதீன், கமாலுதீன் மதனி, அபூ அப்தில்லாஹ் போன்ற இவர்களுக்குள் என்ன நடக்கிறது. குர்ஆனை ஒலுவின்றி தொடலாம் என்று ஒருவர் சொல்கிறார். தொடக்கூடாது என்று இன்னொருவர் சொல்கிறார். தொழுகையில் ஆண்கள் தொடை தெரிய தொழலாம் என்கிறார் ஒருவர். இன்னொருவர் கூடாது என்கிறார்.அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டலாம் என்கிறார் ஒருவர். ஆட்டலாம் ஆட்டாமலும் இருக்கலாம் என்கிறார் இன்னொருவர். ஆட்டக்கூடாது என்கிறார் மற்றொருவர்.ஜக்காத் வருடம் வருடம் கொடுக்கத் தேவையில்லை என்கிறார் ஒருவர். கொடுக்கவேண்டும் என்கிறார் இன்னொருவர்.(சுன்னத் ஜமாஅத்தை கேலி கிண்டலடித்த இவர்களுக்குள்ளேயே ஜக்காத் பற்றி விவாதமே நடந்தது மதுரையில்) இதுபோன்ற பட்டியல் நீளும்இப்படி 25வருடங்களிலேயே இந்த அளவுக்கு சிதறி சின்னாபின்னமாகியிருக்கிறார்கள்.

இவர்களும் இவர்களைப் பின்பற்றும் கூட்டத்தாரும் குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருக்கிறதா? இல்லையா? இஸலாம் மார்க்கத்தில் அனுமதியா? அனுமதி இல்லையா? என்றெல்லாம் பார்க்காமல் ஒருவர் சொன்னார் என்பதற்காக ஏற்றுக்கொள்வதும் வேண்டாம் என்று சொன்னார் என்பதற்காகவேண்டி விட்டுவிடுவது என்ற கொள்கையுடையவர்கள் எல்லாம் சுன்னத் ஜமாஅத்தைப்பற்றி பேசுகிறார்கள்.

எனவே அபூ அப்தில்லாஹ் (அந்நஜாத் ஆசிரியர்) அவர்கள் ஜைனுல் ஆபிதீனுடனும் கமாலுதீன் மதனியுடனும் முதலில் விவாதம் செய்யட்டும். அல்லாஹ் ஒருவன், குர்ஆன் ஒன்று, இஸ்லாம் ஒன்று மத்ஹபு மட்டும் நான்கா? என்று கேட்ட இம்மூவரும் கலந்து இம்மூவரின் கொள்கையை வைத்து முதலில் விவாதம் செய்யட்டும். வஹி வந்ததுபோல திடீர் திடீரென்று மார்க்க பத்வா கொடுப்பதை நிறுத்தி, சண்டையிடுவதை நிறுத்தி இம்மூவரும் ஒன்றாக வரட்டும் மௌலவி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களிடம், விவாதம் செய்து மார்க்க விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளட்டும்.

செவ்வாய், 23 டிசம்பர், 2008

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்குஒரு பகிரங்க அறை கூவல்!. !.


ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்குஒரு பகிரங்க அறை கூவல்!. அபூ அப்தில்லாஹ். (அந்நஜாத் ஆசிரியர்)

நீங்கள் கொண்டிருக்கும் தர்கா, தரீக்கா, தக்லீது கொள்கைகள்தான் சத்தியமானவை. குர்ஆன், ஹதீஸில் உள்ளவை-நேர்வழி என்று நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை வைத்திருந்தால் பகிரங்க மேடையில் அவை பற்றி குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நேரடியாக எம்மோடு விவாதித்து நிலைநாட்ட முன் வாருங்கள். உங்களின் இந்த நம்பிக்கை உங்களின் உள்ளார்ந்த நம்பிக்கையாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் பகிரங்க விவாதத்திற்கு முன் வருவீர்கள். பின் வாங்கமாட்டீர்கள்.

ஜமாலி பகிரங்க மேடையில் விவாதித்து குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தனது தர்கா, தரீக்கா, தக்லீது கொள்கைகளை நிலைநாட்ட முன்வராவிட்டால், அவரும் அவர் கொண்டிருக்கும் இக்கொள்கைகளில் உறுதியான நம்பிக்கை இல்லாதவர், முஸ்லிம்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தவே இவ்வாறு கூறித்திரிகிறார், எழுதி வருகிறார் என்றே சுயமாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சிந்திப்பவர்கள் முடிவுக்கு வருவார்கள்.


விவாத அறைகூவலை முழுவதுமாக படிப்பதற்கு

அந்நஜாத் டிசம்பர் இதழை பார்வையிடுக!


குறிப்பு; எமது வலைதளத்தில் இதை வெளியிட்டது எந்த அமைப்பிற்கு ஆதரவாகவோ, எதிராகவோ அல்ல. முழுக்க முழுக்க மார்க்கத்திர்க்காகவே!

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

தர்காக்களை நம்பும் பெண்ணை திருமணம் செய்யலாமா..?


தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சிக்குப்பின் குரான் ஹதீஸை தனது வாழ்க்கைபாதையாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு மத்தியில் பலமாக ஒருகருத்து விதைக்கப்பட்டுள்ளது அதுஎன்னவெனில், தர்காக்களுக்கு செல்லக்கூடிய, தர்காக்களில் நம்பிக்கையுடைய பெண்களை தவ்ஹீத்வாதிகள் திருமணம் செய்யக்கூடாது என்பதுதான்!

இதற்க்கு ஆதாரமாக ஒருவசனம் முன்வைக்கப்படுகிறது; அல்லாஹ் கூறுகின்றான்,
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.2:221.

இந்த வசனத்தில் மூலம் இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் கூறிவிட்டான் எனவே தர்காக்களை நம்பும் பெண்களை திருமணம் செய்வது ஹராம் என முடிவெடுத்துவிட்டார்கள். அதே நேரத்தில் மற்றொரு இணைவைப்பாளர்களான வேதம் கொடுக்கப்பட்டோரை திருமணம் செய்யலாம் என அல்லாஹ் அனுமதியளிப்பதை வசதியாக மறைத்துவிடுவார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்; உங்களுக்குமுன் வேதம்கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களை வைப்பாட்டிகள்ஆக்கிகொள்ளாமலும்,விபச்சாரம் செய்யாமலும்,கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.அல்குரான் 5;5
வேதம்கொடுக்கப்பட்டவர்கள் உசைர்[அலை] அவர்களை அல்லாஹ்வின் மகனென்று கூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்கள் அதோடு நபி[ஸல்] அவர்களை அல்லாஹ்வின் தூதரக ஏற்றுக்கொள்ளாதவர்கள் அப்படிப்பட்ட யூதப்பெண்ணை மணக்க அனுமதியிருக்கும்போது அல்லாஹ்வை, ரசூலை, வேதத்தை,மலக்குகளை,மறுமையை,விதியை நம்பிய ஒருபெண் அறியாமையினால் தர்காவை நம்பினால் அவளை மணக்கக்கூடாது எனசொல்லமுடியாது.
அப்படியாயின், மேற்கண்ட 2;221வசனத்தின் விளக்கம்தான் என்ன? என்றால் இந்த வசனம் முழுக்க முழுக்க மக்கத்து முஸ்ரிக்கீங்களை மட்டும் குறிப்பதாகும்! மக்கத்து முஸ்ரிக்குகளுக்கும் இன்றைய தர்கவாதிகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை அல்லாஹ்விடத்தில் வாங்கித்தருவார்கள் என்றுநம்பி அவுலியாக்களிடம் கையேந்துவது மட்டுமே! அதேநேரத்தில், மக்கத்து முஸ்ரிக்குகள் அல்லாஹ்வை நம்பினார்கள் ஆனால் நம்பவேண்டியவிதத்தில் நம்பவில்லை. இதுபோக அவர்கள் ரசூலை,வேதத்தை,மறுமையை,மலக்குகளை,விதியை இதுபோன்ற இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை அவர்கள் நம்பவில்லை. இவைகளில் ஒன்றை ஏற்று ஒன்றை மறுத்தாலும் அவர்கள் நிராகரிப்பாளர்களாக ஆகிவிடுவர். அப்படியிருக்க அல்லாஹ்வை,மலக்குகளை,வேதத்தை,ரசூலை,மறுமையை,விதியை முழுமையாக நம்பியுள்ள முஸ்லிம்கள் அறியாமையினால் தர்காவில் வஸீலா தேடுகிறார்கள் என்பதற்காக அவர்களை மக்கத்து முஸ்ரிக்கீங்கள்பட்டியலில் சேர்ப்பதும், அவர்களின் பெண்களை திருமணம் செய்வது ஹராம் என பத்வா வழங்குவதும் ஏற்புடையதன்று!
வேண்டுமானால் தர்காக்களுக்கு செல்லும் பெண்ணை மணப்பதைவிட தவ்ஹீத் பெண்ணை மணப்பது சிறந்தது என்று கூறிக்கொள்ளுங்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்!

திங்கள், 8 டிசம்பர், 2008

சுவனத்தை நோக்கி ஒருபயணம்

அஸ்ஸலாமு அலைக்கும்.
முழுக்க முழுக்க மார்க்கத்தை மய்யமாக கொண்டு அந்தந்த மாதங்களில்,வாரங்களில் செய்யவேண்டிய அமல்களை பற்றியும், பல்வேறு அறியபல தலைப்புகளின் கீழ் கட்டுரைகளையும் இந்த வலைப்பூ உங்களுக்கு வழங்கும் இன்ஷா அல்லாஹ்வெகு விரைவில்.
நீங்களும் பாருங்கள்!
மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
http://mugavaiexpress.blogspot.com/