அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 28 பிப்ரவரி, 2013

படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

ரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான "அஷ்ஷைக் நபீலுல் அவலி" தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்:

நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும்
போது, திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி
, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் என்ன? இஸ்லாத்தை உமது வாழக்கை நெறியாக தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என்று அவரிடம் வினவினேன்.

அதற்கவர் அளித்த பதில்: நான் ஒரு மிகப் பெரிய செல்வந்தன்
, பல கம்பனிகளுக்கு சொந்தக்காரன், உலக இன்பங்களில் எந்தக் குறையும் எனக்கில்லை, ஆனால் நான் எனக்குள் நிம்மதியற்றிருக்கின்றேன். என்னிடம் பணி புரியும் ஒரு முஸ்லிம் இந்தியர் மிகக்குறைந்த சம்பளத்தையே ஊதியமாக பெறுபவர், அவரை நான் பார்க்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்துடன் தான் காட்சியளிப்பார் இது எனக்குள் மிகப் பெரிய வியப்பை தந்ததுடன் பல கேள்விகளையும் எனக்குள் தொடுத்தது.

நான் மிகப் பெரிய செல்வந்தன்
, ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை, ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன?

ஒரு நாள் அவரிடம் சென்று நான் உன்னுடன் சற்று உட்கார
வேண்டும்? எனக்கு உன்னிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீ எந்நேரமும் புன்முறுவல் பூத்த நிலையில், மலர்ந்த முகத்துடன் இருக்கின்றாயே அதெப்படி உன்னால் முடிகிறது?. அதற்கவர் சொன்னது: நான் ஒரு முஸ்லிம். "அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என நான் நம்பியிருக்கின்றேன்.

அதற்கு
நான் அவரிடம் அப்படியானால் ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா? எனக் கேட்டேன். அதற்கவர் ஆம் என்று பதிலளித்தார். நான் அதெப்படி? என மறுபடியும் ஆச்சரியத்தில் கேட்டேன்.

அதற்கவர் நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்
, அல்லாஹ்வின் தூதர் நமக்கு இப்படி கூறியிருக்கின்றார்கள்: "இறை நம்பிக்கையாளனின் காரியம் வியப்பிற்குரியதாகும், நிச்சயமாக அவனது வாழ்கையின் சகல காரியங்களும் அவனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது. அவன் தனது வாழ்நாளில் ஒரு துன்பத்தை சந்திக்கும் போது (அல்லாஹ்விற்காக) அதை சகித்துக்கொள்கின்றான் அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது, அவன் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கின்றான் அப்போது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது. இந்நிலை ஓர் இறை நம்பிக்கையாளனுக்குத் தவிர வேறு எவருக்கும் இல்லை". எனவே எமது காரியங்கள் அனைத்தும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மத்தியில் தான் உள்ளது, துன்பமெனில் அதை அல்லாஹ்விற்காக ஏற்றுக்கொள்வோம், இன்பமெனில் நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்வோம். எனவே எமது மொத்த வாழ்க்கையும் நிம்மதியாகும், ஈடேற்றமாகும், இன்பமாகும் என அவர் பதிலளித்தார்.

இது தான் என்னை
இஸ்லாத்தில் நுழைய வைத்தது. "அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறி அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

الله أكبر الله أكبر الله أكبر

அல்லாஹ் மிகப்பெரியவன்

இந்நிகழ்வு நமது வாழக்கைக்கு வழங்கும் படிப்பினைகள் என்ன?:

சிலர் தஃவா (அழைப்புப் பணி) என்ற உடன் ஏதோ மலையை உடைப்பது போன்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனக்கு உரை நிகழ்த்த முடியாதே!, எனக்கு எழுத முடியாதே!, என்னிடம் தஃவாவிற்காக செலவிட வசதி இல்லையே. இவ்வாறு தன்னிடம் இல்லாததைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் இவர்கள். தன்னிடம் உள்ளதை வைத்து இப்பணியை செய்யத் தவறி விடுகின்றனர் என்பது தான் வேதனையான விடயம். இது நமது சமூகத்தின் அதிகமானவர்களின் இன்றைய நிலையாகும்.

புன்முறுவல் பூப்பதற்கு, மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு எந்த ஒரு பணமோ, வசதியோ தேவை இல்லை. தஃவாவிற்காக செலவிடுவதற்கு வசிதி இல்லையே என்று எண்ணும் பலர். தன்னிடம் உள்ள இந்த மிகப்பெரிய ஆயுதத்தை தஃவாவிற்கு பயன்படுத்தாது இருப்பது மிகப் பெரிய வேதனையாகும்.
அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த ஒரு பண்பை தனது வாழக்கையின் அணிகலனாக்கிக் கொண்ட ஒரு சாதாரன ஊதியம் பெறும் தொழிலாளி. அவருக்கு பல ஆயிரங்களை, பல லட்சங்களை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட முடியாமல் இருக்கலாம், ஆனால் அவரின் உயரிய ஒரு பண்பினூடாக இஸ்லாத்தில் கவரப்பட்டாரே மிகப் பெரிய செல்வந்தர் அவர் இஸ்லாத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாவிலும், நன்மையில் அவருக்கும் பங்கிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?. இதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் வெகுமதியை பார்த்தீர்களா?. நமது வாழ்வில் நாம் அர்ப்பமாக கருதிக்கொண்டிருக்கும் பலவற்றுக்கு இருக்கும் ஆற்றலை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அறிவீனம்.

ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போதே மலர்ந்த முகத்துடன் வரவேற்பது இருக்கின்றதே, இது பல மணி நேர உரை, பல கோடிகளை செலவளிப்பதை விட வலிமை மிக்கதாகும். முஸ்லம்களிடம் அல்லாஹ்வின் தூதரின் இந்த உயரிய முன்மாதிரி குடிகொண்டிருக்குமனால் ஏனைய சமூகங்கள் எப்படித் தெரியுமா பேசக்கொள்வார்கள். "முஸ்லிம்கள் என்றாலே மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர்கள்தான்".

எந்த ஒரு பைசாவும் செலவாகாத இதையே இஸ்லாத்திற்காக செய்ய முன்வராத இவர்கள் வேறு அர்ப்பணிப்புகளை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் கர்ப்பணையே ஆகும்.

எங்கே அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த முன்மாதிரிகள் நமது வாழ்வில்?:

"உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).

"நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை" என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).

"நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் அல்லாஹ்வின் தூதரை புன்முறுவல் பூத்த நிலையிலேயே தவிர பார்த்தில்லை" என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).

அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; "உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்).

தூய இஸ்லாத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாம், அல்லாஹ்வின் தூதரின் உயரிய முன்மாதிரகளை நமது வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம், இஸ்லாத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி



புதன், 13 பிப்ரவரி, 2013

ஆன்மீகம் அற்றுப்போகும் முஸ்லிம் வீடுகள்!

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)

வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக்குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர். வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர். நிம்மதி மற்றும் அமைதியை மனிதன் விலைகொடுத்து வாங்க முடியாது. அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் ரஹ்மத்துக்குரிய மலக்குகளையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலமே அந்த வீடு அமைதி பொருந்திய இடமாக காட்சி தரும். அல்லாஹ்வுடைய கோபத்தையும் லஃனத்திற்குரிய ஷைத்தானையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலம் அந்த வீடு மையவாடியாகக் காட்சித்தரும். அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பெறுவதற்கான முதல் வழி, அல்லாஹ்வை நினைவு கூர்வதும், தொழுவதும், குர்ஆன் ஓதுவதும், திக்ருகள் செய்வதும் இபாதத்களில் ஈடுபடுவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய பிரகாரம் வாழ்வதுமாகும்.


அல்லாஹ் ஒருவனை கடவுளாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களது வீடுகள் இன்று சினிமா, நாடகங்கள் மூலம் ஷைத்தானின் ராகங்களை ஒளிபரப்பும் வீடுகளாக மாறி வருகின்றன. காலையிலிருந்து தூங்கச் செல்லும்வரை மெகா தொடர்களிலும் சினிமாக்களிலும் வானொலி நிகழ்ச்சிகளில் அரட்டையடிப்பதிலும் காலம் போய்க் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை நினைவுபடுத்துவதற்கோ -திக்ர் செய்வதற்கோ- குர்ஆன் ஓதுவதற்கோ ஐந்து நேரம் தொழுவதற்கோ நேரமில்லை. அதற்கான எண்ணமுமில்லை.


"கேபிள் டீவி மூலமும், Dish மூலமும் நூற்றுக்கணக்கான "செனல்கள்" காண்பிக்கப்படு வருவதால் ஒவ்வொரு செனல்களிலும் எந்தெந்த நேரங்களில் என்னவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்பதை மனனமிட்டு வைத்திருக்கிறார்கள் அதன் மூலம் வெவ்வேறு விதமான நிகழ்ச்சிகளை பார்த்து வணக்கத்திற்கான நேரத்தை தொலைத்து விடுகிறார்கள். பெண்களும் சிறுவர்களும் தங்களுடைய அதிகமான நேரங்களை இதில் செலவிடுகின்றனர். குறிப்பாக வயது வந்த பெண்பிள்ளைககள் அரட்டையடிக்கிறார்கள். பிள்ளைகள் படிப்பில் கோட்டை விடுவதற்கும் கணவன் மனைவிக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இதுவே பிரதான காரணமாகும். திசைமாறும் பயணங்களுக்கு இசைவான வழிகளை அமைத்துக் கொள்கிறார்கள்.

குர்ஆன் மனனம் செய்யப்பட வேண்டிய உள்ளங்கள் ஷைத்தானின் கீதங்களை பதிவு செய்கின்றன. அல்லாஹ்வுடைய வேத வசனங்கள் ஓதப்பட வேண்டிய உதடுகள் ஷைத்தானின் ராகங்களை இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆன்மீகத்தை ஒதுக்கிவிட்டு அசிங்கங்களை அரங்கேற்றுகிறார்கள்.

"உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக ஸூறதுல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்)

குர்ஆன் ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான். அந்த வீட்டாரிடத்தில் எந்த விதமான தீமையை தூண்டவும் செய்ய வைக்கவும் முடியாமல் போகிறது. குர்ஆன் ஓதாது விட்டால் அந்த வீட்டாரிடத்தில் ஷைத்தானின் சூழ்ச்சிகளே அதிகம் இடம்பெறும். நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்வதற்கு அவன் தூண்டி விடுவான். தீமைகள் அதிகரிக்க அதிகரிக்க உள்ளங்கள் வரண்ட பூமியாக மாறிவிடும்.

"இரவில் தூங்கச் செல்லும்போது நீ ஆயதுல் குர்ஸியை ஓதிக் கொண்டால் காலை வரை அல்லாஹ்-விடத்திலிருந்து பாதுகாவலர் ஒருவர் வந்து பாதுகாத்துக் கொள்வார். ஷைத்தான் உம்மை நெருங்க மாட்டான்" என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி)


அல்லாஹ்விடத்திலிருந்து வரக்கூடிய பாதுகாவலர் ஒரு மலக்கு ஆவார். ஷைத்தான் நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாவல் போடப்படுகிறது. துரதிஷ்ட வசமாக அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய பாதுகாவலரை விரட்டி விட்டு ஷைத்தானை துணைக்கு வரவழைக்கின்ற காரியங்கள்தான் இன்று வீடுகளில் நடக்கின்றன.

ஒரு மனிதர் ஸூறதுல் கஹ்பை (இரவில்) ஓதிக் கொண்டு இருந்தார். அவரிடத்தில் ஒரு குதிரை இருந்தது. அது இரு கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு மேகம் அவரைச் சூழ்ந்து அவரிடம் நெருங்கி வர ஆரம்பித்தது. அதைக் கண்டு அவரது குதிரை விரண்டோட ஆரம்பித்தது. பின்னர் அவர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரவு நடந்த விபரத்தைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது குர்ஆனுக்காக (குர்ஆன் ஓதியதற்காக) இறங்கிய ஸகீனத் (நிம்மதியம் சாந்தியும்) ஆகும் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: பராஉ இப்ன ஹாஸிப் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)

குர்ஆன் ஓதும் வீட்டுக்கு அல்லாஹ்விடமிருந்து அமைதி (ஸகீனத்) இறங்குகின்றபோது அந்த வீடு பாக்கியம் பொருந்திய வீடாக மாறிவிடுகிறது. குர்ஆன் ஓதுவதற்கு மாற்றமாக சினிமா, நாடகங்கள், ஆடல்-பாடல்கள் ஒலிக்கின்றபோது ஷைத்தானின் ஊசலாட்டங்களும் ஊடுருவல்களும் அந்த வீட்டில் நுழைய ஆரம்பிக்கின்றன.

"நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே என்னையே வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக. (20:14)


அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழ்வதற்கான நினைவூட்டலே தொழுகையாகும். தொழுகையை விட்டு விடுகின்றவன் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்து விடுபடுகிறான். அல்லாஹ்வை மறந்து விட்ட பிறகு அவனது ரஹ்மத் எப்படி கிடைக்கும்? வீடு எப்படி அமைதிக்குரிய இடமாக அமையப் பெறும்?

உங்களுடைய தொழுகைகளில் ஒரு பகுதியை உங்கள் வீடுகளில் ஆக்கிக் கொள்ளுங்கள். அந்த வீடுகளை (தொழுகை இல்லாத) மண்ணறைகளைப் போன்று ஆக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)

உங்களில் ஒருவர் தம் (பர்லான) தொழுகையை முடித்துக் கொண்டால் தம் தொழுகையின் ஒரு பகுதியை தம் வீட்டில் ஆக்கிக் கொள்ளட்டும். நிச்சயமாக அவர் வீட்டில் தொழுவதின் காரணமாக அல்லாஹ் அவருக்கு அங்கு நலவை ஏற்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: முஸ்லிம்)

மலக்குகள் வருகை தருகின்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக சுபஹ் தொழுகை பற்றியும் குர்ஆன் ஓதும் சந்தர்ப்பம் பற்றியும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். சுபஹ் தொழுகைக்காக எழுந்து நிற்காமல் விடியும் வரை தூங்கும்போது அந்த வீடு ரஹ்மத் பெற்ற வீடாக அமையப் பெறுமா?


ஷைத்தானை தூரப்படுத்துகின்ற இக்காரியங்களுக்கு மாற்றமாக நிகழ்வுகள் நடைப்பெறும் போது "முஸீபத்துக்கள் நிறைந்த வீடாகவே அவ்வீடு மாறிவிடும். ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களால் துஆ அவ்ராதுகள் மற்றும் தொழு கைகளின் நேரங்களை நினைவில்கொள்ள முடியாத அவலங்களை பார்க்க முடிகிறது. பெண்களும் தொழுவதில்லை. பிள்ளைகளையும் தொழ வைப்பதில்லை. பொறுப்புக்குரிய கணவனும் ஏவுவதில்லை.
முற்றிலுமாக அல்லாஹ்வை மறந்துவிட்டு ஷைத்தானுக்கான அனைத்து வழிகளையும் திறந்து விட்டு-முகாமிட வழிவிட்ட- பிறகு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரகத்தும் எப்படி இறங்கும்?

அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் (திக்ர் செய்வதன் மூலம்) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (அல்குர்ஆன்:13:28) என அல்லாஹ் கூறுகின்றான்.

மனிதர்களது நிம்மதியான, அமைதியான, ஆரோக்கியமான வாழ்வுக்கு உள்ளம் நோயற்றதாக இருக்க வேண்டும். வாழ்வு நிம்மதியாக இருக்கும். வாழும் வீடும் சூழலும் அமைதியானதாக இருக்கும். உள்ளம் இறந்துவிட்டால் வாழ்வே நாசமாகிவிடும். ஆன்மீகத்தை அழகானதாக, ஆழமானதாக நிலைபெறச் செய்து நிம்மதியான சூழலை அமைப்போமாக.


-இம்தியாஸ் ஸலபி
islamkalvi.com 



திங்கள், 11 பிப்ரவரி, 2013

நேசத்திற்குரியவர்களும், வெறுப்புக்குரியவர்களும்

அல்குர்ஆனில் இடம் பிடித்த அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்களில் சிலர்:
 
நன்மை செய்வோர் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள். எவைகளையெல்லாம் இஸ்லாம் நமக்கு நன்மைகளாகப் போதித்துக் கொண்டிருக்கின்றதோ அந்த அனைத்து நன்மைகளையும் இது உள்ளடக்கும்:
 
وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
இன்னும், நன்மை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்". (அல்பகரா 2: 195).
 
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
"அல்லாஹ் நன்மை செய்வோரையே நேசிக்கின்றான்". (ஆல இம்ரான் 3:148).
 
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
"மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். " (அல்மாயிதா 5: 13).
 
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
"அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்". (ஆல இம்ரான் 3: 134).
 
தனது ஆன்மாவை பாவ அழுக்குகளிலிருந்து பரிசுத்தப்படுத்திக் கொண்டவர்களையும், வெளிப்படையான அங்க சுத்தியை பேணக்கூடியவர்களையும் அல்லாஹ் நேசிக்கின்றான்:
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
 
"பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான், இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்". (அல்பகரா 2: 222).
وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
 
"அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்". அத்தவ்பா 9: 108).
 
அல்லாஹ்வை அஞ்சி, பயந்து வாழ்கின்ற பயபக்தியுடையோரை அல்லாஹ் நேசிக்கின்றான்:
فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
 
"நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்". (ஆல இம்ரான் 3:76).
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
 
"நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்". (அத்தவ்பா 9: 4).
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்விற்காக பொறுமையை மேற்கொள்ளும் அடியார்களை அல்லாஹ் நேசிக்கின்றான்:
وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
 
"அல்லாஹ் பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்". (ஆல இம்ரான் 3: 146).
சகல காரியங்களிலும் அல்லாஹ்வை சார்ந்து உறுதியுடன் செயல்படும் அடியார்களை அல்லாஹ் நேசிக்கின்றான்:
فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
 
" (நபியே) அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்து வீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்". (ஆல இம்ரான் 3: 159).
 
அல்லாஹ்விற்காக நீதியுடன் செயல்படும் அடியார்களை அல்லாஹ் நேசிக்கின்றான்:
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
 
"நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்". (அல்மாயிதா 5: 42).
 
அல்லாஹவின் தூதரை பின் பற்றக்கூடியவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்:
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
"(நபியே!) நீர் கூறும், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்" (ஆல இம்ரான் 3: 31).
 
அல்லாஹ் ஒரு அடியானை நேசித்துவிட்டால் அந்த நேசத்தின் அங்கீகாரம் எப்படியெல்லாம் அமைகிறது என்று பாருங்கள்:
 
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إِذَا أَحَبَّ اللَّهُ الْعَبْدَ نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحْبِبْهُ فَيُحِبُّهُ جِبْرِيلُ فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ
فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الأَرْضِ  (البخاري).
 
"அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்! என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான், நீங்களும் அவரை நேசியுங்கள் என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும்  அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி).
 
எந்த நேசம் உண்மையான, நிலையான நேசமோ, அந்த ரப்பின் நேசத்துக்காகவே நமது வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும் ஆக்கிக்கொள்வோம்.
 
அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் வெறுப்புக்குரியவர்களில் சிலர்:
 
அல்லாஹ் போட்ட வரம்புகளை மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை:
 
وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
"ஆனால் வரம்பு மீறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை". (அல்பகரா 2: 190).
 
நிராகரித்துக்கொண்டிருக்கும் பாவிகளை அல்லாஹ் நேசிப்பதில்லை:
وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
 
"'(தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை". (அல்பகரா 2: 276).
فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
 
"நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை (நிராகரிப்பாளர்களை) நேசிப்பதில்லை". (ஆல இம்ரான் 3:32).
إِنَّهُ لَا يُحِبُّ الْكَافِرِينَ
 
"நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை (நிராகரிப்பாளர்களை) நேசிக்க மாட்டான்" (அர்ரூம் 30: 45).
அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை:
وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
 
"அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்". (ஆல இம்ரான் 3:57)
وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
 
"அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை". (ஆல இம்ரான் 3: 140).
إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
 
"நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்". (அஷ்ஷுரா 42: 40).
 
ஆணவம் கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை:
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
 
"நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை". (அந்நிஸா 4: 36).
إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
 
" (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை". (அந்நஹ்ல் 16: 23).
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
 
"நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" (அல்கஸஸ் 28: 76).
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
 
"ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்ல்லாஹ் நேசிக்க மாட்டான்". (லுக்மான் 31: 18).
 
மோசடிக்காரர்களையும், பாவிகளையும் அல்லாஹ் நேசிப்பதில்லை:
 
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمً
"ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை". (அந்நிஸா 4: 107).
 
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ
"நிச்சயமாக அல்லாஹ் மோசடி செய்பவர்களை நேசிப்பதில்லை". (அல் அன்பாஃல் 8: 58).
 
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
"நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை". (அல்ஹஜ் 22: 38)
 
பூமியில் குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நேசிப்பதில்லை:
وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
 
"அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்". (அல்மாயிதா 5: 64).
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
 
"நிச்சயமாக அல்லாஹ் குழப்பம செய்பவர்களை நேசிப்பதில்லை" (அல்கஸஸ் 28: 77).
 
வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை:
وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
 
"வீண் விரயம் செய்யாதீர்கள் நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (அல் அன்ஆம் 6: 141).
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
 
"எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை". (அல் அஃராப்ஃ 7: 31).
 
அல்லாஹ்வின் வெறுப்பைப்பையும், கோபத்தையும் சம்பாதித்துக்கொண்ட ஒருவன் நிச்சயமாக ஈருலகிலும் ஈடேற்றம் பெறவே முடியாது. அவனது நாளை மறுமையின் நஷ்டம் இன்னும் பயங்கரமானதாகும்.
 
எனவே அல்லாஹ்வின் நேசத்திற்குரிய பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வோம். அவனது வெறுப்பையும், கோபத்தையும் பெற்றுத்தருகின்ற மோசமான பண்புகளை விட்டு விலகிக்கொள்வோம்.
 
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி
 

சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!


சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!

 

Download SocButtons

டந்த 25.12.2011 அன்று பலத்த காயங்களுடன் தன் நினைவின்றி சவூதித் தலைநகர் ரியாதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லமா அல்-காமிதி (Lama Al Ghamidi) எனும் ஐந்து வயதுச் சிறுமி, ஏறத்தாழ பத்துமாத காலம் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்து 22.10.2012 அன்று மரணமடைந்தாள்.

இந்தச் செய்தி முதன்முதலாக பிபிஸீயின் மத்தியக் கிழக்குச் செய்திப் பிரிவில் 31.1.2013இல் சில சேர்க்கைகளுடன் வெளியிடப்பட்டது.


அந்தச் செய்திக்கு மேலும் கண்ணும் காதும் மூக்கும் இன்ன பிறவும் சேர்த்து, பல ஆங்கில இதழ்கள் வெளியிட்டன. குறிப்பாக, கல்ஃப் ந்யூஸ் இதழின் 3.2.2013 தேதியிட்ட செய்தியில், "தன் சொந்தப் பிள்ளைகளை ஒரு தகப்பன் கொலை செய்தால் அவனை தண்டிக்க முடியாது என்பது சவூதி அரபியாவில் நடப்பிலுள்ள சட்டமாகும்" எனும் தவறான கருத்தைச் சேர்த்து வெளியிட்டது.

"
சவூதி அரபியாவின் சட்டம்" என்று கல்ஃப் ந்யூஸ் வெளியிட்ட செய்தியை "ஷரிஆ சட்டம்" என்பதாக மாற்றி, இன்னும் கொஞ்சம் பில்ட்-அப் செய்து நமது தமிழ் அறிவுசீவிகள் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளினர். அவர்களுள் இஸ்லாத்தை எதிர்த்து நிற்பதைக் குலத் தொழிலாகச் செய்துவரும் திண்ணை வார இதழ் தனது 3.2.2013 பதிப்பில் "5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை" எனும் தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. இதே செய்தி, தினமலர் நாளிதழின் 4.2.2013 அன்று "மகளை கற்பழித்து கொன்றவருக்கு தண்டனை குறைப்பு: பெண்கள் எதிர்ப்பு" எனும் தலைப்பில் வெளியாகியிருந்தது.

இவை மட்டுமல்லாது 'கோடங்கி' எனும் ஒரு பாவனைப் பகுத்தறிவாளர், "மகளைக் கொன்ற மதவாதி; பணம் கொடுத்தால் விடுதலை" என்று தலைப்பிட்டு இஸ்லாமியக் காழ்ப்பைக் கக்கியிருந்ததோடு, It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, "No father should be killed (executed) for killing his son." (At-Tirmidhi) என்ற ஒரு அரைகுறைத் தகவலை வெளியிட்டிருந்தார்.

பொய்யான தகவலைப் பரப்புகிறோம் என்ற சிந்தனையின்றி அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக ரிப்பீட் அடித்தது ஒரே செய்தியைத்தான். அவற்றுள்:

1. ஃபய்ஹான் அல் காமிதி என்பவன் இஸ்லாமிய மதபோதகன்.
2.
அவன் தொலைக்காட்சிகளில் தோன்றி இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்பவன்.
3.
தன் சொந்த மகளின் உடலின் 'எல்லா பாகங்களிலும்' வல்லுறவு கொண்டான்.
4.
மகளை சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, அவளின் தாயாரும் தன் முன்னாள் மனைவியுமான பெண்மணிக்கு $50,000 அபராதம் செலுத்தியபின் சுதந்திரமாக உலா வருகிறான்.
5.
சொந்தப் பிள்ளைகளைக் கொன்றால் தந்தையைப் பழிக்குப்பழி எனும் தண்டனை இஸ்லாத்தில் கிடையாது.

ஆகிய தவறான ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி, தம் மனம்போன போக்கில் எழுதி மாய்ந்து போயினர்.

ஃபய்ஹான் அல் காமிதி என்பவன், இறந்தவர்களைக் குளிப்பாட்டும் தொழிலாளி. மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்ற ஃபய்ஹான், மதபோதகன் அல்லன். சிறுவயதில், தான் சீரழிக்கப்பட்டதையும் போதைக்கு அடிமையாகிக் கிடந்து, இஸ்லாத்தின் போதனைகளால் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததையும் தொலைக்காட்சி அமர்வுகள் சிலவற்றில் விவரித்திருக்கிறான்.

அவனுடைய ஐந்து வயது மகள், எவராலும் வல்லுறவு செய்யப்படவில்லை என்பதை மருத்துவ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. "என் மகள், தன் சொந்தத் தகப்பனால் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துவிட்டாள்; அவள் வல்லுறவு செய்யப்படவில்லை. இறந்துவிட்ட என் மகளை ஊடகங்கள் மானபங்கப் படுத்தவேண்டாம்" என்று சிறுமி லமாவின் தாய் ஸயீதா முகம்மது அலீ குமுறுகிறார்.

ஊடகங்களின் பொறுப்பற்ற இழிநிலையை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. நீதித்துறை அமைச்சகத்தின் செய்தியாளர் ஃபஹத் அல் பூக்ரான், "இன்னும் விசாரணையே முற்றுப் பெறாமல் நடந்து கொண்டிருக்கும் வழக்கில், தீர்ப்பு வெளியாகிவிட்டதாக அச்சு/மின் ஊடகங்களும் சமூக வலைத் தளங்களும் திரித்துக் கூறுகின்றன" என்று மறுப்புக் கூறுகிறார்.


Saudi Arabia's justice ministry has denied reports that a father who allegedly raped and tortured his five-year-old daughter Luma to death had been set free after having to pay diya (blood money).

"The media reports published in newspapers and posted on electronic websites and social networks on the court verdict in the Luma case are not true," Fahad Bin Abdullah Al Bokran, the ministry spokesperson, said.

"The case is still being heard at the court and no sentence has been issued yet. The father is still in prison and we expect a ruling soon after all aspects related to the case are examined," he said in remarks published by the Saudi media on Thursday.

Fahad Bin Abdullah Al Bokran


சொந்த மகளை சித்திரவதை செய்து கொன்ற ஃபய்ஹான் அல் காமிதி இன்னும் சிறையில்தான் இருக்கிறான். வருகின்ற 13.2.2013இல் விசாரணை நடைபெறவுள்ளது எனும் செய்தியையும் கல்ஃப் ந்யூஸ் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம், தமது முந்தைய செய்தியில் பிழை இருப்பதைக் கண்டு, வெட்கப்படாமல் உண்மை நிலையை வெளியிட்டுள்ளது கல்ஃப் ந்யூஸ்.

ஆனால், தவறான தகவல்களைப் பதிந்த எந்த ஊடகமும் எந்தப் பதிவரும் இதைக் கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் சாதிப்பது வேடிக்கையும் வேதனையுமான விஷயம்.

"
இந்த வழக்கில், குழந்தையின் தாயான, தன் மனைவிக்கு அவர் ரத்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதுவரை அவர் சிறையிலிருந்த காலமே போதுமானது என்றும், சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இஸ்லாமிய சட்டங்களின்படி, தன் சொந்த குழந்தைகளை கொன்ற தந்தை மற்றும் மனைவியை கொன்ற கணவனுக்கு தண்டனை ஏதும் விதிக்கப்படாது. அதற்கு பதிலாக, கொலையாளி, கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவினருக்கு, இழப்பீட்டுத் தொகையாகப் பணம் வழங்க வேண்டும். இது, 'ரத்த இழப்பீடு' என்று அழைக்கப்படுகிறது" என்று அவிழ்த்துவிட்ட தினமலர் நாளிதழில் இதுவரை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் கண்டித்த இந்தச் செய்தி வெளிவரவில்லை.

பொதுவாகவே, உலக அளவில் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்துக்கு எதிராக எதையாவது அவ்வபோது கக்கிக்கொண்டிருப்பதையே தங்களின் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளன. அதிலும் தமிழகத்திலுள்ள தினமலர் நாளிதழைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இஸ்லாத்துக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதற்கு ஏதாவது கிடைத்தால் அவ்வாய்ப்பை அது தவறவிடுவதே இல்லை. நாளிதழ்கள் படிக்கும் பழக்கமுடைய பெரும்பாலான தமிழர்களுக்கு இந்த உண்மை ஏற்கனவே நன்கு தெரியும். ஆகவே, தினமலரில் வரும் செய்திகள், அதுவும் இஸ்லாம் அல்லது முஸ்லிம்களை மையப்படுத்தி வரும் காழ்ப்புணர்வுச் செய்திகளை இப்போதெல்லாம் எவரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

ஆனால், மேற்கண்ட இச்செய்தியினை அவ்வளவு இலகுவாக புறம்தள்ளி சென்றுவிடமுடியாது. ஒற்றைப்பார்வையில், மிகக் கொடூரமாக பச்சிளம் குழந்தையை வன்புணர்ந்து கொலை செய்த இஸ்லாமிய மதப்போதகருக்குத் தண்டனை என்ற பெயரில் வெறும் 4 மாத சிறைவாசமும் ரத்தப்பணமும் மட்டும் விதித்து விடுதலை செய்துள்ளது இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில்தான் என்ற மிகப் பாரதூரமானதொரு அவதூறு இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வாசிக்கும் சாதாரண பாமரனுக்கும் இஸ்லாத்தின்மீது, "இவ்வளவு கேவலமான மார்க்கமா இஸ்லாம்? ஆணாதிக்கத்தின் உச்சத்தில் உள்ளதே இஸ்லாம்?" என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும் ஆபத்து உள்ளது.

ஆகவே, இச்செய்தி உண்மைதானா? தினமலர் குறிப்பிடுவது போன்றதொரு சட்டம் இஸ்லாத்தில் உள்ளதா? சவூதியின் ஷரீஆ நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வெளியிட்டதா? ஆகிய விஷயங்களைத் தேடிப் பயணித்தபோது, இச்செய்தியில் ஒளிந்திருக்கும் கயமைத்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அதனைத் தெளிவாக பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஃபய்ஹான் அல் காமிதி குறித்த விவரங்கள் இதோ:

சிறுவயதில் தாயை இழந்து, மோசமான தந்தையிடமிருந்து பிரிந்து உறவினர்களிடம் வளர்ந்த ஃபய்ஹான், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். சரியான கவனிப்பு இல்லாமல் வளர்ந்த ஃபய்ஹான், சிறு வயதிலேயே போதைப்பொருள், புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் இளம்வயதிலேயே சிறை சென்ற அவர், தன் 24ஆம் வயதில் இஸ்லாமிய அழைப்புப்பணி புரிவோரால் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு மனம் திருந்தி, போதைப் பொருளுக்கு அடிமையானோரை அதிலிருந்து விடுவிப்பதற்கான பயிற்சி கொடுப்பவராக மாறியுள்ளார். இவரின் முயற்சியால், சிறையில் போதைப்பொருளுக்கு அடிமையாகிக் கிடந்த பலர் மனம் திருந்தியுள்ளனர். இதில் பிரபலமான அவர், தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது போதைப் பொருளின் தீமைகள் குறித்துத் தொடர் பேச்சுகளும் பேட்டிகளும் வழங்குபவராக மாறியுள்ளார்.

இக்காலகட்டத்தில், எகிப்தில் பிறந்து 25 ஆண்டுகாலம் சவூதியில் வசித்துவருபவரும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவருமான ஸயீதா முஹம்மது அலீ என்பவர் ஃபய்ஹானைப் பற்றி நல்லவிதமாகக் கேள்விப்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்தான் கொல்லப்பட்ட சிறுமியான லமாவின் தாயார். இனி அவரின் வாயாலேயே ஃபய்ஹான் குறித்து அறிவோம்:

"மார்க்கத்தில் சிறந்த நல்லதொரு ஒழுக்கச்சீலர் எனவும் மரணமடைந்தவர்களைச் சுத்தம் செய்து அவர்களை அடக்கம் செய்யும் உயரிய சமூகப்பணியினை மேற்கொள்பவர் என்றும் ஃபய்ஹான் குறித்து எனக்கு விவரங்கள் சொல்லப்பட்டன. அதன் அடிப்படையில் அவரைத் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், திருமணத்துக்குப் பின்னர் அவருடைய குணத்தில் பெருத்த மாறுதல் ஏற்பட்டது. என்னை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தினார். பிறருக்கு வெளியே நல்லுபதேசம் செய்வதற்கு நேர் எதிரான குணங்களையே என்னிடம் காண்பித்தார். மார்க்கக் கடமைகளை அவர் சரியாக பேணுவதில்லை. கடமையான நோன்புகளைக்கூட ரமளானில் அவர் விட்டுள்ளார்.

போதைப்பொருட்களை மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். அதற்கு மேலும் அவருடன் இருப்பது என் வாழ்வுக்கு நல்லதல்ல என முடிவு செய்து அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றேன். ஃபய்ஹானும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். எங்களுக்குப் பிறந்த குழந்தை லமாவை, அவளுடைய 7 வயதுவரை நானே பராமரித்துக்கொள்ள நீதிமன்ற உத்தரவைப் பெற்று நானே வளர்த்து வந்தேன். முறைப்படி மாதத்தில் இரு வாரங்கள் மட்டும் லமா ஃபய்ஹானுடன் இருக்கவேண்டும்.

அவ்வாறு கடந்த முறை அவரிடம் லமாவை விட்டபோது, என் மகளைத் திரும்ப என்னிடம் தரமுடியாது என அவர் மறுத்தார். திரும்பத் திரும்ப என் மகளை என்னிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நீதிமன்ற உத்தரவை நினைவூட்டினேன். இந்நிலையிலேயே சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் ரியாத் காவல்துறையினரிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. லமாவுக்கு விபத்து ஒன்று நேர்ந்துள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மருத்துவமனையில் 10 மாதம் தொடர் சிகிட்சையில் இருந்த லமா, சிகிட்சை பலனில்லாமல் 2011 டிசம்பரில் மரணமடைந்தாள். தன் தந்தையின் பொறுப்பில் இருந்த வேளையில் குழந்தை பாதிக்கப்பட்டதால், அதன்பேரில் காவல்துறை ஃபய்ஹானையும் அவரின் புது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரின் புது மனைவி கர்ப்பமாக இருந்ததால், கைது செய்யப்பட்ட இரு வாரங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்"

மேற்கண்டவாறு லமாவின் தாயார் கூறுகிறார். அவருடைய பேட்டியினை முழுமையாகக் கீழே காணலாம்:


Dim lights Embed

"கொலைக்குக் கொலை" என்று விதித்துள்ள இஸ்லாம், கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர் மன்னித்தால் மட்டும் கொலையாளி, "இழப்பீட்டு பணம்" கொடுத்து விடுதலை செய்யப்படலாம் என்கிறது. மேலும், இந்தத் தண்டனை விசயத்தில், ஏழை - பணக்காரன், வலியவன் - எளியவன் என்ற எந்தப்பாகுபாடும் இஸ்லாம் காட்டவில்லை. மாறாக, அவ்வாறு காட்டக்கூடாது என்றே கடுமையாக கட்டளையும் இடுகிறது. தன் மகள் ஃபாத்திமாவே திருடினாலும் கையை வெட்டுவதுதான் தீர்ப்பு என்று வலியுறுத்தும் நபிமொழியில்கூட, முந்தைய சமுதாயங்கள் தம்மிடையே கவுரமான நிலையிலுள்ள வலியவர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைகளுக்கு மற்றொரு சட்டமும் செயல்படுத்திய காரணத்தாலே அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடுவதோடு, அவ்வாறு சட்டத்தில் பாகுபாடு கூடாது; அனைவருக்கும் சமமான நீதிதான் இஸ்லாம் என்பதை மிகக் கண்டிப்புடன் வலியுறுத்துகிறது.

இறைச்சட்டங்களை நடைமுறைபடுத்தக் கூறும் இறைவசனங்கள்கூட, குற்றவாளி யூதனோ, கிறிஸ்தவனோ, முஸ்லிமோ யாராக இருந்தாலும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் அனைவருக்கும் சமமான நீதியே காட்டவேண்டுமெனவும் கட்டளையிடுகிறது.

இவ்வாறு இஸ்லாத்தில் மிகத்தெளிவாக தண்டனை சட்டம் இருக்கும்போது, "ஒருவன் தன் மனைவியையோ தன் குழந்தையையோ கொன்றால் அவனுக்கு மரணதண்டனை இல்லை" என இஸ்லாம் கூறுவதாகத் திரிப்பது அப்பட்டமான அவதூறும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய அக்கிரமச் செயலுமாகும்.

இச்செய்தியினை மையமாக வைத்து இஸ்லாத்தை விமர்சிக்க வந்தவர்களுள் ஒருவரான கோடங்கி எனும் பதிவர், திரிமிதீயில் பதிவான கீழ்க்கண்டதொரு அரைகுறைச் செய்தியினை மேற்கோள்காட்டி இஸ்லாம் அவ்வாறு கூறுவதாகப் பழி சுமத்துகிறார்.

It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, "No father should be killed (executed) for killing his son" (At-Tirmidhi).

"
எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகப் பழிவாங்கப்படக்கூடாது" என நபியவர்கள் கூறியதாகக் குறிப்பிடும் மேற்கண்ட திர்மிதீயின் பதிவு குறித்து, அது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல எனப் பலர் குறிப்பிட்டுள்ளனர். பலர் என்பதில் இமாம் திர்மிதீயும் அடக்கம். இந்தச் செய்தியைத் தமது 1399ஆவது பதிவில் வைத்திருக்கும் இமாம் திர்மிதீ அவர்கள், "இது பலவகையிலும் குழறுபடியான செய்தி" என்ற முக்கியக் குறிப்புடன்தான் அதை வைத்திருக்கிறார் (இணைப்பு).


 

مسألة: التحليل الموضوعي
بَاب مَا جَاءَ فِي الرَّجُلِ يَقْتُلُ ابْنَهُ يُقَادُ مِنْهُ أَمْ لَا

1399
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشَمٍ قَالَ حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقِيدُ الْأَبَ مِنْ ابْنِهِ وَلَا يُقِيدُ الِابْنَ مِنْ أَبِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُرَاقَةَ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِصَحِيحٍ رَوَاهُ إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ وَالْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ مُرْسَلًا وَهَذَا حَدِيثٌ فِيهِ اضْطِرَابٌ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْأَبَ إِذَا قَتَلَ ابْنَهُ لَا يُقْتَلُ بِهِ وَإِذَا قَذَفَ ابْنَهُ لَا يُحَدُّ

சவூதியின் புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களான முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜித் , முஹம்மது பின் ஸாலிஹ் அல் உதைமீன் ஆகியோர் மேற்காணும் செய்தி குறித்து ஆழமாக ஆய்ந்து அதைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர். கூடுதலாக இமாம் அல் அஸ்கலானீ அவர்கள் "இது தள்ளுபடியாவதற்கு எல்லா வகையிலும் பொருத்தமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்

ஒரு மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) என்றால் அதற்கான முதலாவது சான்றாதாரம் இறைமறையாகும். இறைமறை கூறுகிறது:

வேதம் வழங்கப்பட்டோர்க்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (5:45).

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.(4:93)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு. (2:178).

"எந்தப் பாவத்திற்காக அச்சிறுமி கொல்லப்பட்டாள்?" (81:9).

ஃபய்ஹானுக்கு என்ன தண்டனை?

ஃபய்ஹான் அல் காமிதி, தன் மகள் லாமாவைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு சித்திரவதை செய்திருந்தான் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், விரைவில் ஒரு வெள்ளிக்கிழமை பொதுவெளியில் தலை சீவப்படுவான். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அல்லது லமாவின் தாய், தம் முன்னாள் கணவனான ஃபய்ஹானை மன்னித்தால் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பமுடியும். கூட்டு மனசாட்சிக்காக ஷரீஆவில் எவரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.


இன்னும் தீர்ப்பே வெளிவராத ஒரு வழக்கை, "எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகக் கொல்லப்படக்கூடாது" எனும் நபிமொழியின் அடிப்படையில் தீர்ப்பு வெளிவந்துவிட்டதாகக் கதைகட்டிப் புனைந்து எழுதும் பாவனை அறிவுசீவிகளுக்கு, இஸ்லாத்தின் மீதான காழ்ப்பைத் தவிர இரண்டாவது காரணம் ஏதும் இருக்கமுடியாது என்பது திண்ணம்.

Regards,

Shadhuly A. Hassan

Admn. & Mgmt. Assistant

Modern Machinery Co. Ltd.

Riyadh, Saudi Arabia

Tel: 00966-1-4030745     Fax: 00966-1-4036410

Mobile: 00966-504259841





--


ALAVUDEEN



* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.