அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 18 ஜூன், 2012

குறைஷிகள் முஷ்ரிக்குகள் ஆனது யாரால்...?


அரபியர்களின் சமய நெறிகள்

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். 

காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் தலைவனான அம்ரு இப்னு லுஹய், சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான். மக்களுக்கிடையில் நற்செயல்களை பரப்பி, தான தர்மங்கள் செய்து வந்தான். எனவே, மக்கள் பெரிதும் மதித்து அவனை ஓர் இறைநேசராகக் கருதினர்.

அவன் ஒருமுறை ஷாம் நாட்டுக்குச் சென்றான். அங்கு மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த சிலை வணக்க வழிபாடு அவனைப் பெரிதும் கவர்ந்தது. ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்ததால் அந்தச் சிலை வணக்கமும் உண்மையான ஒன்றாகத்தான் இருக்கும் என அவன் எண்ணினான். எனவே, அவன் மக்கா திரும்பியபோது,''ஹூபுல்'என்ற சிலையைக் கொண்டு வந்து கஅபாவின் நடுவில் அதை வைத்து விட்டான். அந்தச் சிலையைக் கடவுளாக ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு மக்காவாசிகளுக்கு அழைப்பு விடுத்தான். அவர்களும் அதை ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைத்தனர். மக்காவாசிகள் இறை இல்லம் கஅபாவை நிர்வகிப்பவர்களாகவும், புனித நகரமான மக்காவில் வசிப்பவர்களாக இருப்பதாலும் அவர்களையே தங்களது முன்னோடிகளாக எடுத்துக்கொண்டு ஹிஜாஸ் பகுதியின் ஏனைய மக்களும் சிலை வழிபாட்டில் அவர்களைப் பின்பற்றினர்.

''ஹூபுல்' என்பது செந்நிறக் கல்லில் மனித உருவாகச் செதுக்கப்பட்ட ஒரு சிலை! அதன் வலது கரம் உடைந்திருந்தது. அதற்கு குறைஷிகள் தங்கத்தினால் கை செய்து அணிவித்தனர். இதுதான் மக்கா இணைவைப்பாளர்களின் முதல் சிலையாகும். இதை மிகுந்த மகத்துவமிக்கதாகவும் புனிதமிக்கதாகவும் குறைஷிகள் கருதினர். (கிதாபுல்அஸ்னாம்)

ஆதாரம்; ரஹீக் அல் மக்தூம். தமிழாக்கம். பக்கம்; 27 -28

கருத்துகள் இல்லை: