அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 13 செப்டம்பர், 2010

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் ஆய்வுகள்[2]; போதுமென்ற மனமே..

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா, வளைகுடா  போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.


"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.[தினமலர்].

அன்பானவர்களே! நிறைய சம்பாதிக்கவேண்டும்; நிரப்பமான மகிழ்ச்சியாக  வாழவேண்டும் என்ற நோக்கமுடையவர்கள் வெளிநாடுகளில் வாழ்பவர்கள்  மட்டுமன்றி, உள் நாட்டிலே வாழ்ந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டாக்கனிதான்.

ஏனெனில், நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற  ஆவலில் ஒரு குடும்பத்தில் கணவனும்-மனைவியும் பணிக்கு செல்கின்றனர். இதனால் கணவனும் மனைவியும் சேர்ந்திருக்கும் நேரம் குறைந்து, அலுவலகத்தில் இருக்கும் நேரம் அதிகரிக்கிறது. வீடு வந்தாலும் பணிச்சுமை காரணமாக  அவரவர் மனம் ஓய்வைத்தன் நாடுகிறதே தவிர; கணவனும்- மனைவியும் மனம்விட்டு மகிழ்ச்சியாக பேசுவதற்கு இயலவில்லை. அப்படியே இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டாலும் அதுவும் பெரும்பாலும் இயந்திரத்தனமாகவே இருக்கும்.

மேலும், இவ்விருவரும் பணிக்கு செல்வதால் பெற்ற குழந்தைகள பெற்றோரின் பாசத்திற்கு எங்கும் நிலை.  இவ்வாறாக பல்வேறு காரணங்களை கூறலாம். எனவே, பறப்பதற்கு ஆசைப்பட்டு; இருப்பதை விட்ட கதையாக, வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, இருந்ததையும் இழந்து நிற்கிறது மனித சமுதாயம்.

எனவேதான் அன்றே இஸ்லாம் இதற்கு அழகான தீர்வை சொன்னது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்;


(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். நூல்; புஹாரி எண் 6446
 
இறைத்தூதரின் இந்த இனிய பொன்மொழியை இன்றைய ஆய்வுகள் ஒருபுறம் உண்மைப் படுத்திக் கொண்டிக்க, இந்த பொன்மொழியை சிரமேற்கொண்டு அமுல்படுத்த வேண்டிய முஸ்லிம் சமுதாய மக்களில் பெரும்பாலோர் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பாலைமணலில் ஆயுளை அற்பமாக கழித்துக் கொண்டிருக்கிறோம். [நான் உட்பட]
 
எல்லாம் வல்ல அல்லாஹ், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொன்ன 'போதுமென்ற' மனதை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை நமக்கு வழங்கிடுவானாக! 

கருத்துகள் இல்லை: