அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 11 செப்டம்பர், 2010

அரசியல் தலைவர்களும் - அகிலத்தின் அருட்கொடையும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
'பாதுகாப்பு என்பது, கட்சித் தலைவர்களுக்கு முக்கியம் அல்ல. மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதுதான் முக்கியம்'
இந்த அற்புதமான கருத்தை மொழிந்தவர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆவார். அவரின் கருத்திற்கேற்ப, தமிழக மற்றும் இந்திய அளவில் மக்களின்  பாதுகாப்பு  என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

ஒருவன் கலையில் தனது வீட்டைவிட்டு பணி நிமித்தமாக வெளியே சென்றால், அவன் மீண்டும் வீடு திரும்புவானா என்ற உத்திரவாதம் இல்லை. தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலும், ஏனைய பகுதிகளிலும்  நடைபெறும் தொடர்கொலைகள் இதை உறுதிப்படுத்துகிறது.

நேற்றுக் கூட சென்னையில் பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை ஒருவர் சில ரவுடிகளால் சினிமாவில் வருவது போன்று சர்வசாதரணமாக ஓட ஓட விரட்டி வெட்டிக் கொள்ளப்படுகிறார். பெற்றவர்களின் கண்முன்னே இந்த படுபாதகம் அரங்கேறுகிறது. கொலை மட்டுமல்ல. கொள்ளைகளுக்கும் குறைவில்லை. அண்ணாதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ஜெயலலிதா கூறியது போன்று மிட்டாய்களை கூட பேங்கின் லாக்கரில் வைக்கவேண்டிய அளவுக்கு கொள்ளைகளுக்கும் குறைவில்லை.

விபச்சராம் நவீனமாகி ஆன்லைன் விபசாரம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. இதுபோக பல்வேறு போலிகள், மோசடிகள் இவ்வாறாக சட்டத்திற்கு சவால்விடும் ஏராளமான் குற்றச்செயல்கள் நாட்டில் அரங்கேறிக் கொண்டுள்ளதை நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.

அவ்வாறாயின், இவ்வாறான குற்றங்களை தடுத்து நிறுத்தி மக்களுக்கு பாதுகாப்பளித்து சுபிட்சமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டிய காவல்துறை எங்கே..? என்ற கேள்வி வருகிறதல்லவா.! ஆம்! காவல் துறை இருக்கிறது. ஆனால் மக்களை பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட காவல்துறையின் பெரும்பகுதி காவலர்கள், மக்களின் பிரதிநிதிகள் எனக் கருதப்படும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரமுகர்கள், சிலைகள் இவற்றைக் காப்பதற்கு பயன்படுத்தப் படுகிறார்கள்.

ஆம்! சமீபத்தில் அண்ணாதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு  வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும்  என அவரது கட்சி முக்கிய தலைவர்கள் மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள். இதையொட்டி ஜெயலலிதாவுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை விவரித்து, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

ஜெயலலிதாவுக்கு 'இசட்பிளஸ்' பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் 'என்.எஸ் .சி' பாதுகாப்புக்கு உரியவர் என்பதால்  அவருக்கு தமிழ்நாடு காவல்துறையிலிருந்து,
  •  இரு காவல்துறை கண்காணிப்பாளர்கள்.
  • மூன்று ஆய்வாளர்கள்.
  • 12 உதவி ஆய்வாளர்கள்.
  • 58 காவலர்கள்.
ஆக 75 காவலர்கள்.
இதுபோக அவர் பயணிக்கும் போது அவரது வாகனத்திற்கு முன்னும்  பின்னும் அணிவகுக்கும் 12 காவலர்கள். மேலும், ஓட்டுனருடன் கூடிய குண்டு துளைக்காத கார். அதோடு அனைத்து காவலர்களுக்கும் நவீன ரக ஆயுதங்கள் வழங்கப்படுள்ளது. மேலும், அவர் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் போது 2000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு.

இதுமட்டுமன்றி, அவர் போயஸ்தோட்டத்தில் இருந்தாலும், கொடநாடு -சிறுதாவூர் பங்களாக்களில் இருந்தாலும் இதே அளவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

என்ன சகோதரர்களே! மூச்சு  வாங்குகிறதா..?

ஜெயலலிதா என்ற எதிர்கட்சித் தலைவருக்கே இத்தனை பாதுகாப்பு; இத்தனை காவலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்  என்றால், முதல்வருக்கு இதையும் தாண்டி இருக்கலாம். கவர்னருக்கு முதல்வரையும்  தாண்டி இருக்கலாம். பிரதமருக்கு கவர்னரையும் தாண்டி இருக்கலாம். ஜனாதிபதிக்கு பிரதமரையும் தாண்டி பாதுகாப்பு இருக்கலாம்.

ஆக, மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட காவலர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இவ்வாறாக முக்கியப் பிரமுகர் பாதுகாப்பையே பிரதானமாக கொண்டு செயல்படுத்தப்படுவதால், மக்களை பாதுகாக்கும் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு. காவலர்கள் எண்ணிக்கை குறையும்போது, குற்றச்செயல்கள் அதிகரிக்கவே செய்யும்.

எனவே, அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கு அவரது முன்புறமும்,பின்புறமும், வலது மற்றும் இடது புறமும் அணிவகுக்கும் ஆயுதம் ஏந்திய நான்கு காவலர்கள் மட்டுமே அரசின் செலவில் வழங்கப்பட வேண்டும். அதையும் தாண்டி  ஒருவர் தனக்கு பாதுகாப்பு தேவை என அவர் கருதினால், அவர் கூடுதலாக கேட்கும் காவலர்களுக்குரிய ஊதியம் உள்ளிட்ட அத்துணை செலவினங்களையும் சம்மந்தப்பட்ட பிரமுகரே ஏற்கவேண்டும். இல்லையேல் அவர் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறாக  சட்டம் கொண்டுவந்தால்தான் மக்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலர்கள் கிடைப்பதோடு, மக்களின்  வரிப்பணமும் மிச்சமாகும்.

இல்லையேல், வார்டு கவுன்சிலர் கூட 'இசட்பிளஸ்' பாதுகாப்பு கேட்கும் நிலை உருவாகும். இங்கே இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமது வெளியுறவுக் கொள்கையினால் உலகமெங்கும் எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் அமெரிக்காவின் அதிபராக உள்ள ஒபாமா கூட, பல நேரங்களில் எவ்வித பாதுகாப்பு  அதிகாரிகள் துணையின்றி, சர்ச்சுக்கும் மார்க்கெட்டிற்கும் சகஜமாக  சென்றுவருவதை பத்திரிக்கையில்  பார்க்கிறோம். ஆனால் நம்முடைய தலைவர்களுக்கோ பாத்ரூம் போனாலும் பாதுகாப்பு வேணும் என்று சொல்லும் நிலைதான்  உள்ளது.

இந்த நேரத்தில் அகிலத்தின் அருட்கொடையாக, அல்லாஹ்வின் திருத்தூதராக, அரபுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த முஹம்மத்[ஸல்] அவர்கள் வாழ்கையை நாம்  இவர்களுக்கு முன்வைக்கிறோம்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;.


நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள், 'இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், 'என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார் ?' என்று கேட்டார். நான் 'அல்லாஹ்' என்று (மூன்று முறை) கூறினேன்" என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை. [நூல்;புஹாரி எண் 2910 ]

நபியவர்களின் இந்த செய்தியிலிருந்து கடவுளை நம்பாமல், காவலர்களையும், ஆயுதங்களையுமே தன்னுடைய பாதுகாவலர்களாக கருதும் பிரமுகர்களுக்கு மிகப்பெரிய படிப்பினை உள்ளது. அரபுலகத்தின் மன்னர் முஹம்மது[ஸல்] அவர்கள்,
  • தனக்கென ஒரு பாதுகாப்பு படையை வைத்திருக்கவில்லை.
  • போர் செய்துவிட்டு திரும்பியுள்ள நிலையில், எதிரிகள் தாக்கக்கூடும்  என்ற நிலையிலும் தனியாக ஓய்வெடுக்கும் துணிவு.
  • அப்படி ஓய்வெடுக்கும் போதும் தனது வாளை மரத்தில் தொங்கவிட்டுவிட்டு சகஜமாக உறங்கும் துணிவு.
  • எதிரி,  வாளை எடுத்துக்கொண்டு, உம்மை என்னிடமிருந்து காப்பவர் யார்..? என கர்ஜித்தபோது, பதறி தனது தோழர்களை துணைக்கு அழைக்காத வீரம்.
  • என்னுடைய இறைவன் அல்லாஹ் என்னை பாதுகாப்பான் என்று சாந்தமாக சொன்ன வார்த்தைகள்.
இவையாவும் எதை  உணர்த்துகிறது. நம்முடைய வாழ்க்கையின் நாட்கள் அல்லாஹ்வால் குறிக்கப்பட்டுவிட்டது. அந்த நாள்வரும்வரை நாம் படையோடு இருந்தாலும், தனியாக இருந்தாலும் எவரும் ஒன்றும் செய்யமுடியாது. அதே நேரத்தில் எத்துனை பெரிய படை பட்டாளத்தின் பாதுகாப்போடு இருந்தாலும், அந்த நேரம் வந்துவிட்டால் அதாவது நம்முடைய உயிர் போகும் நேரம் வந்துவிட்டால், எந்த படையாலும் நம்மை தடுத்திட முடியாது. இதற்கு சான்றாக கூட,

மெய்க்காப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களை கூறலாம். அவர் நினைத்திருப்பாரா இவ்வாறு நடக்கும் என்று. அங்குதான் இறைவனின் விதி தனது பணியை செய்கிறது. எனவே 40 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவனும் அதிசயமாக பிழைத்திருக்கிறான்; புல் தடுக்கி விழுந்தவனும் அதிசயமாக செத்திருகிறான். இதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி!

கருத்துகள் இல்லை: