بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகையிலை நாகரிக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர்கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்துவருகிறது. ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக, சிகரெட்டாக, பான்பராக்காக, குத்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும். ஒரு புகைபிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.
மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.
புகைப்பவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி]
மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது. புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.
புகையிலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பரிசுகள்;
*காசநோய்
*நுரையீரல் நோய்கள்.
*இருதயம் மற்றும் ரத்த சம்மந்தமான நோய்கள்.
*புற்றுநோய்.
*ஆண்மைக்குறைவு.
பொருளாதார வீண் விரயங்கள்;
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; [மறுமையில்] அடியானின் பாதம் நகராது நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை;
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..? [திர்மிதி]
நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா? சிந்திக்க வேண்டும்.
புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)
சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை ஆயிரங்களை விரயமாக்கியிருக்கிறோம் என்று கணக்கிடமுடியும். ஒரு பாக்கெட் சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும். மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தின் கவனத்திற்கு;
இன்று முதல் சிகரெட், பீடி பாக்கெட்களில் அபாய படம் இடம்பெறவேண்டும் என்று அறிவித்துள்ளது அரசு. இந்த சட்டத்தால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில், புகைப்பதால் ஏற்படும் நோய்களை சிகரெட் பாக்கெட்டுகளில் அச்சிட்டபின்னும் விற்பனை அதிகரித்ததே அன்றி குறையவில்லை. ஏற்கனவே, பொது இடங்களில் புகைப்பிடிக்கத்தடை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புகையிலை, சிகரெட் போன்றவை விற்கவேண்டும் என்ற சட்டம் ஆகியவை வெறும் ஏட்டளவில் உள்ளதுபோல் இந்த அபாயபடமும் எந்த மாற்றத்தையும் உண்டாக்காது. இந்த வெட்டியான சட்டங்களையும், அதை மக்களுக்கு விளக்குகிறோம் என்றபெயரில் கோடிகளை விரையமாக்குவதை விட, 'புகையிலை தொடர்பான அனைத்து பொருள்களும் விற்க தடை' என்று சட்டம் கொண்டுவரவேண்டும். அதைவிடுத்து, அரசின் வருமானத்திற்காக புகையிலையை அனுமதிப்பது; பிறகு அதை தடுக்க 'பொம்மை'யை காட்டுவது; சட்டம் போடுவது, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்றதாகும்.
அரசு புரிந்து கொண்டால் சரி!
சமுதாய நலன் நாடி வெளியீடுவது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,655690
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக