அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 20 ஜூன், 2012

ஷிர்க் மற்றும் பித்'அத்திற்கு எதிராக 1918-ல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் வழங்கிய ஃபத்வா மார்க்க தீர்ப்பு!

ஷிர்க் மற்றும் பித்'அத்திற்கு எதிராக களமிறங்கியவர்கள் நாங்கள் தான் என்று நேற்று வந்த சிலர் மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1918லேயே ஷிர்க் மற்றும் பித்'அத் பற்றிய கேள்விகளுக்கு அவைகளை செய்யக்கூடாது என தாய்க் கல்லூரி என அழைக்கப்படும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வா வழங்கியுள்ளது. அவற்றைப் படித்து திருந்தவேண்டியவர்கள் திருந்தட்டும்.

1918 நவம்பர் 19ஆம் தேதியிட்ட ஃபத்வா (பதிவேடு பக்கம்: 194, 195) ஒன்று, இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையில் இருக்கும் பல்வேறு சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது. 

அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பாக, மைசூரைச் சேர்ந்த மௌலவி, சையித் அப்துல்லாஹ் அவர்களின் மகன் சையித் அஹ்மத் அவர்கள் ஒன்பது கேள்விகளைக் கேட்டிருந்தார். அவை வருமாறு;

வினா: 

1. மய்யித்திற்கு அணிவிக்கப்படும் கஃபனில் திருக்கலிமாவையோ, திருக்குர்ஆனின் வசனங்களையோ எழுதி மய்யித்தை அடக்கம் செய்வது, இக்லாஸ் அல்லது தபாரக் சூராக்களை ஓதி மண் கட்டியில் ஊதி மய்யித்துடன் வைப்பது, பீர்களின் ஷஜராவை (வம்சப் பெயர்கள் அடங்கிய படம்) கப்றில் வைப்பது ஆகியன பற்றி தீர்ப்பு என்ன?
2. மய்யித்தை அடக்கம் செய்தபின் ஒரு தடவையும் 40 அடி நடந்தபின் ஒரு தடவையும், மய்யித்தின் வீட்டை அடைந்தவுடன் ஒரு தடவையும் ஃபாத்திஹா ஓதுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? 
3. மய்யித்தை அடக்கம் செய்த மூன்றாம் நாளில் ஜியாரத்துச் செய்து பேரீத்தம்பழம், மிட்டாய், சந்தனம், பூ ஆகியவற்றைப் பகிர்வதும் கப்றுமீது சந்தனம், பூ போடுவதும் கப்றில் ஊதுபத்தி கொளுத்தி வைத்து ஃபாத்திஹா ஓதுவதும், சம்பிரதாயப்படி ஏழு, பத்து, இருபது, முப்பது மற்றும் நாற்பதாம் நாள் ஃபாத்திஹா ஓதுவதும், 'நாற்பது தபாரக் கலசங்கள்' என்று சொல்லி மண் கலசங்களை கப்றுமீது சாத்துவதும் கூடுமா? 
4. மேற்கண்ட சடங்குகளை 'கட்டாயம்' எனக் கருதி செய்வதும், இச்சடங்குகளைத் தவிர்ப்போர் பழிப்புக்குரியவர்கள் எனக் கருதுவதும் சரியா? 
5. ஆண்டுதோறும் ஷைகு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களது பெயரால் 'கியார்வீன்' செய்வது, அவர்களின் பரக்கத்தைப் பெறுவதாக எண்ணி அந்த உணவை மரியாதையோடு புசிப்பது, ஹள்ரத் ஸாலார் மஸ்ஊத் ஙாஸி பெயரால் கந்தூரி நடத்துவது, இமாம் ஜஅஃபர் சாதிக் (ரஹ்) அவர்களின் பெயரால் பூரியான் ஃபாத்திஹாவைக் கண்ணியத்துடன் செய்வது ஆகியன பற்றி சட்டம் என்ன? 
6. முஹர்ரம் மாதத்தில் வெள்ளிப் பெட்டி, ஷர்பத் முதலான பானங்களை வைத்து ஹுசைன் (ரலி) அவர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதுதல், பஞ்சா மீது நடந்து ஜனங்களின் தலை மற்றும் முகத்தில் பூசுதல், மயில் இறக்கையை தடவுதல் ஆகியன பற்றி சட்டம் என்ன? 
7. கப்றாளிகளிடம் தேவைகளை முறையிடுவது கூடுமா? 
8. அவ்லியாக்கள் பெயரால் நேர்ந்துவிடப்பட்ட பிராணிகளை, 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' சொல்லி முறைப்படி அறுத்திருந்தால், அதன் மாமிசத்தை சாப்பிடுவது கூடுமா? 
9. 'உருஸ்'களின்போது, நிகழ்த்தப்படும் கவாலி, கவிதை, கதை ஆகியவற்றைக் கேட்பதால் நன்மை கிடைக்கும் என நம்புவது சரியா? 

இக்கேள்விகளுக்கு அஃலா ஹள்ரத் அவர்கள் அளித்த விடையைப் பார்ப்போம்.

விடை: 

நாம் அல்லாஹ், ரசூல்மீது விசுவாசங்கொண்டு கலிமாச் சொன்னவர்கள். இதிலிருந்து, வணக்கத்துக் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அல்லாஹ் தஆலாவின் ஏவல் – விலக்கல்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே வணக்கம் என்பதன் பொருளாகும். ஏவல்களும் விலக்கல்களும் குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து கிடைத்தவையாகும். நமது இறைவனின் ஏவல் – விலக்கலுக்கும், சுன்னத்துக்கும் மாற்றம் செய்வது, மேற்சொன்ன விசுவாச வாக்குமூலத்திற்கு எதிரானதாகும்; முஃமினுக்கு உகந்த செயலன்று. 

இந்தஅடிப்படையில், கேள்வியில் கண்டுள்ள விஷயங்கள் – காரியங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில் இவை, குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்தோ, ஸஹாபா பெருமக்களின் சொல் மற்றும் செயலில் இருந்தோ, இமாம்களின் கூற்றுகள் மூலமோ உருவானவை அல்ல. இவை யாவும் பித்அத்து மற்றும் மக்ரூஹ்களாகும். அவற்றில் சில ஹராம் ஆகும். மற்ற சிலதில் குஃப்ரின் சாயல் உண்டு. இதன் முழு விபரம் மார்க்க நூல்களில் காணக்கிடைக்கிறது. இப்போது அவை ஒவ்வொன்றையும் விவரித்துக் கூற நமக்குப் போதிய சந்தர்ப்பம் இல்லை. இதனால் இறைவாக்கு ஒன்றை நினைவுபடுத்துவதோடு நிறுத்திக்கொள்கிறோம். 

அல்லாஹு தஆலா சொல்கிறான்: எவர் ஓர் அணுவளவு நன்மை செய்கிறாரோ அதனையும் அவர் (அங்கு) கண்டுகொள்வார். எவர் ஓர் அணுவளவு தீமை செய்கிறாரோ அதனையும் அவர் (அங்கு) கண்டுகொள்வார். (99:7,8) 

ஆக, முஃமின்கள் ஒவ்வொரு விஷயம் குறித்தும் மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து, அதன்படி செயல்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்று, உயர் அந்தஸ்து பெற அவர்கள் முயல வேண்டும். நல்ல மனிதர் என்ற பெயரைப் பெறுவதற்கும், நல்ல எதிர்பார்ப்பை உடையவராக ஆவதற்கும் பாடுபட வேண்டும். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகம் ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. அங்கு குழுமியிருந்தோர் அந்த மய்யித்தைப் பற்றி 'நல்ல மனிதர்' எனப் புகழ்ந்து பேசிக்கொண்டார்கள். அதைச் செவியேற்ற அண்ணலார் 'உறுதியாகிவிட்டது' என்றார்கள். 

சற்று நேரத்தில் வேறொரு ஜனாஸா வந்தது. அந்த மய்யித்தைப் பற்றி 'கெட்ட மனிதர்' எனக் கூடியிருந்தோர் பேசிக்கொண்டனர். அப்போதும் 'உறுதியாகிவிட்டது' என நபியவர்கள் சொன்னார்கள். பின்னர், இரண்டு ஜனாஸா விஷயத்திலும் ஒரே வார்த்தையை '(உறுதியாகிவிட்டது)' அண்ணலார் சொன்னதன் நோக்கம் என்ன என்று தோழர்கள் வினவினர். 

அதற்கு "நீங்கள் அல்லாஹ்வின் நிலத்தில் அவனது சாட்சியாளர்களாக இருக்கிறீர்கள். எவரை நீங்கள் 'நல்லவர்' எனப் புகழ்ந்து கூறுகிறீர்களோ அவருக்கு 'சொர்க்கம்' உறுதியாகிவிட்டது. எவரைக் 'கெட்டவர்' எனக் குறைகூறுகிறீர்களோ அவருக்கு 'நரகம் உறுதியாகிவிட்டது' – என அண்ணலார் விளக்கினார்கள். 

இன்னொரு விஷயத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதாவது ரங்கூனிலிருந்து ஃபத்வா கேட்டு நம் மதரஸாவுக்குச் சில கேள்விகள் வந்தன. அதற்குப் பதில் தரப்பட்டது. அந்த பத்வா நகலையும் இத்துடன் இணைத்துள்ளோம். அதையும் கவனத்தில் கொண்டு, சுன்னத்துக்கேற்ப அமல் செய்யுங்கள். ஆதாரமற்ற – பித்அத்தான செயல்களை விட்டொழியுங்கள். 

(இதை தம் கைப்பட எழுதி, நகல் எடுக்குமாறும் பணித்தார்கள்.) 

ஒப்பம், 

அப்துல் வஹ்ஹாப்
(கானல்லாஹு லஹூ) 

பதில் சரியானதே ஒப்பம் 

முஹம்மது அப்துல் ஜப்பார், ஷைகு ஆதம்
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

அப்துர் ரஹீம் முஹம்மது யஃகூப்
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

முஹம்மது அப்துல் அலி முஹம்மது ஹஸன் பாஷா
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

தேதி: 19 நவம்பர், 1918.
பத்வா பதிவேடு பக்கம், 194, 195 


--  S.A.SULTHAN


கருத்துகள் இல்லை: