அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!

بسم الله الرحمن الرحيم
நாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள்,  திருக்குர்'ஆன் மொழியாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'திருமறை தோற்றுவாய்' என்ற நூலில் 'மறுமையில் பரிந்துரை' என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்;
 
''நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம்  தான் இதை  கேட்கவேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.
 
பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில்,  ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்'ஆன் தமிழாக்கத்தில் 'பரிந்துரை பயனளிக்குமா' என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;
 
இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும்.
என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள்.
 
முதலில் ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர்,
பிறகு அவரே அந்தர் பல்டியடித்து, இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும் என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா'வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக!

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

திருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும்.

بسم الله الرحمن الرحيم
குர்'ஆனும்-ஹதீஸும் மட்டுமே மார்க்கம் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த குர்'ஆனுக்கும்- ஹதீசுக்கும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கருத்தை விட, நபி[ஸல்] அவர்களின் நிழலாக வாழ்ந்த சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது  தவ்ஹீத் அறிஞர்களில் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. இவ்வாறு நபித்தோழர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கருத்துடையவர்களை வழிகேடர்கள் என்று விமர்சிக்கும் அறிஞர் பீஜே, அன்று திருக்குர்'ஆனை விளங்க நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும் என்ற கொள்கையில் இருந்துள்ளார் என்பதை கீழே படியுங்கள்;

''முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செய்த தீர்ப்புகள், சட்டங்கள் யாவுமே அவர்கள் தனது திருமறையில் திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளப்பட்டதற்கான காரணங்களைச் சொல்லும் போது அதனையே அவர்கள் முன் எழும் சட்டப்பிரசினைகளுக்கு அவர்களே விளக்கம் தரக் கடமைப்பட்டவர்கள் என்பதாகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.

"(நபியே!) மக்களுக்கிடையில் (எழும் பிரசினைகளுக்கு) அல்லாஹ் உமக்கு அறிவித்தவாறு நீர் தீர்ப்பளிக்க வேண்டுமென்பதற்காக, சத்தியத்தைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாகவே நாம் தான் உமக்கு அருளினோம் (4:105) (இந்த வேதத்திலிருந்து) மக்களுக்குச் சிறுக சிறுக அருளப் படுபவற்றிற்கு நீர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே உமக்கு நாம் இந்த நினைவூட்டும் வேதத்தை அருளினோம் (உமது விளக்கத்தின் மூலம் அதனை) அவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள்.

இதைத்தான், நபிக் நாயகம் (ஸல்) அவர்கள் "நான் திருக்குர்ஆனையும், அதனுடன் அதுபோன்ற (மதிப்பும் சிறப்பும் உடைய) வற்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்" என்றார்கள். திருக்குர்ஆன் போன்றது என்பதற்கு, "திருக்குர்ஆனின் விளக்கமாக அமைந்து விட்ட நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் என்றே அனைவரும் விளக்கம் தந்துள்ளனர். அதுவும் இறைவன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் தான் எனினும், திருக்குர்ஆன் ஓதி உணரப்பட வேண்டிய ஒன்றாகவும், அதனுடைய ஒரு காற்புள்ளி உட்படப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும், அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்குகள் குர்ஆன் அளவுக்கு சொல்லுக்கு சொல் பாதுகாக்கப்பட்டதில்லை. எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுடையவைதான் எனத் தெரிய வரும்போது பின்பற்றப்பட்டாக வேண்டியவையாகவும் திகழ்கின்றன.

மொத்தத்தில் திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை பெற முயல்வோர் திருக்குர்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது "முஆது(ரழி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று, இஜ்திஹாது என்ற சுயநிர்ணய ஆற்றல் மூலம் தெளிவுரை பெற முயல வேண்டம்.

திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இருபத்தி மூன்றாண்டு காலத்தில் அதனுடன் ஒட்டி உறவாடி, அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, நடந்து குர்ஆன் விரும்பும் இலட்சிய சமுதாயதாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம்(ஸல்)அவாகளின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும். அவர்களிலும் குறிப்பாக

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு பின், அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும். எனினும் இப்னு மஸ்ஊது(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் கூட "இஸ்ரவேலர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்" என்ற நபிமார்களின் அனுமதிகேற்ப, இஸ்ரவேலர்களிடமிருந்து வாழையடி வாழையாக வந்த கருத்துகளைத் தமது திருமறைத் தெளிவுரைகளில் கலந்துவிட்டிருக்கின்றனர்.

ஆயினும் அவற்றை, இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு ஒத்து வரும் போது அதற்கொரு சான்றாகக் கொள்ளலாமே தவிர, அதனையே தீர்ந்த முடிவாகவும், உறுதியாகவும் நம்பிட முடியாது.

இஸ்ரவேலர்களின் மூலம் அறிவிக்கப்படுபவை, அறிஞர்களால் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டிருக்கின்றன.

(1) குர்ஆன், நபிமொழி மூலம் அவை நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டவை.

(2) குர்ஆன் நபிமொழி மூலம் நம்பத்தகாதவை என்று நிரூபிக்கபட்டவை.

(3) இந்த இரண்டு வகைகளிலும் சேராத கதைகள், இவைகளை நாம் உண்மை என்றும் கூறத்தேவையில்லை. பொய் என்றும் அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை நபிகள்(ஸல்) அவர்கள் அனுமதித்து இருப்பதால் எடுத்துச் சொல்வதில் தவறில்லை. எனினும், ஒன்றை நிரூபிக்கும் ஆதாரமாக அவற்றைப் பயன்படுத்த முடியாது.

இவற்றில் பெரும்பாலான கதைகளில் எவ்வித மார்க்க நன்மையும் இல்லை. சுவையூட்டுவதாக தமது திருமறைத் தெளிவுரைகளில், இவற்றை எடுத்துச் சொல்வதின் மூலமே பெரும்பாலும் அவர்களின் தெளிவுரைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.

(கஹ்ஃபு) குகை என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளின் பெயர்கள், அவர்களுடன் சென்ற நாயின் நிறம், அவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், மூஸா(அலை) அவர்களிடமிருந்த கைத்தடி எந்த மரத்தில் ஆனது என்பதையும், இப்ாஹிம்(அலை) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லாஹ், உயிர்ப்பித்துக் காட்டிய நான்கு பறவைகள் எவை என்பதையும், அந்த நான்கு பறவைகளையும் அல்லாஹ் ஏன் தெரிவு செய்தான் என்பதற்குக் கட்டிவிடப்பட்ட கதைகளையும், மூஸா(அலை) அவர்களின் சமூகத்தவரில், ஒருவர் கொல்லப்பட, கொல்லப்பட்டவரை உயிர்ப்பிக்க ஒரு மாட்டை அறுத்து, அதன் உறுப்புகளில் ஒன்றால் அடித்ததும், அவர் உயிர் பெற்ற வரலாற்றில், எந்த உறுப்பில் கொல்லப்பட்டவன் அடிக்கப்பட்டான் என்பதையும், மூஸா(அலை) அல்லாஹ்விடம் உரையாடிய போது நின்று பேசிய மரம் எந்த மரம் என்பதையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டபடி குர்ஆனுக்கு "குர்ஆன் மூலம், நபிமொழி மூலம், ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். இவர்களில் பெரும்பாலோர் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களும் அவர்களின் மாணவர்களுமாவார்கள்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.

எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.

பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களின் திருமறைத் தெளிவுரைக்குத் தந்திருக்கின்ற முன்னுரையை உங்கள் முன் வைத்திருக்கிறோம்.

அவர்கள் தந்துள்ள விளக்கங்களுக்கு உட்பட்டு திருமறைத் தெளிவுரையை "நஜாத்" மாத இதழில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். வாசகர்கள் தொடர்ந்து அதனைப் படித்து வரும்போது "இன்ஷா அல்லாஹ்" திருமறையின் சரியான தெளிவுரையைப் பெறும் வாய்ப்பினை பெறுவார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பணியை அவனுக்காகவே துவக்கி அவனுக்காகவே முடித்து, அதற்கான நன்மையை மறுமையில் நமக்கு வழங்கிட அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.[ 1986 மே,by அந்நஜாத்]

அன்பு சகோதரர்களே! மேலே நீங்கள் படித்த விளக்கம் என்பது, அந்நஜாத்தில் திருக்குர்'ஆன் விரிவுரை எழுதிய காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், திருக்குர்'ஆனுக்கு விரிவிரை எழுத தொடங்குவதற்கு முன்பாக பிரபல மேதை இமாம் இப்னு கஸீர் அவர்களின் முன்னுரையை பதிவு செய்து, இமாம் இப்னு கஸீர் அவர்கள் எந்த வழிமுறையை காட்டினார்களோ அந்த வழிமுறையில் நான் திருக்குர்'ஆனுக்கு விரிவுரை எழுத இருக்கிறேன் என்று அறிஞர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் கூறுகிறார்கள்.

மேற்கண்ட செய்தியின் மூலம் திருக்குர்'ஆன் விரிவுரை எழுத விரும்பும் எவராகினும் பேன வேண்டிய விதிமுறைகள்;

  1. திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும்.
  2. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும்.
  3. அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும்.
  4. அவர்களிலும் குறிப்பாக அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.
  5. ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும்.
மேற்கண்ட ஐந்து வழிமுறைகளை பின்பற்றாமல் குர்'ஆனில் விளக்கம் இல்லை; நபிமொழியில் விளக்கம் இல்லை எனு கூறிக்கொண்டு, தனது சொந்த வியாக்கியானத்தை திணிக்கக் கூடாது என்றும், கீழ்கண்டவாறு இமாம் இப்னு கஸீர் அவர்களின் கருத்தை பதிவு செய்கிறார் அறிஞர் பீ.எஸ்.அலாவுதீன்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.

எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.

மேலே உள்ள விஷயங்களை காய்தல் உவத்தலின்றி படித்தால், குர்'ஆனை விளங்க குர்'ஆன் மட்டும் போதாது; நபிமொழி மட்டும் போதாது. சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், தாபியீன்களின் விளக்கம் வேண்டும் என்ற கருத்தை பீ.எஸ். அலாவுதீன் ஏற்றுள்ளார். பீ.எஸ். அலாவுதீனின்  இந்த விதிமுறையை பீஜேயும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அந்நஜாத்தில் இடம்பெற செய்துள்ளார். இதன் மூலம் பீஜேயும் அன்று குர்'ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதையும் தாண்டி தாபியீன்கள் கருத்தையும்  ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

இன்று மார்க்கத்தில் நமது கருத்தை விட சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்பவர்களை 'வழிகேடர்கள்' 'தடம் புரண்டவர்கள்' என்று விமர்சிக்கும் பீஜே, இவரது அண்ணனை வழிகேடர் என்று சொல்வாரா?  ஏன் அண்ணனின் கருத்தை வழிமொழிந்த பீஜே, தன்னைத் தானே 'வழிகேடர்' என்று சொல்லிக் கொள்வரா?

சிந்தியுங்கள் மக்களே!

குர்'ஆனுக்கு நபித்தோழர்கள் விளக்கத்தை ஏற்காமல் இவரது மனோஇச்சை விளக்கத்தை தினித்ததால் ஏற்பட்ட விளைவுகள்  பட்டியலிடப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-இன்றும்!

அந்நஜாத்தில் இடம்பெற்ற திருக்குர்'ஆன் விளக்கம் தொடரில், காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள்,  'அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று திருக்குர்'ஆன் வசனத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இது தவறு அர்ஷின் மீது 'அமர்ந்தான்' என்பதுதான் சரியாகும் என்று தவ்ஹீத் மூத்த அறிஞர் மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ அவர்கள் சுட்டிக் காட்டியபோது அதை ஏற்க மறுத்து அறிஞர் பீஜே அளித்துள்ள பதில் பாரீர்;
 
கேள்வி; இஸ்லாமியக் கொள்கை விளக்கம் என்ற பகுதியில் அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான் என்று போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்தான் என்றே எழுதி இருக்க வேண்டும்.

மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ, துபை. ஜஹாங்கீர் சுல்தான், துபை.

பதில்; 'இஸ்தவா' என்று திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கு P.S. அலாவுதீன் அவர்கள் 'அமைந்தான்' என்று மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றும் மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது உங்கள் கருத்து. 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'உட்காருதல்' என்று நேரடியாகப் பொருளில்லை. விரிவான பொருளைக் கொண்ட ஒரு வார்த்தை அது. உட்காருதல், நிலைபெறுதல், ஆதிக்கம் செலுத்தல் போன்ற பல பொருள்களுக்கு இடம் தரக் கூடிய ஒரு வார்த்தை. அதற்கு 'அமர்ந்தான்' என்று பொருள் கொள்ளும் போது, அதன் விரிவான பொருள் சிதைக்கப்பட்டு, சுருங்கிய ஒரு பொருளைத் தரக் கூடியதாக அது ஆகின்றது. அதனால் தான், அதற்கு நிகரான விரிந்த பொருள் கொண்ட அமைந்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. P.S. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இது பற்றி நானும், அவர்களும் விவாதித்த பின்னர் தான் 'அமைந்தான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 'இஸ்தவா' என்பதற்கு நேரடியாக 'அமர்ந்தான்' என்று பொருள் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. 'இஸ்தவல் மாவு' என்று அரபியர்கள் பயன்படுத்தும் சொல்லுக்கு 'தண்ணீர் அமர்ந்தது' என்று பொருள் கொள்ளப்படுவதில்லை. 'இஸ்தவத் அலல்ஜுதிய்யி என்ற குர்ஆன் வசனத்திற்கு, அமர்ந்தது என்று அங்கே பொருள் கொள்ளப்படுவதில்லை. இந்த இடங்களிலும்…. மற்றும் ஏனைய இடங்களிலும் 'அமைந்தான்' என்றெ பொருள் கொள்ளப்பட வேண்டும்' என்பதற்குரிய ஆதாரங்களை எடுத்துச் சொன்னால் நாம் ஏற்கிறோம். 'அமைந்தான்' என்பது. 'அமர்ந்தான்' என்ற பொருள் உட்பட வேறு பல பொருள்களையும் உள்ளடக்கிய அதே தரத்தில் உள்ள சொல் தான். எனவே 'அமைந்தான்' என்பது சரியான மொழி பெயர்ப்பு என்றே நாம் கருதுகிறோம்.[அந்நஜாத்: டிசம்பர், 1986 ]
 
மேற்கண்ட பதிலில் பீஜே, 'அமர்ந்தான்' என்று மொழியாக்கம் செய்தால் அது விரிவான பொருளை சிதைக்கிறது. எனவே 'அமைந்தான்' என்று மொழிபெயர்ப்பதுதான் சரி என்று சொல்லி, அன்று தனது  அண்ணனின் கூற்றுக்கு வக்காலத்து  வாங்கிய பீஜே, இன்றைக்கு 'அமர்ந்தான்' என்று கூறுவதுதான் சரி என்று அந்தர் பல்டியடித்து ஃபத்வா வழங்கியுள்ளதை இணைப்பை கிளிக்  செய்து படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/arshil_amarnthan_enbathu_sariya/
 
இந்த புதிய ஃபத்வாவில் 'இஸ்தவா' என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்திற்கும் 'அமர்ந்தான்'  என்றும் 'அமர்தல்' என்றும் மொழிபெயர்த்துள்ள பீஜே, இறுதியாக 'இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது  என்பவர்கள் இவ்வார்த்தைகளுக்கு  வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அந்த  விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணப்படியும்,  குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன' என்கிறார்.
 
அதாவது 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'அமர்ந்தான்' என்ற அர்த்தம் தவிர்த்து வேறு விளக்கங்கள் சரியல்ல என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.இதன் மூலம் காலஞ்சென்ற தனது அண்ணன் விளக்கம் தவறு என்பதையும், அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி அன்று அந்நஜாத்தில் 'அமைந்தான்' என்பதுதான் சரி என்று தான் கூறியதும் குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தவறானது என்று ஒப்புக் கொள்கிறார்.
 
இதை இங்கே முன் வைப்பதற்கு காரணம் இவரது ஒரு மஸாயில் தவறு என்று பிறரால் சுட்டிக் காட்டப்பட்டால் ஏற்க மறுக்கும் இவரது மன முரண்டை  மக்கள் விளங்கிக் கொள்ளவும், இவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரமின்றி இவரே முரண்படுவதையும்   மக்கள் விளங்கிக் கொள்ளத்தான்.
 
நேரத்துக்கு நேரம் இவருக்கு இவரே முரண்படும் இந்த    மனோஇச்சை வாதியை  பின்பற்றுபவர்கள் சிந்திப்பார்களா?

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
முஸ்லிமல்லாத ஒருவர் தனது சகோதரி மகளை திருமணம் செய்திருந்த நிலையில் இஸ்லாத்தை  தழுவினால் அந்த திருமண உறவின் நிலை என்ன என்ற கேள்விக்கு அன்று அறிஞர் பீஜே அளித்துள்ள பதிலை படியுங்கள்;
ஐயம் : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மனம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர், முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமண உறவு தொடருமா? முடியுமா?
S.M. நாசர், தேங்கா பட்டிணம்.

தெளிவு : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.

"குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்" என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும்.
"மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்!" (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்)

இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும்.
அவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தக் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.[1987 மார்ச், அந்நஜாத்].
பீஜே அவர்களின் மேற்கண்ட பதிலை கவனமாக நீங்கள்  பார்த்தால், இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்கிறார். இஸ்லாத்தை தழுவும் ஒருவன் குர்'ஆனின் கட்டளையை ஏற்பதாக உறுதிமொழி அளித்தே இஸ்லாத்தில் இணைகிறான். எனவே குர்'ஆனின் கட்டளையான சகோதரி மகள் விசயத்தையும் அவன் ஏற்றே ஆகவேண்டும் என்கிறார். அது மட்டுமன்றி இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு இணைய விரும்புபவர்கள் மட்டும் தான் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக  முன் வைக்கிறார் பீஜே. ஆனால் இன்று இதே விஷயத்தில் அவரது நிலை என்ன?  இணைப்பை படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/sakothari_makalai_thirumanam_seythavar_islathil_sera_mutiyuma/
பீஜேயின் இந்த லேட்டஸ்ட் ஃபத்வாவில் இஸ்லாத்தில் ஒருவர் இணைவதற்கு அவர் மணந்திருந்த சகோதரி மகளை விவாகரத்து செய்து விட்டு வா என்று சொல்ல கூடாது என்கிறார். உண்மைதான். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவரை  உடனடியாக தனது சகோதரி மகளை விவாகரத்து செய் என்று சொல்லக் கூடாது என்றும், சிறிது காலம் மார்க்க உபதேசங்களை கேட்டு பின்பு அவராகவே விவாகரத்து செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்  என்கிறார்.  இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று அவகாசம் அளிக்க வேண்டும் என்று சொல்லி தனக்குத் தானே முரண்படுகிறார். மேலும் இவரது இந்த நவீன ஃபத்வாவிற்கு அவர் என்ற சான்றையும் வைக்க வில்லை. முழுக்க முழுக்க இவரது சொந்த மனோஇச்சையன்றி  வேறில்லை. இவரது கூற்றுப்படி இஸ்லாத்தை  ஏற்ற  ஒருவருக்கு அவகாசம் அளித்து அந்த அவகாச காலத்தில் தனக்கு அனுமதிக்கப்படாத அந்த அந்த மனைவியுடன்  உடலுறவு கொண்டால் அதை ஆகுமானது என்று பீஜே கூறுவரா? இது ஒருபுறமிருக்க, இந்த விசயத்திற்கு மார்க்கம் தெளிவான வழியை காட்டியுள்ளது.
இப்னு உமர்[ரலி] அவர்கள் கூறினார்கள்;
ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுக்கு பத்து மனைவியர் இருந்தனர். அவர் இஸ்லாத்தை தழுவியபோது அவருடன் அவரது மனைவியரும் இஸ்லாத்தை தழுவினர். அப்போது நபி[ஸல்] அவர்கள் அவரிடம், 'அவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்தக் கொள்ளும்படி[யும்] மற்றவர்களை விவாகரத்து செய்யும்படி[யும்] கட்டளையிட்டார்கள். நூல்; திர்மிதீ, பைஹகீ.
நாம் வைத்துள்ள மேற்கண்ட ஹதீஸில் இஸ்லாத்தை ஏற்ற ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுடன் அவரது பத்து மனைவியரும் இஸ்லாத்தை   ஏற்ற நிலையிலும், அந்த  சஹாபிக்கு நபியவர்கள் அவகாசம் அளிக்கவில்லை. நால்வரைத் தவிர மற்றவர்களை விவாகரத்து செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள் என்றால், இதிலிருந்து புரிவது என்ன? இஸ்லாத்தை ஏற்ற ஒருவர்,  இஸ்லாத்திற்கு மாற்றமாக மனமுடித்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்பதுதானே?  சொல்ல முடியாது, இந்த ஹதீஸில் 'உடனடியாக' விவாகரத்து செய் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற கருத்து உள்ளதா? என்று  வார்த்தை   விளையாட்டை பீஜே செய்தாலும்  ஆச்சர்யமில்லை. பீஜேயிக்கு  ஹதீஸ்கள் முக்கியமல்ல. மாறாக அவரது  நோக்கமெல்லாம் முஸ்லிமல்லாதவர்கள் ஏற்கும் வகையில் சட்டங்களை பூசி மெழுகி சொல்வது தானே!

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே  அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும்  அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும்  தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே  பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று;
 
நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;
 
  • நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "ரஸுலுல்லாஹ்" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை?

K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.

இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.

எழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத்
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு  எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின்  தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா? சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன? நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே  தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி? இதோ விடை;
 
பராஉ(ரலி) அறிவித்தார்.

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]
 
அலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம்.
 
குறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார்  என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு  வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்;
 
கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே?  – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.

பதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்]

 
மேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில்  காயிப் ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[?] படிக்க இங்கே கிளிக் செய்க; http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/
 
முந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில்,  தொழுகை நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார். இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில் இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை படியுங்கள்;
 
உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
 
''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள்  அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.
 
மேற்கண்ட செய்தியை கவனமாக  படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை  என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி  [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி]   நடந்துள்ளது.
 
மேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில் பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே, நபியும்- ரசூலும் ஒன்றுதான் என்ற கொள்கையை இப்போது கொண்டிருக்கிறார். இதே அறிஞர் பீஜே நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று அன்று வழங்கிய ஃபத்வா'வை கீழே படியுங்கள்;
 
கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை? K.நதீம் அஹ்மது, ஆம்பூர்.
 
பதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்கை  கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.
-அந்நஜாத் 1986 ஆகஸ்ட்
 
மேற்கண்ட ஃபத்வா'வில் நபி வேறு; ரஸூல் வேறு என்று தெளிவாக குறிப்பிடுகிறார் பீஜே. மேலும் தனது இந்த தீர்ப்பு குர்'ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் பீஜே கூறுவதை கீழ்கண்ட ஃபத்வா'வில் படியுங்கள்;
 
ரசூல், நபிக்கு உள்ள வேறுபாட்டைச் சென்ற இதழில் எழுதி இருந்தீர்கள்! அந்த விளக்கம் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப் பட்டதா?

S.A. இப்னு அப்துல்லா, அம்மாபட்டினம்.

ஆமாம்! குர்ஆனிலிருந்து பெறப்பட்டதுதான்.

"நாம் தவ்ராத்தை இறக்கியருளினோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அதைக் கொண்டு பல நபிமார்கள் தீர்ப்பு வழங்குவர்" (அல்குர்ஆன் 5:44)

இந்த இறைவசனம், "மூஸா" என்ற ரசூலுக்கு அருளப்பட்ட தவ்ராத்தை அடிப்படையாகக் கொண்டு, பல நபிமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என்று தெளிவாகின்றது.

-அந்நஜாத்1986 அக்டோபர் 

நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்றும் குர்'ஆன் அடிப்படையில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் தீர்ப்பளித்த பீஜே, இன்று நபியும் ரசூலும் ஒன்றே என்று வாதிடுவதை இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்;

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/398/

அன்று நபி வேறு; ரஸூல் வேறு என்று ஃபத்வா வழங்கும் போதும் தனது கூற்றுக்கு குர்'ஆனை ஆதாரம் வைத்தார். இன்று அந்த 5:44வசனத்தின் அர்த்தம் மாறி விட்டதா? அல்லது அந்த வசனம் குர்'ஆனிலிருந்து மறைந்து விட்டதா? இப்போது நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று கூறுவதற்கும் வேறு பல குர்'ஆன் வசனங்களை ஆதாரமாக வைக்கிறார்.
 
இவர் சில சட்டங்களை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினால், ''சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது; உடனே மாற்றிக் கொண்டேன் என்பார். ஆனால் இந்த நபி-ரஸூல் பிரச்சினையில் அன்றும் சரி, இன்றும் சரி  குர்'ஆன் வசனங்களை வைத்தே இரு வேறு முரண்பட்ட தீர்ப்பை வழங்குகிறார். அவ்வாறாயின் நபியும்-ரசூலும் ஒன்றுதான் என்று கூறும் இந்த வசனங்கள் கூட இவரது கவனத்திற்கு இப்போதுதான் வந்ததா?
 
இதன் மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது. இவர் அன்றும் இன்றும் தான் கொள்ளும் கருத்திற்கு ஏற்ப உள்ள வசனங்களை மட்டும் கையிலெடுத்து, கண்டபடி தீர்ப்பு வழங்கி, கண்ட நேரத்தில் மாற்றிக் கொள்பவர் என்பதற்கு இவரது இந்த நபி-ரஸூல் சட்ட முரண்பாடும் ஒரு சான்றாக திகழ்கிறது. சிந்திப்பவர்கள் இவரது முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.  

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம் என்ற ஃபத்வாவை  வழங்கியிருந்தனர்.  இதில் வேடிக்கை  என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது  என்பதற்கு அடுக்கடுக்கான ஹதீஸ் ஆதாரங்களை அவர்களே அந்த ஆய்வில் வைத்துள்ளார்கள். அவைகளில் சில;
  1. ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
    நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389)
  2. கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)
  3. உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)
  4. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)
  5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
    இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519)
  6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)

  7. மேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற  சில ஹதீஸ்களையும் வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு,
கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.
கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.என்று தீர்ப்பளித்துள்ளனர்.
கவனமாக கவனிக்கக் வேண்டும். கணுக்கால் வரை ஆடையணிய அனுமதித்த நபி[ஸல்] அவர்கள், 'இஸ்பால்' செய்வதை விட்டும் அதாவது கணுக்காலுக்கு கீழே தரையை தொடும் அளவுக்கு ஆடையனிவதை எச்சரிக்கிறேன் என்று சொல்கிறார்கள்.  கணுக்கால் வரை என்று சட்டம் சொன்ன நபியவர்களுக்கு தரையை தொடாமல் ஆடையணிந்து கொள் என்று சொல்லத் தெரியாதா? இதிலிருந்து தெரிவது என்ன? கீழாடையின்  அதிக பட்ச எல்லை என்பது கணுக்கால் வரை தானே?
ஒருவர் சொல்கிறார் தொண்டி எல்லையோடு நின்று கொள்; இதைவிட்டும் தாண்டுவதை நான் எச்சரிக்கிறேன் என்கிறார். இதிலிருந்து என்ன சட்டம் எடுக்க முடியும்? தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே!ஆனால் ஆய்வாளர்  
பீஜேயின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உடனே ஒருவரிடம், ''தொண்டி எல்லையை தாண்டக்கூடாது  என்பதின் அர்த்தம்  என்ன? என்று கேட்கிறார். அவரோ தொண்டி எல்லையை தாண்டுதல் என்றால் தொண்டிக்கு அடுத்த ஊரை நெருங்குவதாகும் என்கிறார். அப்படியானால் அந்த ஊரைத் தொடாமல் ஒரு அடி  முன்னால்  நின்று கொள்வது தவறில்லை என்று பீஜே சட்டம் சொல்லி விட்டார் என்றால் 'தொண்டியை தாண்டாதே  என்று கட்டளையிட்டதற்கு மதிப்புண்டா?
மேலும், இவர்கள் அடிக்கடி மேடையில் மத்ஹபை குறித்து ஒன்று சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால் போதை தருவதை குறைவாக சாப்பிட்டால் ஹராம் இல்லை. அதாவது பத்துக் கிளாஸ் அடித்தால் தான் போதை ஏறும் என்றால், ஒன்பது கிளாஸ் அடிப்பது  தவறில்லை என்று மத்ஹபு சட்டம் சொல்கிறது என்று கிண்டலடிப்பார்கள். அதே பாணியில் இவர்களின் இந்த தீர்ப்பு குறித்து சொல்வதாக இருந்தால், 'கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் என்பது தரையில் இழுபட்டால் ஹராம். தரையை தொட்டால் ஹராமில்லை' என்பதுதான்.
மேலும், இவர்கள் வைத்துள்ள அகராதிப் படி பார்த்தால்  கூட 'இஸ்பால்' என்பது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்பதுதானே! ஆனால் இவர்களோ அதையும் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை  என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே? தரையை தொடுவதற்கும், தரையில் இழுபடுவதற்கும் வேறுபாடு கூட விளங்க வில்லையா?
கரண்டைக்கு கீழே ஆடையணிதல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல், பெருமைக்குரிய செயல், அல்லாஹ் விரும்பாத செயல் என்றெல்லாம் தெளிவாக இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக தரையில் இழுபடாமல் ஆடை அணிந்தால் தவறில்லை என்று ஃ பத்வா வழங்கும் இவர்களை சமுதாயம் என்று அடையாளம் காணப் போகிறது?

அதெல்லாம் சரி! தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா?

-எண்ணம்; சகோதரர் பக்ருதீன்.
எழுத்து; முகவைஅப்பாஸ்.

புதன், 17 ஆகஸ்ட், 2011

பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? என்றால் செய்யக் கூடாது என்று அறிஞர் பீஜே உட்பட அவர் தரப்பு ஆதரவாளர்கள் பல காலமாக எழுத்திலும் பேச்சிலும் செய்துவந்ததை அனைவரும் அறிவோம். எந்த அளவுக்கென்றால் இறந்தவர்கள்  கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்று சொல்பவர்களை 'பறேலவிகள்' என்று கடுமையாக அன்று அந்நஜாத்தில்  விமர்சித்தார் அறிஞர் பீஜே. ஆனால் இன்று ஆய்வு என்ற பெயரில் பெண்கள் ஜியாரத் கூடும் என்ற ஃபத்வாவை வழங்கி இவரே 'பரேலவி'யாக காட்சி தருகிறார். பெண்கள் கப்ர் ஜியாரத் கூடும் என்பதற்கு இவர் வைத்துள்ள ஆதாரம்;

1 .ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்ரித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்ரிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்" என்று சொல்" என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்ரிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
நூல் முஸ்­லிம் 1774

இறந்தவர் கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய இன்று பீஜே ஆதாரமாக காட்டும் மேற்கண்ட ஹதீஸ் குறித்து அந்நஜாத்தில் 1987 மே மாதம் செய்த  விமர்சனம் பாரீர்;

"இறந்தவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். "மூமின்களாகிய கபுருவாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் நம்மில் முன் சென்றவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும்". (என்ற பொருள் கொண்ட வார்த்தைகளை) ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : முஸ்லிம், நஸயீ

இது பெண்கள் ஜியாரத்தை ஆதரிப்பவர்களின் இரண்டாவது ஆதாரம். இதில் அவர்களின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை எவரும் உணரலாம். ஏனெனினல் "கபுரை ஜியாரத்து செய்யும் போது நான் என்ன ஓத வேண்டும்" என்று ஆயிஷா(ரழி) கேட்கவில்லை. மாறாக கபுராளிகளுக்காக (இறந்தவர்களுக்காக) நான் என்ன கூற வேண்டும் என்று தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த துஆவை வீட்டிலிருந்து கொண்டே இறந்தவர்களுக்காக நாம் ஒதலாம். கபுருக்கு சென்று ஜியாரத்து செய்வது பற்றி இதில் குறிப்பிடப்படவே இல்லை . மேலும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் நீண்ட ஹதீஸின் இறுதிப் பகுதியாகும். அதன் முன் பகுதிகளையும் நாம் கவனித்தால் பெண்கள் ஜியாரத்து கூடாது என்ற முடிவுக்கே வரமுடியும். அந்த முற்பகுதியைப் பார்ப்போம்:

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-

என் இல்லத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கி இருக்கும் போது தங்கள் மேலங்கியைக் களைந்து, செருப்பைக் கழற்றி, காலருக்கே வைத்து பூ, தங்கள் படுக்கையின் மீது ஒருக்களித்துப் படுத்தார்கள். அவர்கள் தீடிரென மேலங்கிளை அணிந்து கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள். நானும் முக்காடிட்டுக் கொண்டு உடலை மறைத்துக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டைத் தொடர்ந்தேன். "பகீஃ" என்ற கபரஸ்தானுக்கு வந்தார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள்.

அவர்கள் திரும்பும் போது நானும் திரும்பினேன், அவர்கள் வேகமாக நடக்க நான் (அதைவிட ) வேகமாக வந்தேன். (எப்படியோ) அவர்களுக்கு முன்பே வீடு வந்து ஒருக்களித்துப் படுத்தேன். உடன் அவர்களும் வந்தனர். என்னைக் கண்ட அவர்கள் "ஆயிஷா! ஏன் உனக்கு மூச்சிரைக்கிறது?" என்று கேட்டார்கள்'. (அதாவது வேகமாக விரைந்து வந்ததால் ஆயிஷா(ரழி) மூச்சு இறைக்கப்படுத்திருந்தார்கள்)

நான், ஒன்றுமில்லை என்று கூறினேன். காரணத்தை நீ கூறாவிட்டால் அல்லாஹ் எனக்கு அறிவிப்பான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்ததைக் கூறினேன். உடனே எனக்கு வேதனை ஏற்படும் விதமாக என் நெஞ்சில் அறைந்தார்கள், பிறகு தான் கபரஸ்தானுக்குச் சென்ற காரணத்தைப் பின்வருமாறு கூறினார்கள். ஜிப்ரில்(அலை) அவர்கள் வந்து "பகீஃ" கபரஸ்தானில் அடங்கப்பட்டவர்களுக்காக அங்கே வந்து பாவமன்னிப்புக் கோரும் படி உன் இறைவன் கட்டளையிட்டான் என்று கூறினார்கள். (அதனால் அங்கே சென்று அவர்களுக்காக மன்னிப்புக் கோரினேன்)

"அவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று கேட்டேன்.

"முமீன்களாகிய கபுர்வாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் . நம்மில் முன் செல்பவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும் என்ற பொருள் கொண்ட வார்த்தையைச் சொல்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் முற்பகுதியை (எதிர்த்தரப்பினர் அதைக் குறிப்பிட மாட்டார்கள்) க்கவனித்தால் பெண்கள் ஜியாரத் கூடாது என்று கருதத்தான் ஆதாரமுள்ளது. அன்னை ஆயிஷா(ரழி) நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் சென்று விட்டு, அவர்களுக்குத் தெரியாமலே விரைந்து வந்து ஒன்றும் நடவாதது போல் இருந்து விடப் பார்க்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்ட போதும் "ஒன்றுமில்லை" என்றே பதில் கூறுகிறார்கள். இதிலிருந்தே பெண்கள் கப்ருகளுக்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நன்கு தெரியவரும். நடந்ததைக் கூறியதும் நெஞ்சில் வேதனை ஏற்படும் அளவுக்கு அறைகிறார்கள் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது.

இந்த ஹதீஸிலும் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்பதற்கு நேரடியான ஆதாரமும் இல்லை. சுற்றி வளைத்துக் கொண்டாவது அதற்கு ஆதாரம் உண்டா என்றால் அதுவுமில்லை. மாறாக கூடாது" என்று கருதத்தான் அதில் இடம் உண்டு.என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே இன்று அதை மறந்து அதே ஹதீஸை பெண்கள் ஜியாரத்துக்கு  ஆதாரமாக காட்டுகிறார் என்றால் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுங்கள்.

பீஜேயின் ஆதாரம் 2 ;

நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர் : புரைதா(ரழி) நூல் : முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸை குறித்து அன்று பீஜே செய்த விமர்சனம் பாரீர்;

பெண்களுக்கு ஜியாரத்து செய்வதை தடுக்கப்பட்டு தெளிவான பல ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இவர்களின் இந்த வாதத்தில் நியாயமிருக்கும். ஆனால் தடை செய்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றை பார்ப்போம்.

"நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை 'லஃனத்' செய்தனர்.

இது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. இந்த நபிமொழியை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்), இமாம் திர்மிதீ, இமாம் இப்னுமாஜா ஆகிய மூவரும் மூன்று வழிகளில் அறிவிக்கின்றனர். அபுஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஹஸ்ஸான்(ரழி) ஆகிய மூன்று சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்றர். இந்த மூன்று ஹதீஸ்களையும் மேற்கூறிய மூன்று இமாம்களும் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இமாம் நஸயீ, இமாம் இப்னு ஹிப்பான் இருவரும், இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாகவும், அபூஹுரைரா(ரழி) அவர்கள் மூலமாகவும் இந்த நபி மொழியை அறிவிக்கின்றனர்.

இமாம் அபூதாவுது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இதை அறிவிக்கின்றனர்.

இத்தனை வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் நாம் மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்.

இந்த ஹதீஸில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாமல் பெண்கள் ஜியாரத் லஃனத்துக்கு உரியது. அதுவும் அல்லாஹ்வின் திருத்தூதரின் லஃனத்துக்கு உரியது என்பது தெளிவாக்கப்படுகிறது. -[அந்நஜாத் 1987 மே]

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபியவர்கள் சபித்தார்கள் என்ற ஹதீஸ் இருப்பதால், நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு ஜியாரத்துக்கான  பொது அனுமதியாக கருத  முடியாது என்று அன்று சொன்ன  பீஜே, இன்று அந்த ஹதீஸை பலவீனம் என்கிறார்.

கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ர­லி அவர்கள் அறிவித்த செய்தி திர்மிதியில் 976 ல் இடம் பெற்றுள்ளது.

ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அம்ரு பின் அபீ ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தீர்பளித்திருக்கிறார்கள்.  

என்று கூறி  பெண்களுக்கு கப்ர் ஜியாரத் கூடும் என்கிறார். அன்று வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று சொன்னவர், இன்று தனது நிலைப்பாட்டிற்காக அந்த ஹதீஸ் பலவீனமானதாக கூறுகிறார். இப்படி ஒவ்வொரு மஸாயில் பிரச்சினையிலும் நாளுக்கொரு முரண்பாட்டை கடைபிடிக்கும் இவரை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
திருக்குர்'ஆன் மொழிபெயர்ப்புகளில் பீஜே மொழிபெயர்ப்பு நீங்கலாக மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு குறிப்பிடப்படுவது சரியா? என்ற கேள்விக்கு அந்நஜாத் இதழில் அறிஞர் பீஜே அன்று சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு;
 
'யாராக இருந்தாலும் ஆதாரம் கேளுங்கள்' என்று எழுதி இருந்தீர்கள்! குர்ஆனில் மக்கீ, மதனீ என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டா?
-மவ்லவி A.R. முஹம்மது அஸ்அது, அம்மாபட்டினம்.
 
இதில் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள்? மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.[1987 மே,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!  அந்நஜாத்]
 
மேற்கண்ட அறிஞர் பீஜேயின்  பதிலை நிதானமாக  படித்தால், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு அல்ல என்றும், அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றும் கூறியதோடு,  மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? என்று அறிவுப்பூர்வமாக வாதம் வைத்த அறிஞர் பீஜே, இன்று 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு என்கிறார்.
 
''எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்கு தெளிவான ஆதாரங்கள்  இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரங்கள்  எதுவுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை  மதீனாவில் அருளப்பட்டவை  என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது' என்கிறார்.
 
நன்றாக கவனிக்க வேண்டும் 'மக்கீ' அல்லது 'மதனீ'  என்று குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றவர், இன்று தெளிவான ஆதாரம்  வேண்டும் என்கிறார். அன்று சரியாக தெரிந்ததை  மாற்ற இன்று இவர் எந்த ஆதாரத்தை கண்டு விட்டார்? ஏனிந்த முரண்பாடு? எல்லாம் மனோ இச்சையின் வெளிப்பாடு.  

எட்டுத்திக்கும் 'ஏகத்துவ' வெற்றி முரசம் ஒலித்திட வித்திட்ட பத்ர் யுத்தம்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த- வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
அல்லாஹ்வின் திருத்தூதர்[ஸல்] அவர்கள், மக்காவில் ஏகத்துவக்கொள்கையை எடுத்தியம்பியபோது அதை ஏற்றுக்கொள்ளாத மக்கத்து இணைவைப்பாளர்கள் அருமை நபி[ஸல்] அவர்களுக்கும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் பல்வேறு கடுமையான துன்பங்களை தந்தனர். ஓரிறைக்கொள்கையை ஏற்ற ஒரே காரணத்திற்காக பல சஹாபாக்கள் உயிர்களையும் பறித்தனர் பாவிகள். ஒருகட்டத்தில் தங்களது ஈமானை பாதுகாக்கும் நோக்கில் அபிசீனியாவிற்கு சகாபாக்கள் சிலரும், பின்னால் நபி[ஸல்] அவர்கள் தலைமையில் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்யும் நிலை ஏற்பட்டது. மதீனா வந்த பின்னும் எப்படியேனும் முஹம்மதையும் அவரது தோழர்களையும் ஒழிக்கவேண்டும் என்று அதற்கான தருணம் பார்த்துக்கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்.

இதற்கிடையில் மக்கத்து குறைஷிகளின் பொருட்கள் அடங்கிய வாகனக்கூட்டத்தை அபூசுப்யான்[ரலி] அவர்கள், [அபூ சுப்யான்[ரலி] அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை] சிரியாவிலிருந்து மதீனாவை அடுத்துள்ள பத்ர் மார்க்கமாக மக்காவை நோக்கி வழிநடத்தி சென்று கொண்டிருந்தார்கள். இந்த செய்தி நபி[ஸல்] அவர்களுக்கு எட்டியவுடன், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக நம்முடைய சொத்து பத்துக்களை இழந்து நாடு துறக்கும் நிலைக்கு ஆளாக்கிய குறைஷிகள் இந்த செல்வங்களும் கிடைக்கப்பெற்றால் இன்னும் வலிமை பெற்று இஸ்லாத்திற்கு எதிராக களம் காண்பார்கள். எனவே இந்த வாகன கூட்டத்தை வழிமறிக்கவேண்டும் என்ற ரீதியில் நபித்தோழர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள். நபியவர்களின் இந்த ஆலோசனையை அறிந்துகொண்ட அபூசுப்யான்[ரலி] அவர்கள், முஹம்மதும் அவரது தோழர்களும் உங்களது வணிகபொருட்களை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளனர். எனவே உங்களின் பொருட்களை பாதுகாக்க படை திரட்டி வாருங்கள் என்று ழம்ழம் இப்னு அல் கிபாரி என்பவன் மூலமாக குறைஷிகளுக்கு தூது அனுப்பிவிட்டு, தனது பயணத்தின் பாதையை மாற்றி பத்திரமாக பொருட்களுடன் மக்கா வந்து சேர்ந்தார். [இப்னு ஹிஷாம்]

இதற்கிடையில் குறைஷிகள் படை மக்காவிலிருந்து கிளம்பி பத்ர் அருகே நெருங்கிவிட்டிருந்தனர். இதையறிந்த அபூசுப்யான்[ரலி] அவர்கள், தானும், உங்களது பொருட்களும் பத்திரமாக மக்கா வந்தடைந்து விட்டோம். எனவே உடனடியாக திரும்பி வாருங்கள் என்று குறைஷிகூட்டத்திற்கு அபூசுப்யான்[ரலி] அவர்கள் தகவல் அனுப்பினார். சில கோத்திரத்தார் அபூசுப்யான்[ரலி] அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மக்கா திரும்ப எஞ்சிய படைகளுடன் அபூஜஹல் மறுத்து பிடிவாதமாக பத்ரை வந்தடைந்தான்.[இப்னு ஹிஷாம்]

மறுபுறம் அபூசுப்யானின் வாகன கூட்டத்தை முற்றுகையிட ஆயத்தமாகிக் கொண்டிருந்த நபி[ஸல்] அவர்களுக்கு, குறைஷிகளின் படை மதினாவை நோக்கி பத்ரில் மைய்யம் கொண்டுள்ள தகவல் கிடைக்கிறது. அபூசுப்யான் மக்காவை சென்றடைந்த தகவல் நபி[ஸல்] அவர்கள் அறியவில்லை. எனவே இப்போது வாகனக்கூட்டத்தை முற்றுகைஇடுவதா? அல்லது குறைஷிகளை எதிர்த்து போர் புரிவதா? என்ற இரு நிலைமைகள் பற்றி நபி[ஸல்] அவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். அப்போது அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] போன்ற பெரும்பாலான நபித்தோழர்கள் போர் செய்வதையே வலியுறுத்தினார்கள்.[முஸ்லிம்]
மேலும் அல்லாஹ்,
وَإِذْ يَعِدُكُمُ اللّهُ إِحْدَى الطَّائِفَتِيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللّهُ أَن يُحِقَّ الحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
(8:7)

என்ற வசனம் மூலமாக இரண்டில் ஒன்றை அது எதுவாக இருந்தாலும் வெற்றி உண்டு. எனினும் அல்லாஹ் காபிர்களை வேரறுக்கவே நாடுகிறான் என்ற வசனம் தெளிவாக்குகிறது. இறுதியாக போர் செய்யும் முடிவுக்கு வந்து நபி[ஸல்] அவர்களின் படை பத்ரில் மைய்யம் கொள்கிறது. அன்று இரவில் நபி[ஸல்] அவர்களுக்காக அமைக்கப்பட கூடாரத்தில் நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் மனம் உருகி பிரார்த்தித்தார்கள்;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
 நபி(ஸல்) அவர்கள் பத்ருப்போரின்போது தம் கூடாரமென்றில் இருந்தபடி, '(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப் போவதில்லை' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, 'போதும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, 'இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்' எனும் (திருக்குர்ஆன் 54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். [புஹாரி எண் 4877 ]

இறை நிராகரிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நபியவர்களுக்கு புது தெம்பை தந்தது. அதை அதிகரிக்கும் வகையில் சகாபாக்களின் ஒத்துழைப்பும் இருந்தது.
மிக்தாத் இப்னு அஸ்வத் -ரலி - அவர்கள் கூறினார்கள்:)
நான், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், '(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்" என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது. [புஹாரி எண் 3952 ]

இறுதியாக போரின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் தரப்பில் அதிகபட்சமாக 319 வீரர்களும், குறைஷிகள் தரப்பில் ஆயிரம் பேர்களும் இருந்தனர்.[முஸ்லிம்]
அல்லாஹ்வின் உதவிகள்;
  • போருக்கு முன்பாக சகாபாக்களை அமைதிப்படுத்தும் வகையில் தூக்கத்தையும்-மழையையும்வழங்கி அருளியது.
  • அணியணியாக திரளும் ஆயிரம் வானவர்களை ஜிப்ரீல்[அலை] அவர்கள் தலைமையில் அனுப்பி உதவியது.
இறுதியாக ரமலான் பிறை 17 அன்று நடந்த போரில் முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷகீதானார்கள். காபிர்கள் தரப்பில் 70 நபர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியை தந்தான். அபூஜஹல் உள்ளிட்ட முக்கிய குறைஷி தலைவர்கள் அனைவரும் இதில் கொல்லப்பட்டனர். இதில் அபூஜஹல், முஆத், முஅவ்வித் என்ற இரு இளைஞர்களால் இழிவாக கொல்லப்பட்டான்.

இந்த பத்ர் போரில் பெறவேண்டிய படிப்பினைகள்;
  • இறை நிராகரிப்பாளர்கள் வசதி வாய்ப்புகளோடும்- வலிமையோடும் இருந்தாலும் அவர்களுக்கு இம்மையிலும் இழிவுண்டு. மறுமையிலும் மகத்தான வேதனையுண்டு.
  • இஸ்லாத்தைகாக்க சிறிய படைகிளம்பினாலும், பென்னம் பெரிய படையை அது இறையருளால் வெல்லும்.
  • சிலர் கூறுவது போன்று, எதிரியின் எண்ணிக்கையில் பாதியளவு இருந்தாலே போர் கடமை என்பது தவறாகும். ஏனெனில், இந்த போரில் எதிரியின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி நபர்களை கொண்டே போர் தொடுத்து அதில் வெற்றியும் பெறப்பட்டுள்ளது. இந்த போர் மட்டுமல்ல நபி[ஸல்] அவர்களின் எந்த போரிலும் எதிரிகளின் தலையை எண்ணி பின்பு போருக்கு சென்றதில்லை. எனவே எண்ணிக்கை என்று சொல்லி முஸ்லிம்களிடமிருந்து போர் சிந்தனையை அகற்றுபவர்களின் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
  • முறையான வாகனமும்-வலுவான ஆயுதமும் இன்றி, குறைவான எண்ணிக்கையில் இருந்த போதும் நிறைவான இறையச்சத்தால் வெற்றிவாகை சூடிய அந்த மாவீரர்களின் வழிமுறையில், 'இஸ்லாத்தின் லட்சியம் காக்கும் நிலை வருமாயின்,எங்களின் இன்னுயிரையும் இரையாக்குவோம்' என்ற சிந்தனை நம் உள்ளத்தில் ஆழமாக பதியவேண்டும்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு அந்நஜாத் செப்டம்பர் 1986 இதழில் அறிஞர் பீஜே அவர்கள் அளித்த பதில்;
 
கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா?
M. சேகு இஸ்மாயில் , தொண்டி.
 
பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், "அங்கே சூனியம் நீக்கப்படும்" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது.
 
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மைதான் என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று மறுக்கிறார். பார்க்க; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/
 
நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட புகாரி உள்ளிட்ட ஹதீஸ்கள் இன்று பலவீனமாகி விட்டதால் மறுக்கிறாரா என்றால் இல்லை. அந்த  ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப் பூர்வமனவைதான் என்று இன்றும் சொல்கிறார். பிறகு மறுப்பதற்கான முகாந்திரம் என்ன? இந்த ஹதீஸ்கள்  எல்லாம் குர்'ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்'ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் 'பிரேக்' பிடிக்காமல் குர்'ஆனோடு மோதி விட்டதா?  மேலும் குர்'ஆனோடு நபிமொழி ஒரு காலத்திலும் மோதாது என்று இவரே வழங்கியுள்ள ஃபத்வாவை படிக்க;http://mugavai-abbas.blogspot.com/2011/08/blog-post_14.html
இப்படி மார்க்கத்தை இஷ்டத்திற்கு வளைக்கும் இவரது செயலுக்கு ஒரே ஆதாரம் வழக்கம் போல மனோஇச்சை தானே. சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

திருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா? பீஜே; அன்றும்-இன்றும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
திருக்குர்'ஆனோடு ஹதீஸ் ஒரு காலத்திலும் முரண்படாது என்று அறிஞர் பீஜே அன்று சொன்னது;
 
கேள்வி: குர்ஆன் வசனங்கள் ஸஹீஹான ஹதீஸ்களோடு சில நேரங்களில் முரண்படுகிறதே! உதாரணத்திற்கு "இறந்தவர்களை நீங்கள் செவியேற்கச் செய்ய முடியாது", "கப்ரில் உள்ளவர்களை கேட்க வைப்பவராக நீர் இல்லை" என்ற குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்தில் எதிரிகளின் சடலங்களைப் பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு அவர்களை நோக்கி "உங்களிறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா?", என்று கூறிய போது உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இறந்தவர்களுடன் பேசுகிறீர்களே" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அவர்கள் இப்போது கேட்கிறார்கள்" என்று கூறினர். இங்கே ஆயத்தும் ஹதீதும் முரண்படுகிறதல்லவா?

O.P. அப்துல் மஜீது, சென்னை .

பதில்: அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று ஒரு காலத்திலும் முரண்படாது. மேலோட்டமாகப் பார்த்தால் சிலருக்கு அப்படித் தோன்றலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால், குர்ஆன் வசனத்தை விளக்கம் செய்யக் கூடியதாகவே ஹதீஸ் அமைந்திருக்கும். முதலில் நீங்கள் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம். "அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கேட்கச் செய்பவராக இல்லை" (அல்குர்ஆன்)

இதுதான் அந்தக் குர்ஆன் வசனம். இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் நாடியவர்களுக்குக் கேட்க செய்கிறான்" என்று குறிப்பிடுவதன் மூலம் இயற்கையாக அவர்களால் செவியுற முடியாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நாடினால் செவியேற்கச் செய்வான் என்பதை உணர முடிகின்றது. அதற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் கூறிய சொல் அமைந்துள்ளது. "அவர்கள் இப்போது நான் சொல்வதைச் செவியேற்கிறார்கள" என்ற சொல்லை, நீங்கள் உற்று நோக்குங்கள்! 'இப்போது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் எப்போதும் அவர்களால் செவியுற முடியாது, என்பதை விளங்கலாம். அந்தக் காபிர்கள் கப்ரில் வேதனையை மேலும் அதிகமாக்குவது இறைவனின் விருப்பமாக இருக்கலாம். இதை நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். நீங்கள் அணிந்துள்ள செருப்பு உங்கள் பேச்சைக் கேட்காது. ஆனால், அல்லாஹ் நாடினால் அதையும் செவியுறச் செய்ய முடியும் அல்லவா? ஒரு சந்தர்ப்பத்தில் "அல்லாஹ் தன் நாட்டப்படி செருப்பைச் செவியுறச் செய்கிறான்" என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து அந்த செருப்பு எப்போதும் நீங்கள் சொல்வதை செவியேற்றுக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பத்ரு நிகழ்ச்சி அது போன்ற ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அல்லாஹ் நாடினால், எது, எதையும் கேட்க இயலாமல் இருக்கின்றதோ அதனையும் சில நேரங்களில் கேட்கச் செய்து தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றான். இங்கே முரண்பாடு எதுவுமில்லை. விளக்கமாகத்தான் அமைந்துள்ளது
[மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்அந்நஜாத் செப்டம்பர்,1986 செப்டம்பர்,ஐயமும்! தெளிவும்!!]
அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று இன்று மட்டுமல்ல ஒரு காலத்திலும் முரண்படாது என்று அன்று ஆணித்தரமாக முழங்கிய அறிஞர், குர்'ஆனோடு நேரடியாக மோதுவது போன்ற ஹதீஸுக்கு விளக்கமளித்து குர்'ஆணுடன் நபிமொழி ஒரு காலத்திலும் முரண்படாது என்று நிலைநாட்டியவர்,  இன்று என்ன சொல்கிறார்?
 
''மிகச்சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்'ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி[ஸல்] அவர்கள் இதை கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறார்.
 
ஏனிந்த மாற்றம்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம்? 'குர்'ஆணுடன்  மோதுவது போன்ற கருத்துடைய ஹதீஸ் வந்தால் அது நான் சொல்லியதல்ல அதை புறக்கணியுங்கள் என்று நபியவர்கள் சொன்ன ஹதீஸை கண்டதால் வந்த மாற்றமா? இல்லை சகோதரர்களே! மனோ இச்சையால் வந்த மாற்றம் மார்க்கத்தை வளைக்குமாறு இந்த அறிஞரை தூண்டியுள்ளது. சிந்திப்பவர்கள் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.
 
 

சனி, 13 ஆகஸ்ட், 2011

இந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்!

ன்னும் இரு தினங்களில் இந்தியாவின் 65 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது . சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் படு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில்,சுதந்திர தினத்தை முன்னிட்டு சில முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த மாதிரி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது சரியா என்றால், இல்லை என்பதுதான் சரியாகும். முஸ்லிம்களை பொறுத்தவரையில் கொண்டாடக்கூடிய திருநாள்கள் இரண்டுமட்டுமே!
1 . ஈகைத்திருநாள்.
2 .தியாகத்திருநாள்
.
இவையல்லாத எந்த ஒரு நாளையும் நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியதாகவோ, வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டதாகவோ ஹதீஸ்களில் காணமுடியாது. அவ்வளவு ஏன்! இதே சுதந்திரம் சம்மந்தப்பட்டதுதான் மக்கா வெற்றி. மக்காவிலிருந்து முஷ்ரிக்கீன்களின் தொல்லை காரணமாக மதீனா வந்த நபி[ஸல்] அவர்கள், சில ஆண்டுக்களில் மக்காவை நோக்கி படையுடன் புறப்பட்டு சென்று கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி மக்காவை, தன் சொந்த மண்ணை முஷ்ரிக்கீன்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்களே! அந்த புனித நகரம் சுதந்திரம் பெற்ற நாளை நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியது உண்டா? இல்லையே! நாட்டை நேசிப்பதை காட்டுவதற்காக சுதந்திரதினத்தை கொண்டாடுகிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு முஸ்லிம் முதன்முதலில் நேசிக்கவேன்டியது புனித பூமியான மக்கா அல்லவா? அப்படியாயின் மக்கா வெற்றி நாளை கொண்டாடாதது ஏன்? நாட்டை நேசிப்பது என்பது வெறுமனே வாழ்த்துகளை கூறுவதோ, அல்லது அன்றைய தினம் கிடைக்கும் விடுமுறையை அனுபவிப்பதோ, அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுதந்திரப்போராட்ட தியாகிகளான[?] கூத்த்தாடிகளின் நிகழ்ச்சிகளை ரசிப்பதோ அல்ல. மாறாக நாட்டை நேசிப்பது என்பது நாட்டிற்கு ஆபத்தென்றால் நாட்டை காப்பதில், நாட்டை சீரழிக்கும் தீமைகளை நாட்டிலிருந்து களைவதில் உறுதியாக முன்வருவதுதான் உண்மையான நேசமாகும்.அடுத்து இந்தியாவில் சுதந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும்- இஸ்லாம் வழங்கும் சுதந்திரத்தையும் பார்ப்போம்.

இந்தியக்கொடியில் மூவர்ணம் இருக்கும். அதாவது பச்சை-வெள்ளை-ஆரஞ்சு. இந்த கலர்கள் மும்மதத்தை குறிக்கும் என்று சிலர் கூற கேட்டதுண்டு. அதாவது பச்சை முஸ்லிம்களையும், வெள்ளை கிறிஸ்தவர்களையும், ஆரஞ்சு[காவி] இந்துக்களையும் குறிக்கும் என்று! இப்படி கொடியில் மும்மதமும் சமம் என்று காட்ட முற்படுபவர்கள் மும்மதத்தினரும் சமமான சுதந்திரத்துடன்தான் வாழ்கிறார்களா என்பதை கவனிக்க தவறிவிட்டனர்.

முதலாவது இந்து மதத்தை எடுத்துக்கொள்வோம். இந்து மதத்தை சார்ந்த ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டவர்களாக-தீண்டத்தகாதவர்களாக கருதுவதை பார்க்கிறோம். இவ்வாறு பிறப்பின் அடிப்படையில் தனது மதத்தை சார்ந்தவர்களையே பேதம் பார்க்கும் இந்த செயல் பாமரர்கள் மட்டுமன்றி படித்தவர்கள்- உயர் பதவி வகித்தவர்களிடம் கூட இருந்ததை நாம் கடந்த கால நிகழ்வுகளில் காணமுடியும். மத்திய அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருவர், காந்தியின் சிலையை திறந்துவைத்தார். இவர் திறந்துவைத்ததால் அந்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக ஒரு கூட்டம் கருதி கங்கை நீரை கொண்டுவந்து சிலையை கழுவியதாக நாம் அறிந்துள்ளோம். அவ்வளவு ஏன் ? தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும்- உயர்பதவிகளிலும் உயர்வான நிலையை அடைந்துவிட்டாலும், இன்னும் சமத்துவபுரங்கள் என்ற பெயரிலும், சேரி என்ற பெயரிலும் இவர்களை சமூகம் ஒதுக்கித்தானே வைத்துள்ளது. இதில் எங்கே வாழ்கிறது சுதந்திரம்?

இப்போது இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரம் பாரீர்;

'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள ) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.[புஹாரி எண் 30 ]

எந்த வித உரிமையும் இல்லாத அடிமையை நபித்தோழர் அபூதர்[ரலி] அவர்கள் திட்டியதற்காக, அபூதர்[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் கண்டிக்கிறார்கள். அன்றிலிருந்து அந்த அடிமையை தனது சகோதரன் போல பாவித்து தான் அணியும் ஆடை போன்றே தனது அடிமைக்கும் அணிவித்து மகிழும் அளவுக்கு அபூதர்[ரலி] அவர்களை மாற்றியது எது இஸ்லாம் அல்லவா? மனிதனுக்கு மத்தியில் ஏற்ற தாழ்வை நீக்கியது இஸ்லாமிய சுதந்திரமல்லவா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக கருப்பு நிற ஹபஷி அடிமையாக இருந்த பிலால்[ரலி] அவர்களை தனது காரியதரிசியாக-தோழராக- தொழுகைக்கு அழைக்கும் அழைப்பாளராக ஆக்கி, அங்கும் வர்ண பேதத்தை ஒழித்த நபி[ஸல்] அவர்கள் ஒரு முன்மாதிரியல்லவா?

அடுத்து கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிரார்களா? என்றால், சுதந்திரமாக அவர்கள் இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நியாயம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியார் தனது மூன்று பிள்ளைகளுடன் உயிரோடு இந்துத்துவாக்களால் கொளுத்தப்பட்டார். கொளுத்தியவனுக்கு 'தேச பக்தர்' என்று நற்சான்று அளித்தார் அன்றைய துணைப்பிரதமர். இன்றுவரை இந்த அநீதிக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளதா?

மும்பை-கோவை குண்டுவெடிப்பு குற்றங்களை செய்தார்கள் என்று முஸ்லிம்கள் சிலருக்கு தண்டனை கூட விதிக்கப்பட்டது. வரவேற்கிறோம். ஆனால், அதே மும்பை- கோவையில் முஸ்லிம்களை கருவறுத்த சங்க்பரிவார கும்பல் ஜாலியாக நடமாடுகிறதே இதுதான் இந்திய சுதந்திரம். குஜராத்தில் கோத்ரா ரயிலை எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டை கூறி பல நூறு முஸ்லிம்களை பொடாவில் தள்ளியது குஜராத் அரசு. அதே குஜராத்தில் சங்க்பரிவார கும்பலால் கற்பழிக்கப்பட்ட, உயிரோடு கொளுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்பட்டதா? இல்லையே! மாறாக பெயருக்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த சிலரையும் சமீபத்தில் கோர்ட் விடுதலை செய்கிறது. ஆக பட்டபகலில் பலபேர் சாட்சியாக முஸ்லிமை ஒருவன் கொன்றால் அவன் ஜாலியாக நடமாடலாம். அவனயோ சட்டம் ஒன்றும் செய்யாது இதுதானே இந்திய சுதந்திரம்! இப்போது நீதி விஷயத்தில் இஸ்லாமிய சுதந்திரத்தை பாருங்கள்;

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம் 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று (பதிலுக்கு) கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி) 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள்.[நூல்;புஹாரி]

இந்த செய்தியை நன்றாக பாருங்கள்; அடித்தவர் ஒரு முஸ்லிம் , அடிவாங்கியவர் ஒரு யூதர். வழக்கு நபி[ஸல்] அவர்களிடம் வந்தபோது, தன்னை உயர்த்திக்கூறி தானே யூதனை முஸ்லீம் அறைந்தார் என்று முஸ்லிமுக்கு நபியவர்கள் 'சப்போர்ட்' செய்யவில்லை. மாறாக யூதர் எந்த மூஸா நபியை சிறந்தவர் என்று சொன்னாரோ, அதே மூஸா நபியைவிட நான் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள் என்று தனது தோழருக்கு அதாவது முஸ்லிமுக்கு அறிவுரை வழங்கினார்கள் என்றால் இஸ்லாம், நீதி விசயத்தில் நீதியை மட்டுமே பார்க்குமேயன்றி சாதியை பார்க்காது இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.

காந்தி சொன்னார், ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியாக சுதந்திரமாக நடமாடும் நாளே உண்மையான சுதந்திர நாள் என்று! இன்று நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணக்கிலடங்குமா? கிரிமினல்கள்தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்றால் சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரில் சிலரும்-ராணுவத்தில் சிலரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை பார்க்கும்போது, எங்கே வாழ்கிறது சுதந்திரம்? நபி[ஸல்] காலத்தில் வழிப்பறி பற்றி புகார் கூறப்பட்டபோது வழிப்பறி செய்பவர்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கப்படும் என்ற தண்டனையை அறிவித்துவிட்டு நபி[ஸல்]சொன்னார்கள்; ஹீரா எனும் இடத்திலிருந்து கஃபா வரை ஒரு பெண் தன்னந்தனியாக பயணித்து அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் சென்றுவருவதை பார்பீர்கள் என்றார்கள்.[புஹாரி] அந்த நிலையை உருவாக்கியும் காட்டினார்கள். இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.

அட! இதையெல்லாம் விடுங்கள். சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக பிரதமரும்-முதல் அமைச்சரும் கொடியேற்ற முடிகிறதா? தமிழகத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் முதல்வர் கொடியேற்றுகிறார் எனில், சுதந்திரத்தை புரிந்து கொள்ளலாம். குவைத் போன்ற அரபு நாடுகள் சிலவற்றில் சுதந்திரதினம் கொண்டாடுகிறார்கள். இங்கு எந்த அடுக்கு பாதுகாப்பும் இல்லை எந்த பயமும் இல்லாமல் கொண்டாடுகிறார்கள். எனவே மக்களின் நிம்மதியான பயமற்ற வாழ்க்கை உறுதி செய்யப்பட்டு, அனைத்து மதத்தவரும் சமமாக பாவிக்கப்பட்டு, அனைவருக்கும் சமநீதி வழங்கப்படும் நாளே சுதந்திரதினம். அந்த நாளை எதிர்நோக்கி இறைவனிடம் கையேந்துவோம்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தொடை மறைக்க வேண்டிய பகுதியா..? பீஜே அன்றும் இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
2005 ஆம் ஆண்டு 'தொடை தெரிய டவுசர் போட்டு தொழலாம்' என்ற ஃபத்வாவை வழங்கி புரட்சி செய்த மவ்லவி பீஜே அவர்கள், தொடையை மறைப்பது குறித்து i987 ஜூன் மாதம் அந்நஜாத் இதழில் அபூ  முஹம்மத் என்ற பெயரில் இஸ்லாத்தில் புறத்தோற்றம் -6  என்ற தொடரில் எழுதியவை உங்கள் பார்வைக்கு;
 

மறைக்கப்பட வேண்டியவை

"ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்" என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.

"உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது

தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.

குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் "அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா

"மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்

இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.

இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

"அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் "உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!" என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)

நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா

இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும்.

 
தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும் மறைக்கப்பட்ட வேண்டியவையே என்று அன்று ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக சொன்ன அறிஞர் பீஜே,  அன்று அவர் சொன்னதற்கு மாற்றமாக இன்று அந்தர் பல்டியடித்து தொடை தெரிய தொழலாம் என்று ஃபத்வா வழங்குகிறார். முன்பு எழுதியவை எல்லாம் மாயமாய் மறைந்து விடும் என்று எண்ணி விட்டாரா? இப்படி நாம் கேட்டவுடன் அன்று சரியென தெரிந்த பல விஷயங்களை இன்று நாம் ஆதாரம் கிடைத்தவுடன் மாற்றியுள்ளோம். அது போலத்தான் இதுவும் என்று பீஜெயோ அவரது அபிமானிகளோ சொல்ல முன்வருவார்களானால், இன்று தொடை தெரிய தொழலாம் என்பதற்கு எந்த ஹதீஸ்களை ஆதாரமாக பீஜே காட்டுகிறாரோ அதே ஹதீஸ்களை அன்றே அவர் ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு இப்படி கூறுகிறார்;  

''தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், தொடை தெரிந்ததாக வரும்  ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும். என்கிறார்.

இன்று தொடை மறைக்கப் படவேண்டிய பகுதியல்ல என்பதற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களை பற்றி மேற்கண்ட அதே  தொடரில் பீஜே எழுதியுள்ளதை படியுங்கள்;

ஒரு சில அறிஞர்கள் "இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது" என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.

1) "கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்"

அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

2) "நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்"

அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.

3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் "உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்" என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.

அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்

(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)

இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் "தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை" என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.

தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.

அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது 'கைபர்' போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.

இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.

நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.

நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். "நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்" என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.

ஃபத்வா விசயத்தில் மனோஇச்சைப்படி அவ்வப்போது மாற்றி மார்க்கத்தை வளைப்பவர் இந்த பீஜே என்பதற்கு இந்த 'தொடை' விஷயம் தெளிவான விடையாக உள்ளது. சிந்திப்பவர்கள் தெளிவு பெறுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இறையச்சத்தின் அடித்தளமே நோன்பு!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானில் நோன்பு நோற்கவேண்டும் என்று அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த நோன்பின் தாத்பரியத்தையும்- சட்டங்களையும் அறியாதவர்களாகவும், இன்னும் சிலர் பேணுதல் என்ற பெயரில் இந்த நோன்பை சிரமமானதாக மாற்றிக்கொள்வதையும் பார்க்கிறோம். எனவே, அப்படிப்பட்டவர்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது .

நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?
நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது என்று நம்மவர்களில் சிலரிடம் கேட்டால், ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் கடமையாக்கப்பட்டது என்பார்கள். ஒரு பாடகர் கூட, 'மண் வீட்டின் பசியை மாளிகைகள் உணர்ந்து மனிதாபிமானம் கொள்ள போதிப்பது நோன்பு' என்று பாடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஏழைகளின் பசியை வசதிபடைத்தவர்கள் உணர்வதுதான் நோன்பின் நோக்கம் என்றால், பணக்காரர்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வல்ல இறைவன் கூறுகின்றான்;

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்.
[அல்-குர்ஆன்2:185 ]

இந்த வசனத்தில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் ஏழைகள்-பணக்காரர்கள் என்ற வேறுபாடு கிடையாது அனைவர் மீதும் கடமை. சரி! வேறு என்னதான் காரணம்?

அல்லாஹ் கூறுகின்றான்;

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.[அல்-குர்ஆன் 2:183 ]

இந்த வசனத்தில் நோன்பு கடமையாக்கப்பதின் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் என்பது தெளிவாக புரிகிறது. சரி! மற்ற அமல்களில் வராத இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும். எப்படியெனில்,
 
ஒருவன் தொழுகையாளியா-ஜகாத் கொடுப்பவனா-ஹஜ் செய்தவனா என்று நாம் வெளிப்படையாக அறியமுடியும். ஆனால் நோன்பை பொறுத்தவரையில், ஒருவன் நோன்பு நோற்காமலேயே நான் நோன்பாளி என்று கூறினால் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. எனவே இறைவனுக்கு அஞ்சுபவன் மட்டுமே நோன்பு பிடிப்பான்.
 
மேலும் நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கிறானே  அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!
அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும் இன்ஷா அல்லாஹ். அத்தகைய இறையச்சத்தை இந்த வருட நோன்பின் மூலம் நாம் அடைவோமாக!