بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் கூட ஆண்களும்-பெண்களும் இணைந்து படிக்கும் கோ எஜுகேஷன் எனும் கல்வி நிலையங்களே பெருமளவில் உள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் கல்வி கற்பது மார்க்க அடிப்படையில் சரியல்ல என்றாலும், நிர்பந்தம் காரணமாக நமது சமுதாய மாணவ-மனைவியர் கல்வி கற்று வருகின்றனர். இந்த கோ எஜுகேஷன் கல்வி பற்றி பீஜே எனும் அறிஞர், தனது இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா..? என்ற நூலில்
'இஸ்லாம் கல்வியை வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் முறையைத்தான் இஸ்லாம் எதிர்க்கிறது' என்று பதிவு செய்துள்ளார். அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் கோ எஜுகேஷன் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று கூறுகிறார். ஆனால் இந்த தடைக்கு அவர் எந்த சான்றையும் முன்வைக்கவில்லை. ஆயினும் சில காரணங்களை முன்வைக்கிறார்.
- அதாவது கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களால் வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும் , சக மாணவர்களால் ஏமாற்றப்படுவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன.
- இவ்வாறு சேர்ந்து படிப்பதால்தான் ஆண்களின் கவனமும் சிதறடிகப்படுகின்றன.பெண்கள் தனியாக படித்தால் படிப்பு ஏறாது என்று கூறமுடியாது.
- எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது என்று இஸ்லாம் கூறுகிறது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது கோ-எஜுகேஷனுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று திடமாக மறுக்கிறார்.
இதே அறிஞர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் கோ-எஜுகேஷன் கூடுமா என்ற கேள்விக்கு, நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இதுபோன்ற கல்விக்கூடங்கள் வைத்து கற்றுக்கொடுத்தல் என்ற நடைமுறை இருந்ததில்லை. எனவே கல்வியை விட்டுப்புட்டு பொதுவாக ஒரு சபையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து உக்காருவதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா..? அப்பிடீன்னு பாத்தம்னா அனுமதியிருக்குது. நபிகள் நாயகம்[ஸல்] பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழ வந்தார்கள்.. அந்த அடிப்படையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து படித்தல் என்பதில, ஒரு சபைல சேர்ந்து உக்காருதல் என்பதில தப்பு கெடயாது...பக்கத்து பக்கத்துல உக்காரலன்னா தப்பில்லை. என்கிறார். அதாவது கோ-எஜுகேஷன் கூடும் என்று கூறி தனது முந்தய 'கூடாது' என்ற நிலைக்கு முரண்படுகிறார். சரி! இது ஒருபுறமிருக்க பெண்கள் தொழுகைக்கு பள்ளிக்கு வந்தார்கள் என்பதை கோ-எஜுகேஷனுக்கு ஆதாரமாக கொள்ளமுடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. ஏனெனில் முதலாவது பள்ளிக்கு தொழுகைக்கு வருவதற்கும்-கல்லூரியில் கல்வி கற்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஆண்களாகிய நம்மையே எடுத்துக்கொண்டாலும் பள்ளிவாசலில் தொழுகைக்கு நிற்கும் போது நமக்குள்ள இறையச்சம், ஒரு மதரசாவில் இருக்கும்போதோ, ஒரு கல்லூரியில் இருக்கும்போதோ இருக்கிறதா...? இல்லையே! மேலும் பெண்கள் நபி[ஸல்] அவர்கள காலத்தில் தொழுகைக்கு வந்தார்கள். அதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிக்கு வந்தார்கள் என்று நாமறிந்தவரை எந்த ஹதீசும் கிடையாது. பெண்கள் எந்த வக்துக்கு பள்ளிக்கு வந்தார்கள் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகிறது;
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 865 ]
இந்த ஹதீஸில் 'இரவில்' என்ற வார்த்தையை நபி[ஸல்] அவர்கள் சேர்த்து கூறியதன் மூலம் பெண்கள் தொழுகைக்கு இரவில் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் என்பதை விளங்கலாம். இல்லை இல்லை எல்லா வக்துக்கும் வரலாம் என்று வாதிடுவார்களானால், 'இரவில்' என்று நபி[ஸல்] அவர்கள் தேவைஇல்லாமல் கூறினார்களா என்பதை விளக்கவேண்டும்.
- இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார். [புஹாரிஎண் 900 ]
இந்த ஹதீஸ் பெண்கள் பஜ்ர் மற்றும் இஷா தொழுகையில் மட்டுமே பங்கெடுப்பவர்களாக நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இருந்துள்ளார்கள்என்பதை தெளிவாக விளக்குகிறது. மேலும் இவ்வாறு பெண்கள் பள்ளிக்கு வருவது இருட்ட்டின் காரணமாக மற்றவர்கள் அறியமுடியாது என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.
- ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.[புஹாரிஎண் 578 ]
எனவே பஜ்ர் மற்றும் இஷா தொழுகை நீங்கலாக வேறு எந்த தொழுகைக்கும் நபி[ஸல்] அவர்கள் காலத்து பெண்கள் பள்ளிக்கு சென்றதில்லை என்பது தெளிவு. நிலை இவ்வாறிருக்க பட்டப்பகலில் விதவிதமான ஆடையுடன் பெண்கள்-ஆண்களோடு பயில கல்லூரிக்கு செல்வதற்கு இது ஆதாரமாகுமா..? சிந்திக்கவேண்டுகிறோம். இப்படி நாம் சொல்லும்போது அப்படியாயின் இரவு நேர கல்லூரிக்கு செல்லமா என்று சில விதண்டாவாதங்கள்' கேள்வி எழுப்பலாம்..? பெண்கள் பள்ளிக்கு தொழுகைக்கு வந்ததை கோ-எஜுகேஜனுக்கு ஆதாரமாக கொள்ளமுடியாது என்பதோடு, அது பகலோ-இரவோ எந்த காலத்திற்கும் இந்த ஹதீஸை சான்றாக கொள்ளமுடியாது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம். ஆக முன்னுக்கு பின் முரானான ஃபத்வாக்களை சம்மந்தமில்லாத சான்றுகளுடன் வழங்குவதை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.
சரி! கோ எஜுகேஷனுக்கு தடை ஏதாவது இருக்கிறதா என்றால், நாமறிந்தவரை இருக்கிறது.
(நாங்கள் உங்களை அணும் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
[ஆதாரம் புஹாரி எண் 101 ]
இந்த பொன்மொழியில், எப்போதும் ஆண்கள் சூழ நபி[ஸல்] அவர்கள் இருப்பதால் தங்களால் நபியவர்களிடத்தில் மார்க்கத்தை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தை பெண்கள் வெளிப்படுத்தி தங்களுக்கென ஒரு நாளை ஒதுக்கவேண்டும் என்று கோரியபோது, கோ-எஜுகேஷன் மார்க்கத்தில் அனுமதிக்கபட்டதுதான் என்றால்,
பெண்களே! எதற்கு உங்களுக்கு தனி நாள்..? வாருங்கள்! ஆண்கள் உள்ள இந்த சபையில் நீங்கள் ஒருபக்கம் அமர்ந்து உபதேசங்களை கேளுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பெண்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி நபி[ஸல்] அவர்கள் உபதேசம் செய்கிறார்கள் எனில், கோ-எஜுகேஷன் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் நபி[ஸல்] அவர்கள் பெண்களுக்கு பொதுவான உபதேசத்திற்காக தனி நாளை ஒதுக்கினார்கள் என்றும் இது கல்வியை குறிக்காது என்று எவரும் கூறவருவார்களேயானால், மேற்கண்ட ஹதீஸை இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள் 'கல்வி' என்ற பாடத்தில் பதிவு செய்துள்ளதையும் இங்கு குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம்.
எனவே கோ-எஜுகேஷனுக்கு மார்க்கத்தில் நேரடியாக அனுமதி எதுவும் இல்லை. ஆனால் தடை இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். நிர்பந்தம் என்பது அல்லாஹ்வுக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் உள்ள விஷயம். எனவே நாம் அன்பாக வேண்டுவது என்னவெனில், மார்க்க விஷயத்தில் யார் எது சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாமல் சொன்ன கருத்துக்களை சீர்தூக்கி பாருங்கள். தவறானதை எவ்வளவு பெரிய அல்லாமா சொன்னாலும் தூக்கி வீசுங்கள். சரியானதை ஒரு பாமரன் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுதான் நமது இம்மை-மறுமைக்கு பயனளிக்கும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக