அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

உலக சிக்கன நாள்; சிக்கனமும்-கஞ்சத்தனமும்!



அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இன்று உலக சிக்கன நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும். கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய தேவையை மறுப்பதாகும். மனிதனை படைத்த அல்லாஹ், மனிதனின் வாழ்வில் அத்துணை பிரச்சினைக்கும் தீர்வு சொல்லும் தனது மார்க்கமான இஸ்லாத்தில் குர்ஆன்-மற்றும் நபிமொழிகள் வாயிலாக இந்த விசயத்திற்கும் வழிகாட்டியுள்ளான்.பொதுவாக இஸ்லாம் வணக்கமாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் அதில் நடுநிலை பேன சொல்லும் மார்க்கமாகும். அந்தவகையில் செலவு செய்வதை பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில்;

இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.[அல்-குர்ஆன் 25:67 ]

இந்த வசனத்தில் அல்லாஹ், நாம் எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறான். நம்முடைய தேவைகளுக்காக செலவு செய்வதை மார்க்கம் தடுக்கவில்லை. ஆனால் அதில் வீண் விரையம் வந்துவிடக்கூடாது. மேலும் கஞ்சத்தனமாக இல்லாமல் நடுநிலையாக இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்காட்டுகின்றான் . ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பாலோரின் நிலை என்ன..? 'வைச்சா குடுமி; இல்லைன்னா மொட்டைஎன்பார்களே அதுபோன்று, ஒன்று ஆடம்பரம் என்ற பெயரில் வீண் விரயம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது சிக்கனம் என்ற பெயரில் வடிகட்டிய கஞ்சர்களாக இருக்கிறார்கள். வசதி படைத்த முஸ்லிம்களின் வீடுகளில் தேவைக்கதிகமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு அவை விரையமாக்கப்படுகிறது. இதுபோக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களில் தங்களின் 'பணத்திமிரை' ஊரறிய செய்ய தேவைக்கு அதிகமாக உணவுகள், ஆடம்பர செலவுகள், மார்க்கம் அனுமதிக்காத பல்வேறு அனுஷ்டானங்கள் இவைகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்கள் வீன்விரையம் செய்யப்படுகிறது. இப்படி வீன்விரையம் செய்பவர்கள் பற்றி இதோ அல்லாஹ் கூறுகின்றான்;

மேலும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)[அல்-குர்ஆன் 4:38 ]

மேலும் அல்லாஹ்கூறுகின்றான்;மேலும் விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தான் தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.[அல்-குர்ஆன் ]

இறைவனின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு வீன்விரையம் தவிர்ப்போம். நம்முடைய தேவைகளை கணக்கிட்டு தேவையான உணவுகளை தயாரிப்போம். திடீர் என்று ஒரு விருந்தாளி வந்தாலும் அவர்களுக்கென மாற்று உணவு தயாரிக்க இப்போதுள்ள நவீன காலத்தில் உடனே சாத்தியமானதுதான். அப்படி இல்லையென்றால் கூட ஒருவர் உணவு இருவருக்கு போதுமானது என்ற நபிமொழிக்கு ஏற்ப நம்முடைய உணவை பங்கிட்டு வழங்கினால் அதில் அல்லாஹ் நிச்சயமாக பரக்கத் செய்வான். மேலும் வசதி படைத்தவர்க்ள அணியும் ஆடைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியாதவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உபயோகித்த ஆடைகளை தேவையுடையவர்களை தேடி வழங்கினால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும். மாறாக நாம் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்; நாம் அணிந்த ஆடையை சாதரண ஒருவன் அணிவதா..? என்ற கர்வத்துடன் தூக்கி குப்பையில் வீசினால் இதுவும் வீண் விரயமாகும். இதுவும் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியதாகும்.

அடுத்து அல்லாஹ் செல்வத்தை தந்திருந்தும் கஞ்சத்தனம் செய்பவர்கள் பற்றி எடுத்துக்கொண்டால் இவர்கள் தங்களை மிகப்பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் கூத்து சொல்லிமாளது. ஒரு சோப்பு வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு இத்துணை நாளைக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கெடு விதிப்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட கெடுவுக்கு முன்னால், அந்த மனைவி ஏங்க! சோப்பு காலியாயிருச்சு என்று சொன்னால் அவ்வளவுதான் இவன் அதற்காக போடும் சத்தம் அடுத்த வீடுதாண்டி கேட்கும். சோப்பு என்பது கரையக்கூடியது அது என்ன கல்லிலா தயாரிக்கப்பட்டது அப்படியே இருப்பதற்கு..? அல்லது அது என்ன சாப்பிடக்கூடிய பொருளா..? மனைவி லேசா கடிச்சிருப்பா என்று சொல்வதற்கு ..? இது உதாரணம் தான்! இவ்வாறான கஞ்சர்களை, சாப்பிட்ட கையால் காக்கா விரட்டமாட்டன் என்பார்கள்ஏனெனில் இவன் கையில் ஒட்டியிருக்கும் சோத்து பருக்கை கீழே விழுந்து அதை காக்கா தின்றுவிடக்கூடாதாம். இவ்வாறு கஞ்சத்தனம் செய்பவர்களை பற்றி அல்லாஹ்,

 
அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (47:38)

எனவே, அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை அவன் விதித்த வரம்புகளுக்குட்பட்டு அனுபவிப்போம். மேலும் அவன் வழியில் செலவும் செய்வோம். நமது சந்ததிகளுக்காக சேமிக்கவும் செய்வோம். அதே நேரத்தில் நம்முடைய உள்ளத்தில் கஞ்சத்தனம் வந்துவிடாமலும், நம்முடைய செயலில் வீண் விரையம் வந்துவிடாமலும் பார்த்துக் கொள்வதோடு, அதற்காக அல்லாஹ்விடத்திலும் பிரார்த்திப்போம்.

குறிப்பு; இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் உலக சிக்கன நாளை ஆதரித்து இக்கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக இந்த நாளில் எழுதினால் மாற்றார்களும் சிக்கனம் குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளங்கிக்கொள்வார்கள் என்பதற்காக எழுதப்பட்டது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

சனி, 29 அக்டோபர், 2011

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.

இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;

ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.

5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.


குர்பானி பிராணியின் வயது;

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு “
முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில்
முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
  1. கண் குறுடு
  2. கடுமையான நோயானவை
  3. மிகவும் மெலிந்தவை
  4. நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
கூட்டு குர்பானி;
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.

“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் நேரம் ;
ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி,

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)


இறைச்சிகளை விநியோகித்தல்;

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5569

“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.


செய்யக்கூடாதவை;
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.

குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,


ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.


நன்றி; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.