அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 30 அக்டோபர், 2010

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி, ஹஜ் செய்யலாம் என்ற புதுமை ஃபத்வாவுக்கு மறுப்பு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

புஹாரியின் 3595 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, ஒரு பெண் “மஹ்ரம்” இல்லாமல் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என நவீனவாதிகள்  வழங்கும் ஃபத்வா குறித்து, மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் விரிவான விளக்கம்;

கேள்வி :-

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி ஹஜ்-உம்றாச் செய்யலாமா?


பதில்:-

இது விரிவாக விளக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஹஜ் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கின்றது. இது வரவேற்கத் தக்கதுதான். எனினும், ஹஜ்ஜை முறையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானவர்களிடம் இல்லையென்பது வருந்தத் தக்க விடயமாகும்.

ஹஜ் யார் மீது கடமையென்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

“..மனிதர்களில் அதற்குச் சென்று வரச் சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்..” (3:97)

எனவே, ஹஜ்ஜுக் கடமையைச் செய்யும் சக்தியுள்ளவர் மீதுதான் ஹஜ் கடமையாகும். பயணத்திற்கு மஹ்றமான ஆண் துணை இல்லாத பெண்ணுக்கு ஹஜ் கடமையில்லை. அப்படி அவர் தன் மீதுள்ள கடமையை நிறைவு செய்ய வேண்டுமென்றால் மஹ்றமான ஓர் ஆண் துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தனது ஹஜ்ஜைத் தனது நெருங்கிய உறவுடைய ஒரு ஆண் மூலம் நிறைவேற்ற அங்கீகாரமுள்ளது.

ஒரு பெண் தனியாகவோ, நம்பிக்கையான மஹ்றமல்லாத ஆண் துணையுடன், நல்லொழுக்கமுள்ள பல பெண்களுடன் கூட்டுச் சேர்ந்தோ ஹஜ் செய்யலாம் என்பதற்குக் கூறப்படும் ஆதாரங்கள் குறித்தும் அது பற்றிய உண்மை விளக்கம் என்ன என்பது குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!” என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!” என கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!

எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் “நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!” என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் “மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.

ஐயம்:- ஹஜ் குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக்கொள்வதற்காக, தமது வசதிக்காகப் பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர்.

குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒரு படி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு அதிய்யே! அல்ஹீரா என்ற நகரைப் பார்த்திருக்கிறாயா? நான் அதைப் பார்த்ததில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன்!” எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந் தனியே) தவாஃப் செய்வாள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்.” (புகாரி ) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக்கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காகத் தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்


விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் படி நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவும் இந்தக் காலத்து மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா?

அதீ பின் ஹாதிம்(ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம்-பீதியற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக் கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.

மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதி(ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய்(ரழி) அவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகின்ற போது, “ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்!” எனக் குறிப்பிடுகிறார்கள். (புகாரி)

இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக் காலத்தை ஒப்பிடலாமா?” என்றால், அனைவரும் “இல்லை!” என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.

ஐயம்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கிப் பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காகச் செல்வதை எவ்வாறு தவறாகக்கொள்ள முடியும்?

தெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித் தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை. அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்து வைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத் தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக்கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.

நபி(ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

நன்றி; மவ்லவி இஸ்மாயில் ஸலபி மற்றும் இஸ்லாம் கல்வி.காம்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

இரண்டாம் திருமணமும்- இல்லாத கட்டுப்பாடுகளும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
மனிதனை படைத்த அல்லாஹ், அந்த மனிதனின் பலம்- பலவீனம் அனைத்தையும்  உணர்ந்து மனிதனின் ஆசைகளுக்கு அனுமதியளிக்கும் அதே நேரத்தில், ஆசை அளவுகடந்து சென்றுவிடாமல் இருப்பதற்கான கடிவாளத்தையும்  போடுகிறான். அந்தவகையில் ஆண்களுக்கு நான்கு திருமணம் வரை செய்வதற்கு அல்லாஹ் அனுமதியளிக்கிறான்.

பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி என்று தத்துவம் கூறப்பட்டாலும், அது தத்துவத்திற்குத் தான் நன்றாக இருக்குமேயன்றி, நடைமுறை வாழ்க்கைக்கு பெரும்பாலும் ஒத்துவருவதில்லை. பெரும்பாலான ஆண்கள் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொள்வதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், 'அன்அபிஷியல்' ஆக பல பெண்களோடு தொடர்புடையவர்களாக இருப்பதைக் காணலாம். இதனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதை நாள்தோறும் பத்திரிக்கைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மேலும், பிரபலமானவர்கள் கூட, ஒருவரை மனைவியார் என்றும் மற்றவரை துணைவியார் என்றும் சொல்லிக்கொண்டு வலம்வருவதைக் காண்கிறோம். இதெல்லாம் எதை  உணர்த்துகிறது என்றால், பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு மனைவி என்பது போதுமானாதாக இல்லை என்பதைத்தான். எனவே இன்னொரு மனைவி தேவை என்று கருதுபவனுக்கு சட்டப்படி திருமணம் செய்ய சட்டம் குறுக்கே நின்றால், அவன் சட்டத்திற்கு புறம்பாக அந்த பெண்ணுடன் வாழ முற்படுகிறான். இப்படி இவன் சேர்த்து வைத்திருக்கும் பெண்ணை இவன் புறக்கணித்தால் அப்பெண்ணிற்கு ஜீவனாம்சம் சட்டப்படி கிடைக்காது  என்பதுதான்  இப்போதுள்ள நிலை. எனவே இஸ்லாம் இதற்கு அழகான தீர்வை சொல்கிறது. அதுதான் பலதார மணம்.

وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)

இறைவனின் மேற்கண்ட அனுமதியை கொண்டு ஒரு முஸ்லிம் இரண்டாம் திருமணம் செய்ய முற்படுகையில், இன்றைய நவீன அறிஞர்கள் சிலர் அதற்கு பொருந்தாத சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அதில் பிரதான கட்டுப்பாடு என்னவெனில், இரண்டாம் திருமணம் செய்யும் ஒருவன் முதல்மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்பது. அதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரம்;
 
وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا

அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21

இந்த வசனத்தை வைத்து, மனைவி கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார். இந்த உடன்படிக்கையில், மனைவி கணவனைத் தவிர வேறு ஆனை  நாடக்கூடாது என்பதும் , கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடக்கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல்மனைவியிடம் முன்கூட்டியே அதுபற்றி தெரிவிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.
 
உண்மையில் இந்த வசனம் திருமணத்தை 'வாக்குறுதி' என்று கூறினாலும், இந்த வசனம் சொல்லும் முழுக்கருத்து என்ன என்பதை பார்க்கவேண்டும். இதற்கு முந்தைய வசனம் இதுதான்;
وَإِنْ أَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلاَ تَأْخُذُواْ مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَاناً وَإِثْماً مُّبِيناً

நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? (4:20)

மேற்கண்ட இரு வசனங்களையும் பார்க்கும்போது இதன்மூலம் இறைவன் இடும் கட்டளை தெளிவானது. அதாவது, முதல்மனைவியை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாம் திருமணம் செய்யும் ஒருவன் முதல்மனைவிக்கு  தந்த மகரை ஒருபோதும் திரும்ப வாங்கக்கூடாது என்பதுதான்.

எனவே இதில் வரும் 'வாக்குறுதி' என்ற வார்த்தையை வைத்து தங்களின் வார்த்தைஜாலத்தை பயன்படுத்தி, ஒப்பந்தம் என்றும் அந்த ஒப்பந்தத்தில்,
மனைவி கணவனைத் தவிர வேறு ஆனை  நாடக்கூடாது என்பதும் , கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடக்கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல்மனைவியிடம் முன்கூட்டியே அதுபற்றி தெரிவிக்கவேண்டும் என்று கூற வருவார்களானால், திருமண ஒப்பந்தப்படி அந்நியப் பெண்ணை  நாடுவதற்குத்தான் தடையே தவிர; இன்னொரு பெண்ணை மணப்பதற்கு அல்ல எனபதையும் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும், இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல் மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் திருமணம் செய்யவேண்டுமென்றால், அதற்கு நபி[ஸல்] அவர்கள், ஒவ்வொரு திருமணத்தின் போதும் தமது முந்தைய மனைவியரிடத்தில்  இவ்வாறு  சொல்லிவிட்டுத்தான் செய்தார்கள் என்று ஆதாரத்தை  வைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு வைக்கமுடியாது ஏனெனில், நபியவர்கள் போர்களத்திலும், பயணத்திலும் கூட சில  மனைவியரை திருமணம் செய்துள்ளார்கள். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் திருமணத்திற்கு முன்பே மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்ற வாதத்திற்கு எந்த ஆதாரமுமில்லை.

அதே நேரத்தில் முதல் மனைவியிடம் சொல்லாமல் திருமணம் செய்யும் கணவன், தனது இரண்டாம் மனைவியை, முதல் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்த  அனுமதியில்லை. ஏனெனில் நபி[ஸல்] அவர்கள் தனது வாழ்வில், ஒரு மனைவிக்கு தெரியாமல் இன்னொரு மனைவியோடு குடும்பம் நடத்தவில்லை. மாறாக இன்று எந்த மனைவியிடம் தங்குவார்கள் என்று அனைத்து மனைவியரும் அறியும் வகையில்  நாட்களை ஒதுக்குவார்கள். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன், தனது இரண்டாம் மனைவியை முதல் மனைவி அறியும் வகையிலும், மற்றவர்கள் அறியும் வகையிலும் பகிரங்கமாக  குடும்பம் நடத்த  வேண்டும்.

அடுத்து இரண்டாம் திருமண விஷயத்தில் இன்னொரு புதுமையான ஃபத்வா வழங்கப்படுகிறது. அது என்னவெனில், புஹாரியில் இடம்பெறும் 3110 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, நபியவர்கள் தமது மகள் ஜைனப்[ரலி] அவர்கள் மனைவியாக இருக்கும் நிலையில் வேறு பெண்ணை  மணக்கக் கூடாது என அபுல் ஆஸ்[ரலி] அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள் எனக்கூறி, இந்த அடிப்படையில் ஒரு ஆனை திருமணம் முடிக்கும் பெண், நான் மனைவியாக இருக்கையில் என்னைத் தவிர எந்த பெண்ணையும் அடுத்து மணம் முடிக்கக் கூடாது  என  நிபந்தனை விதிக்க மார்க்கத்தில் அனுமதியிருக்கிறது என்று கூறுகிறார்கள். அவர்கள் வைக்கும் ஹதீஸ் இதுதான்;

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) ஃபாத்திமா(ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். - அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை - (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) - அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். 'அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அiதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன்;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது" என்று கூறினார்கள்.


மேற்கண்ட ஹதீசை கவனமாக படியுங்கள். அதில் இவர்கள் கூறுவது போன்று,
அபுல் ஆஸ்[ரலி] அவர்களிடம் நபியவர்கள் அத்தகைய ஒப்பந்தம் எடுத்ததாக இவர்கள் மேற்கோள் காட்டும் ஹதீஸில் ஒரு வரி கூட இல்லை. எனவே திருமணத்திற்கு முன்பே கணவனிடம் 'நான் மனைவியாக இருக்கையில் வேறு பெண்ணை  மணக்கக் கூடாது  என கணவனிடம் ஒப்பந்தம் செய்ய மார்க்கத்தில் எந்த அனுமதியும் இல்லை.

மேலும் பெரும்பாலான  பெண்கள் [குறிப்பாக தமிழக முஸ்லிம் பெண்கள்] தான் இருக்கும்போது இன்னொரு பெண்ணை  தனது கணவன் மணப்பதை விரும்பமாட்டாள். இவர்களின் ஃபத்வா படி பெண்கள் திருமணத்திற்கு முன்பே இத்தகைய ஒப்பந்தத்தை செய்ய முற்பட்டால், எந்த ஆணும் இரண்டாம் திருமணம் செய்யமுடியாது. ஆக அல்லாஹ் கொடுத்த அனுமதியை பறிக்கும் வேலையை இந்த ஃபத்வா கொடுப்பவர்கள் செய்கிறார்கள் என்று விளங்கிக் கொளவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம்.  அப்படியானால் அபுல் ஆஸ்[ரலி]யை நபியவர்கள் பாரட்டியது ஏன் என்று.  அபுல் ஆஸ்[ரலி]யை நபியவர்கள் பாரட்டியது ஏன் என்பதற்கு , ரஹீக் என்ற வரலாற்று நூலில் விளக்கம் கிடைக்கிறது;

பத்ருப் போரில் மக்கத்து நிராகரிப்பாளர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டதனால், பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகனார் மற்றும் ஜய்னப் அவர்களின் கணவனரான அபுல் ஆஸ் அவர்களும் ஒருவராக இருந்தார்.



ஜய்னப் அவர்களும் தமது கணவனாரை மீட்க தம் சார்பாக ஒருவரை பணயத் தொகையுடன் அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் பிரதிநிதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல் ஆஸ் அவர்களை மீட்டுச் செல்வதற்கான பணயப் பொருளுடன் வந்தார். அந்தப் பணயப் பொருளைப் பார்த்தவுடன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவராக அவரது முகம் கவலையால் வாடி சோகம் ததும்பி நின்றது. ஆம், ஜய்னப் அவர்கள் தம் கணவரை மீட்க, தமது தாயார் கதீஜா அவர்கள் இறப்பதற்கு முன் தனக்கு அளித்திருந்த நெக்லஸை பணயத் தொகையாக அனுப்பி இருந்ததே, நபிகளாரின் கவலைக்குக் காரணமாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கிக் கூறினார்கள் :


எனதருமைத் தோழர்களே, அபுல் ஆஸை மீட்பதற்காக ஜய்னப் இந்தப் பொருளைப் பணயப் பணமாக அனுப்பி உள்ளார். நீங்கள் விரும்பினால், இவரை விடுதலை செய்து, இந்தப் பொருளையும் அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லை எனில் நீஙகள் விரும்பியவாறு நடந்து கொள்ளலாம் என்றார்கள்.


நபிகளாரின் மனச்சுமையை கண்ட அண்ணலாரின் தோழர்கள், உங்கள் விருப்பப்படியே நாங்கள் செய்கின்றோம் என்று கூறி, அபுல் ஆஸ் அவர்களி;ன் பணயத் தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவர்களை விடுதலை செய்வதற்கு முன், தன் மகள் ஜயனப் அவர்களை தன்னிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை, அண்ணலார் (ஸல்) அவர்கள் அவருக்கு விதித்தார்கள்.


அவ்வாறே அபுல் ஆஸ்[ரலி] அவர்களும் தனது மனைவி ஜைனப் அவர்களை நபியவர்களிடத்தில் திருப்பி அனுப்புகிறார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அவர் என்னிடம் கூறியதில், உண்மையுடனும், அவர் என்னிடம் சத்தியம் செய்ததில் வாய்மையுடனும் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.

அபுல் ஆஸ்[ரலி] அவர்களை நபியவர்கள் பாராட்டியதற்கு காரணம் இதுதானேயன்றி, இவர்கள்  கூறியது போன்று எந்த ஒப்பந்தமும் காரணமில்லை. அப்படியிருந்தால் நேரடியான ஹதீஸை முன்வைக்கட்டும்.
 
அதோடு, ஒரு வாதத்திற்கு இந்த நவீனவாதிகள்  கூறுவது போன்று வைத்துக் கொண்டாலும், ஜைனப்[ரலி] அவர்களின் திருமணம் நபித்துவத்திற்கு முன்னால் நடந்ததாகும். இவர்கள்  கூறியது போன்ற ஒப்பந்தத்தை நபியவர்கள் செய்திருந்தாலும், நபித்துவத்திற்கு முன்னால் நபியவர்கள் செய்ததை பின்பற்றலாம் என கூறுவார்களா..? இது கீழ்கண்ட வசனத்திற்கு முரணில்லையா..?


وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)
 
அடுத்து, அபூஜஹ்லின் மகளை மணப்பதாக இருந்தால், எனது மகளை விவாகரத்து செய்துவிடு என்று அலீ[ரலி] அவர்களிடம் கூறியதை ஆதாரமாக காட்டி, இரண்டாம் திருமணம் செய்யும் கணவனை பிரியும் உரிமை பெண்ணிற்கு உண்டு என்பதால் அந்த உரிமையை நபியவர்கள் இங்கு பயன்படுத்துகிறார்கள்  என்றும் கூறி, இரண்டாம் திருமணம் செய்யும் கணவன், தான் இரண்டாம் திருமணம் செய்யப்போவதை முன்கூட்டியே மனைவியிடம் சொன்னால்தான், அவனது முதல் மனைவி விரும்பினால் இவனோடு வாழவும்- விரும்பினால் இவனை விவாகரத்தும் செய்யமுடியும் என்று ஒரு வாதத்தை  வைக்கிறார்கள். கணவனின் இரண்டாம் திருமணத்தை  காரணம் காட்டி ஒரு பெண் தனது கணவனை பிரியலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை முன்  வைக்கவேண்டும். 
 
அப்படியானால்,  அலீ[ரலி]  அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய நாடுகையில், நபி[ஸல்] அவர்கள் தனது மகளை விவாகரத்து செய்யக்  கூறியதற்கு காரணம், நபியவர்கள் அலீ[ரலி] அவர்களின் திருமணத்திற்கு தடையாக நின்றதற்கு காரணம் அதே புகாரி 3110 ஹதீஸில் உள்ளது.


மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன்;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது" என்று கூறினார்கள்.  
 
அலீ[ரலி] அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய நாடுகையில், தனது மகளை விவாகரத்து செய்யக்  கூறியதற்கு காரணம் 'விவாகரத்து உரிமையை' நிலைநாட்ட அல்ல. மாறாக அல்லாஹ்வின் எதிரியின் மகளோடு ஒன்று சேர்ந்து வாழமுடியாது  என்பதற்காகவே.
 
எனவே, இரண்டாம் திருமணம் தொடர்பாக இந்த நவீனவாதிகள் வழங்கும் ஃபத்வாக்கள் அல்லாஹ் வழங்கிய பலதாரமண உரிமையை பறிப்பதாகவும், கணவனின் மறுமணத்தை காரணம் காட்டி பெண்களை விவகாரத்து செய்ய தூண்டுவதாகவும் அமைந்துள்ளதை நம்மால் உணரமுடிகிறது.
 
எல்லாம்  வல்ல அல்லாஹ், ஃபத்வாக்களை பாக்கெட்டில் இருந்து அள்ளிவீசும் நவீன வாதிகளுக்கு நேர்வழி காட்டுவானாக!

வெள்ளி, 15 அக்டோபர், 2010

உலக கைகழுவும் தினமும்; உன்னத மார்க்கமும்!

அக்டோபர் பதினைந்தாம் தேதி 'உலக கை கழுவும் தினம்' அனுஷ்டிக்கப்பட்டதை நாமெல்லாம் அறிவோம். இந்த கை கழுவுவதை வலியுறுத்துவதன் நோக்கம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் பெரும்பாலான நோய்கள் கைகளின் தூய்மையின்மையால் ஏற்படுகிறது.

கைகளில் நம்மையும் அறியாமல் பரவியிருக்கும் அசுத்தத்தின் காரணமாக, நாம் கையை சுத்தம் செய்யாமல் நமது உடலின் ஏனைய பகுதிகளை தொடுவதாலும், கைகளை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதாலும் உடல்ரீதியாக பல்வேறு நோய்களை நாம் சந்திக்கவேண்டியுள்ளது.

மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு அவனது முழு உடல் தூய்மை மிகஅவசியம். அதிலும் குறிப்பாக கைகளின் தூய்மை மிக மிக அவசியம். எனவே இஸ்லாம் இந்த தூய்மையை என்றோ அனுஷ்டிக்கும் ஒரு சடங்காக சொல்லாமல், அன்றாடம் மனித வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் தூய்மையை கடமையாகவே ஆக்கியிருப்பதை காணலாம்.

தொழுகையில்....
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆண்-பெண் அனைவர் மீதும் தொழுகை கடமை என்பதை அனைவரும் அறிவோம். அந்த தொழுகை நிறைவேற வேண்டுமானால் 'உளூ' எனும் சுத்தம் மிகமிக அவசியம். அல்லாஹ் கூறுகின்றான்;


يا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ وَإِن كُنتُم مَّرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاء أَحَدٌ مَّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لاَمَسْتُمُ النِّسَاء فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ مَا يُرِيدُ اللّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـكِن يُرِيدُ لِيُطَهَّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள் ;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.[5:6 ]

இந்த வசனத்தில் 'உளூ' எனும் அங்கசுத்தி செய்தல், உடலுறவு செய்வதன் மூலம் குளிப்புகடமையானால் குளித்தல் அல்லது தயம்மும் செய்தல் ஆகிய கடமைகளை வலியுறுத்திய இறைவன், இதன் மூலம் அல்லாஹ் உங்களை தூய்மைப்படுத்த நாடுகிறான் என்று கூறுவதன் மூலம் இஸ்லாம் தூய்மையை எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால்....
'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் தூங்கியிருக்கிறார்களா?' என ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குரிய உளூச் செய்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்..[புஹாரி]

இல்லற வாழ்க்கையில் ஈடுபடும்போது அதன் மூலம் ஏற்படும் அசுத்தங்களை களையும் பொருட்டு நபி[ஸல்] அவர்கள் உளூ செய்து தூங்கியிருக்கிறார்கள். அவ்வாறே முஸ்லிம்களும் பணிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இங்கும் தூய்மை வலியுறுத்தப்பட்டுள்ளதை காணலாம். மேலும் உடலுறவு கொள்ளாமல் சாதரணாமாக தூங்க நாடினாலும் அப்போதும் உளூ செய்யுமாறு நபி[ஸல்] அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்;

'நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூ செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் 'யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்' என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆம்விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.[புஹாரி]

குளிப்பு கடமையான நிலையில் உண்ண நாடினால்....
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உண்ண அல்லது உறங்க விரும்பும் போது உலூச் செய்து கொள்வார்கள். குளிப்புக் கடமையாக இருக்கும் போது (அவ்வாறு செய்தார்கள்) என்பதையே அவர்கள் குறிப்பிட்டார்கள்.[அபூதாவூத்]

மீண்டும் உறவுகொள்ள நாடினால்...
உங்களில் ஒருவர் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)[அபூதாவூத்]

சிறு நீர் கழித்தால்.....
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, தனது வலது கையால் தனது மர்மஉறுப்பைத் தொட வேண்டாம். மேலும் அவர் கழிப்பிடத்திற்கு சென்றால், தனது வலது கையால் சுத்தம் செய்ய வேண்டாம், மேலும் அவர் நீர் அருந்தினால் ஒரே மூச்சில் நீர் அருந்த வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.[புஹாரி]

இவ்வாறாக அன்றாடம் தூய்மையை வலியுறுத்தும் ஏராளமான விஷயங்களை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளது. அதில் சிலவற்றை மட்டுமே இங்கு மேற்கோள் காட்டியுள்ளோம். ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தாலே அவன் தூய்மையானவனாகவும், ஆரோக்கியமானவனாகவும் திகழ்வான் [இறைவன் நாடியவை நீங்கலாக] என்பதில் ஆச்சரியமில்லை.






அந்த ஏழு விஷயங்கள்!


بســــم الله الـر حـمـن الرحـــيــم
எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதனை படைத்து அந்த மனிதனுக்கு பூமியை  வசிப்பிடமாக்கி, அதில் அவனுக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கி, மனிதன் அனுபவிக்க அனுமதித்துள்ள இறைவன், அவற்றில் ஆகுமானவை  எது..? தடுக்கப்பட்டவை எது..? என்பதையெல்லாம் விளக்கி, அந்த மனிதனை பக்குவப்படுத்தி, பண்பாளனாக மாற்றி, சுவனத்திற்கு உரியவனாக மாற்ற தன் புறத்திலிருந்து வேதத்தையும், தூதர்களையும் அனுப்பி வைத்தான். அந்த தூதர்கள் குறித்து, அதிலும் குறிப்பாக ரஸூல்[ ஸல்] அவர்கள் குறித்து நமக்கு கட்டளையிடும் போது,
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். [59 ; 7 ]
என்று வல்ல ரஹ்மான் தன் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

அந்த அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் பல்வேறு ஏவல், விலக்கல்களை சொல்லியுள்ளார்கள். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான ஏழு ஆகுமான விஷயங்களும், ஏழு தடுக்கப்பட்ட விஷயங்களும் புஹாரியில் 6235 மற்றும் பல்வேறு இலக்கங்களில் காணப்படுகிறது. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகிறது;

 ஏவப்பட்ட விஷயங்கள்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

நாம் நோயாளிகளை நலம்  விசாரிக்க மருத்துவமனைக்கோ, அல்லது வீடுகளுக்கோ செல்வோம். ஆனால் யாரை விசாரிப்போம் என்றால் அவர்கள் நமக்கு நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள். அல்லது நெருங்கிய நண்பர்களாக  இருப்பார்கள். அல்லது ஏதேனும் ஒரு வகையில்  அவர்கள் நமக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் விசாரிப்போம். இந்த நிலை மாறவேண்டும். அறிந்தவர் அறியாதவர் அனைவரையும் அவர் நோயுற்ற செய்தியறிந்தால் நாம்  நலம் விசாரிப்பதை பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், நோய் விசாரிக்க சென்றால்,
'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' .

(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)
என்ற நபியவர்கள் காட்டித்தந்த துஆவை நோயாளிகளுக்காக நாம் செய்யவேண்டும்.

2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது.
ஒருவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவை அவரது வீட்டில் பார்த்து விட்டு நடையை கட்டுபவர்கள் நம்மில் பெரும்பாலோர் உண்டு. காரணம் ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று, அடக்கம்செய்யும் வரை உடன் இருந்தால் அதற்கு கிடைக்கும் நன்மையை  அறியாத  காரணத்தினால்தான்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஜனாஸா தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்றார்கள். [புகாரி 1325 ]
இரண்டு மலையளவு நன்மையை  அள்ளித்தரும் செயலான ஜனாசாவுக்காக தொழுதல், பின் தொடர்தல், அடக்கம் செய்தல் ஆகிய செயலை இனியும் நாம் விடலாமோ..?

 3. தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.

தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வது அரிதாகிவிட்டது. ஆடு, மாடு தும்முவது போல் தும்மிவிட்டு, அல்ஹம்துலில்லாஹ் சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். அப்படியே தும்மியவர் சொன்னாலும் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற அறிவு பெரும்பாலோருக்கு இல்லை. காரணம் தும்மியவருக்கு பதிலளிப்பதும் ஒரு நல்லமல் என்ற  அறியாமைதான்.

4. நலிந்தவருக்கு உதவுவது.

நலிந்தவர்களுக்கு நம்மில் பலர் உதவி செய்கிறோம். அதை இன்னும் அதிகமாக செய்யவேண்டும். அமைப்புகள் பல நலிந்தவர்களுக்கு உதவி செய்து வருகின்றன. பாராட்டுகிறோம். ஆனால் அவைகளை விளம்பரப் படுத்துவதை  தவிர்க்க வேண்டும். கட்டாயம் விளம்பரப் படுத்தியே ஆகவேண்டும் என அமைப்புகள் கருதினால், குறைந்த பட்சம் உதவி பெறுபவரின் முகத்தை மறைத்தாவது படத்தை வெளியிட முன்வர வேண்டும்.

5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது.

அநீதியிழைத்தல்   என்பது ஒருவருக்கு அவரது சொத்து- மானம்- உயிர் ஆகியவற்றில் அநீதியிழைக்கப் பட்டிருக்கலாம். அப்படி ஒருவர் அநீதிக்கு உள்ளானால், அவரை அநீதிக்கு உள்ளாக்கியவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அவரை எதிர்த்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்திட உதவவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தனக்கு பிடிக்காதவர்களின் கண்ணியத்தை கப்பலேற்றும் வேலையை கற்றறிந்தவர்களே செய்வது வேதனைக்குரியதாகும்.

6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.

ஸலாம் சொல்லுதல் என்பது பெரிய தாடி, ஜிப்பா சகிதம் ஒரு கெட்டப்பில் இருப்பவர்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் என்றாகி விட்டது. மேலும் நாகரிக வளர்ச்சியில் ஸலாம் காணாமல் போய், 'குட்மார்னிங்'  வழக்கில் வந்துவிட்டது. முஸ்லிம்களில் கணிசமானோர் குட்மார்னிங் சொல்வதை பார்க்கிறோம். குட்மார்னிங் சொன்னால் மார்க்கத்தில் எந்த நன்மையுமில்லை. ஆனால் ஸலாம் சொன்னால் அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் பத்து நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்றால் இருபது நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்றால் முப்பது நன்மைகளும்  கிடைக்கும். இது சொன்னவருக்கு கிடைப்பதாகும். கேட்டு விட்டு பதில் சொல்பவருக்கும் இதுபோன்ற நன்மை கிடைக்கும். இப்படி எந்த செலவும் செய்யாமல் நன்மைகளை கொள்ளையடிக்கும் வாய்ப்பை நாம் தவறவிடலாமா..?

7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

சத்தியம் செய்தவர் மார்க்கத்திற்கு உட்பட்ட சத்தியத்தை  செய்திருப்பின், அந்த சத்தியத்தை நிறைவேற்ற நாம் உதவ வேண்டும். ஒருவர் பொருளாதார விஷயத்தில் ஒரு சத்தியத்தை செய்திருப்பார். எதிர்பாராத விதமாக அவர் பொருளாதார பின்னடைவை சந்தித்து சத்தியத்தை நிறைவேற்ற முடியா நிலையில் இருப்பார். இப்படிப்பட்டவருக்கு நாம் உதவி செய்வதன் மூலம் நாம் நன்மையை அடைந்து கொள்ளமுடியும்.
தடுக்கப்பட்டவைகள்;
1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.

வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது என்பது வசதி படைத்த சில முஸ்லிம்கள் கவுரவமாக கருதுகிறார்கள். ஏழைகள் வீட்டில் வெள்ளிப் பாத்திரங்கள் இருக்காது. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவதை இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள். மேலும் நபியவர்களின் கட்டளையை ஏற்று வெள்ளிப் பாத்திரத்தில் உண்ணல்- பருகுதல் செய்வதை சஹாபாக்கள் நஞ்சென  வெறுத்துள்ளார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்கள்;

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) (இராக்கில் உள்ள) 'அல்மதாயின்' (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூலியான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா(ரலி) அதை அவரின் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) 'நான் இவரை(ப் பலமுறை தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக் கொள்ளாததால் தான் நான் இதை அவரின் மீது வீசியெறிந்தேன். நபி(ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றம் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும், அவர்கள், 'அவை இம்மையிலும் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.[புகாரி 5632 ]

2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.
முஸ்லிம்களில் பெரும்பாலான ஆண்கள் தங்கம் அணிபவர்களாக இருக்கிறர்கள். இன்னும் திருமண நேரத்தில் பெண் பேசும்போதே மாப்பிள்ளைக்கு தனியாக இத்தனை சவரன்   போடவேண்டும் என்றும் பேசப்படுகிறது. ஆண்கள் தங்கம் அணிவதை நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதுகிறார்கள். கழுத்தில் மைனர்  செயினோடும், கையில் பிரஸ்லேட்டோடும் இவர்கள் செய்யும் அளப்பரை தாங்க முடியலை. ஆனால் அவை நரகத்தின் நெருப்பு என்பதை உணர மறுக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
ஒரு மனிதரின் கையில் தங்க மோதிரத்தைக் கண்ட நபி[ஸல்] அவர்கள் அதை கழற்றி எறிந்துவிட்டு, உங்களில் யாரேனும் தீக்கங்கை எடுத்து அதை தனது கையில் வளையமாக அணிவதை விரும்புவாரா என்று கேட்டார்கள். நபி[ஸல்] அவர்கள் சென்றபிறகு, அந்த மோதிரத்தை  எடுத்து அதை வேறு வழியில் பயன்படுத்திக் கொள் என்று அந்த மனிதருக்கு கூறப்பட்டது. அதற்கவர், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அதை தூர எறிந்திருக்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக, அதை ஒருபோதும் நான் எடுக்கமாட்டேன் என்று கூறினார்.[முஸ்லிம்]

தங்கம் அணியும் விசயத்தில் இறைத்தூதரின் கட்டளைக்கு சஹாபாக்கள் எந்த ளவு கட்டுப்பட்டுள்ளார்கள். இன்று  நாம் எவ்வாறு இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.
3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.
4. சாதாரணப் பட்டு அணிவது.
5. அலங்காரப் பட்டு அணிவது.
6. எகிப்திய  பட்டு அணிவது.
7. தடித்த பட்டு அணிவது.

இங்கே பாட்டின் அனைத்து வகைகளையும் ஆண்களுக்கு நபியவர்கள் தடுத்துள்ளார்கள். ஒரு  காலத்தில்  திருமணம் என்றாலே மாப்பிள்ளை பட்டு வேட்டி சரசரக்க ஊர்வலம் வருவார். இன்று நாகரிக மாற்றம் காரணமாக திருமணத்தில் பட்டு அணிவது குறைந்தாலும், முஸ்லிம் சமுதாயத்தில் பட்டு அணிவது முற்றிலும் ஒழிந்து விட்டது என்று கூறிட முடியாது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;

பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். "மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது" என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். [புகாரி எண்; 886 ]

இம்மை பகட்டுக்காக பட்டாடை அணியும் ஆண்கள் மறுமை பாக்கியத்தை இழக்கத் தயாரா என்பதை சிந்திக்கட்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் ஏவியதை செய்பவர்களாக, தடுத்ததை தவிர்ந்து கொள்பவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!