உலகில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலோர் நாம் கலிமா சொல்லிவிட்டோம் மேலும் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் எனவே நாம் உறுதியாக சுவர்க்கம் சென்றுவிடுவோம் என்று எண்ணுவதை நாம் பார்க்கலாம். ஆனால் அல்லாஹ், முஸ்லிம்களில் உறுதியான ஈமான் உடையவர்கள் யார்? பலவீனமான ஈமான் உடையவர்கள் யார் என்பதை பரிசோதிக்கும் வகையில் நாம் வாழும் காலகட்டங்களில் பல்வேறு சோதனைகளை ஏற்படுத்த்துகிறான். அல்லாஹ்வின் இந்த சோதனைகளை சந்திக்கும் முஸ்லிம்களில் சிலர், என்ன இது! அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாத காஃபிர்கள் சுகமாக வாழும்போது அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட எங்களை அல்லாஹ் இப்படி சோதிக்கிறானே என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு. ஆனால் சோதனை என்பது கண்டிப்பாக உண்டு.
அல்லாஹ் கூறுகின்றான்;أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُواْ الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْاْ مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاء وَالضَّرَّاء وَزُلْزِلُواْ حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُواْ مَعَهُ مَتَى نَصْرُ اللّهِ أَلا إِنَّ نَصْرَ اللّهِ قَرِيبٌஉங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
ரசூல்[ஸல்]அவர்கள் கூறினார்கள்;மூமீன்கள் அவரவர் ஈமான் அளவுக்கு சோதிக்கப்படுவார்கள்[திர்மிதி]
மேற்கண்ட வசனமும், ஹதீசும் முஸ்லிம்கள் கண்டிப்பாக சோதனைகளை சந்தித்தே தீரவேண்டும் என்பதையும், சோதனைகள் நம் ஈமானை எடைபோடும்-உறுதிப்படுத்தும் காரணியாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
நமக்கு முன் சென்றோர் சந்தித்த சோதனைகளில் ஒன்று;
கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல்) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள்.[புஹாரி 6943 ]இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக மக்கத்து முஸ்ரிக்குகளால் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சத்திய சகாபாக்களை, நீங்களெல்லாம் என்ன சோதனையை சந்தித்து விட்டீர்கள்? உங்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் சந்தித்த சோதனையை பாருங்கள் என்று நபியவர்கள் சொல்லிக்காட்டுகிறார்கள் என்றால், சோதனையே வாழ்க்கையாக கொண்ட சத்திய சகாபாக்களை விட நாம் அதிக சோதனையை சந்தித்து விட்டோமா என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
நபிமார்களும் சோதிக்கப்பட்டுள்ளார்கள்;
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள், கூறுகிறார்கள்;'அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்ததில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற்படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன' என்று கூறினார்கள். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி 4525 ]
நிராகரிப்பாளர்கள் மீதான சோதனை;
மூமீன்கள் மீது ஏற்படும் சோதனைக்கும், நிராகரிப்பாளர்கள் மீது ஏற்படும் சோதனைக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், மூமீன்கள் மீதான சோதனை அவர்களுக்கு மறுமையில் நன்மையை பெற்றுத்தரும். காஃபிர்களுக்கு இவ்வுலக சுகவாழ்க்கை என்பது ஒருவகையான சோதனையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;وَلاَ يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُواْ أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِّأَنفُسِهِمْ إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُواْ إِثْمًا وَلَهْمُ عَذَابٌ مُّهِينٌஇன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
மூமீன்கள் மீதான இறைவனின் சோதனைகளின் வகைகள்;وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوف
وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَநிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக![2:155 ]
பசியைக்கொண்டு சோதனை;
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட பசியைக்கொண்டு இறைவன் சோதிக்கும்போது அதையும் தாங்கிக்கொள்வது ஒரு மூமினின் பண்பாகும். அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த நபி[ஸல்] அவர்களே பசியால் வாடியிருக்கிறார்கள்.
அய்மன் அல்ஹபஷீ(ரஹ்) அறிவித்தார்;நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: நாங்கள் அகழ்ப் போரின்போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுப பற்றித் தெரிவிக்க) நபி(ஸல்), அவர்களிடம் சென்று, 'இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது" என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் இறங்கிப் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களின் வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்), நாங்கள் மூன்று நாள்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 4101 ]பயத்தை கொண்டு சோதனை;
பொதுவாக இன்று தலைவர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக சவால் விடுகிறார்கள் எனில், அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கும் தைரியம்தான். அதே தலைவர் தனிமைப்படுத்தப்பட்ட்டால் பயத்தின் காரணமாக அடங்கிவிடுவார். அதுபோல் பத்துபேர் கூடியிருக்கும் நிலையில் ஒருவருக்குள்ள தைரியம் தனிமையில்இருக்கும்போது இருப்பதில்லை. ஆனால் ஒரு முஸ்லீம் கூட்டமாக இருந்தாலும் சரி, தனிமையில் இருந்தாலும் சரி, சத்தியத்தை சொல்வதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் தயங்கக்கூடாது. இதோ! தனி மனிதராக பயம் என்ற சோதனையை வென்ற அபூதர் அல் கிஃபாரி[ரலி] அவர்களை பாருங்கள்;
அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார் எங்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), 'அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்க, நாங்கள், 'சரி (அறிவியுங்கள்)" என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அபூ தர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது 'ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், 'நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா" என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், 'உன்னிடம் என்ன செய்தி உண்டு" என்று கேட்டேன். 'நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்" என்றார். நான் அவரிடம், 'போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை" என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன். அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ(ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். (என்னைக் கண்டதும்), 'ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே" என்று கேட்டார். நான், 'ஆம்' என்றேன். உடனே அவர்கள், 'அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)' என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும நபி(ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். 'மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?' என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். உடனே, அலீ(ரலி), 'என்னுடன் நடங்கள்' என்று சொல்லிவிட்டு, 'உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், 'அவ்வாறே செய்கிறேன்" என்று கூறினார்கள். நான் அப்போது 'இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. எனவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோராமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்" என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்" என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூ தர்ரே! (நீ இ!லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உனக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா" என்று கூறினார்கள். அதற்கு நான், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்" என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், 'குறைஷிக் குலத்தாரே!" அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்" என்று சொன்னேன். உடனே, அவர்கள் 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ்(ரலி) என்னை அடையாளம் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, 'உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)" என்று கேட்டார்கள். உடனே, அவர்கள் என்னைவிட்டு விலம்விட்டார்கள். மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ்(ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள். (இதை அறிவித்து பிறகு) இப்னு அப்பாஸ்(ரலி), 'இது அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூ தருக்கு கருணை காட்டுவானாக!" என்று கூறினார்கள். [புஹாரி எண் 3522 ]
செல்வத்தை கொடுத்தும் எடுத்தும் சோதனை;
சுலைமான்[அலை] அவர்களுக்கு அல்லாஹ், வேறு யாருக்கும் வழங்காத ஆட்சி அதிகாரத்தையும், செல்வத்தையும் வழங்கியதை நாம் அறிவோம். அந்த சுலைமான்[அலை] அவர்கள் அல்லாஹ்விடம் கெட்ட பிரார்த்தனையை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்;فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَஅப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.
வசதியான குடும்பத்தில் பிறந்து இஸ்லாத்தை ஏற்றபின் வறுமையில் வாழ்ந்து ஷஹீதான முஸ்அப்[ரலி] அவர்களின் நிலை பாரீர்;
நபி(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வுக்காகவே ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான கூலி அல்லாஹ்விடமுள்ளது. எங்களில் சிலர் தம் கூலியை (இவ்வுலகத்தில்) உண்ணாமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) ஒருவர். எங்களில் வேறு சிலர் (இவ்வுலகில்) பூத்துக் குலுங்கிச் செழித்து அனுபவித்ததும் உண்டு. இப்னு உமைர்(ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின்மு உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் அவரின் தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன: கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரின் தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரின் கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். [புஹாரி]
நேசத்திற்குரியவர்களின் உயிர்களை கைப்பற்றும்போது;
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.5 பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.[புஹாரி]
சோதனைகள் பாவத்திற்கு பரிகாரமாகும்;
மூமின்களின் அனைத்து சோதனைகலும், துன்பங்களும் நோய் எதுவாகிலும் அவரது பாவங்களுக்கு பரிகாரமாகும்.அவரது காலில் குத்தும் முள் உட்பட[புஹாரி]
பாதுகாப்பு பெற;
nabi[sal]அவர்கள், 'அல்லாஹ்வே! நிச்சயமாக நான் மண்ணறை வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸிஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். [புஹாரி]
இறுதி வெற்றி மூமின்களுக்குத்தான்;وَلاَ تَهِنُوا وَلاَ تَحْزَنُوا وَأَنتُمُ الأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَஎனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.[3;139]
அன்பானவர்களே! அல்லாஹ்வை நம்பிய முஸ்லிம்களை சோதிப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த ஆதாயமுமில்லை. இருப்பினும், தங்கத்தை நெருப்பிலிடுவது அதன் தரத்தை உறுதிப்படுத்தவே! அதுபோல் உண்மை முஸ்லிம்களாகிய நம்மை இறைவன் சோதிப்பது நம்முடைய ஈமானையும், அமல்களையும் செம்மைப்படுத்தி சொர்க்கத்திற்குரியவர்களாக மாற்றவே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக