بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நாம் கோடைக்காலத்தை அடைந்திருக்கிறோம். இந்த கோடைக்காலத்தை பொருத்தமட்டில் வெப்பம் நம்மை வாட்டிவதைக்கின்ற காரணத்தால் வெப்பத்திலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, வீட்டிலிருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், அவ்வளவு ஏன் காரிலே பயணித்தாலும் ஏ.சி. எனப்படும் குளிர்சாதன பெட்டி மூலம் நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். அதோடு இந்த கோடைகாலத்தில் குளிற்சியான பிரதேசங்களுக்கு இன்ப சுற்றுலா சென்று நம்மை பாதுகாத்துக்கொள்கிறோம். வசதியற்றவர்கள் அவர்களுக்கு தக்கவாறு வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வழியை கடைபிடிக்கிறார்கள். இந்த அளவு சுமார் நான்கு மாதகாலம் நம்மை பாடாய்படுத்தும் வெப்பத்தை உமிழும் இந்த சூரியன் நமக்கு அருகாமையில் உள்ளதா என்று நாம் ஆய்வு செய்து பார்த்தால், சூரியன் பூமியிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இந்த அளவுக்கு வெகு தொலைவில் உள்ள சூரியனின் வெப்பத்தை நம்மால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், நாளை மறுமையில் மஹ்ஷர் எனப்படும் இறுதி விசாரணை மைதான நிலையை எண்ணிப்பாருங்கள்; அந்த நாளில் சூரியன் நமது தலைக்கு மேலாக இருக்கும் என்று நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள். ஒருபுறம் சூரியனின் உச்சகட்ட தாக்குதல் ஒருபுறம்-மறுபுறம் நம் தீர்ப்பு என்னாகுமோ என்ற அச்சம் ஒருபுறம். ஒவ்வொருவரும் வியர்வையில் குளித்துக்கொண்டிருக்கும் அந்த நாளில், எவ்வித நிழலும் இல்லாத அந்த நாளில் அல்லாஹ், தனது அரியாசனமான 'அர்ஷின்' நிழலை எழு சாரார்க்கு தருவான் என்று நபியவர்கள் கூறிய பொன்மொழி இதோ;
அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர். [நூல்;புஹாரி] .
நீதிமிக்க அரசன்.
அரசன் என்பவன் தனக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்யக்கூடாது. மக்களுக்கு தொல்லை தரக்கூடாது. மக்களின் சொத்துக்களை அபகரிக்கக்கூடாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக , நீதி செலுத்தும் விஷயத்தில் வேண்டியவர்- வேண்டாதவர், பணக்காரர்- ஏழை, சமூகத்தில் அந்தஸ்துடையவர்- பாமரன் என்றெல்லாம் வேறுபாடு பார்க்கக்கூடாது. அனால் இன்று ஆட்சியாளர்கள் பெரும்பாலும் எப்படி நடந்துகொள்கின்றனர் என்றால், வலியோன்- எளியோன் என்ற அடிப்படையில்தான் நீதி வழங்குகின்றனர். வலுவான ஆதாரங்களுடைய கொலைக்குற்றவாளி, ஆள்பலம் அந்தஸ்துபலம் உள்ளவனாக இருந்தால் அவனுக்கு ஜாமீன் என்ற பெயரில் விடுதலை வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு பலவீனன் விசாரணைக்கைதியாக இருந்தால் அவன் பத்து ஆண்டுகள் சிறையில் கழித்து இருந்தாலும் அவனுக்கு குறைந்தபட்ச ஜாமீன் கூட மறுக்கப்படுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஆனால், ஐந்தாண்டுகள் ஒரு குறுகிய நிலப்பரப்பை ஆளும் இவர்களைவிட மிகப்பெரிய வல்லரசை ஆண்ட எம் தலைவர் ரசூல்[ஸல்] அவர்கள், நீதி வழங்கும் விஷயத்தில் நடந்துகொண்ட நேர்மை பாரீர்;
(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள். [புஹாரி]
இந்த செய்தியில் உயர்ந்த குலம் என்று அறியப்பட்ட ஒரு பெண்மணியை தண்டனையிலிருந்து விடுவிக்க, நபியவர்களின் நேசத்திற்குரிய உசாமா அவர்கள் பரிந்துரைக்க, நபியவர்கள் கடும் கோபம் கொண்டு என்மகள் திருடினாலும் தண்டிப்பேன் என்றார்களே! இதுதான் நீதி! இப்படிப்பட்ட பாரபட்சமற்ற ஆட்சி நடத்தும் அரசன் [முஸ்லிமாக இருந்தால்] அர்ஷின் நிழல் பெறுவான்.
2அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
பொதுவாக மனிதன் அதிகம் தவறு செய்வது இளமைப்பருவத்தில்தான். 'இளங்கன்று பயமறியாது' என்பார்களே! அதுபோன்று இளமை பருவத்தில் எந்த தவறையும் துணிந்து செய்யும் மனப்பக்குவம் உள்ளநிலையில், தவறுகளை புறந்தள்ளி தன்னைப்படைத்த அல்லாஹ்வுக்கு அஞ்சியவனாக அல்லாஹ்வை வணங்கும் இளைஞன் அரசின் நிழல் பெறுவான்.
3பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
பள்ளிவாசலுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன் எனில், அவன் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மட்டுமல்லாது, அவன் வியாபாரத்தில் இருந்தாலும், குடும்ப விஷயத்தில் ஈடுபட்டிருந்தாலும், இன்னும் அவன் எந்தெந்த காரியாங்களில் இருந்தாலும் அவனின் உள்ளம் அடுத்த வக்த் தொழுகையை எதிர்நோக்கி, பள்ளியோடு அவன் உள்ளம் பிணைந்திருக்கும். இப்படிப்பட்ட உள்ளம் உள்ளவனால்தான் முறையாக தொழுகையை நிறைவேற்றமுடியும். தொழுகையை முறையாக- முழுமையாக கடைபிடிப்பவன்தான் மார்க்கத்தின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்துவான். இப்படிப்பட்ட உள்ளமுடையவன் அர்ஷின் நிழல் பெறுவான்.
4அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.
முஸ்லிம்களின் நேசம் என்பது அல்லாஹ்வுக்காக என்ற அடிப்படையிலும், பிரிவு என்பதும் அல்லாஹ்வுக்காக என்ற அடிப்படையிலும் இருக்கவேண்டும். அந்த அடிப்படையில்தான் சத்திய சகாபாக்களின் உறவும் -பிரிவும் இருந்தது. ஆனால் இன்று தவ்ஹீத்வாதிகள் என்று சொல்பவர்களாகிய நம்மிடம், உறவும்-பிரிவும் அல்லாஹ்வுக்காக என்ற நிலைமாறி, 'அண்ணனுக்காக' 'அமீருக்காக' 'கழக தலைவருக்காக' என்ற அடிப்படை வந்து விட்டது . நாம் மேலே கூறிய படி சகாபாக்கள் அல்லாஹ்வுக்காக நேசம் வைத்ததற்கு மிகச்சிறந்த உதாரணம்; மக்கத்து முஹாஜிர்களும்-மதீனத்து அன்சாரிகளும் சகோதரர்களாக மாறினார்களே! நேற்றுவரை யாரென்றே தெரியாத மக்கத்து முஹாஜிர்களுக்கு மதீனத்து அன்சாரிகள் தங்களின் சொத்துக்களில் பங்கு கொடுக்கும் அளவுக்கு நேசம் காட்டியதற்கு என்ன காரணம்? அல்லாஹ்வுக்காக!அதுபோல் சகாபாக்கள் பிரிவதும் அல்லாஹ்வுக்காக என்பதற்கு ஒரு சான்று;'
நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்ச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.[புஹாரி]
இந்த செய்தியில் உக்பா இப்னு ஹாரிஸ்[ரலி] அவர்கள், மணமுடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நிலையில் தனது மனைவி தனக்கு பால்குடி சகோதரியாகவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டவராகவும் இருப்பதையரிந்த உடனே விவாகரத்து செய்தாரே! இதற்கு என்ன காரணம் அல்லாஹ்வுக்காக என்ற ஒன்றைத்தவிர வேறில்லை.ஆக இப்படிப்பட்டவர்கள் அரசின் நிழல் பெறுவர்.
5 .அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன்.
ஒரு ஆண்மகன் திருடாதவனாக, மது அருந்தாதவனாக, புகை பிடிக்காதவனாக இருப்பது எளிதான ஒன்றாகும். அதே நேரத்தில் அவன் ஆண்மையை தூண்டக்கூடிய வகையில் ஒரு பெண் அதுவும் அழகான, அந்தஸ்தும் நிறைந்த பெண் அழைக்கும்போது கண்டிப்பாக இறையச்சம் உள்ள ஒருவனால்தான் அந்த பெரும்பாவத்திலிருந்து தன்னை தனது கற்பை காத்துக்கொள்ளமுடியும். அப்படிப்பட்ட இறையச்சமுடைய ஒருவரை பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்;وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ الأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لاَ يُفْلِحُ الظَّالِمُونَஅவர்[யூசுப்] எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக! நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். (1௨ :௨ 3)
இந்த வசனத்தில் அல்லாஹ் நபி யூசுப்[அலை] என்ற கற்புக்கரசரை பற்றிக்கூறுகின்றான். இதுபோன்று, ஒரு பெண் அழைத்தபோதும் அல்லாஹ்வுக்கு அஞ்சி யார் விலகி கொள்கிறாரோ அவர் அர்ஷின் நிழல் பெறுவார்.
6தன்னுடைய இடக்கரத்துக்கு தெரியாமல்[ரகசியமாக] வலக்கரத்தால் தர்மம் செய்பவன்;
தர்மம் செய்வதில் இருவகை உண்டு. ஒன்று யாரும் அறியாமல் ரகசியமாக தர்மம் செய்வது. மற்றொன்று செய்யும் தர்மத்தை பகிரங்கமாக செய்வது. இந்த இரண்டுவகை தர்மத்திற்கும் மார்க்கத்தில் அனுமதியுண்டு. பகிரங்கமாக செய்யும் தர்மத்தை பொறுத்தவரையில் அந்த தர்மம், தர்மம் செய்யாமல் முடிந்து வைத்துக்கொள்பவர்களை தர்மம் செய்ய தூண்டும் வகையில் இருக்கவேண்டும். மாறாக பிறர் பாராட்டவேண்டும் என்ற அடிப்படையில் இருக்கக்கூடாது. ஆனால் இன்று பெருநாள் தர்மமாக வழங்கக்கூடிய மூன்றுகிலோ அரிசியை முன்னூறு போட்டோ எடுத்து பத்திரிக்கைகளில் பரப்புவதும், தொலைக்காட்சி, இன்டெர்நெட்டுகளில் காட்சிப்பொருள் ஆக்குவதையும் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக பல சகோதரர்களிடம் இருந்து வசூலித்து விநியோகிக்கப்படும்போது, தங்கள் அமைப்பு/கழகம் சார்பாக வழங்கியதாக சுய தம்பட்டம் வேறு. இதயெல்லாம் தாண்டி ஒரு முஸ்லீம் தான் செய்யும் தர்மம் அல்லாஹ் மட்டும் அறிந்தால்போதும் என்று ரகசியமாக செய்யும் தர்மம் அவனுக்கு அர்ஷின் நிழலை பெற்றுத்தரும்.
தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து [அல்லாஹ்வின் அச்சத்தால்] கண்ணீர் வடித்தவன்.
ஒருவனுடைய தக்வாவை உரசிப்பார்க்கும் இடம் தனிமைதான். பொதுவில் பலபேர் முன்னிலையில் தன்னை யோக்கியராக காட்டிக்கொள்ளும் பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் அயோக்கியர்களாக இருப்பர். பொதுவில் பலபேர் முன்னிலையில் தன்னை அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவர்களாக காட்டுவது எளிது. அதுவல்ல தக்வா. உண்மையான தக்வா என்பது தனிமையில் இருக்கும்போது இறைவனைப்பற்றி, அவன் வல்லமைகளை பற்றி, அவன் கெட்டவர்களுக்காக சித்தப்படுத்தி வைத்திருக்கும் தண்டனைகள் பற்றி சிந்தித்து, அந்த சிந்தனையின்போது அவனையும் அறியாமல் கண்ணீர் சுரக்குமே அதுதான் உண்மையான தக்வா. இப்படிப்பட்ட தக்வா உடையவர்கள் அர்ஷின் நிழல் பெறுவர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அந்த மகத்தான சோதனை நாளில் நம்மீது கருணை பொழிந்து, கோழி தன் குஞ்சுகளை சிறகினுள் மறைத்து பாதுகாப்பது போன்று நமக்கு அர்ஷின் நிழல் எனும் பாதுகாப்பையும், நிரந்தர சொர்க்கத்தையும் வழங்குவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக