அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 20 மார்ச், 2009

தாய்சொல்லை தட்டமாட்டான் தவ்ஹீத்வாதி! எப்போது....?


மனிதர்களாகப்பிறந்த ஒவ்வொருவரும் பாவங்களை செய்யக்கூடியவர்கள்தான். செய்யக்கூடிய பாவங்களுக்கு மத்தியில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இருக்கும். சிலவிஷயங்கள் பாவம் என்று தெளிவாகவே தெரிந்து கொண்டு செய்யும் பாவங்களும் உண்டு. உதாரணமாக, மது-மாது-புகைப்பழக்கம் இதுபோன்ற பாவங்களை செய்பவர்களிடம் 'உங்களின் இந்த செயல் பாவமா? அல்லது நன்மை பயக்கக்கூடியதா? என்று கேள்வி எழுப்பினால், இது தவறுதான்! பாவம்தான்! ஆனாலும் விட முடியவில்லை என்று கூறுவதை காணலாம்.
இன்னும் சில பாவங்கள் பாவம் என்று சமூகம் அறியாமலேயே செய்யக்கூடியவைகளும் உண்டு. அவைகளில் ஒன்றுதான் பெண்ணிடம் திருமணத்தின்போது, வரதட்சனை என்றபெயரில் பணமாக, பொருளாக, சொத்துக்களாக பெண்வீட்டாரிடமிருந்து பெறுவது. இந்த செயல் பரவலாக படித்தவர் பாமரர், சாதி- மதம் கடந்து பெரும்பான்மை மக்களை ஆட்கொண்டுள்ளது. இப்படி திருமணத்தின்போது பெண்ணிடம் ஒரு ஆண்மகன் கையேந்துவது சரியா? என்ற வினாவை இவர்களை நோக்கி நாம் முன்வைத்தால், இவர்கள் சொல்லும் பதில் 'ஊரு ஒலகத்துல யாரும் செய்யாததையா நாங்க செஞ்சுப்புட்டோம்' என்று சாதாரணமாக சொல்வதை காணலாம். இவ்வாறு அவர்கள் சொல்வதற்கு காரணம் வரதட்சனை என்பது சகஜம் அது ஒரு பாவமான செயல் அல்ல. என்பது அவர்களின் எண்ணம். நாம் இந்த ஆக்கத்தில் வரதட்சனை பாவம் என்று அறியாத மக்களை பற்றி எழுதவரவில்லை. மாறாக, வரதட்சனை வாங்குவது பாவம், அப்பட்டமான இறைக்கட்டளை மீறல், என்றெல்லாம் திருமறையின் வசனத்தை 'வீராவேசமாக' முழங்கிவிட்டு தனது திருமணத்தின்போது, 'தாய்சொல்லை தட்ட முடியவில்லை' என்று வரதட்சனை வாங்கி 'பித்'அத்' திருமணம் செய்யும் தவ்ஹீத் வாதி[வியாதி]களைத்தான் இந்த கட்டுரையின் மைய கருத்தாக வைத்துள்ளோம்.
அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்;
وَآتُواْ النَّسَاء صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.4:4

இந்த வசனம் அனைத்து தவ்ஹீத்வாதிகளுக்கும் அத்துப்படி. ஆனாலும் திருமண நேரத்தில் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு வழக்கமான வரதட்சனை திருமணம் செய்வது ஏன்? இப்படி கேட்டால்நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்ணுனேன் நபிவழியில் மஹர் கொடுத்துதான் திருமணம் செய்யனும்னு. ஆனா எங்கம்மா' டேய்ய்! நான் சொல்றமாதிரி ஊரு ஒலகத்துல நடக்குறது மாதிரி நீ கல்யாணம் பண்ணலைன்னா நான் செத்துருவேன் என்று பிடிவாதமா சொன்னாங்க! அதுனால வேற வழியில்லாம 'நிர்பந்தத்துல' அப்படி பன்னவேண்டியதா போச்சு! என்று சொல்வதை பார்க்கிறோம்.

பெற்றோரை கண்ணியப்படுத்தவேண்டும், அவர்களுக்குரிய கடமையை செய்யவேண்டும் என்பதை வேறு எந்த மதமும் சொல்லமுடியாத அளவுக்கு இஸ்லாம் அளவுக்கு அதிகமாகவே சொல்லிக்காட்டுகிறது. அல்லாஹ் கூறுகின்றான்;
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!17:23

இந்த அளவுக்கு பெற்றோரை கண்ணியப்படுத்துமாறு நமக்கு கட்டளையிடும் வல்ல இறைவன், இறைவனது- இறைத்தூதரின் கட்டளைக்கு மாற்றமான ஒன்றை செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தினால், அப்போது நம் பெற்றோருக்கு கட்டுப்படாமல், நம்பெற்றோரையும் நம்மையும் இந்த உலகையும் மற்றும் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வுக்கே கட்டுப்படவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."31:15

மேற்கண்ட இந்த வசனம் மட்டும் தவ்ஹீத்வாதிகளுக்கு மறந்ததேன்! அப்ப தவ்ஹீத் என்றால், தர்காவுக்கு செல்லக்கூடாது, பாத்திஹா ஓதக்கூடாது, தொழுகையில் விரலசைக்கணும், பள்ளிவாசல் சுவர் கீறல்விழும் அளவுக்கு ஆமீன் என்று அலரனும். இவைதான் தவ்ஹீத் என்ற குறுகிய வட்டத்தில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் நபி[ஸல்] அவர்களால் உருவாக்கப்பட்ட சத்தியசகாபாக்கள், பெற்றோருக்கு பணிவிடை செய்வதிலும், எந்த குறையும் வைக்கமாட்டார்கள். அதே நேரத்தில் இறைக்கட்டளைக்கு மாற்றமான ஒன்றை பெற்றோர் செய்யத்தூன்டினால், பெற்றோரை புறக்கணிப்பார்கலேயன்றி, இறைக்கட்டளையை புறக்கனிக்கமாட்டார்கள். இதோ! ஸ'அத் இப்னு அபீவக்காஸ் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி;
நான்[ஸ'அத்] இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை என்னுடன் பேசமாட்டேன் என்றும், உன்னவும் பருகவும் மாட்டேன் என்றும் என்தாயார் சத்தியம் செய்துவிட்டார்.மேலும் என்தாய், உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். நான் உன்தாய். நான்தான் இவ்வாறு[ இஸ்லாத்தை விட்டுவிடுமாறு] கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் என்தாயார் மயக்கமுற்றுவிட்டார்கள். அப்போது அவரது உமாரா எனப்படும் மகன், என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார்.அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார். அப்போது அல்லாஹ்,
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
ஆகிய வசனங்களை அருளினான். என்று ஸ'அத் இப்னு அபீவக்காஸ்[ரலி] அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் 4789. ஹதீஸாக பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில், தன்னுடைய தாய் மூன்று நாட்கள் உணவருந்தாமல், பருகாமல் மயக்கமுற்றபோதும், ஸ'அத் [ரலி] அவர்கள், தன்னுடைய தாயின் கட்டளையைவிட இறைக்கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்த அந்த உறுதி இன்றைய தவ்ஹீத்வாதிகளிடம் காணாமல் போனதேன்..?

இறுதியாக உபதேசம் ஊருக்குத்தான்;பேசும் எங்களுக்கல்ல.என்று கருதுபவர்களே! இதோ! அல்லாஹ்வின்கூற்றை கவனியுங்கள்;


يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (61:2)كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَநீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:3)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை சொல்லிலும், செயலிலும் தவ்ஹீத்வாதிகளாக வாழ்ந்து மரனிக்கச்செய்வானாக!

ஞாயிறு, 15 மார்ச், 2009

இஸ்லாம் கூறும் அழகியகடன்!

உலகில் வாழும் அன்றாடங்காச்சி முதல் அரசாட்சி செய்யும் ஆட்சியாளர்கள் வரை ஒவ்வொருவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டே வருகின்றனர். இவர்களின் கொடுக்கல்- வாங்கல்கள், கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மத்தியில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக பிளவை ஏற்ப்படுத்துவதையும், பிரச்சினைகள் ஏற்பட்டு கோர்ட் படியேறுவதையும், சில வேளைகளில் கொலையில் போய் முடிவதையும் பார்க்கிறோம்.இதற்கு அடிப்படை காரணம் கொடுக்கல்-வாங்கலில், இவர்கள் இஸ்லாமிய வழிமுறையை கடைபிடிப்பதில்லை. இறைவனை வணங்கும் விஷயத்திலிருந்து மனிதனின் அன்றாட வாழ்க்கை வரை வழிகாட்டும் வல்ல இறைவனின் மார்க்கம் இதற்கும் ஒரு அற்புதமான வழியை காட்டுகிறது.

முதலில் யாருக்கு கடன் கொடுக்கவேண்டும்;
நம்மிடத்தில் ஒருவர் கடன் கேட்கிறார் என்றால் கேட்டவுடன் தூக்கிக்கொடுத்துவிடக்கூடாது. அவர் எந்த விஷயத்திற்காக கடன் கேட்கிறார் என்பதை அறிய வேண்டும். கடன் கேட்பவர்களில் மூன்று சாரார் உண்டு.
* கல்வி-மருத்துவம்-உணவு, உடை, இருப்பிடம்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள்.
*மது- சூதாட்டம் போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்.
*ஊர் மெச்சவேண்டும் என்பதற்க்காக ஆடம்பர திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பெயர் சூட்டுவிழா, கந்தூரிவிழா இதுபோன்ற இன்னும் பல பித்அத்தான காரியங்களை செய்வதற்காக கடனுதவி கேட்பவர்கள்.
இவர்களில் முதல் சாரார் மட்டுமே நாம் கடன் வழங்க தகுதியானவர்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்;
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.5:2.
கடன் கொடுப்பவர்கள் கடைபிடிக்கவேண்டியவை;
இன்று கொடுக்கல்-வாங்கலில் பெரும்பாலும் நம்மவர்கள் எழுதி வைத்துக்கொள்வதில்லை.மேலும், கடன் கொடுக்கும்போது சாட்சிகளும் வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இதுதான். அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلاَ يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لاَ يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُواْ شَهِيدَيْنِ من رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاء أَن تَضِلَّ إْحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الأُخْرَى وَلاَ يَأْبَ الشُّهَدَاء إِذَا مَا دُعُواْ وَلاَ تَسْأَمُوْاْ أَن تَكْتُبُوْهُ صَغِيرًا أَو كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِندَ اللّهِ وَأَقْومُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلاَّ تَرْتَابُواْ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلاَّ تَكْتُبُوهَا وَأَشْهِدُوْاْ إِذَا تَبَايَعْتُمْ وَلاَ يُضَآرَّ كَاتِبٌ وَلاَ شَهِيدٌ وَإِن تَفْعَلُواْ فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَيُعَلِّمُكُمُ اللّهُ وَاللّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.2:282.
* தேவைப்படின் அடமான பொருளை வாங்கிக்கொண்டு கடன் கொடுத்தல் சிறந்தது;
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُواْ كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ تَكْتُمُواْ الشَّهَادَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.2:283.

மேலும்,ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள்.நூல்;புஹாரி,எண் 2513

கடன் கொடுத்தவர் கஷ்டத்தில் இருந்தால், கடனை பாதியாக குறைப்பது; அவகாசம் அளிப்பது; தள்ளுபடி செய்வது.
*பாதியை குறைத்தல்;
கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃப் இப்னு மாலிக்! கஃபே' என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே! என்றேன். 'பாதியைத் தள்ளுபடி செய்வீராக! என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி 'எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!" என்று நபி(ஸல்) கூறினார்கள். நூல்;புஹாரி,எண் 471

*அவகாசம் அளித்தல்[அல்லது]தள்ளுபடி செய்தல்;
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُواْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.2:280.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி,எண் 2391

கடனை அதிகாரமாக கேட்பதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு;
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு" என்று கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி,எண் 2401
கடன் வாங்கியவர்களின் கடமைகள்;
நம்மில் பெரும்பாலோர் கடன் வாங்கும்போது அதை திரும்பச்செலுத்தும் எண்ணத்துடன் வாங்குவதில்லை. 'அல்வா' கொடுக்கும்நோக்கத்தோடு கடன் வாங்குபவர்களும் உண்டு. ஆனால் ஒரு உண்மையான முஸ்லீம் கடனை திரும்பச்செலுத்தும் நோக்கத்துடனே கடன் வாங்கவேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.நூல்;புஹாரி,எண் 2387

வாங்கிய கடனை விரைவாக திருப்பி செலுத்துதல்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். நூல்;புஹாரி,எண் 2400

கடனாளிக்கு தொழுகை நடத்த மறுத்த நபி[ஸல்] அவர்கள்.
தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை!" என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்!" என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!" என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!" என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்;புஹாரி,எண் 2295
கடனிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு தேடல்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். நூல்; புஹாரி,எண் 2397

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை கடன் வாங்குவதிலிருந்து பாதுகாத்து, இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ அருள்புரிவானாக!

வியாழன், 12 மார்ச், 2009

உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்!

இன்று முஸ்லிம்களில் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளுடன் வாழ்பவர்களை அதிகமானோரை பார்க்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கும் முஸ்லிம்களையும் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் போய், 'நீங்கள் உங்கள் உறவினரோடு சேர்ந்து வாழக்கூடாதா?' என்று நாம் சொன்னால், அட! போங்க!! அவன் வீட்லயா எனக்கு சாப்பாடு! என்று சாதாரணமாக உறவுகளை உதாசீனப்படுத்துவதை பார்க்கிறோம்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார்.நூல்;புஹாரி,எண் 6237

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இவ்வாறு கூறியிருக்ககல்யாண வீட்டில் எனக்கு பந்தியில் எலும்பைத்தான் போட்டான்' என்ற உப்பு சப்பில்லாத விஷயத்திற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல், உறவினர்களை உதாசீனம் செய்பவர்கள் சிந்திக்கவேண்டும்.
உறவை சேர்த்து வாழ்வது என்றால் என்ன?
நம்மோடு யார் கொஞ்சி குலாவுகிரார்களோ அவர்களோடு உறவாக இருப்பதா? இல்லை.
இதோ! நபி[ஸல்] கூறும் உறவின் இலக்கணம் பாரீர்;
உக்பா இப்னு ஆமிர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் வந்து, யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது எனவினவ, அதற்கு நபி[ஸல்]அவர்கள் இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார் என்று நபியவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லீம் 4640.

மேலும், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் போதுமென்று சொல்லாத விஷயங்கள் இரண்டுதான். 1. செல்வம் 2 .ஆயுள். கோடிக்கணக்கில் செல்வத்தை சேர்த்து வைத்துள்ளவனிடம், இன்னொரு கோடியை காட்டிஇது வேணுமா? என்றால் ஆமா! வேணும் என்றுதான் சொல்வான். அதுபோல நூறுவயசு குடுகுடு கிழவனிடம் அவன் உயிர் பிரியும் நேரத்தில் உனக்கு இறுதி ஆசை என்ன? என்றால் இன்னொரு பத்து வருஷம் வாழ்ந்தால் நல்லாருக்குமே என்பான்!
நாம் விரும்பும் செல்வமும்-ஆயுளும் அதிகமாக வேண்டுமெனில் இதோ நபியவர்களின் பொன்மொழி பாரீர்!

தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணிவாழட்டும்.நூல்;புஹாரி,எண் 5985

நம்முடைய உறவுக்கு உதவுவதால் நமக்கு கிடைக்கும் இரட்டிப்பு பரிசுகளை பாரீர்;
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார். பள்ளிவாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'எந்த ஸைனப்?' எனக் கேட்டதும் பிலால்(ரலி), 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) 'ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்திற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" எனக் கூறினார்கள். நூல்;புஹாரி,எண் 1466

உறவை சேர்த்து வாழ்ந்தால்த்தான் நம்முடைய இலக்கான சொர்க்கத்தை அடைய முடியும்;
ஒரு மனிதர் நபி[ஸல்]அவர்களிடம் வந்து, 'சொர்க்கத்தில் என்னை சேர்ப்பிக்கக்கூடிய நற்செயலை எனக்கு அறிவித்து தாருங்கள் என வினவ, அதற்கு நபியவர்கள்,*அல்லாஹ்வை வனங்கு.*அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கதே!*தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தை வழங்கு.*உறவினரை சேர்த்து வாழ்வீராக!என்று கூறினார்கள்.
இம்மையிலேயே தண்டனைதர தகுதியான பாவம்!
இந்த உலகில் பல்வேறு பாவங்களை செய்கிறோம். நாம் செய்யும் பாவங்களுக்காக அல்லாஹ், உடனுக்குடன் தன்டிக்கநினைத்தால் நாம் யாருமே தப்பமுடியாது. நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனையை மறுமைவரை தள்ளிவைத்துள்ளான். இருப்பினும்,
நபியவர்கள் கூறினார்கள்;
மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு முன் இம்மையிலும் துரிதமாக தண்டனை அளிப்பதற்கு ஏற்ற பாவங்கள்; அநியாயமும், உறவை முறிப்பதும்தான்.
நூல்;அபூதாவூத்

சொர்க்கத்தின் திறவுகோல் உறவு;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
நூல்;புஹாரி,எண் 5984

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொர்க்கமே இலக்கு! அந்த சொர்க்கத்தை அடைய பழுதடைந்திருக்கும் நமது 'உறவு' பாலத்தை இன்றே புதுப்பிப்போம்! இறையருள் பெறுவோம்!!

புதன், 11 மார்ச், 2009

அமைப்புக்கொரு பள்ளிவாசல் எழுப்புவது சரியா?-சம்சுதீன்காசிமியின் பதில்!

'பெருகி வரும் தனிப்பள்ளிகளும், அருகிவரும் ஒற்றுமையும்' என்ற தலைப்பில் இரு பாகங்கள் அடங்கிய கட்டுரை நமது தளத்தில் வெளியிடப்பட்டது. தனிப்பள்ளி எழுப்புவது மார்க்க அடிப்படையில் சரியா? என்ற கேள்வியை மவ்லவி சம்சுதீன் காசிமி அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்களின் பதில் அவர்களது வலைதளத்தில்[மக்கா மஸ்ஜித்.காம்] வெளியிட்டுள்ளார்கள். மத்ஹப்சம்மந்தமான அவர்களின் பதிலில் நமக்கு உடன்பாடில்லை. அதே நேரத்தில் 'தனிப்பள்ளிவாசல்' விசயத்தில் அவர்களின் கருத்து எமக்கு சரியெனப்படுகிறது. இதோ உங்களின் பார்வைக்கும்;
http://makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=166:qanda-online&catid=75:others&directory=105

செவ்வாய், 10 மார்ச், 2009

உலக மனிதனே இஸ்லாத்தின் சாரம்! தினமணியின் அற்புதமான கட்டுரை!


குறிப்பு; செய்தியின்மீது க்ளிக் செய்து படிக்கவும்.
மீலாது மேடைகளிலும், வாழ்த்துச்செய்தியிலும் தங்களுடைய அறியாமையின் காரணமாக, இஸ்லாத்திற்கு மாற்றமாக கருத்துச்சொல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இஸ்லாம் சம்மந்தமாக மிக அற்புதமான கட்டுரையை திரு. பழ.கருப்பையா அவர்கள் வடித்துள்ளார்கள். அதை தினமணி இதழிலிருந்து எடுத்து நன்றியுடன் வெளியிட்டுள்ளோம். கட்டுரையாசிரியர் அவர்களுக்கும், தினமணி குழுமத்திற்கும் அல்லாஹ், நேர்வழிகாட்ட துஆ செய்வோம்.

வெள்ளி, 6 மார்ச், 2009

கொள்கைப்பிரிவும்- கோஷ்டிப்பிரிவும் ஒன்றா?

சமீபத்தில் ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அதில் கேள்விநேரத்தின் போது ஒருவர், 'ஆக்,ஜாக், த.மு.மு.க, அனைத்து தவ்ஹீத் ஜமாஅத், த.த.ஜ., இ.த.ஜ. இப்படி பல்வேறு பிரிவுகளாக பிரிவது சரியா? என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்தவர் 'இந்த பிரிவுகள் என்ன? இன்னும் ஒரு லட்சம் பிரிவுகள் ஏற்ப்பட்டாலும் கவலைப்படக்கூடாது. ஏனெனில், நாம் கொள்கைக்காகவே பிரிந்தோம் என்று கூறிவிட்டு, நபி[ஸல்]அவர்களும் பிளவை ஏற்ப்படுத்தினார்கள்[நவூதுபில்லாஹ்]. நபி[ஸல்]அவர்கள் கொள்கையை சொன்ன காரணத்தால் குடும்பத்திற்குள் கூட பிளவை ஏற்ப்படுத்தினார்கள். தந்தைக்கும் மகனுக்கும் மத்தியில் பிளவு ஏற்ப்பட்டது உதாரணம்; அபூபக்கர்[ரலி], அப்துர்ரஹ்மான்[ரலி] எனவே, கொள்கையை சொன்னால் ஏற்படும் பிளவு தவறில்லை என்று பதிலளித்தார்.

தவ்ஹீத் கொள்கையைச்சொன்னால் பிளவு ஏற்ப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இயக்கப்பிரிவுக்கு இது ஆதாரமாகுமா? என்பதுதான் நமது கேள்வி. ரசூல்[ஸல்] அவர்கள், அறியாமைக்கால மக்களிடம் சத்திய மார்க்கத்தை எடுத்தியம்பியபோது அங்கே பிரிவு ஏற்ப்பட்டது. எப்படிப்பட்ட பிரிவு? ஒரு பிரிவு முஸ்லிம்கள். இன்னொரு பிரிவு காஃபிர்கள்/ இணைவைப்பாளர்கள். இதைத்தாண்டி வேறு பிரிவு ஏற்ப்படவில்லை. இன்று என்ன நடக்கிறது? முஸ்லிம்களுக்குள் முதலில் பிரிவு வந்து தவ்ஹீத்வாதிகள் உதயம். இந்தப்பிரிவு வரவேற்கத்தக்கதே! அடுத்து தவ்ஹீத்வாதிகளுக்குள் ஆறு பிரிவு வந்தது ஏன்? இந்தப்பிரிவு கொள்கைக்காக வந்தது என்று வெளியிலே சொல்லிக்கொண்டாலும், உண்மை அதுவல்ல. நிர்வாகம்/ மற்றும் உலக ரீதியான மோதல்கள்தான் என்பதுதான் உண்மை.

பிரிந்த இவர்கள் தங்களின் பிரிவுக்கு காபிர்களிடமிருந்து ஒரு கூட்டத்தை முஸ்லிம்களாக மாற்றிய நபியவர்களின் செயலை ஆதாரமாக காட்டுவதுதான் வேடிக்கை. நபி[ஸல்] அவர்களின் காலத்திலும், சத்திய சகாபாக்கள் காலத்திலும் இதுபோன்று இயக்கரீதியாக பிரிந்ததற்கான சான்று உண்டா? மிஞ்சிப்போனால் அலி[ரலி]-ஆயிஷா[ரலி]; அலி[ரலி]-முஆவியா[ரலி] ஆகியோருக்கு மத்தியில் நடந்த போரை ஆதாரமாக காட்டுவார்கள். இந்த போர்கள் மார்க்கத்தில் அலி[ரலி] அவர்கள் 'தடம்புரண்டுவிட்டார்கள்' என்று ஆயிஷா[ ரலி] போர் தொடுத்தார்களா? மார்க்கத்தில் முஆவியா[ரலி] அவர்கள் 'தடம் புரண்டுவிட்டார்கள்' என்று அலி[ரலி] போர் தொடுத்தார்களா? இல்லையே! ஆளுக்கொரு ஜமாத்தை உருவாக்கிக்கொண்டு ஒருவரையொருவர் வசைமாரி பொழிந்துகொண்டார்களா? இல்லையே! போரில் ஆயிஷா[ரலி] தோல்வியை தழுவியதும் அவர்களை அலி[ரலி]அவர்கள் கண்ணியமாக, பாதுகாப்பாக அனுப்பவில்லையா? அலி[ரலி]அவர்களுக்கு எதிராக போர்தொடுத்தது தவறு என்று பின்னாளில் ஆயிஷா[ரலி] வருந்தவில்லையா?

எனவே, நாம் சொல்லவருவது ரசூல்[ஸல்] அவர்கள் காபிர்களிடமிருந்து முஸ்லிம்கள் என்ற பிரிவை தோற்றுவித்தார்களேயன்றி, முஸ்லிம்களுக்குள் இயக்கப்பிரிவை ஒருபோதும் உருவாக்கவில்லை. எனவே, இயக்கப்பிரிவுக்கு இது ஆதாரமாகாது.

அல்லா கூறுகின்றான்;
إِنَّ الَّذِينَ فَرَّقُواْ دِينَهُمْ وَكَانُواْ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَفْعَلُونَ
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)
شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاء وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13)

செவ்வாய், 3 மார்ச், 2009

மறுமையின் வெற்றி பொறுமையில்!

மனிதனின் இம்மை மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பொறுமைதான். அன்றாடம் நம்வாழ்வில் நிகழ்த்தும் காரியங்கலானாலும், நாம் எதிர்நோக்கும் பிரச்சினையானாலும், நம்மை படைத்த இறைவனை வணங்கும் விசயமானாலும் அனைத்திலும் பொறுமை இருந்தால்தான் வெற்றிபெறமுடியும். அவசரப்பட்டு செய்யும் எந்த காரியமானாலும் அதில் முழுமையிருக்காது. ஏதேனும் ஒரு செயலை நாம் செய்து அதனால் நாம் பாதிப்பை உணரும்போது, 'ஒருநிமிஷம் நான் பொறுமையா இருந்திருக்கக்கூடாதா?' என்று புலம்புவதையும் நம் வாழ்வில் சந்தித்தே வருகிறோம். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்;

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.2:153 .
தொழுகையில் பொறுமை;
.......................................................
இன்று அவசரயுகத்தில் அல்லாஹ்வை வணங்குவதும் ஜெட் வேகத்தில்தான். குறிப்பாக ரமலான் மாதத்தில் இரவுத்தொழுகையில் இருபது ரக்'அத் தொழுகிறோம் என்ற பெயரில், பொறுமையின்றி மின்னல்வேக தொழுகை தொழுவதை பார்க்கிறோம்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.நூல்;புஹாரி,எண் 994 ,

ஸஜ்தாவிற்கு மட்டும் ஐம்பத்து வசனங்கள் ஓதும் நேரம் சுமார் பத்து நிமிடங்கள் என்றால், இன்று இருபது ரக்'அத்துகளை இருபத்து நிமிடத்தில் தொழுபவர்கள் சிந்திக்கவேண்டும்.
பிரார்த்தனையில் பொறுமை;
.............................................................
நம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்போது, அந்த தேவையை அல்லாஹ் தாமதமாக நிறைவேற்ற நாடினால், நம்மில்சிலர் அல்லாஹ்வின் மீது நிராசையடைவதை பார்க்கிறோம். நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.
நூல்;புஹாரி,எண் 6340

போரில் தேவை பொறுமை;
...........................................................
அல்லாஹ் கூறுகின்றான்;
நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்). 8:65.

நோயின் போது தேவை பொறுமை;
.............................................................................
நமக்கு நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்வதோடு, நோயை நீக்குமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும். ஆனால் இன்று மருத்துவம் பார்க்கிறோம் அதில் தீரவில்லையானால் மந்திரவாதிகளை நாடி ஓடுகிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கும் நோயின் மூலம் நன்மையையும் சுவனத்தையும் அளிக்கிறான்.
அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்;புஹாரி,எண் 5652
துன்பத்திலும் தேவை பொறுமை;
.........................................................................
கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள்.நூல்; புஹாரி,எண் 6943
பிரியமானவரை இழக்கும் நிலையிலும் பொறுமை;
...........................................................................................................
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.நூல்;புஹாரி,எண் 6424
வறுமையிலும் பொறுமை;
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை' என்று கூறினார்கள். நூல்;புஹாரி, எண் 6470

பொறுமை பற்றி ஏராளமான செய்திகள் உண்டு. படிப்பவர்களின் 'பொறுமையை' சோதிக்கக்கூடாது எனபதற்காக சுருக்கமாக தந்துள்ளோம். அல்லாஹ் நம்மை பொருமையாளர்களாக வாழ்ந்து மரணிக்கச்செய்து, பொறுமையாலர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தில் சேர்த்தருள்வானாக!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

இமயத்தின் உச்சத்தில் இசைப்புயல்; ஒரு இஸ்லாமியப்பார்வை!


சகோதரர் ஏஆர். ரஹ்மான் அவர்கள் உலகின் மிகச்சிறந்த விருது எனக்கருதப்படும் ஆஸ்கார் விருதை வென்றதையடுத்து, நாட்டின் பெரும்தலைவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை வாழ்த்துமழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். சில இஸ்லாமிய சகோதரர்கள் கூட இச்செய்திக்கு முன்னிலை கொடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரஹ்மான் விருதுபெற்றதையடுத்து நாகூர் தர்காவில் சிலர் சிறப்பு பிரார்த்தனை நடத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றது.

சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் பிறமதத்தில் பிறந்திருந்தாலும் அவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர். அந்தவகையில் பரம்பரை முஸ்லிம்களை விட அவர் சிறந்தவர். அந்தவகையில் அவர்மீது நமக்கு உயர்வான மதிப்பு எப்போதும் உண்டு. அதே நேரத்தில் அவர் சார்ந்துள்ள இசைத்துறை இஸ்லாம் தடுத்த ஒருதுறையாகும். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒருதுறையில் ஒருமுஸ்லீம் வெற்றிபெற்றால் அதை ஏனைய முஸ்லிம்கள் ஊக்குவிப்பதோ, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோ கூடாது.

இசை பற்றி இஸ்லாம் ;

அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)


நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
நூல்;புஹாரி,எண் 5590

இறைத்தூதர்[ஸல்] அவர்களால் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை இன்று முஸ்லிம்களில் சிலர் செய்வதையும், சிலர் அந்த இசையில் மயங்குவதையும், சிலர் ஆதரிப்பதையும் பார்க்கிறோம். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் ஒரு பிரபல மவுலவி இசைக்கு வித்தியாசமான விளக்கம் கொடுக்கிறார். அதாவது ஒரு கருவியின் மூலம் இசைப்பது ஹராம் இல்லையாம், பல கருவிகள் கொண்டு இசைப்பதுதான் ஹராமாம். என்ன விந்தை பாருங்கள்; ஒரே ஒரு கீபோர்டை கொண்டு எத்துனையோ வகையான இசையை வெளிப்படுத்தலாமே! அப்படியானால் அது ஹலாலாகிவிடுமா? இப்படிப்பட்டவர்களைத்தான் மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சொல்லியிருப்பார்களோ?

எனவே சகோதர்களே/சகோதரிகளே! இசை மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகளை சமர்பிக்கமுடியும். படிப்பவர்களின் நேரம்கருதி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப ஒரே ஒரு ஆதாரம் மட்டும் சமர்பித்துள்ளோம். ஷைத்தானின் மாயவலையான இசையிலிருந்து நம் சமுதாயத்தை அல்லாஹ் காப்பானாக!

சனி, 14 பிப்ரவரி, 2009

பெருகிவரும் தனிப்பள்ளிகளும் அருகிவரும் ஒற்றுமையும்[பாகம் 2]

தமிழகத்தில் அமைப்புக்கொரு பள்ளிவாசல் எழுப்பப்படுவதை பற்றிய தொடரின் இறுதிப்பகுதி; தனிப்பள்ளியை சரிகான்பவர்கள், பித்'அத் அரங்கேறும் பள்ளிவாசலில் எங்களை தொழ சொல்கிறீர்களா ? என்ற கேள்வியை வைக்கிறார்கள். பித்'அத் அரங்கேறுவதால் ஒரு பள்ளி தொழுவதற்கு தகுதியற்றதாக ஆகிவிட்டது. எனவே, தனிப்பள்ளியே தீர்வு எனில், புனித மக்காவிலும்- புனித மதீனாவிலும் உள்ள காபா மற்றும் மஸ்ஜிதுன்நபவியில், ஜும்மாவிற்கு இருபாங்குகள், தராவீக் இருபத்து ரக்'அத்துகள் போன்ற பித்'அத்கள் அரங்கேறுகிறது. அப்படியாயின் அந்த இரு புனிதபள்ளிகளும் தொழுவதற்கான தகுதியை இழந்துவிட்டது என கூறவருவார்களா? [அஸ்தஃபிருல்லாஹ்] இரு புனித பள்ளிகளும் தகுதியிழந்து விட்டதால், இந்த 'தனிப்பள்ளிவாதிகள்' அங்கேயும் தனிப்பள்ளி எழுப்புவார்களா? 'தனிப்பள்ளிவாதிகள்' ஹஜ்- அல்லது உம்ரா சென்றால் இந்த பித்'அத்அரங்கேறும் பள்ளியில் தொழுவார்களா? அல்லது வேறு எங்காவது தொழுவார்களா? என்ற கேள்விக்கு பதிளில்லை.

அடுத்து, சு.ஜ. பள்ளிகளில்தான் நபிவழிப்படி தொழுவதை தடுக்கிறார்கள் என்றுவாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஒரு ஊரில் நபிவழிப்படி தொழ அனுமதிக்கும் பள்ளியிருக்கும்போது, அமைப்புக்கொரு பள்ளி ஏன்? என்ற கேள்விக்கும் பதிளில்லை. சரி! சு.ஜ. பள்ளிகளில் தவ்கீத்வாதிகளை தடுப்பது ஏன் என்பதை பார்ப்போம்.

முதலாவது தவ்ஹீதுவாதிகள் உள்ளத்தில், நாம் தொழும் முறைதான் நபிவழிமுறையில் உள்ளது. மற்றவர்கள் தொழுவதெல்லாம் அவர்களாக உருவாக்கிக்கொண்டு தொழும்முறை. என்று ஒரு அழுத்தமான எண்ணம் பதியவைக்கப்பட்டுள்ளது. தவ்ஹீத்வாதிகளுக்கும் சு.ஜ. வாதிகளுக்கும் தொழுகையில் பிரதானமான பிரச்சினை வருவது பெரும்பாலும் மூன்று விசயங்களில்தான். 1. தொப்பி 2. ஆமீன் சொல்லுதல் 3.விரலசைத்தல். இந்த மூன்று விசயங்களில் மத்ஹப்வாதிகள் தவறான வழியில் இருக்கிறார்களா? அல்லது அவர்களது செயலுக்கும் ஆதாரம் உள்ளதா என்பதை பார்ப்போம்.
தொப்பி;
தொப்பி போடுவதை கண்டிப்புடன் வலியுறுத்துவதற்கு எப்படி வலுவான ஆதாரமில்லையோ அதுபோல தொப்பி போடக்கூடாது என்று தடையேதுமில்லை என்பதை தவ்ஹீத்அறிஞர்கள் ஒப்புக்கொண்ட விசயம்தான். அதே நேரத்தில் தொப்பி அணிவதற்கு நெருக்கமான ஆதாரங்கள் இருப்பதை காணலாம்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இஹ்ராம் அணிந்தவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது! செருப்பு கிடைக்காதவர்கள் காலுறைகளை அணியலாம். ஆயினும் கரண்டைக்குக் கீழே இருக்கும்படி (மேலிருந்து கரண்டைக்குக் கீழ் வரை) அவற்றை வெட்டி விட வேண்டும்!" என்று விடையளித்தார்கள். நூல்;புஹாரி,எண் 1842

இந்த செய்தயில் இஹ்ராம் அணியும்போது தவிர்க்கவேண்டிய ஆடைகள் பட்டியலில் நபி[ஸல்] அவர்கள், தொப்பியையும் குறிப்பிடுவதால் தொப்பி அணிந்துவரும் நடைமுரையிருந்திருக்கிறதுஎனவேதான் இஹ்ராமின்போது அதை நபியவர்கள் தடுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கமுடியும்.
அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்;
உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமா(ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர்(ரலி) (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்கு முன்) இரண்டு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), 'சீராக நில்லுங்கள்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே சீர் குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் 'யூசுஃப்' அத்தியாயம் அல்லது 'நஹ்ல்' அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகை;காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போது நான் தக்பீர் கூறியிருப்பாக்hள். 'என்னை நாய் கொன்றுவிட்டது... அல்லது தின்றுவிட்டது..." என்று கூறினார்கள். (அப்போது 'அபூ லுஸலுஆ ஃபைரோஸ்' என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்). உடனே, அந்த 'இல்ஜ்' (அரபில்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தன்னுடைய பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தன்னுடைய வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதின்மூன்று ஆண்களை அவன் குத்தி வட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தம் நீண்ட தொப்பியை (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். [ஹதீஸ் சுருக்கம்]
நூல்;புஹாரி;எண் 3700

இந்த செய்தியில் தொழுகையில் உமர்[ரலி] அவர்களுக்கு பின்னால் தொழுகையில் அணிவகுத்திருந்த ஒருவர் தனது தொப்பியை கழற்றி வீசிஎறிந்தார் என்பதை பார்க்கும்போது தொழுகையில் தொப்பியணிவது நடைமுறையில் இருந்துள்ளதை காணலாம். தொப்பியின் வகை மாறுபட்டாலும் தொப்பி இருந்துள்ளது என்பதற்காக இதை குறிப்பிடுகிறோம். மேலும், இதை ஆதாரமாக கொள்ளமாட்டோம் என்று தவ்ஹீத்வாதிகள் மறுத்தால்கூட, பிரச்சினை விசயத்தில் எதுஎதற்கோ சமரசம் காணும்போது, ஒற்றுமை நாடி தொப்பியணிந்தால் என்ன பாதிப்பு வந்துவிடும்?
ஆமீன்;
நபி[ஸல்] அவர்கள் ஆமீன் சொல்லச்சொன்னார்கள் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் நபி[ஸல்]அவர்கள் பள்ளிவாசல் அதிரும் அளவுக்கு ஆமீன் சொல்லவில்லை. முதல்வரிசைக்கு கேட்குமளவுக்குதான் சொல்லியுள்ளார்கள். அவர்களை பின்தொடர்ந்து சகாபாக்கள் தொழும்போது பள்ளிவாசல் அதிரும் அளவுக்கு ஆமீன் சொல்லியதாக ஆதாரமுண்டா? நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் சகாபாக்கள் தங்களுக்கு மத்தியில் தொழும்போது பள்ளிவாசல் அதிரும் அளவுக்கு ஆமீன் சொன்னதாக ஹதீஸ் உள்ளது. நபிவழியை பின்பற்றுவதாக இருந்தால் மிதமாக முன்வரிசை கேட்குமளவுக்கு ஆமீன் சொல்வதுதானே முறை. சகாபாக்களை பின்பற்றமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு சகாபாக்கள் வழிமுறையில் ஆமீன் என அலறுவது ஏன்? அதே நேரத்தில் ஆமீன் சொல்வதை பள்ளிவாசல் நிர்வாகிகள் தடுப்பது அப்பட்டமான வரம்புமீரலாகும்.
விரலசைத்தல்;
விரலசைக்காமல் இருப்பதற்கும் ஹதீஸ் உள்ளதை பாருங்கள்;
ஆசிம் இப்னு குலைபில் அல்ஜர்மி அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி[ஸல்]அவர்கள் தொழுது கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அப்போதுஅவர்கள் தமது இடதுகையை இடதுதொடையின்மீதும், வலதுகையை வலதுதொடைமீதும் வைத்திருந்தார்கள்.மேலும் தமது வலதுகை விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலை நீட்டிவைத்துகொண்டு 'இதயங்களை புரட்டுபவனே என்னுடய இதயத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக' என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
நூல்;திர்மிதி, 3511


இந்த ஹதீஸை சு.ஜ. பள்ளியில் அமுல்படுத்தினால் ஏன் பிரச்சினை வருகிறது? இரு ஹதீஸ்கள் இருக்கும்போது ஒரு ஹதீசைமட்டும்தான் அமுல்படுத்துவோம் என்று பிடிவாதம் பிடிப்பது ஏன்? எனவே, தொழுகை விசயத்தில் சு.ஜ.வினர் சில மஸாயில்களில் அறியாமையிளிருந்தால் பக்குவமாக எடுத்துச்சொல்லி நாளடைவில்தான் சரிசெய்யமுடியுமேயன்றி, எடுத்தேன்-கவிழ்த்தேன் என்று தனிப்பள்ளி காண்பது சரியல்ல.


புதன், 11 பிப்ரவரி, 2009

பெருகிவரும் தனிப்பள்ளிகளும்- அருகிவரும் ஒற்றுமையும்! [பாகம் 1]


தமிழகத்தில் ஒருகாலத்தில் ஒரு ஊருக்குசென்றால் அங்கே பெரும்பாலும் ஹனபி மத்ஹபை அடிப்படையாக கொண்ட பள்ளி ஒன்று இருக்கும். அவ்வூரில் ஷாபிமத்ஹப்பினர் கணிசமாக இருந்தால் அவர்கள் ஒரு பள்ளியை எழுப்பியிருப்பார்கள். ஷாபியாக்கள் விரல்விட்டு என்னுமளவுக்குதான் அவ்வூரில் இருந்தால் அவர்கள் வித்ரு தொழுகை நீங்கலாக ஏனைய தொழுகைகளை ஹனபிஜமாத்துடன் தொழுது கொள்வார்கள். அத்திப்பூத்தார்போல் சிலபகுதிகளில் அஹ்லே ஹதீஸ் பள்ளிகளும் இருந்தன.

இன்றைய நிலைஎன்ன? ஹனபி பள்ளி, ஷாபி பள்ளி- அஹ்லே ஹதீஸ்பள்ளி- ஜாக்பள்ளி- த.த.ஜ. பள்ளி, த.மு.மு.க. பள்ளி, இ.த.ஜ. பள்ளி இப்படி ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒருபள்ளிஎன்ற அளவுக்கு பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஆளுக்கொரு பள்ளிவாசல் கட்டிக்கொள்வது பற்றி மார்க்கஅடிப்படையில் கேள்வி எழுப்பினால்,

* ஹனபி-ஷாபி பள்ளிகளில் தவ்ஹீத்வாதிகளை நபிவழிப்படி தொழ அனுமதிப்பதில்லை.

*இப்பள்ளிவாசலில் மவ்லித்போன்ற பித்அத்கள் அரங்கேறுகிறது.என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தனிப்பள்ளி காண்பவர்களால் முன்வைக்கப்படுகிறது.

நபி[ஸல்]அவர்கள் மக்காவில் இருந்தபோது காபாவின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம். நபியவர்கள் மக்காவெற்றியின்போது முன்னூற்றி அறுபது சிலைகளை அப்புறப்படுத்தியதையும் நாமறிவோம். முழுக்க,முழுக்க சிலைகளால் நிரம்பியிருந்த மார்க்கம் காட்ட்டிதராத சீட்டியடித்தல், நிர்வாணமாக தவாப் செய்தல், போன்ற செயல்களை குறைஷிகள் அப்புனித வீட்டில் செய்துவந்த நிலையில், நபி[ஸல்]அவர்கள் மக்காவில் இருந்தவரைக்கும் காபாவில்தானே தொழுதார்கள். தனிப்பள்ளி எழுப்பவில்லையே? இன்றைக்குள்ள மத்ஹப்பள்ளிகளில் எந்த பள்ளியில் சிலையிருக்கிறது? எந்த பள்ளியில் சீட்டியடிக்கப்படுகிறது? எந்தபள்ளியில் அவலட்சணமான ஆடை அணிந்து தொழுகை நடைபெறுகிறது? ஆக தனிப்பள்ளி கட்டுவதற்கு பித்அத்கள் அரங்கேறுகிறது என்ற காரணம் ஏற்புடையதன்று.

ஒருவாதத்திற்காக, நபிவழிப்படி தொழுவதற்காக தனிப்பள்ளி எழுப்புதல் என்பதை சரிகன்டால் கூட, அஹ்லேஹதீஸ் பள்ளிவாசலோடு நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்.

*நபிவழியில் தொழஅனுமதிக்கும் அஹ்லே ஹதீஸ் பள்ளியிருக்கும் ஊரில் ஜாக் பள்ளி எதற்கு?

*நபிவழியில் தொழ அனுமதிக்கும் ஜாக்பள்ளி இருக்கும் ஊரில் த.மு.மு.க.பள்ளி எதற்கு?

*நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.மு.மு.க.பள்ளி இருக்கும் ஊரில் த.த.ஜ.பள்ளி எதற்கு?

*நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.த.ஜ.பள்ளி இருக்கும் ஊரில் இ.த.ஜ. பள்ளி எதற்கு?

இப்படி அமைப்புக்கொரு பள்ளி கட்டியதிலிருந்தே, நபிவழி தொழுவது மட்டும் நோக்கமல்ல. என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேலும், சில அமைப்புகள் தங்கள் கிளை/மாவட்ட/மாநில அலுவலகங்களில் தொழுகை நடத்துவதையும் பார்க்கிறோம். பள்ளிவாசலுக்கு செல்லாமல் இப்படி அலுவலகத்திலே தொழுகை நடத்துவது சரியா என்றால்? அதற்கு ஒரு ஆதாரம் காட்டப்படும். 'மஸ்ஜிதுன் நபவிதான் நபியவர்களின் தொழும் பள்ளியாகவும், அரசியல்,போர் உள்ளிட்ட அத்துணை விசயங்களையும் அலசும் இடமாகவும் இருந்தது' என்பார்கள். ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து/மறைத்து விடுவார்கள். அதாவது நபியவர்கள் தொழும் பள்ளிவாசலை ஏனைய பணிகளுக்கு பயன்படுத்தியது வேறு. பள்ளிவாசலுக்கு தொழ செல்லாமல் அலுவலகத்தையே பள்ளிவாசலாக நினைத்து தொழுவது என்பது வேறு.

எனவே, ஒரு ஊரில் ஒருபள்ளிவாசல் இருக்கும்நிலையில், அப்பள்ளி தொழவரும் மக்களுக்கு போதுமானதாக இல்லையெனில் அதை விரிவுபடுத்தலாம். அல்லது கூடுதல் பள்ளிகளை எழுப்பிக்கொள்ளலாம். பள்ளியிலிருந்து வெகுதொலைவில் உள்ளமக்கள் வக்துக்கு வரமுடியாத நிலையிருந்தால் விரும்பினால்,கூடுதல் பள்ளிகளை எழுப்பலாம்.[அழகான முறையில் ஒழுசெய்து தொழுகைக்காக பள்ளியை நோக்கி நடந்துவந்தால் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்ற நபிமொழியும் உண்டு] வேறு எதற்காகவும் பள்ளிவாசலை கட்டிக்கொண்டு பிரிவதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை.

தொடரும்...

புதன், 4 பிப்ரவரி, 2009

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்!

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கானபாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில்எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக விடிவதற்கு இன்னும் நேரம்இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு என்றான்.தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே என்றேன். அதற்கு ஷைத்தான் நான்அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப்போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாகதொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம்இலேசானது. அதை கடினமாக்கி விடாதே! என்றான்.

அவன் பேச்சில் மயங்கி உறங்கிவிட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுதுஷைத்தான் எதிரில் வந்து வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள்இருக்கிறது என்றான்.நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் உன் இளமைப் பருவம் முடியுமுன்அதை முழுமையாக அனுபவி என்றான். நான் மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்என்றேன். அதற்கவன் பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாதுஎன்றான்.

நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில்உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான். நான்அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய் என்றேன். இல்லை, இல்லை. நீ இரவுபடுக்குமுன் துஆ செய்யலாமே என்றான்.நான் உம்ரா செல்ல நாடியுள்ளேன என்றேன்.நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளுதானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய என்றான்.நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் நீ ஏன் பாடல், கவிதைகளை பாடிஉன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்? என்றான். நான் பாடல் பாடி கூப்பாடுபோடுவது ஹராம் என்றேன். உடனே அவன் மார்க்க மேதைகளிடையே இசை, பாடல்குறித்து கருத்து வேற்றுமை உள்ளது என்றான். இசையை ஹராம் என்று கூறும்ஹதீஸ்களை நான் படித்துள்ளேன் என்றேன். உடனே அவன் அந்த ஹதீஸ்களின்அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது என்றான்.

அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என்பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் என்ன வெட்கப்படுகிறாய்?முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே! என்றான். அந்நியப் பெண்ணை பார்ப்பதுநரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன என்றேன். அவன் சிரித்து விட்டு இயற்கை அழகைகலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான என்றான்.நான் தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன் என்றேன். உடனே அவன், ஏன் நீதர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்? என்றான். என் நோக்கம் இஸ்லாத்தைபிறருக்கு எடுத்து இயம்புவது என்றேன். உடனே அவன் இல்லை உன் நோக்கம் உன்னைஎல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன்அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்தவேலையை செய என்றான்.

நான் இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்குஅவன் அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார்என்றான்.நான் இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்? என்றேன்.அதற்குஅவன் அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன. என்றான்.நான் இமாம் புகாரி எப்படி? என்றேன். அதற்கு அவன் அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என்வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன என்று கோபமாகக் கூறினான்.நான் ஸலாவுதீன் அய்யூபி எப்படி? என்றேன். அதற்கு அவன் அவரைப் பற்றி பேசாதே.என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார் எனவெறுப்போடு கூறினான்.நான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என இழுத்தேன். அதற்கு அவன், நீ என்னைகோபப்படுத்துகிறாய். அவருடைய பேச்சும், எழுத்தும் எரி நட்சத்திரம் போன்று என்னைசுட்டெரிக்கிறது எனக் கத்தினான்.

நான் அல் ஹஜ்ஜாஜ் பற்றி? என இழுத்தேன். அதற்கு அவன் அவர் போன்று இன்னும் 1000மனிதர்கள் வரவேண்டும். அவர் தன் நடவடிக்கைகள் மூலம் என்னையும், என்தோழர்களையும் சந்தோஷப்படுத்தியது போன்று யாரும் செய்யவில்லை என்று உற்சாகமாகக்கூறினான்.நான் பிர்அவ்ன் எப்படி? என்றேன். அதற்கு அவன் அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன்வெற்றி பெற விரும்பினேன் என்றான்.நான் அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்? எனப் பேச்சை மாற்றினேன்.அதற்கு அவன், அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள் என்றுஉற்சாகமாகக் கூறினான்.நான் அபூ லஹப் எப்படி? என்றேன். அதற்கு அவன் நாங்கள் என்றென்றும் இணைபிரியாததோழர்கள் என்றான்.நான் லெனின் எப்படி? என்றேன். அதற்கு அவன். என் சிறந்த சீடர், ஸ்டாலின் என்ற என்சிறந்த தளபதியை உருவாக்கினார். என்றான்.

நான் மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி? என இழுத்தேன். உடனே அவன் அவை தான் என்வேத புத்தகங்கள் என்றான்.நான் மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்? என்றேன். அதற்கு அவன் அல்-ஜன்னத், சமரசம், விடியல் வெள்ளி, அல் முபீன், ஒற்றுமை, முஸ்லிம் பெண்மணி பற்றித்தானே கேட்கிறாய்? அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றைநான் படிப்பது வீண் விரயம் என்றான் கேலியாக.

நான் டி.வி., சாடிலைட் சேனல் பற்றி என்றேன். அதற்கு அவன் அவை தான் மக்களைஎன்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை என்றான்.நான் பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு என்றேன். அதற்கு அவன் அவை மட்டுமல்லசன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ்இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள்பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவைமூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன் என்று பெருமையாகக் கூறினான்.

நான் காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி? என்றேன். அதற்கு அவன் அல்லாஹ்வின்நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான்வரவேற்கிறேன் என்றான்.நான் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?என்றேன்.அதற்கு அவன் அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப் , என்றான்.

நான் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் என்எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து,அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன் என்று பெருமையோடு கூறினான்.நான் இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் நீ புறம்பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னைநோகடிக்காதே என்றான்.நான் வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்? என்றேன். அதற்கு அவன் அதுவே என் புகுந்தவீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும்அதுவே என்று பெருமையாகக் கூறினான்.

நான் மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் பேராசை, சந்தேகம்,வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியானநம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது,நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்.ஆமாம், என்ன நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்றுவினவினான்.

சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்? என்று நான் வினவினேன். அதற்குஅவன் அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம்மூலம் தான் என்றான்.

சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்? என்று நான்வினவினேன்.அதற்கு அவன் அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும்,கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடிசெய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன் என்றான்.

நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது? எனப் பேச்சை மாற்றினேன். அதற்கு அவன் சபாஷ்.நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்னதெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள்அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது.ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது.ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச்செய்யலாம். 1. தந்தை, 2. சகோதரன், 3. கணவன், 4. மகன். சுருங்கச் சொன்னால் ஒருபெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம் என உற்சாகம் கொப்பளிக்கக்கூறினான்.

நான் இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்? என்றேன். அதற்கு அவன் சினிமா, இசை,இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடைஉடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும்ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான் என்றான்.

நான் புதிய கலாச்சாரம் பற்றி கூறேன்என்றேன். அதற்கு அவன் என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும்பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களைஇஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே? என்றான்.

நான் மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்? என்றேன். அதற்கு அவன் அது தான்என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமேவௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள் என்றான்.

நான் ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய் என்றேன்.அதற்கு அவன் கோபமாக அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என்பலத்தைக் குலைத்த சதிகாரர்கள்.நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான்பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள் திக்ர்செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம்பாதுகாவல் தேடுகிறார்கள் என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.

நான் காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் உற்சாகமாக, நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின்இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாகஎன் வலையில் வீழ்ந்தான் என்று கூறினேன்.நான் பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான் என்று கேட்டேன்.அதற்கு அவன், நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னைஎதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என்அடிமையானான் என்று கூறினான்.

நான் ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்புதேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன் எனக்கூறினான்.நான் உன் துஆ எது? என்றேன். அவன் சினிமா பாடல்கள் என்றான்.நான் உன் குறிக்கோள் என்ன? என்றேன். அதற்கு அவன் மக்களிடையே பொய்யானநம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது என்றான்.

நான் எது உன்னை அழிக்கும்? என்று கேட்டேன். அதற்கு அவன், குர்ஆனில் உள்ளஆயத்துல் குர்ஸி 2வது அத்தியாயம் 255வது வசனம் யார் ஓதுகிறார்களோ அவர்களைஎன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான் என்றுகூறினான்.நான் அடடே! அப்படியா, எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன். உடனேஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான்.
மூலம் - - ஷேக் அயாத்

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்.ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள். ஏனெனில், அவன் உங்களுக்குபகிரங்க விரோதி ஆவான் குர்ஆன் 2 : 208ஆகவே, இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும்ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம் செயல்பட அறிவுறுத்துவோம்.

நன்றி;அஹ்மது ஸாஹிபு

சனி, 31 ஜனவரி, 2009

என் தலைவருக்கு எதிரி எனக்கும் எதிரி!

அறியாமைக் காலத்தில், அரபுக்கோத்திரங்களுக்கு மத்தியில், பகை வருமானால் அப்பகையை தலைமுறை தாண்டியும் நினைவில்கொண்டு பழிவாங்கும் பழக்கம் இருந்தது. ரசூல்[ஸல்] அவர்கள் மக்கா வெற்றியின்போது அப்பழக்கத்தை மக்களிடமிருந்து துடைத்தெரிந்தார்கள்.மக்கா வெற்றி கொள்ளப்பட்ட இரண்டாம் நாள் மக்களுக்கு நபி[ஸல்] அவர்கள் உரையாற்றினார்கள்.

அப்போது,குஜாஆ கிளையினர் மக்கா வெற்றியின் போது லைஸ் கிளையைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டனர். இதற்கு முன் அறியாமைக் காலத்தில் லைஸ் கிளையினர் குஜாஆ கிளையினரில் ஒருவரைக் கொன்றிருக்கின்றனர். அதற்குப் பழிவாங்கும் முகமாக இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். இது தொடர்பாக நபி (ஸல்) இவ்வுரையில் குறிப்பிட்டுக் கூறினார்கள்:

'குஜாஆ சமூகத்தினரே! கொலை செய்வதை கைவிடுங்கள். கொலை புரிவது பயன்தக்கதாக இருந்தால் இதற்கு முன்னர் புரிந்த கொலைகளே உங்களுக்குப் போதும். இதற்குப் பிறகு அந்த மாபாதகச் செயலை செய்யாதீர்கள். நீங்கள் கொன்று விட்டவர்களுக்குரிய (கொலைக்கான நஷ்டஈட்டை) இன்று நான் நிறைவேற்றுகிறேன். இதற்குப் பின் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையுண்டவன் உறவினர் இரண்டு வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று, கொலையாளியைப் பழிக்குப் பழி கொல்வது அல்லது அவரிடமிருந்து கொலைக்கான நஷ்டஈட்டை வசூல் செய்து கொள்வது." யமன் வாசியான அபூ ஷாஹ் என்பவர் 'அல்லாஹ்வின்தூதரே! இதனை எனக்கு எழுதிக் கொடுங்கள்" என்றார். 'இதனை இவருக்கு எழுதி வழங்குங்கள்" என நபி (ஸல்) தோழர்களுக்குக் கூறினார்கள். நூல் ;ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.

அதுமட்டுமன்றி, தன்னுடைய சிறிய தந்தையார் ஹம்சா[ரலி] அவர்களை கொடூரமாக கொன்ற ஹிந்த் என்ற பெண்ணையும் அவரது அடிமையான வக்ஷி என்பாரையும் நபி[ஸல்]அவர்கள் பழிவாங்காமல் மன்னித்தார்கள். பின்பு இவ்விருவரும் இஸ்லாத்தை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சகாபாக்களில் சிலர் சில நேரங்களில் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற என்னத்தை வெளிப்படுத்தியதும் உண்டு. ஆனால் அவ்வாறு பழிவாங்கவேண்டும் என நினைத்தது தன் சொந்த எதிரிகளை அல்ல. மார்க்கத்தின் எதிரிகளை!
பத்ர் போர் கைதிகள் பற்றி நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) 'அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்" என்று கூறினார்கள்.பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் 'கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?" எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஜா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஜா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்" என்று உமர் (ரழி) கூறினார்கள்.அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். ஈட்டுத் தொகை ஆயிரம் வெள்ளி நாணயங்களிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. மக்காவாசிகள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதீனாவாசிகளுக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, ஈட்டுத் தொகை கொடுக்க இயலாத மக்கா கைதிகள் மதீனாவை சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். அவ்வாறு சிறுவர்களுக்கு நன்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.உமர் (ரலி)கூறுகிறார்கள்; அபூபக்கர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்" என்றேன். அதற்கு நபி (ஸல்) 'ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது" என்றார்கள்.இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)

இன்று நாம் பகைமை பாராட்டுவது மார்க்கத்தின்அடிப்படையிலா ? இல்லை. நம் தலைவர்கள் ,எந்த அமைப்பை நல்ல அமைப்பு என்கிறார்களோ எவர்களை நல்லவர்கள் என்று கூறுகிறார்களோ அவர்களோடு நாமும் உறவாக இருக்கிறோம்., நம் தலைவர்கள் எந்த அமைப்பை சரியில்லை என்கிறார்களோ அந்த அமைப்பை திட்டித்தீர்க்கிறோம். அந்த அமைப்பை சேர்ந்தவர்களை கன்டால் சலாம் சொல்வது கூட கிடையாது. விதிவிலக்காக சிலர், மாற்று அமைப்பை சேர்ந்தவர்களோடு சகமுஸ்லிம்கள் என்ற ரீதியில் தொடர்பு வைத்திருப்பது தெரிந்தால் அவர் துரோகி குற்றம் சாட்டப்பட்டு நீக்கப்படுவார். ஆக, நம்முடைய நேசமும்-பிரிவும் அல்லாஹ்வுக்காக என்ற நிலைமாறி, நம்முடைய நேசமும்-பிரிவும் அபிமான தலைவருக்காக! என்ற நிலை வந்துவிட்டது. இந்த நிலை மாறவேண்டும். சத்திய சகாபாக்கள் போன்று உறவும்-பிரிவும் மார்க்கத்திற்காக என்ற நிலை வரவேண்டும். அதுதான் உண்மையான தவ்ஹீத்வாதிகளுக்கு இம்மை மறுமை பயனளிக்கும்.

செவ்வாய், 27 ஜனவரி, 2009

முஸ்லிமல்லாதவர்களுக்காக நிவாரனம்வேண்டி பிரார்த்திக்கலாமா?

தமிழக முஸ்லிம்களில் அரசியல் கட்சிகளில் அங்கம்வகிப்பவர்களும், நடிகர்களை நேசிப்பவர்களும் தங்களின் தலைவருக்கு/ நேசருக்கு நோய் என்றால் அவருக்காக அல்லாஹ்விடம் து'ஆ செய்வதும், சிலநேரங்களில் அவர்களுக்காக மொட்டை போட்டுக்கொள்வதையும் பார்க்கிறோம்.

பராஉ வின் ஆஸிப்(ரலி) அறிவித்தார்;
நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவருக்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' ('அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று) சொன்னால், 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.
4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.
5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.
6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.
7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.

நூல்;புஹாரி,எண் 2445

இந்த ஹதீஸில் நோய் விசாரிப்பது நபியவர்களால் கட்டளையிடப்பட்டுள்ளதாலும், முஸ்லிம்கள்-முஸ்லிமல்லாதவர்கள் என்று நபி[ஸல்]அவர்கள் பிரித்து கூறாததாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு நிவாரணம் வேண்டி து'ஆ செய்யலாம் என்ற முடிவுக்கு சிலர்வரலாம். ஆனால் நபி[ஸல்]அவர்கள் முஸ்லிம்களை நோய்விசாரிக்கும்போது அவர்களுக்கு நிவாரணம் வேண்டி பிரார்த்தித்துள்ளார்கள். அதே நேரத்தில் முஸ்லிமல்லாத நோய்வாய்பட்டவர்களை சந்திக்கும்போது, அவர்களிடத்தில் தாஃவா மட்டும்தான் செய்துள்ளார்கள்.

முஸய்யப் இப்னு ஹஸ்ன் இப்னி அபீ வஹ்ப்(ரலி) அறிவித்தார் ;
அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி(ஸல்) அவர்கள், 'என் பெரிய தந்தையே! 'லா இலாஹ இல்லல்லாஹ்' - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்" என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், '(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)" என்று அவர்களிடம் கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று) எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை" என்று கூறினார்கள். அப்போதுதான், 'இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை" என்னும் (திருக்குர்ஆன் 09: 113) திருக்குர்ஆன் வசனமும, '(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது" என்னும் (திருக்குர்ஆன் 28:56) திருக்குர்ஆன் வசனமும அருளப்பட்டன.
நூல்;புஹாரி,எண் 3884

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இறைத்தூதர்[ஸல்]அவர்களுக்கு அரணாக இருந்த அபூதாலிப் அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது, அபூதாலிப் அவர்களுக்கு நிவாரனம்வேண்டி நபி[ஸல்]அவர்கள் து'ஆ செய்யவில்லை. மாறாக அபூதாலிப் அவர்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும் தாஃவா தான் செய்தார்கள் என்பதிலிருந்து முஸ்லிமல்லாதவர்களுக்காக நோய்நிவாரணம் தேடக்கூடாது என்பதை விளங்கலாம்.மேலும்,

அனஸ்(ரலி) கூறினார் யூதர்களின் அடிமையொருவர் நபி(ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்துவந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்ற நபி(ஸல்) அவர்கள் 'இஸ்லாத்தை ஏற்றுக் கொள்' என்று கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்டார்.
நூல்;புஹாரி,எண் 5657

இந்த செய்தியிலும் நோயாளியிடம் நபியவர்கள் தாஃவா மட்டுமே செய்துள்ளனர் என்பதை வைத்துப்பார்க்கும்போது, முஸ்லிமல்லாதவர்களின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் நாம் து'ஆ செய்யலாமேயன்றி அவர்களுக்காக வேறு எந்த து'ஆவும் செய்ய அனுமதியில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம். எனவே முஸ்லிம்கள் இதுபோன்ற செயல்களைவிட்டும் தவிர்ந்துகொள்வது சிறந்ததாகும்.

சனி, 24 ஜனவரி, 2009

நபித்தோழர்கள்வாழ்வும்--நமதுநிலையும்[பாகம் 4]

'சந்தேகப்புயலடிச்சா அங்கே சந்தோசம் தொலைந்துவிடும்' என்ற வாக்கிற்கேற்ப இன்று நமக்கு மத்தியில் ஏற்படும் சந்தேகங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதை பார்க்கிறோம்.
கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்படும் சந்தேகங்கள் குடும்ப நலனை பாதிக்கிறது.
பெற்றோர்-பிள்ளைகள் இடையில் ஏற்படும் சந்தேகங்கள் அன்பு பிணைப்புக்கு வேட்டுவைக்கிறது.
நண்பர்கள் மத்தியில் ஏற்படும் சந்தேகங்கள் பகைமை நெருப்பை மூட்டுகிறது.
இயக்க தலைவர்களுக்கு மத்தியில் ஏற்படும் சந்தேகங்கள் சமுதாய நலனை பாதிக்கிறது.
இதற்கு தீர்வுதான் என்ன? ஒரே வழி சந்தேகத்தை விட்டொழிப்பதுதான்! அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.49:12

இன்று நமது நிலைஎன்ன? எடுத்ததெர்க்கெல்லாம் சந்தேகம். ஒரு ஆணையும் பெண்ணையும் தனியாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில் கன்டால் அவ்விருவருக்கு மத்தியில் என்ன உறவு, என்ன விசயமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் விசாரிப்பதற்கு முன்பே, அவ்விருவருக்கும் மத்தியில் எதோ இருக்கிறது என்று சந்தேக முடிவெடுத்து, அந்த முடிவை உண்மைப்படுத்துவதற்க்காக துருவித்துருவி விசாரணை நடத்துவது. இதுதானே நம்மிடையே இன்று நடந்துகொண்டிருக்கிறது.

விளைவுகள் என்ன? தவறு செய்தவர்களை விட சந்தேகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளதைக்கானலாம்.
காவல்த்துறையின் சந்தேக நடவடிக்கை சிலநேரங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் பல நேரங்களில் அப்பாவிகள் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆக்கப்படுவதையும் காணலாம்.

மேலும்,மனிதன் என்ற அடிப்படையில் என்றோ ஒருநாள் ஒருதவறு செய்தான் என்பதற்காக அவனை எப்போதும் அந்த தவறை செய்யக்கூடியவனாகவே சந்தேகத்துடன் பார்ப்பது நம்மிடையே அதிகமாக உள்ளதை பார்க்கிறோம். நல்லவன் கெட்டவனாகவும், கெட்டவன் நல்லவனாகவும் மாறுவது மனித இயல்புதான் என்பதை மறந்து, தங்களை தாங்களேதூய்மைப்படுத்துவதை பார்க்கிறோம். அல்லாஹ் கூறுகின்றான்;


أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمْ بَلِ اللّهُ يُزَكِّي مَن يَشَاء وَلاَ يُظْلَمُونَ فَتِيلاً
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். 4:49

மேலும்,
மற்றவர்கள் சந்தேகப்படும் சூழ்நிலையும் நாம் ஏற்படுத்திவிடக்கூடாது.
ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். -உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர்அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்" என்றார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், 'அல்லாஹ் தூயவன் இறைத்தூதர் அவர்களே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்)" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான்.. அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்" என்றார்கள்.
நூல்;புஹாரி,எண் 3281

எனவே, மூமீன்கள்மீது நல்லெண்ணம் கொள்வோம்- [வெளிப்படையான] தவறுகளையன்றி, மற்றவைகளை துருவித்துருவி ஆராய்ந்து நமக்கு மத்தியில் நல்லிணக்கத்தை கெடுத்துக்கொள்ளாமல் அனைவரும் சகோதர்களாக வாழ்வோம்!

புதன், 21 ஜனவரி, 2009

நபித்தோழர்கள் வாழ்வும்- நமதுநிலையும்[பாகம் 3]

யானை தன்தலையில் தானே மண்ணை அள்ளி போட்டகதையாக, அல்லாஹ்வின் சாபத்தை வழிய கேட்டு வாங்குவதை ஒரு சாதனையாக கருதக்கூடிய நிலையை பார்க்கிறோம். சாபங்கள் பலவகை உண்டு. மனிதர்களின் சாபம், நபிமார்களின் சாபம், மலக்குகளின் சாபம், அல்லாஹ்வின் சாபம். இதில் எந்த சாபத்தை பெற்றாலும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.

அதனால்தான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒரு மூமின் திட்டுபவனாகவோ,சபிப்பவனாகவோ, கெட்ட செயல் செய்பவனாகவோ, கெட்டவார்த்தைகள் பெசுபவனாகவோ இருக்கமாட்டன் என்றார்கள்.நூல்;திர்மிதி.

சபிப்பது முமீனின் பண்பல்ல என்று தெளிவாக தெரிந்த பின்னும் அடுத்தவர்களை சபிப்பது இன்று சாதாரணமாகி விட்டது. அது மட்டுமன்றி, தான் சொன்ன கருத்தை நிலைநாட்ட முக்காப்புலா[சாரி] முபாகலா எனும் அல்லாஹ்வின் சாபத்தை வேண்டும் நிகழ்ச்சிகளும் அரங்கேறுகிறது. இந்த முபாகலாவிற்கு ஆதாரமாக சொல்லப்படும் வசனத்தை கவனியுங்கள்;

அல்லாஹ்விடம் ஈசாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார்.அவரை மண்ணால்படைத்து ஆகு என்று அவரிடம் கூறினான்.உடனே அவர் ஆகிவிட்டார்.
இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகிவிடாதீர்!
உமக்கு விளக்கம் வந்தபின் இது குறித்து யாரேனும் உம்மிடம் தர்க்கித்தால் 'வாருங்கள்! எங்கள்பிள்ளைகளையும் , உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம்.நாங்களும் வருகிறோம் நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை கேட்போம்' எனக்கூறுவீராக!3;௫௯ 60.61

இந்த வசனத்தில் நபி ஈஸா[அலை] அவர்களின் பிறப்பு பற்றி எவரேனும் தர்க்கித்தால் முபாகலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு தான் இறைவன் கூறுகிறான். சொந்த பிரச்சினையில் அல்ல. இந்த வசனத்தை வைத்துக்கொண்டு வேறு பிரச்சினைகளுக்கு முபாகலாவுக்கு வாருங்கள் என்று நபி[ஸல்] அவர்களோ, சகாபாக்களோ யாருக்கும் சவால் விட்டதில்லை. முபாகலாவும் நடத்தியதில்லை.

ஆனால் இன்று உலகத்தில் தன்னை தூய்மையானவனாக அடையாளம் காட்டிகொள்வதற்காக தன்னையும், தனது குடும்பத்தாரையும்- எதிரியையும் அவரது குடும்பத்தாரையும் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களாக மாற்றுவது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்! இதில் வேதனை என்னவென்றால் முபாகலா என்றால் என்னவென்றே அறியாத பச்சிளம் குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபத்தை வாங்கித்தருவதுதான்.

தவறு செய்தவரைக்கூட சபிப்பதை நபியவர்கள் தடுத்த செய்தி இதோ;
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்' என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி,எண் 6780

முபாகலாவில் நாம் சந்தித்தவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிக்கக்கூடியவர்கள் இல்லையா? அப்படிப்பட்ட நம் சகோதரனுக்கு/அவனது குடும்பத்துக்கு அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தருவதுதான் ஒரு முமீனின் பண்பா? என்பதை இனியாவது சிந்தித்து அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி சகோதரர்களுக்கு மத்தியில் சாபமிட்டுக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் அருளை வேண்டி பிரார்த்திப்போம்.

திங்கள், 19 ஜனவரி, 2009

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஒரு ஏகத்துவ கடிதம்!

அன்பிற்கினிய சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்கள் 'தங்க பூமி' விருதை வென்று, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மட்டுமன்றி,இந்தியாவின் பிரதமர்-தமிழகமுதல்வர் இப்படி பரவலாக அனைத்து தரப்பாரும் உங்களை வாழ்த்திவரும் நிலையில், நீங்கள் சார்ந்த இஸ்லாமிய மார்க்கத்தையுடைய நாங்கள் மட்டும் வாழ்த்தமுடியாத நிலையில் உள்ளோம். காரணம் மனமின்மையால் அல்ல.மார்க்கம் தடுப்பதால்!

தாங்கள் இஸ்லாத்தின் மீது ஆழமான பற்றுடையவர் என்பதையும், தவறாமல் தொழுகை உள்ளிட்ட அமல்களை நிறைவேற்றுபவர் என்பதையும், ஹஜ் கடமையை முடித்தவர் என்பதையும், தங்களின் உரை துவக்கத்திலும்சரி, பிறர் தங்களை பாரட்டும்போதும்சரி 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று நீங்கள் சொல்ல மறப்பதில்லை என்பதையும் நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.

இருப்பினும் தங்களிடத்தின் அன்போடு இரு கோரிக்கைகள் வைக்கக் விரும்புகிறோம். முதலாவது நீங்கள், பொன்னேரி அருகேயுள்ள பூதூர் என்ற இடத்தில் வாழ்ந்த பாபா அவர்கள்மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருந்ததாகவும் , நீங்கள் எதை செய்யவிரும்பினாலும் அவரிடத்தில் ஆலோசனை அல்லது ஆசி பெற்றுதான் செய்துவந்ததாகவும், அந்த பாபா மறைவுக்குப்பின் அவரது அடக்கத்தலத்தை தங்களின் நேரடிப்பரமரிப்பில் கவனித்து வருவதாகவும் நீண்ட நாட்களுக்குமுன் பத்திரிக்கையில் படித்த நினைவு. [தவறென்றால் மன்னிக்கவும்]

மேலும், மேற்கண்ட படத்தில் ஒரு தர்காவில் நீங்கள் வழிபடுகிறீர்கள். தர்கா என்பது நல்லடியார் என்று நம்பப்பட்ட ஒருவர் இறந்தவுடன் அவரை அடக்கம் செய்து அவர்இடத்தில் உதவி தேடுவது! அல்லது அவர் மூலம் உதவி தேடுவது! இந்த இரண்டுமே மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

இறந்தவர்களின் கப்ருகளை உயர்த்தாதீர்கள்- அதை பூசாதீர்கள்-அதில் விளக்கு ஏற்றாதீர்கள்-உங்கள் செருப்பு வார் அறுந்தாலும் அதை அல்லாஹ்விடமே கேளுங்கள் என்றெல்லாம் நமது நபி[ஸல்] அவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது அந்த தர்காக்களுக்கு தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து, இறைவனுக்கு இணைவைப்பதை விட்டு விலகுமாறும் உங்களை வேண்டுகிறோம்.

அடுத்து தங்களின் இசைத்துறை என்பது இஸ்லாமிய அடிப்படையில் ஹராம் எனபதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என நம்புகிறோம். 'இசைக்கருவிகளை உடைத்து எறியவே நான் வந்தேன் ' என்ற நபி[ஸல்] அவர்களின் நல்லுபதேசத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். இந்த துறையின்மூலம் நீங்கள் எத்துனை கோடிகளை ஈட்டினாலும், எத்துனை விருதுகளை பெற்றாலும் அவை மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டதல்ல என்பதையும் பணிவோடு சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, சகோதரர் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணக்குங்கள்! அவனுக்கு யாதொன்றையும்/யாரையும் இணையாக்காதீர்கள். இசைத்துறையை விட்டு விலகி, அல்லாஹ் உங்களுக்களித்த அற்புதமான அறிவாற்றலை மார்க்கத்துக்கு உட்பட்ட வேறு துறைகளில் செலுத்துங்கள். அல்லாஹ் தங்கபூமி என்ன! மறுமையில் விலைமதிக்க முடியா தங்க சுவனத்தை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்.

'உபதேசம் செய்யுங்கள்; அது முமீன்களுக்கு பயனளிக்கும்! என்ற அருமறை வாக்கின்படி இந்த மடல் உங்களுக்கு வரையப்பட்டது. அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அவன் மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்ந்து மரணித்து சுவனம் செல்லும் பாக்கியத்தை அளிப்பானாக!

நலம் விருப்பும் சகோதரன்; முகவை அப்பாஸ்.


படம் நன்றி;தமிழ் முரசு.

வியாழன், 15 ஜனவரி, 2009

நபித்தோழர்கள்வாழ்வும்-நமதுநிலையும்[பாகம் 2]


எண்பதுகளில் ஏகத்துவப்பிரச்சாரத்தை எடுத்தியம்ப தொடங்கியபோது நமது தரப்பு அறிஞர்களின் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமாக பதிலளிக்கத்திணறிய சுன்னத் வல்ஜமாத்[?]அறிஞர்கள், பாமரமக்களிடம் போய்
*இந்த நஜாத்திகள் ரசூல்[ஸல்]அவர்களை சாதாரண போஸ்ட்மேன் என்கிறார்கள்.
*இந்த நஜாத்திகள் சகாபாக்களை திட்டுகிறார்கள்.
*இந்த நஜாத்திகள் நாற்பெரும் இமாம்களையும், இறைநேசச்செல்வர்களையும் இழிவாக பேசுகிறார்கள்.
இப்படியான அடுக்கடுக்கான அவதூறுகளை தவ்ஹீத்வாதிகள் மீது அள்ளிவீசினார்கள்.ஆனாலும் நாம் சத்தியத்தில் இருந்த காரணத்தால் அதையும் தாண்டி மக்கள் அலைகடலென தவ்ஹீதின் பக்கம் ஆர்பரித்து வந்தார்கள்.
ஒரு சுழற்சிக்கு பின்னால்,நம்முடைய வளர்சிக்கு பின்னால், தவ்கீத்வாதிகளை நோக்கி அவதூறுக்கணைகள் பறந்துவந்து தாக்குகிறது. ஆனால் ஒரு வித்தியாசம்!இன்று தாக்குபவர்களும்-தாக்கப்படுபவர்களும் தவ்ஹீத்வாதிகள் என்பதுதான் வேதனை கலந்த உண்மை.
ஒருவரைப்பற்றி அவரது ஒழுக்கத்தோடு/மானத்தோடு சம்மந்தப்படுத்தி ஒரு செய்தி கிடைத்தால் அதை விசாரிப்பதர்க்குமுன் ஒரு மூமீனின் எண்ணம் எப்படி இருக்கவேண்டும்? இதோ அல்லாஹ் கூறுகின்றான்;
24:12 முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, 'இது பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாமா?
*முதலில் நல்லெண்ணம் கொள்ளவேண்டும், பின்பு அவதூறுக்குள்ளான ஆண்/ பெண் இருவரது கேரக்டர்களையும், சம்பவம் நடந்ததாக குறிப்பிடும் இடத்தின் தன்மையையும் ஆராய்ந்து, நான்கு சாட்சிகளை தீரவிசாரித்து செய்தி உறுதிசெய்யப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும். இதுதானே நமக்கு இஸ்லாம் காட்டிய வழிமுறை.
இன்று தவ்ஹீத்வாதிகளில் சிலரின் நடவடிக்கை எப்படியிருக்கிறது? ஒருவரை பாலியல் குற்றம் சாட்டி ஒரு செய்தி கிடைத்தமாத்திரத்தில்,[சகோதரர் முகவைதமிழனின்வார்த்தையில்] 'செர்வர் கிறுக்குப்புடிச்சு கேங் ஆகும் அளவுக்கு பரப்புகிறோமே! இதுதான் குர்'ஆண்-ஹதீஸ் வழிமுறையா? ஒருவர் விபச்சாரம் செய்தது உறுதியாக தெரிந்தால் அவருக்கு தண்டனை கொடுப்பது மட்டும்தான் இஸ்லாமியவழி.அதை உலகம் முழுதும் பரப்புமாறு மார்க்கம் நமக்கு வழிகாட்டியிருக்கிறதா?
சரி! ஆம்பிளைய விடுங்க! ஆம்பிளை அப்படித்தான் இருப்பான் என்று உலகம் சிறிது நாளில் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். பெண்ணை எண்ணிப்பாருங்கள்!அவள் அடையும் வேதனையையும் அவமானத்தையும் எண்ணிப்பாருங்கள்! அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது அவர்கள் அடைந்த வேதனையை அவர்களின் கூற்றிலிருந்து சிறு பகுதி;
'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை.
நூல்;புஹாரி,எண் 2661
அபாண்ட அவதூறால் உள்ளம் உடைந்து அழுது,அழுது கண்ணீர் வற்றும் அளவுக்கு அன்னையவர்கள் வேதனைப்பட்டுள்ளார்களே! இதுபோன்றுதானே நாம் பரப்பும் அவதூறால் பாதிக்கப்படும் பெண்களும் வேதனைப்படுவார்கள் என்று என்றாவது சிந்தித்தோமா? அல்லாஹ் கூறுகின்றான்;

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.24:௨௩
மேலும்,இவ்வாறு அவதூறுகள் தவ்ஹீத்வாதிகள் மத்தியில் அதிகமானதுக்கு காரணம் மன்னிக்கும் தன்மை இல்லாததுதான். என்மீது ஒருவன் ஒரு அவதூறு சொன்னால்,'
அவனை விட்டேனா பார்' என்று எதிரியின் பிறப்பிலிருந்து ஆய்வுசெய்து அவன்செய்த சிறிய/பெரிய தவறுகள் அத்துனையையும் பரப்புவது.
ஆனால், அருமை சகாபாக்கள் இந்தவிசயத்தில் எப்படி மன்னிக்கும் தன்மையை கையாண்டுள்ளார்கள் என்பதற்கு ஒரு சான்று;
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள்மீது சொல்லப்பட்ட அவதூறை பரப்பியவர்களில் ஹஸ்ஸான் இப்னு தாபித்[ரலி] அவர்களும் ஒருவர். இதை மனதில்கொண்டு கீழுள்ள செய்தியை படியுங்கள்;
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், 'ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்கு) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) ஹஸ்ஸான் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பவர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக் கவி பாட அனுமதி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(அவர்களைப் பற்றி நான் வசைக் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுத்து போன்று உங்களை உருவி எடுத்து விடுவேன்" என்று கூறினார்.
நூல்;புஹாரி,எண் 4145
*தன்னைக்குறித்து அவதூறு பரப்பியவர்களில் ஒருவரை 'திட்டாதீர்கள்' என்று அன்னையவர்கள் பெருந்தன்மையோடு சொன்னார்களே! இந்த பண்பு நமக்கு வந்துவிட்டாலே பாதி அவதூறு மறைந்துவிடும். நடுநிலையோடு சிந்திப்போம்! நன்மையை மட்டும் பரப்புவோம்.

புதன், 14 ஜனவரி, 2009

நபித்தோழர்கள்வாழ்வும்-நமதுநிலையும்![பாகம் 1]

ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர், அக்கட்சியில் இருக்கும்வரை அக்கட்சியின் தலைவரை வானளாவ புகழ்வதும், அதேபோன்று அந்த தலைவரும் இவரை 'என்னுடய போர்வாள்' என்று புகழ்மாலை சூட்டுவதும் பிற்காலத்தில் இவ்விருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரியும்போது, தலைவர் பிரிந்தவரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க செய்யும்வகையில் வசைமாரி பொழிவதும், பிரிந்தவர் தலைவர்மீது வசைமாரி பொழிவதும் அரசியல் அரங்கில் நாம் அன்றாடம் காணும் அலங்கோலங்கள்.

துரதிஷ்டவசமாக, முஸ்லீம் அமைப்புகள்/இயக்கங்களில் இது போன்ற தலைவர்-முக்கியஸ்தர் பிரிவின்போது அரசியல்வாதிகளையும் தாண்டி சேற்றைவாரி பூசிக்கொள்வதை பார்க்கிறோம். மனிதனுக்கு கோபம் என்ற ஒன்று இருக்கும்வரை மனஸ்தாபங்கள் ஒருவருக்கொருவர் ஏற்படுவது இயற்கையே! ஆனால் நமது சமுதாயத்தில் சகோதரர்களுக்குள் ஏற்படும் சிறிய மனஸ்தாபங்கள் ஜென்மப்பகை போல தொடர்வதைப்பார்க்கிறோம்.

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற நமது அறிஞர்களுக்கு மத்தியில் சில பிளவுகள் ஏற்பட்டது.பிரிந்த அந்த அறிஞர்களில் ஒருவர் மற்றவரை சந்தித்து சலாம் கூறியதுண்டா? உங்களுக்குள் பினங்கிக்கொன்டால் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருக்கவேண்டாம் என்ற நபிமொழி இவர்களுக்கு பொருந்தாதா?

ஆனால், அல்லாஹ்வின் தூதரிடம் பாடம்பயின்ற சத்திய சகாபாக்கள் தமக்குள் பிணக்கு வரும்போது எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை பார்ப்போம்;

அபுத் தர்தா(ரலி) அறிவித்தார் ;
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாம் விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

நூல்;புஹாரி,எண் 3661

இந்த ஹதீஸ்சில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களில் சில;

* இருவரும் சாதாரண நபர்கள்அல்ல. சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்கள். சொர்க்கம் உறுதி செய்யப்பட்டவர்கள்.

* சண்டையிட்டபின் 'அவன் வீட்டிலையா எனக்கு சாப்பாடு' என்று திமிராக இருக்காமல் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க ஒருவரை ஒருவர் தேடி வருதல்.

*உமர்[ரலி] அவர்களிடம், அபூபக்கர்[ரலி] மன்னிப்பு கேட்டும், உமர்[ரலி] மன்னிக்க மறுத்த பின்னும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்]மூலம் உமர்[ரலி] அவர்களிடம் மன்னிப்பைவேண்டுவோம் என்று நபியவர்களை தேடிச்சென்ற நற்பண்பு.

அபூபக்கர்[ரலி]மன்னிப்பு கேட்டும் நாம் கோபத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என வருத்தி அபூபக்கர்[ரலி] அவர்களை தேடிச்சென்ற உமர்[ரலி]அவர்கள்.

இறைவனின் திருப்தியே இலக்காக கொண்டு வாழ்ந்த அந்த மனிதமேதைகள் எங்கே! தவ்ஹீத், தவ்ஹீத் என்று வாய் கிழிய பேசிக்கொண்டு அற்ப பிரச்சினைக்காக ஆயிரம் கூறாக பிரிந்து அதற்காகவே வாழும் நாம் எங்கே! சிந்திப்போமா?

அது சரி! நாமதான் சகாபக்களை பின்பற்றவேண்டியதில்லையே! அப்புறம் அபுபக்கராவது- உமராவது என்கிறீர்களா?

சனி, 10 ஜனவரி, 2009

இஸ்லாத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனம்!


இந்துக்கள் தங்களின் கோவில் திருவிழாக்களின் போது தீமிதிப்பதை நாம் பார்க்கிறோம் அது அவர்களின் மத சம்பத்தப்பட்டது என்பதால் நாம் குறைகூற மாட்டோம். ஆனால் இறைவனை வணக்குவதிலும் பகுத்தறிவுக்கு முரண்படாத வகையில் எளிமையான வழிமுறையை சொல்லித்தந்த மார்க்கம் இஸ்லாம்.
நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் உருவாக்கப்பட்ட எந்த விசயமும் அது என்ன பெயரில் வந்தாலும் அது மார்க்கமாகாது. நபி[ஸல்] கூறினார்கள்;
நாம் கட்டளையிடாத ஒன்றை செய்தால் அது ரத்து செய்யப்படும்.[நூல்;புஹாரி]
இப்படி நபியவர்கள் தெளிவாக வழிகாட்டிய பின்னும், நபி[ஸல்] அவர்களின் பேரர் ஹுசைன்[ரலி] அவர்களின் தியாகத்தை நினைவுகூருகிறோம் என்றபெயரில் ஷியாக்கள் சட்டையை கிழித்துக்கொள்வதும், தங்களை தாங்களே கொடூரமாக காயப்படுத்தி கொள்வதையும், தீ மிதிப்பதையும் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட செயலை ஷியாக்கள் மட்டுமன்றி, நாங்கள் சுன்னத்வல் ஜமாத்தினர் என்று கூறிக்கொள்ளும் ஒரு சாராரும், ஷியாக்களை பின்பற்றி பஞ்சா எடுப்பதும், தீ மிதிப்பதையும் செய்வதை பார்க்கிறோம். இவர்களின் இந்த செயலை சைபுத்தீன் ரஷாதி-ஜமாலி போன்ற சுன்னத்வல் ஜமாத்தின் காவலர்கள்[?] கண்டு கொள்வதில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் என்ற கிராமத்தில் குறைவான முஸ்லிம்களும், பெருவாரியான இந்துக்களும் வசித்துவருகிறார்கள். இங்கு நாச்சியா தர்கா உண்டு.இதை இந்துக்கள் மாமு நாச்சி அம்மன் ஆலயம் என்ற பெயரில் அழைத்து வருகிறார்கள். இந்த தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில், முஸ்லிம்களும் இந்துக்களும் கலந்து இந்த விழாவை நடத்துகிறார்கள்.
வழக்கம் போல இந்த ஆண்டும் நடைபெற்ற விழாவில், தீ மிதிக்கும் வைபவம் நடைபெற்றுள்ளது. இதில் இந்துக்களும், முஸ்லிம்களும் தீ மிதித்துள்ளனர். பெண்கள் பூக்குளித்துள்ளனர் அதாவது தங்கள் தலையில் தீயைகொட்டி நேர்ச்சையை நிறைவேற்றியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை ' மத நல்லிணக்க நிகழ்ச்சி' பாராட்டுபவர்களும் உண்டு.
என்னதான் தமிழகத்தில் முஸ்லிம்கள் மத்தியில் புரட்சியை, மறுமலர்ச்சியை எர்ப்படுத்திவிட்டோம் என்று தவ்கீத்வாதிகளாகிய நாம் மார்தட்டிக்கொண்டாலும் இன்னும் இஸ்லாத்தின் அடிப்படையை அறியாத ஓராயிரம் பெரியகுளங்கள் உள்ளது என்பதை மனதில்கொண்டு ஏகத்துவ வாதிகள் வேறு பிரச்சினைகளை ஓரம்கட்டிவிட்டு மார்க்கப்பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லவேண்டும்.

வியாழன், 1 ஜனவரி, 2009

எங்கே செல்லும் இந்த பாதை!


சமீபத்தில் கடலூர் மாவட்டம் கிள்ளைஎன்ற ஊரைச்சேர்ந்த பஷீரா-ஜின்னா தம்பதிகள் கோவில் கட்டி வழிபடுவதை நாம் அறிந்துள்ளோம். இப்போது அதையும் தாண்டி, ஒற்றுமை என்ற பெயரில் பிற மதத்தவருடன் இரண்டற கலந்துவிட்ட முஸ்லிம்களைப்பற்றிய செய்திகளை பார்ப்போம்.
உ.பி.மாநிலம் சந்தன் எனும் ஊரில் முஸ்லிம்களும்,முஸ்லிமல்லாதவர்களும் வணக்க விசயத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து வாழ்கிறார்கள்.முஸ்லிம்கள் நடத்தும் தொழுகையில் இந்துக்கள் கலந்துகொள்கிறார்கள்இந்துக்களின் கோயில் பூஜையில் முஸ்லிம்கள் கலந்துகொள்கிறார்கள்.மஜீத்கான் எனும் முஸ்லீம் அம்மன் கோயிலை பராமரிக்கிறார். கல்லு எனும் இந்து முஸ்லிம்களின் அடக்க தளத்தை பராமரிக்கிறார். சிவசிங் என்ற இந்துவுக்கு ஜாஜகான்பேகம் எனும் முஸ்லீம் மனைவி. இப்படி இரண்டற கலந்தது இன்று நேற்றல்ல எண்ணூறு ஆண்டுகளாக இதுதான் நிலையாம்!
இப்படி ஒன்னு மண்ணாக[?] ஆனதுக்கு ஒரு வரலாறும் உண்டாம். எண்ணூறு ஆண்டுக்கு முன்னாள் இப்பகுதியை ஆண்ட சிங்க்பால்ஜாது என்பவர் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்.இருப்பினும்அவர் குடும்பத்தை சேர்ந்த சிலர் இஸ்லாத்திற்கு மாறவில்லையாம்! இவர்களின் வழிதோன்றல்கள்தான் இப்படி பெயர்தாங்கி முஸ்லிம்களாக ஒற்றுமை ,சமாதானம் என்ற பெயரில் மார்க்கத்தை மறந்து வாழ்கிறார்கள்.
இதை பார்க்கும்போது மார்க்கத்தை இந்த மக்கள் இரண்டாம்பட்சமாக கருதிவிட்டார்களா? மார்கத்தை அறிந்துகொள்ளும் எண்ணம் இவர்களுக்கு வரவில்லையா? அந்த பகுதிக்கு இதுவரை எந்தமுஸ்லீம் மேதைகளும் மார்க்கத்தை கொண்டு சேர்க்கவில்லையா? அல்லாஹ்தான் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.
109:1 (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்¢ எனக்கு என்னுடைய மார்க்கம்."
குறிப்பு;தினமலரில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த ஆக்கம் எழுதப்பட்டது.

இன்னும்கெடுவோம்நாங்கள்; என்னபந்தயம்..?

அல்லாஹ் தன் அருள்மறை மூலமும், தனது திருத்தூதர்[ஸல்] அவர்கள் மூலமும் சுவனத்திற்க்கான வழியை தெளிவாக அடையாளம் காட்டிய பின்னும் ஷைத்தானின் அடிச்சுவட்டை நன்மை என்றபெயரில் செய்துவரும் முஸ்லிம்களை நாம் பார்க்கிறோம்.

தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சிக்குப்பின் சற்றேமந்தமான தர்காவழிபாடு, ஷேய்க்அப்துல்லா ஜமாலி போன்றோரின் வருகைக்குப்பின் மீண்டும் புத்துணர்வு பெற்றுஉள்ளதை நாம் மறுக்கமுடியாது.சமீபத்தில் நடைபெற்ற ஏர்வாடி சந்தனகூட்டுகாட்சிகள் நமக்கு இதை படம்பித்து காட்டுகிறது.

கப்ருகளை பூசாதீர்கள்; கப்ருகளில் விளக்கு ஏற்றாதீர்கள்; கப்ருகளை உயரமாக ஆக்காதீர்கள் என்றெல்லாம் நபியவர்கள் கிளிப்பிள்ளைக்கு சொன்னதுபோல் சொல்லியிருந்தும் முஸ்லிம்களில் ஒருகூட்டம் மகான் மீது கொண்ட பக்தியின் காரணமாக நபியவர்களின் கூற்றை கண்டு கொள்வதில்லை.

இவர்களின் அறியாமை எங்கே கொண்டுபோய் நிறுத்தியுள்ளது என்றால், இந்து தளங்களில் வசதிபடைத்தோர் தங்கத்தால் சிலைசெய்து/ அல்லது சிலையின் உறுப்பில் ஒரு பாகத்தை செய்து வழங்குவர். அதுபோல ஆந்திராவை சேர்ந்த ஒரு ஏர்வாடி இப்ராஹீம் பாதுஷாவின் பக்தர்[முஸ்லிம்தான்] சமாதிக்கு பத்துலட்சம் செலவில் வெள்ளிக்கவசம் செய்து பொருத்தியுள்ளார். எத்துணையோ முஸ்லிம் ஏழைகள் ஒருவேளை சாப்பாடிற்கு வழியில்லாமல் கஷ்டப்படும் நாட்டில், இந்த தொழிலதிபர் அதைப்பற்றி கவலைப்படாமல் அல்லாஹ் வழங்கிய அருட்கொடையான செல்வத்தை அல்லாஹ்வும், அவன்தூதரும் காட்டித்தராத முழுக்க முழுக்க பிற மத கலாசாரத்தின் அடிப்படையில் செலவிடுகிறார் எனில், இதைப்பற்றி அல்லாஹ் கேட்கமாட்டான் என்ற என்னமா? அல்லது இப்ராஹீம் பாதுஷா பார்த்துக்கொள்வார் என்றநினைப்பா?
அல்லாஹ்வின் பாதையல்லாத வழியில் செலவிடுபவருக்கு அல்லாஹ் கூறும் உதாரணம்;

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
2:266
أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ لَهُ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاء فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمُ الآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.2:௨௬௬
அறியாமையில் உள்ள முஸ்லிம்களே திருந்துங்கள்! அல்லாஹ்,மற்றும் அவன் தூதரின் வழிக்கு திரும்புங்கள்!!

படம்நன்றி;தினத்தந்தி.