அறியாமைக் காலத்தில், அரபுக்கோத்திரங்களுக்கு மத்தியில், பகை வருமானால் அப்பகையை தலைமுறை தாண்டியும் நினைவில்கொண்டு பழிவாங்கும் பழக்கம் இருந்தது. ரசூல்[ஸல்] அவர்கள் மக்கா வெற்றியின்போது அப்பழக்கத்தை மக்களிடமிருந்து துடைத்தெரிந்தார்கள்.மக்கா வெற்றி கொள்ளப்பட்ட இரண்டாம் நாள் மக்களுக்கு நபி[ஸல்] அவர்கள் உரையாற்றினார்கள்.
அப்போது,குஜாஆ கிளையினர் மக்கா வெற்றியின் போது லைஸ் கிளையைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டனர். இதற்கு முன் அறியாமைக் காலத்தில் லைஸ் கிளையினர் குஜாஆ கிளையினரில் ஒருவரைக் கொன்றிருக்கின்றனர். அதற்குப் பழிவாங்கும் முகமாக இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். இது தொடர்பாக நபி (ஸல்) இவ்வுரையில் குறிப்பிட்டுக் கூறினார்கள்:
'குஜாஆ சமூகத்தினரே! கொலை செய்வதை கைவிடுங்கள். கொலை புரிவது பயன்தக்கதாக இருந்தால் இதற்கு முன்னர் புரிந்த கொலைகளே உங்களுக்குப் போதும். இதற்குப் பிறகு அந்த மாபாதகச் செயலை செய்யாதீர்கள். நீங்கள் கொன்று விட்டவர்களுக்குரிய (கொலைக்கான நஷ்டஈட்டை) இன்று நான் நிறைவேற்றுகிறேன். இதற்குப் பின் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையுண்டவன் உறவினர் இரண்டு வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று, கொலையாளியைப் பழிக்குப் பழி கொல்வது அல்லது அவரிடமிருந்து கொலைக்கான நஷ்டஈட்டை வசூல் செய்து கொள்வது." யமன் வாசியான அபூ ஷாஹ் என்பவர் 'அல்லாஹ்வின்தூதரே! இதனை எனக்கு எழுதிக் கொடுங்கள்" என்றார். 'இதனை இவருக்கு எழுதி வழங்குங்கள்" என நபி (ஸல்) தோழர்களுக்குக் கூறினார்கள். நூல் ;ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.
அதுமட்டுமன்றி, தன்னுடைய சிறிய தந்தையார் ஹம்சா[ரலி] அவர்களை கொடூரமாக கொன்ற ஹிந்த் என்ற பெண்ணையும் அவரது அடிமையான வக்ஷி என்பாரையும் நபி[ஸல்]அவர்கள் பழிவாங்காமல் மன்னித்தார்கள். பின்பு இவ்விருவரும் இஸ்லாத்தை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சகாபாக்களில் சிலர் சில நேரங்களில் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற என்னத்தை வெளிப்படுத்தியதும் உண்டு. ஆனால் அவ்வாறு பழிவாங்கவேண்டும் என நினைத்தது தன் சொந்த எதிரிகளை அல்ல. மார்க்கத்தின் எதிரிகளை!
பத்ர் போர் கைதிகள் பற்றி நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) 'அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்" என்று கூறினார்கள்.பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் 'கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?" எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஜா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஜா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்" என்று உமர் (ரழி) கூறினார்கள்.அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். ஈட்டுத் தொகை ஆயிரம் வெள்ளி நாணயங்களிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. மக்காவாசிகள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதீனாவாசிகளுக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, ஈட்டுத் தொகை கொடுக்க இயலாத மக்கா கைதிகள் மதீனாவை சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். அவ்வாறு சிறுவர்களுக்கு நன்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.உமர் (ரலி)கூறுகிறார்கள்; அபூபக்கர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்" என்றேன். அதற்கு நபி (ஸல்) 'ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது" என்றார்கள்.இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:
(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)
இன்று நாம் பகைமை பாராட்டுவது மார்க்கத்தின்அடிப்படையிலா ? இல்லை. நம் தலைவர்கள் ,எந்த அமைப்பை நல்ல அமைப்பு என்கிறார்களோ எவர்களை நல்லவர்கள் என்று கூறுகிறார்களோ அவர்களோடு நாமும் உறவாக இருக்கிறோம்., நம் தலைவர்கள் எந்த அமைப்பை சரியில்லை என்கிறார்களோ அந்த அமைப்பை திட்டித்தீர்க்கிறோம். அந்த அமைப்பை சேர்ந்தவர்களை கன்டால் சலாம் சொல்வது கூட கிடையாது. விதிவிலக்காக சிலர், மாற்று அமைப்பை சேர்ந்தவர்களோடு சகமுஸ்லிம்கள் என்ற ரீதியில் தொடர்பு வைத்திருப்பது தெரிந்தால் அவர் துரோகி குற்றம் சாட்டப்பட்டு நீக்கப்படுவார். ஆக, நம்முடைய நேசமும்-பிரிவும் அல்லாஹ்வுக்காக என்ற நிலைமாறி, நம்முடைய நேசமும்-பிரிவும் அபிமான தலைவருக்காக! என்ற நிலை வந்துவிட்டது. இந்த நிலை மாறவேண்டும். சத்திய சகாபாக்கள் போன்று உறவும்-பிரிவும் மார்க்கத்திற்காக என்ற நிலை வரவேண்டும். அதுதான் உண்மையான தவ்ஹீத்வாதிகளுக்கு இம்மை மறுமை பயனளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக