அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

தொலைந்த பிள்ளை கிடைத்தது; ஆனால் மார்க்கம்....?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

''விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான  (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கே சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை [இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

மேலும், அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான] இயற்கை
மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.[நூல்;புகாரி எண்; 1358 ]
 
மேற்கண்ட நபிமொழியை  உண்மைப்படுத்தும் சம்பவம் ஒன்றை சமீபத்தில் செய்திகளில் பார்த்தோம். ஆந்திராவை சேர்ந்த முரான்பாய்- பேகம் தம்பதிகளின் மகன் சபீர். முன்பு சபீருக்கு 5 வயது. அப்போது வீட்டு அருகேயுள்ள ரெயில் நிலையத்தில் சபீர் விளையாடிக் கொண்டிருந்தான். ரெயிலில் ஏறி விளையாட ஆசை ஏற்பட்டதால் அங்கு நின்று கொண்டிருந்த ரெயிலில் ஏறினான்.
 
அந்த ரெயில் திடீரென கிளம்பியது. இதனால் சபீர் அதிர்ச்சி அடைந்தான். ரெயில் வேகமாக சென்ற தால் அவனால் கீழே இறங்க முடியவில்லை. அழுது கொண்டே ரெயிலில் அமர்ந் திருந்தான். இதற்கிடையே அந்த ரெயில் சென்னை வந்தது. ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய சபீருக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை.
 
சபீர் அழுது கொண்டிருப்பதை பார்த்து ரெயில் நிலையத்தில் நின்றவர்கள் அவனை ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். அந்த தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கிய சபீர் 10-ம் வகுப்பு வரை படித்தான். அதன் பிறகு தொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சபீர் கிடைத்த வேலைகளை பார்த்து வயிற்றை கழுவி வந்தார்.
 
தற்போது 21 வயதான சபீர், தனக்கு அறிமுகமாவ்ர்கள் மற்றும் தன்னார்வ   தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பெற்றோரை தேடும்  படலத்தில் இறங்கினார்.  சபீர் தனது 5 வயதில் இருந்த ஞாபகத்தை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தில் தனது வீடு இருக்கும் இடத்தை கூறினார். அதன் மூலம் 1 வாரம் கடுமையாக போராடியதன் மூலம் சபீரின் பெற்றோர் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து சபீரின் தந்தை முரான்பாய், தாய் பேகம் ஆகியோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெற்றோரிடம் சபீர் ஒப்படைக்கப்பட்டார்.  
 
மகனை பார்த்த பெற்றோரும், பெற்றோரை பார்த்த சபீரும் உணர்ச்சி பெருக்கத்தில் காணப்பட்டனர். அவர்கள் ஆனந்த கண்ணீரில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் சபீர் கூறியதுதான் கவனிக்கவேண்டிய அம்சமாகும்.  ''எனது பெற்றோர் எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்திருந்தேன். எனது வேண்டுதல் பலித்து விட்டது'' என்றார். அதோடு ஐயப்பனுக்கு மாலை அணிந்து, அந்த தோற்றத்தில் சபீர் இருக்கிறார். மகனின் இந்த மன[மத]மாற்றத்தை பெற்றோரும் கண்டுகொண்டதாகவோ, கவலைப் பட்டதாகவோ தெரியவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
 
சபீர் பெற்றோரின் அரவணைப்பில்,அறிவுரையில் வாழும் வாய்ப்பை சிறுவயதிலேயே இழந்த காரணத்தால், அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள யாரை கரம்பற்றினாரோ, அவர்களின் அடிப்படையில்  அவரது மார்க்கமும் அமைந்துவிட்டது. இந்த சம்பவத்தின் மூலம்  அறியவேண்டியது என்னவெனில், பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல்  கவனம் செலுத்தி, அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கவேண்டும்.
 
அடுத்து சமுதாய அமைப்புகள், ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை  முன்மாதிரியாக கொண்டு, 'அபய இல்லங்கள்' ஏற்படுத்தி, பெற்றோரை பிரிந்து வரும் சிறார்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதன் மூலம் சமூக சீர்கேட்டிலிருந்து அவர்களை  பாதுகாத்து இஸ்லாத்தில் அவர்கள் நிலைப்பெற உதவவேண்டும்.
 
ஹூம்..! என்ன செய்ய! நம்ம சமுதாயத்தில் இதைப்பத்தியெல்லாம் கவலைப்படுபவர்களை  விட, சக சகோதரனின் அமைப்பை ஆட்டயப் போடவும், அதற்காக சமுதாயத்தின் பணத்தை கோர்ட்டில்  கொண்டுபோய் கொட்டி, நினைத்ததை சாதிப்பதைப் பற்றியும்தானே   கவலைப்படுகிறார்கள். ஆனாலும் இவர்கள் சமுதாயத் தலைவர்களாம்! எல்லாம் அவன் செயல்.

கருத்துகள் இல்லை: