அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 5 ஜூன், 2012

சுற்றுச்சூழலும்-இஸ்லாமும்!

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் என்பது நீர்-நிலம்-ஆகாயம் ஆகியவற்றை தூய்மையானதாக, பாதுகாப்பானதாக ஆக்கிக்கொள்வதாகும். பொதுவாக, நமது முன்னோர்கள் முதிர்ந்த வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் எனில், அவர்கள் உண்ட உணவு கலப்படமற்றதாக இருந்து. மேலும், அவர்கள் சுற்றுச்சூழல் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். நாம் வரலாறுகளை படிப்போமானால் அதில், அசோகர் எனும் மன்னர் சாலைகளின் இரு புறங்களிலும் மரங்களை நட்டார் என்ற செய்தியை காணலாம். அசோகர் எதற்காக மரங்களை நட்டினார்..? மரங்களின் மூலம்தான் உண்மையான நிழலும், தூய்மையான காற்றும், மழையையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இன்று என்ன நிலை..? மரங்களின் நிலையோ பரிதாபம்! அரசியல் பிரச்சினை என்றாலும் மரம் வெட்டுகிறார்கள். ஊர் பிரச்சினை என்றாலும் மரத்தை வெட்டி நடுரோட்டில் போட்டு போக்குவரத்தை தடுக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் மாநாடுகளின் போது ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகிறது. தங்களின் சொந்த ஆதாயத்திற்காக கானகங்களை அழிக்கும் வீரப்பன்களும் இருக்கிறார்கள். இதுபோக எப்போதும் பசுமையாக இருக்கும் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி விட்ட நிலை. மேலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும், ஆறுகள், ஏரிகள், குளங்கள் ஆகியவைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கரத்தில் மாட்டி, 'சிறுத்த இடையாள்' போல் சிறுத்து காட்சியளிக்கிறது.

மேலும், காற்றை மாசுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுவது பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையாகும். ஆயிரம் ரூபாயோடு சென்றால் அடுத்தநாள் கார் சாவி கைக்கு வரும் வகையில் அதிகரித்துவரும் மோட்டார் 'லோன்' களால் அவசியமானவர்கள் மட்டுமன்றி, அந்தஸ்த்துக்காகவும் நான்கு-இரண்டு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல், பூமி சூடாகுதல், வாகனங்கள் விடும் புகையால் காற்று மாசுபடுதல் ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது.

மேலும், காற்றை மாசுபடுத்தும் அடுத்தகாரணி புகையை வெளிப்படுத்தும் வேலையை செய்யும் பட்டாசு கொளுத்துதல், போகி கொளுத்துதல் போன்றவைகளாகும். நாமறிந்தவரை, ஒருகாலத்தில் பட்டாசு என்பது பண்டிகை அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது மட்டும் கொளுத்தப்பட்ட நிலை மாறி, இன்று காத்து குத்து தொடங்கி கருமாதிவரை; வேட்புமனு தாக்கல் முதல் பதவிக்காலம் முடியும் வரை; தலைவரின் பிறந்த நாள் தொடங்கி, தலைவர் தன் சொந்த கட்சி ஆபீசுக்கு வரும் நாள், பொதுக்கூட்டத்தில் வீர[?] உரையாற்றும் நாள் என்று ஏறக்குறைய எல்லா நாட்களிலும் ஏதேனும் ஒரு மூலையில் வெடி சத்தம் கேட்காத நாள் இல்லை எனலாம். தங்களின் சந்தோசத்திற்காக பட்டாசு கொளுத்துபவர்கள், தங்களின் இந்த செயலால் காற்று மாசுபடுவதை பற்றியோ, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை பற்றியோ கவனத்தில் கொள்வதில்லை.

அடுத்து சுற்றுச்சூழலை கெடுப்பது ஆலைகளின் கழிவு நீரை ஆறுகளில், ஏரிகளில் கலக்க செய்யும் ஆலைகளை பெரும்பாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாதது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலைகளின் கழிவு நீர் ஆற்றில் கலப்பதால், நீர் மாசுபடுவதால் அந்த நீரில் வாழும் மீன்கள் செத்து மடிவதும், அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்ப்பட்டதையும் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பத்திரிக்கைகளில் செய்திகளை காணமுடியும். இந்த நிலை மாற , ஆலைகள் விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு நீர் நிலைகள் பாதிக்காதவாறு கவனம் செலுத்தவேண்டும்.

அடுத்து சுற்றுச்சூழலை கெடுப்பது மக்கள் தங்களின் கழிவு பொருட்களை தெருவில் போடுவதாகும். நமது வீட்டை நாம் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க எண்ணுகிறோமோ, அதுபோல் நாம் வசிக்கும் தெருக்களும் சுத்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வருமானால் தெருக்கள் தூய்மையாக காட்சியளிக்கும். அரபுநாடுகள் தூய்மையாக இருப்பதற்கு காரணம், தூய்மை ஈமானில் ஒரு பகுதி என்று இஸ்லாம் வழிகாட்டிய காரணத்தால், தங்கள் வீட்டு கழிவுகளை தெருக்களில் வீசி எரியாமல், பாலிதீன் கவர்களில் கட்டி அதை குப்பை தொட்டியில் போடுகிறார்கள். மேலும் அரசு, ஒவ்வொரு வீட்டு அருகாமையிலும் குப்பை வாளிகளை வைத்து அதில் சேரும் குப்பைகளை மாநகராட்சி வாகனங்கள் மூலம் தினம் தோறும் அகற்றுவதால், நகரம் தூய்மையாக இருப்பதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டிலோ குப்பைகளை தினந்தோறும் அப்புறப்படுத்துவதில்லை. அப்படியே அப்புறப்படுத்தினாலும் ரோட்டில் பாதியை சிதறிவிட்டு செல்லும் வாகனங்களை பார்க்கிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

இவைகளுக்கெல்லாம் இஸ்லாம் அற்புதமான வழியை காட்டி அவ்வாறு செய்வதற்கு நன்மையும் தருவதாக கூறுகின்றது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, தூய்மையை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக்கி தூய்மையை ஊக்குவிக்கிறது. அதோடு ஒரு முஸ்லிம் சுற்றுச்சூழல் விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதை பாருங்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.[நூல்;புஹாரி]

மரத்தை வெட்டி சுற்றுச்சூழலை கெடுப்பவர்களுக்குமத்தியில், மரத்தை நடுவதை நன்மைக்குரியதாக சொல்லிக்காட்டி மனிதனின் எல்லாவிதமான நல்வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

கருத்துகள் இல்லை: