அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 26 ஜூன், 2009

சத்திய ஸஹாபாக்களுக்கு சமமாக முடியுமா...?

தமிழகத்தில் அல்குர்ஆன்-ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டபோது, நபி[ஸல்] அவர்களோடு இருந்த நபி[ஸல் அவர்களுக்கு பக்கபலமாக இருந்த, பல்வேறு தியாகங்களை செய்த சஹாபாக்களை பின்பற்ற மாட்டீர்களா? என்று மத்ஹபை பின்பற்றுபவர்கள் கேள்வி எழுப்பியபோது, சஹாபாக்கள் தியாக சீலர்கள். அவர்களில் பலர் சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்கள், அவர்கள் சிறந்த தக்வாதாரிகள் அவர்களை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் அவர்களை பின்பற்றமாட்டோம் என்று நளினமாக பதில் சொல்லப்பட்டது. நாளடைவில் சஹாபாக்களை கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் பெயரோடு சேர்த்துக்கூறப்படும் 'ரலியல்லாஹுஅன்ஹூ' என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டு, அபூபக்கர் என்ன சொன்னார்னா, உமர் என்ன செஞ்சார்னா என்று சாதரணமாக பேசத்தொடங்கி பரிணாம வளர்ச்சியாக,

*அம்ரு இப்னு ஆஸ்[ரலி]-கிரிமினல்.

அபூ மூஸா அல் அஸ்ஸரி[ரலி]- ஏமாளி.

அலீ[ரலி]- எடுப்பார் கைப்பிள்ளை.

முஆவியா[ரலி] பதவி ஆசை பிடித்தவர்.

இவ்வாறாக இன்னும் பல சஹாபாக்களை வரலாறு என்ற பெயரில் விமர்சித்து, உச்சகட்டமாக சஹாபாக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான் என்ற அளவில் சகாபாக்களை பற்றிய மதிப்பீடு சமுதாயத்தில் இன்று விதைக்கப்பட்டுள்ளது.

உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பதைப்போல என்னதான் நாம் அமலில் மூழ்கியிருந்தாலும், அந்த சத்திய சீலர்களுக்கு சமமாக முடியாது எனும்போது, அவர்களை விட நாம் எப்படி மேன்மக்களாக ஆகமுடியும்? நாம் வாழ்க்கையில் என்றோ, எப்போதோ ஒரு தியாகம் செய்வோம். ஆனால் தியாகமே வாழ்க்கையாக கொண்ட சகாபாக்களின் வரலாற்றை எடுத்தெழுத எண்ணினால் எமது ஆயுள் போதாது. எனவே சகாபாக்களின் சிறப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.

தவ்ராத்திலும், இன்ஜீலிலும் சத்திய சஹாபாக்கள்;مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவெ தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.[48:29]


தவ்ராத்திலும், இன்ஜீலிலும் உங்களையும் என்னையும் பற்றி கூறப்பட்டுள்ளதா? இல்லையே? நபி[ஸல்] அவர்களோடு இருந்த அந்த உத்தம தோழர்களை அல்லவா அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். மேலும், காபிர்களிடம் கடுமையானவர்களாக, மூமீன்களுக்கு மத்தியில் இரக்கமுடையவர்களாக இருக்கக்கூடிய அந்த உயந்த தோழர்கள் எங்கே? சக முஸ்லிம்களோடு கருத்து வேறுபாடு வந்துவிட்டால் அவர்களை பரம வைரிகளாக கருதும் நாம் எங்கே? எப்படி சமமாக முடியும்? எப்படி சஹாபாக்களை விட சிறந்தவர்களாக முடியும்?

மன்னிப்பு வழங்கப்பட்ட மேதைகள்;لَقَد تَّابَ الله عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِن بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَؤُوفٌ رَّحِيمٌ
நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.[9;117 ]


சகாபாக்களில் சிலருக்கு தடுமாற்றம் வந்தபோதிலும் , அவர்கள் கஷ்ட காலத்தில் நபியவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டதாக கூறுகின்றான்! உங்களுக்கும் எனக்கும் இந்த உத்திரவாதம் இருக்கிறதா? எப்படி அந்த சத்திய சீலர்களோடு நாம் சமமாக முடியும்? எப்படி அவர்களைவிட மேன்மக்களாக ஆகமுடியும்?

சகாபாக்களே சிலர் சிலருக்கு சமமாக மாட்டார்கள்;وَمَا لَكُمْ أَلَّا تُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا يَسْتَوِي مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُوْلَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِينَ أَنفَقُوا مِن بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.[57:10 ]

மக்கா வெற்றிக்கு முன்னாள் செலவு செய்து போரிட்டவர்களுடன், மக்கா வெற்றிக்கு பின்னால் செலவு செய்து போரிட்டவர்கள் சமமாக முடியாது எனும்போது, இஸ்லாத்திற்காக ஒரு துளி ரத்தம் சிந்தாத இன்னும் சொல்லப்போனால் எதிரிகளின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாதியளவு ஆகும் வரை போர் நம்மீது கடமையில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிற நாம் , எப்படி அந்த தியாக சீலர்களுக்கு சமமாக முடியும்? எப்படி அவர்களைவிட நாம் மேன்மக்களாக ஆகமுடியும்?

உண்மையான மூமீன்கள் அந்த மேதைகள்;وَالَّذِينَ آمَنُواْ وَهَاجَرُواْ وَجَاهَدُواْ فِي سَبِيلِ اللّهِ وَالَّذِينَ آوَواْ وَّنَصَرُواْ أُولَـئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَّهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்குப் புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும்தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்-அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.[8:74

முஹாஜிர்களையும்-அன்ஸாரிகளையும் உண்மையான மூமீன்கள் என்று அல்லாஹ் உத்திரவாதம் அளித்துவிட்டான். நமக்கு அத்தகைய உத்திரவாதம் உண்டா? நாம் உண்மையான மூமீன்களா? போலிகளா? என்று மறுமையல்லவா தீர்மானிக்கும். நம்பிக்கையாளர்கள் என்று வரையருக்கப்பட்டவர்களும், நம்பிக்கை கேள்விக்குறியாக நிற்பவர்களும் எப்படி சமமாக முடியும், எப்படி மேன்மக்களாக முடியும்?

வாக்குறுதி மாறா வாய்மையாளர்கள்;مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُم مَّن قَضَى نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.[33:23 ]

சஹாபாக்கள் கொடுத்த வாக்குறுதிகள் அது அவர்களின் உயிர் விஷயமாக இருந்தாலும் அதை நிறைவேற்றிய வாய்மையாளர்கள் என்று அல்லாஹ் சான்று பகர்கிறான். நம்மில் யாரேனும் கொடுத்த வாக்குறுதி அத்தனையும் நூறு சதவிகிதம் நிறைவேற்றியதாக கூறமுடியுமா? வாய்மையாளர்களும்-வாய்மையில் குறைபாடு உள்ளவர்களும் சமமாக முடியுமா? வாய்மையாளர்களைவிட மேன்மக்களாக ஆகமுடியுமா?

சிறந்த சமுதாயம் என்று சான்று பெற்றவர்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் சொல்லும்படி கேட்கப்படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.[புஹாரி]

மூன்று சிறந்த தலைமுறையில் முதலிடத்தை பிடித்துள்ள சகாபாக்களோடு, பல தலைமுறை கடந்து வந்த நாம் சமமாக முடியுமா? மேன்மக்களாக ஆகமுடியுமா?போட்டியிலே கலந்துகொள்ளாத ஒருவர், முதல் பரிசு வாங்கியவரும்-நானும் சமம். அல்லது முதல் பரிசு வாங்கியவரைவிட நான் மேலானவன் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளமுடியுமா?

எட்டிப்பிடிக்க முடியா உச்சம் அவர்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. [புஹாரி]

இறைவனின் பாதையில் தங்களின் உடலாலும், பொருளாலும் தியாகம் செய்த அந்த உத்தமர்களின் இடத்தை நாம் உஹது மலையளவு தர்மம் செய்தாலும் எட்டிப்பிடிக்க முடியாது எனும் போது எவ்வாறு மேன்மக்களாக ஆகமுடியும்?

சகாபாக்களின் தவறுகள் அலட்சியம் செய்யப்படவேண்டும்;فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لاَنفَضُّواْ مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.[3:159 ]

மனிதர்கள் என்ற முறையில் சஹாபாக்கள் ஏதேனும் தவறு செய்தால்[குற்றவியல் நீங்கலாக] அதை அலட்சியப்படுத்துவதோடு, அவர்களுக்காக பாவமன்னிப்பு தேடுமாறு தனது நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான் எனில், அந்த சகாபாக்களின் தவறுகளை பட்டியல் போடுவதும், அவர்களின் விரல்விட்டு என்னும் அளவுக்குள்ள தவறுகளோடு தங்களை சம்மந்தப்படுத்தி ஒப்பிட்டு பார்த்து சஹாபாக்களை விட நாங்கள் மேன்மையானவர்கள் என்று கருதுவதும் மேற்கண்ட திருமறை வசனத்திற்கு அப்பட்டமான முரணாகும்.

இறுதியாக சஹாபாக்கள் சில தவறுகள் செய்துள்ளார்கள் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால் அந்த தவறுகளை அவர்கள் உணர்ந்தபோது அதற்காக அவர்கள் கைசேதப்பட்டுள்ளார்கள். இதற்கு பல சான்றுகளை கூறலாம்.

ரஸூல்[ஸல்] அவர்கள் மரணித்தவுடன் கொள்கை குழப்பம் தலை தூக்கியது. அதில் பிரதானமாக உமர்[ரலி] அவர்கள் இருந்தார்கள் என்ற கருத்து சிலரால் கூறப்படுகிறதே! நபி[ஸல்] அவர்களை தங்களின் பெற்றோரை/மனைவி-மக்களை விட, ஏன் தங்களின் உயிரைவிட அதிகமாக நேசித்தவர்கள் சஹாபாக்கள். அதிலும் குறிப்பாக உமர்[ரலி]அவர்கள் நபியவர்கள் மீது அளவுகடந்த அன்புடையவர்கள். அப்படிப்பட்ட நபியவர்களின் மரண செய்தியை உமர்[ரலி]அவர்களால் ஜீரணிக்கமுடியாமல் சொன்ன வார்த்தைதான் நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது. பின்பு அபூபக்கர்[ரலி]அவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை ஒதிக்காட்டியவுடன் உமர்[ரலி] தன்னை திருத்திக்கொண்டார்களா? இல்லையா?

ஊன்னா, ஆயிஷா[ரலி] அவர்களுக்கும்- அலி[ரலி] அவர்களுக்கும் நடந்த போரை சொல்லிக்காட்டுகிறோமே! அதை வைத்து அவர்களை மட்டமானவர்களாகவும், நம்மை மேன்மக்களாகவும் கருதுகிறோமே! அந்தபோர் முடிவில் நடந்தது என்ன? அன்னை ஆயிஷா[ ரலி] அவர்கள் தோற்றவுடன், தன்னை எதிர்த்து போரிட்டவர்- தன்னுடைய எதிரி என்றெல்லாம்[நம்மை போல் வஞ்சம் வைக்காமல்] கருதாமல் அலீ[ரலி] அவர்கள், அன்னையை கண்ணியமாக பத்திரமாக அனுப்பவில்லையா? அலீ[ரலி] அவர்களுக்கெதிராக போர் தொடுத்தது தவறு என்று அன்னையவர்கள் அழுது வருந்தவில்லையா?

இவ்வாறாக சஹாபாக்கள் தவறு செய்தாலும், பின்பு அந்த தவறை உணர்ந்து வருந்தியிருக்கிறார்கள்.திருந்தியிருக்கிறார்கள். சுமார் தொண்ணூறு சதவிகித பாவத்தையும்-சுமார் பத்து சதவிகித அமல்களையும் செய்யும் நாம், தொன்னூற்றி ஒன்பது சதவிகித நற்செயலையும் ஒரு சதவிகித தவறையும் செய்த நன்மக்களோடு எந்த காலத்திலும் ஒப்பாகவே முடியாது! ஒப்பாகவேமுடியாது!! ஒப்பாகவேமுடியாது!!!


திங்கள், 22 ஜூன், 2009

இதுவல்லவா பிள்ளைப்பாசம்...?

திருமணமான ஒவ்வொரு தம்பதியரும் அவர்களின் வாரிசு வயிற்றில் கருவானவுடன் அந்த தம்பதியர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டுவதில் தொடங்கி அந்த குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அக்கறை செலுத்துகிறார்கள். எல்.கே.ஜி. சீட்டு தன் குழந்தைக்கு கிடைத்த்துவிட்டால் சொர்க்கத்தின் அனுமதிச்சீட்டு கிடைத்தது போன்று ஆனந்தப்படுகிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்த பிள்ளைக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்கிறார்கள். இதுபோக அந்த பிள்ளையின் வருங்கால நலனுக்காக, இஸ்லாம் அனுமதிக்காத பல்வேறு பாலிசிகளையும் சேர்த்து வைக்கிறார்கள் . தன் பிள்ளைக்கு சிறு நோய் என்றால் துடித்துப்போகிறார்கள். அந்த நோய் நீங்கும் வரை இரவு-பகல் கண்விழித்து கடமை செய்கிறர்கள். இவ்வாறெல்லாம் தன் பிள்ளைமீது பாசம் காட்டும் பெற்றோர், அக்குழந்தையின் உலக நலனில் கவனம் செலுத்தும் பெற்றோர் அக்குழந்தையின் மறுமை நலனை பற்றி கவலைப்பட்டதுண்டா? கணக்கிட்டு பார்த்தால் சொற்பமான அளவுக்குத்தான் பிள்ளையின் மறுமை நிலையை பற்றி கவலைப்படும் பெற்றோர் உள்ளனர். ஆனால் நமது ஆதித்தந்தை ஆதம்[அலை] அவர்கள், நரகம் செல்லும் தம் சந்ததிகளை எண்ணி கண்ணீர் வடித்தார்கள்;


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (வானவர்) ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்தார். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை "ஸம்ஸம்" நீரால் கழுவினார். பிறகு ஞானமும் இறைநம்பிக்கையும் நிரம்பிய, பொன்னாலான தாம்பாளத்தோடு என்னிடம் வந்து, அதிலிருந்து என் நெஞ்சினுள் ஊற்றி மூடினார்.பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டு விண்ணில் ஏறினார். பூமியின் (முதல்) வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானக் காவலரிடம், "திறப்பீராக!" என்று ஜிப்ரீல் கூறினார். "யார் அது?" எனக் காவலர் கேட்டார். அவர் "(நான்)ஜிப்ரீல்" என்று ஜிப்ரீல் பதிலளித்தார். "உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?" என்று காவலர் கேட்டார். "என்னுடன் முஹம்மத் (ஸல்) வந்திருக்கிறார்" என்று ஜிப்ரீல் பதிலளித்தார். "அவருக்கு ஆளனுப்பப் பட்டிருந்ததா?" என்று காவலர் கேட்க, ஜிப்ரீல் "ஆம்" என்று பதிலளித்தார். முதல் வானக் காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்துக்குள் உயர்ந்து சென்றபோது அங்கு தமக்கு வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் (பிரிந்து) புடைசூழ்ந்திருக்க ஒருவர் இருந்தார். அவர் தமது வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (என்னைப் பார்த்ததும் அவர்,) "நற்குண நபிக்கு நல்வரவு! நற்குண மகனுக்கு நல்வரவு!" என்று என்னை வரவேற்றார். "யார் இவர் ஜிப்ரீலே?" என்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டேன். "இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் (அலை). இவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள், அன்னாரின் வழித்தோன்றல்கள். வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள்; இடப்பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப்பக்கம் பார்க்கும்போது சிரிக்கிறார். இடப்பக்கம் பார்க்கும்போது அழுகிறார்" என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்.[ ஹதீஸ் சுருக்கம். நூல்; முஸ்லிம்]


நபிகளாரின் இந்த பொன்மொழி உணர்த்துவதென்ன? நம்மை பார்த்திராத ஆதம் [அலை] அவர்கள், நாம் அவர்களின் சந்ததி என்ற ஒரே காரணத்திற்காக நம்மில் ஒரு பிரிவினர் நரகம் செல்வதை எண்ணி கண்ணீர் வடித்து கைசேதப்படுகிறார்கள் எனில், பத்து மாதம் சுமந்து, பாலூட்டி பாராட்டி சீராட்டி வளர்த்த நம் பிள்ளை நாளை நரக நெருப்பில் கருகாமல் இருக்க நாம் செய்த காரியம் என்ன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்கவேண்டும். வல்ல இறைவன் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَமுஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.[66:6 ]


இனியேனும் நம் பிள்ளைகளின் மறுமை வாழ்க்கையில் கவனம் செலுத்துவோமா...?

வியாழன், 18 ஜூன், 2009

எங்கே எமது அடையாளம்..?

حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏‏قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَا تَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَكَبَّرْنَا ثُمَّ قَالَ أَمَا تَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَكَبَّرْنَا ثُمَّ قَالَ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ وَسَأُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ مَا الْمُسْلِمُونَ فِي الْكُفَّارِ إِلَّا كَشَعْرَةٍ بَيْضَاءَ فِي ثَوْرٍ أَسْوَدَ أَوْ كَشَعْرَةٍ سَوْدَاءَ فِي ثَوْرٍ أَبْيَضَ ‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?" என்று கேட்டார்கள். அப்போதும் நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, "சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (எனது சமுதாயத்தவர்) இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அதைப் பற்றி (ஓர் உவமை) உங்களுக்குத் தெரிவிக்கிறேன்: இறைமறுப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கறுப்புக்காளை மாட்டி(ன் உடலி)லுள்ள வெள்ளை முடியைப் போன்று - அல்லது - வெள்ளைக்காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவர்)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). [நூல்;முஸ்லிம் ஹதீஸ் எண்: 324

ஹதீஸ் எண்: 325 வது செய்தியில், இணைவைப்பாளர்களுடன் ஒப்பிடும் போது என்றும், ஹதீஸ் எண்: 326 வது செய்தியில், மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும் போது என்றும் இடம்பெற்றுள்ளது.

மேற்கண்ட நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனித்து விளங்கவேண்டும் என்பதை நபியவர்கள் உதாரணத்தோடு குறிப்பிடுகிறார்கள் . அதாவது முழுக்க-முழுக்க வெள்ளை நிறத்திலான காளை மாட்டில் ஒரே ஒரு கருப்பு முடி இருந்தால் எவ்வாறு தனித்து பளிச்சென்று தென்படுமோ அதுபோன்று, ஒரு முஸ்லிமை பார்த்தால் அவரைப்பற்றி விசாரிக்காமலேயே அவர் முஸ்லிம்தான் என்று அடையாளம் காணும் வகையில் இருக்கவேண்டும். முஸ்லிம் என்பதன் அடையாளமாக பல விஷயங்கள் மார்க்கத்தில் கூறப்பட்டிருந்தாலும், தோற்றத்தில் ஒன்றையும், அமலில் ஒன்றையும் இந்த ஆக்கத்தில் மேற்கோள் காட்டுகிறோம்.

தொழுகை;


حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكُ الصَّلَاةِ
"நிச்சயமாக ஒருவரது இணைவைப்புக்கும் இறைமறுப்புக்கும் அடையாளம் என்பது தொழுகையைக் கைவிடுவதுதான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).[முஸ்லிம் ஹதீஸ் எண்: 117

நான் ஒரு முஸ்லிம். இனைவைப்பிலோ, அல்லது இறை மறுப்பிலோ எனக்கு உடன்பாடில்லை என்று அடையாளம் காட்டுவது தொழுகை மூலமாகத்தான். எப்படி எனில், ஒரு முஸ்லிமல்லாதவருடன் நாம் அளவளாவிக்கொண்டிருக்கையில், அருகில் உள்ள பள்ளியில் இருந்து அல்லாஹ்வை வணங்க அதான் எனும் அழைப்பு விடுக்கப்பட்டவுடன், நாம் பள்ளியை நோக்கி சென்றால் அங்கே நாம் முஸ்லிம் என அடையாளப்படுத்துகிறோம். அல்லது பாங்கின் ஓசையை கேட்டும்' எதன் மீதோ மழை பெய்தது' போன்று நாம் அரட்டை கச்சேரியை தொடர்ந்தால் அந்த இடத்தில் முஸ்லிமல்லாதவருக்கும்-நமக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இன்று முஸ்லிம்களில் தொழாதவர்களின் எண்ணிக்கைதான் பெரும்பான்மையாக உள்ளது. எனவே பெயரை அரபியில் வைத்துக்கொள்வதால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாகிவிட முடியாது. இறை மறுப்பாளர்கள் மற்றும் இனைவைப்பாளர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் தொழுகையை நிறைவேற்றாதவரை இவர்களும் அவர்களை சார்ந்தவர்களே.

தாடி;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். [நூல்;buhaari எண் 5892]

தாடி வளர்ப்பது நபியவர்களின் வழிமுறையாகவும், இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யக்கூடியதாகவும், முஸ்லிமின் அடையாளமாகவும் திகழ்கிறது. நபி[ஸல்] அவர்கள் மட்டுமன்றி, பெரும்பாலான சகாபாக்களும் தாடி வைத்திருந்ததாக ஹதீஸ்களில் காணமுடிகிறது .ஆனால் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மில் பெரும்பாலோர் தாடி வைப்பதில்லை. மேலும், தாடி வைத்திருக்கும் சொற்பமான நபர்களை, 'ஏண்டா பரதேசி மாதிரி தாடி வளத்துக்கிட்டு அலையுற' என்று ஏளனமாக கேலி செய்பவர்களும் சமுதாயத்தில் உண்டு. வெள்ளிக்கிழமை மட்டும் முஸ்லிமாக மாறும்[ஜூம்மா மட்டும் தொழுபவர்கள்] இவர்கள், ஜூம்மா தொழுகைக்கு செல்லும் முன்பு அந்த வாரத்தில் வளர்ந்த சுன்னத்தான தாடியை மழுங்க சிறைத்து விட்டே பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது போக ஒரு காலத்தில் கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில் தாடி வைத்தவர்களை போலிஸ் சந்தேக கண் கொண்டு பார்த்தபோது அதற்கு பயந்து தாடியை எடுத்தவர்களும் உண்டு. தனது அபிமான அரசியல் தலைவர்கள் /நடிகர்களின் மேனரிசத்தை கடைபிடிப்பதில் ஆர்வம் காட்டும் முஸ்லிம்களில் சிலர் நமது உயிரினும் மேலான தலைவர் நபி[ஸல்] அவர்களின் வழிமுறையான தாடி வளர்ப்பதை கடைபிடிப்பதில்லை. எனவே நாம் சுட்டிக்காட்டியவைகள் மட்டுமன்றி, நம்முடைய அன்றாட வாழ்க்கை தொடங்கி, திருமணம் வியாபாரம் பழக்க வழக்கங்கள் இப்படி எல்லாவற்றிலும் நாம் 'முஸ்லிம்' என்ற தனித்துவத்தை நிலைநாட்ட முன்வரவேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை முஸ்லிம்களாக வாழ்ந்து, முஸ்லிம்களாகவே மரணிக்க செய்வானாக!

புதன், 17 ஜூன், 2009

இறைவனின் பார்வையில் மிகப்பெரும் பாவம் எது..?

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ شُرَحْبِيلَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏‏قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَيُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا ‏وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَاللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ

oru மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பார்வையில் மிகப் பெரிய பாவம் எது?"கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை வைப்பதுதான் (பெரும் பாவம்)" என்று பதிலளித்தார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். அவர்கள், "உன் பிள்ளை உன்னுடன் (உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். "பிறகு எது?" என்று அவர் கேட்க, "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இக்கூற்றை மெய்பிக்கும் வகையில், "மேலும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி வேறெந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் உரிமையின்றி (அநியாயமாகக்) கொலை செய்ய மாட்டார்கள்; மேலும், விபச்சாரம் செய்ய மாட்டார்கள். யாரேனும் இப்பாவச் செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்" எனும் (25:68ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
ஆதார நூல்;முஸ்லிம்.


இந்த பொன்மொழியில் நபி[ஸல்]அவர்கள், இறைவனின் பார்வையில் பிரதானமாக கருதப்படும் மூன்று பாவங்களை குறிப்பிடுகிறார்கள். துரதிஷ்டவசமாக இந்த மூன்று பாவங்களும் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோரிடம் இருப்பதை காணலாம்.

இணைவைப்பு;

இறைவனுக்கு இணைவைப்பதை பற்றியும், அதன் பலன் நிரந்தர நரகம் என்று அல்-குர்ஆன் தெளிவாக அறிவுருத்தியபின்னும், பன்னெடுங்காலமாக அறிஞர்கள் பலர் உபதேசங்கள் செய்த பின்னும் தர்காக்களும் குறைந்தபாடில்லை. அங்கு போய் சரணடையும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. இதற்கு காரணம் இறையச்சமின்மையும், தர்கா வழிபாடு ஒரு பெரும்பாவம் என்ற அறியாமையும்தான்.

குழந்தைகளை கொல்வது;

அன்றைய அறியாமை காலத்தில் பெண் குழந்தை பிறந்தவுடன் அதை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அதை அடியோடு ஒழித்துக்கட்டியது. இன்று நவீன உலகில் வயிற்றில் வளர்வது ஆனா? பெண்ணா? என்பதை அறியும் வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு அறிந்து வயிற்றில் வளரும் சிசு பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வயிற்றுக்கு உள்ளேயே சமாதி ஆக்குவது. மேலும், இரண்டு குழந்தை பெறுவதுதான் நாகரிகம் என்று கருதி நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குழந்தை பெறுவதை தடுப்பது. மேலும் வறுமைக்கு பயந்து குழந்தை பெற்றுக்கொள்வதை குறைத்துக்கொள்வது. இவையாவும் ஒருவகை சிசுக்கொலைதான். எப்படி எனில், ஒரு தம்பதியருக்கு எத்துனை குழந்தைகள் பிறக்கவேண்டும் என்று தீர்மானித்து இறைவன் அத்துணை குழந்தைகளை கருவாக செய்கிறான். அல்லாஹ்வால் கருவாக்கப்பட்ட குழந்தைகளை, நாகரீகம் என்ற பெயரிலோ அல்லது நம்மால் வளர்க்க முடியாது என்ற பெயரிலோ அழிப்பது கண்டிப்பாக சிசுக்கொலையன்றி வேறென்ன!

மேலும் வல்ல ரஹ்மான் கூறுகின்றான், வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்[6 ;151 ]

எனவே கருவான குழந்தையை அழிப்பது பெரும்பாவமாகும். மேலும் எந்த கருவை நாம் வேண்டாம் என்று அழிக்கிறோமோ அந்த கரு மூலம் உருவான குழந்தை நமக்கு மட்டுமன்றி, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் இறைவன் நாடியிருக்கலாம். எனவே இது போன்ற கருக்கலைப்பு செய்யும் முஸ்லிம்கள் திருந்தவேண்டும்.

அண்டை வீட்டுக்காரன் மனைவியுடன் விபச்சாரம்;

ஒரு முஸ்லிம் தனது பெற்றோர்/உற்றார்க்கு அடுத்தபடியாக நல்லுறவோடு இருக்கவேண்டியது அண்டை வீட்டினரிடம்தான். அண்டை வீட்டினருடன் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றிய நபிமொழிகள் ஏராளம் உண்டு.

அதில் ஒன்று;‏ حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَأْمَنُ جَارُهُ ‏ ‏بَوَائِقَهُ"எவருடைய தொல்லைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெறவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்]

இந்த ஆளவுக்கு இஸ்லாம் வலியுறுத்தியுள்ள அண்டை வீட்டில் நமது நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சீர்தூக்கி பார்க்க கடமைப்பட்டுள்ளோம். ஆயிரம் உறவுகள் இருந்தாலும், ஆபத்து என்ற உடன் அடுத்த நொடி ஆதரவுக்கரம் நீட்டுவது அண்டை வீடுதான். பொதுவாக மற்ற வீடுகளை விட்ட அண்டை வீட்டினரிடம் சகஜமாக பேசுவது, அவர்களது வீட்டிற்குள் உரிமையோடு சென்றுவருவது, அவர்களது பலம்-பலவீனத்தை அறிந்திருப்பது இதையெல்லாம் பயன்படுத்தி அவர்களுக்கு கெடுதல் தர நினைப்பது அதிலும் குறிப்பாக, அண்டை வீட்டார் நம்மை நல்லவன் என்று நம்பியிருக்கும் நிலையில் அவனது மனைவியுடன் ஒரு தொடர்பை ஏற்ப்படுத்திக்கொண்டு அவனது படுக்கையை பகிர்வது, ஒன்று நம்பிக்கை துரோகம் அடுத்து விபச்சாரம். இதைத்தான் மேற்கண்ட நபிமொழியில் பெரும்பாவம் என நபியவர்கள் சொல்லிக்காட்டுகிறார்கள்.ஆனால் நம்மில் சிலர் அண்டை வீட்டு கணவன் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ பணியாற்று பவனாக இருந்தால் அவனது மனைவிக்கு வலை வீசுபவர்களும் இருப்பதை பார்க்கிறோம். இப்படிப்பட்ட கேடுகெட்டவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும். நமது அண்டை வீட்டாருக்கு நாம் அரணாக இருக்கவேண்டுமேயன்றி, அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், நம்மை மேற்கண்ட பெரும்பாவங்களில் இருந்து பாதுகாப்பானாக!

திங்கள், 8 ஜூன், 2009

'பார்வை'--ஒரு பார்வை!

இறைவன் மனிதனின் உடலில் அமைத்திருக்கும் அத்துணை உறுப்புகளும் இன்றியமையாதவைதான். ஆனாலும் அதில் மிக முக்கியமான உறுப்பாக பார்வை பிரதான இடத்தை பெறுகிறது. பார்வையற்ற பல சகோதர, சகோதரிகள் அவர்களின் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் வேதனை வார்த்தைகளால் வடிக்க இயலாதவை. வெளிநாடுகளில் வாழும் எம்மில் பெரும்பாலோர், 'என்ன வாழ்க்கை இது! கட்டிய மனைவி-பிள்ளைகளை பார்க்க முடியவில்லையே என்று வேதனையடைவோரை பார்க்கலாம். ஆனால், பார்வையற்றோர் தன் மனைவி-மக்கள் பெற்றோர்-உற்றார் அருகிலிருந்தும் அவர்களை பார்க்கமுடியாத அவலநிலை. இவ்வாறெல்லாம் பார்வையற்றோரின் நிலையிருக்க, இறைவனின் மாபெரும் அருட்கொடையான பார்வை கிடைக்கப்பெற்றவர்கள் தங்களின் பார்வையை இறைவனுக்கு உவப்பான வழியில் பயன்படுத்துகிறார்களா என்று பார்த்தோமானால், பெரும்பாலோர் தமது பார்வையை மார்க்கம் தடுத்த வழியில் செலுத்துவதை காணலாம். எல்லாவற்றிற்கும் வழிகாட்டும் இஸ்லாம், ஒரு முஸ்லீம் பார்வையை செலுத்தவேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.

அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்;


قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)

ரஸூல்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;நீங்கள் உங்கள் பார்வைகளை தாழ்த்த வேண்டும்,மர்மஸ்தானங்களை பேணவேண்டும்.இல்லையேல்,அல்லாஹ் உங்கள் முகங்களை நிறம் மாற்றிவிடுவான்[தப்ரானி]

பார்வை விசயத்தில் இந்த அளவு அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்க, நம்மில் பலர் பார்வையை தாழ்த்துவதுமில்லை. இயன்றவரை பார்வையால் எவ்வளவு ரசிக்கமுடியுமோ அந்த அளவுக்கு ரசிப்பதையும் பார்க்கிறோம். ஆடவர்கள் ஒரு பெண்ணை பார்த்து விட்டால் அப்பெண்ணை விழுங்கிவிடுவது போல் பார்ப்பதும், அப்பெண் இவனை கடந்து சென்ற பின்னும் கழுத்து வலிக்கும் அளவுக்கு வளைத்து-வளைத்து பார்ப்பதும் பெரும்பாலோரின் வாடிக்கையான பணியாகவே ஆகிவிட்டது. இவ்வாறான செயலை ஒரு முஸ்லீம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்கள், நபியவர்களிடம் ஒரு மெல்லிய ஆடையணிந்து வருகை தந்தார்கள். நபி[ஸல்] அவர்கள் அஸ்மா அவர்களை விட்டும் தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அஸ்மாவே! ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால்,மனிக்கட்டுகளுக்கு கீழ் உள்ளவையும், அவளது முகத்தையும் தவிர மற்றவை வெளியே தெரியக்கூடாது என்று கைகளையும், முகத்தையும் சுட்டிக்காட்டினார்கள்.[அபூதாவூத்]

அறியாமையாலோ, அல்லது அவசரத்தாலோ அஸ்மா[ரலி] அவர்கள் முறையான ஆடை அணியாததை கண்ட நபியவர்கள், சட்டென தம் பார்வையை திருப்புகிறார்கள் எனில், நமது நிலையோ பரிதாபம்! தன் பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயின் சரிந்த மாராப்பை கண்போடும் கயவர்களும் சிலர் உண்டு.

மற்றொரு பொன்மொழியில் ரஸூல்[ஸல்] அவர்கள், அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்;

பார்வை ஷைத்தானின் நஞ்சூட்டப்பட்ட அம்புகளில் ஒன்று.யார் அதனை எனக்கு பயந்து விட்டு விடுகிறாரோ, அதற்கு பகரமாக அவருக்கு நான் ஈமானை கொடுப்பேன். அதன் இனிமையை அவர் தன் உள்ளத்தில் கண்டுகொள்வார்.[தப்ரானி,ஹாகிம்]

மேலும், சிலர் அண்டை வீட்டில் நடப்பவைகளை ஜன்னல் வழியாகவும், மாடியிலிருந்தும் நோட்டம் விடுவர். இந்த செயல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். மேலும் இச்செயல் நபியவர்களை கோபத்திற்கு உள்ளாக்கிய செயலுமாகும்.

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்; ஒருவர் ஒரு துவாரத்தின் வழியாக நபி(ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்தையறிந்த) நபி(ஸல்) அவர்கள், 'நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள், நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்களின் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்' என்று கூறினார்கள்.[புஹாரி]

அண்டை வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்கவேண்டும் எனபதற்கு காரணமே பார்வைதான் என்ற நபி[ஸல்] அவர்களின் கூற்றை கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று நம்மில் பெரும்பாலோர் நமது றவினர் வீடுகளுக்குள் செல்லுகையில் அனுமதி கேட்பதில்லை. திறந்த ட்டுக்குள் எதுவோ நுழைந்தமாதிரி நுழைந்துவிடுவது; இவ்வாறு அனுமதியின்றி நுழைவதால், அந்த வீட்டில் உள்ள பெண்கள் அதிகப்படியான ஆடைகளின்றி இருக்கும் காட்சியை காண நேரிடும். அந்த காட்சிகள் தவறிழைக்கவும் தூண்டும். சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி; தனது அண்ணன் வீட்டுக்குள் நுழைந்த தம்பி, தனது அண்ணி குளித்துவிட்டு ஈர ஆடையுடன் வருவதை கண்டு காமம் கொண்டு அந்த அண்ணியை கற்பழித்து கொன்றான். எனவேதான் காணும் காட்சி தவறை செய்யத்தூண்டும்.

ரஸூல்[ஸல்]அவர்கள் கூறினார்கள்;

விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.[புஹாரி]


இது மட்டுமன்றி, நம்மவர்கள் சினிமா, நாடகம் கேளிக்கைகள் என்று அதில் அரைகுறை ஆடைகளோடு வலம்வரும் அந்நிய பெண்களை பார்த்து ரசிக்கின்றனர். இவர்கள் மட்டுமன்றி, அந்நிய ஆண்கள் பங்குபெறும் சினிமாக்களை தமது மனைவி-சகோதரிகளை பார்க்க அனுமதிக்கின்றனர். மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் ஒருவகை விபச்சாரமாகும். மார்க்கம் அனுமதித்த வீர விளையாட்டுகளை கூட பெண்கள் நேரடியாக பார்க்க நபியவர்கள் அனுமதிக்கவில்லை.

ஆயிஷா(ரலி) அறிவித்தார் அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர்(ரலி) அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறினார்கள். [புஹாரி]

மேலும் சிலர், பெண்கள் படிக்கும் கல்வி நிலையங்களுக்கு எதிரில்/அருகில் அமர்ந்து கொண்டு அங்கு வரும் பெண்களை பார்வையால் அளவெடுப்பதும், அவர்களுக்கு இம்சை தருவதுமாக தங்களின் பொழுதை போக்குபவர்களும் உண்டு. கிராம புறங்களில் வீட்டிற்குள் இருக்கும் கன்னிப்பெண்கள் சற்றே பொழுது சாய தங்களின் வீட்டிற்கு தண்ணீர் எடுக்க வருவார்கள். அவர்கள் வரும் வழியில் சில ரோமியோக்கள் அமர்ந்துகொண்டு கேலி செய்பவர்களும் உண்டு. ஆனால் ஒரு முஸ்லீம் இது போன்ற செயல்களை தவிர்க்கவேண்டும்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். "நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.[புஹாரி]

அன்பானவர்களே! பார்வைகளை பக்குவப்படுத்துவோம்! படைத்தவனிடம் பரிசு பெறுவோம்!!

புதன், 3 ஜூன், 2009

கல்வியும்-இஸ்லாமும்[பாகம்;2 ]

கல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்புகளை பெற்றுத்தரும் கல்வி எது என்பதை இந்த பாகத்தில் பார்ப்போம்.
கல்வியில் மூன்று வகை உண்டு;
*மார்க்க கல்வி
*மார்க்கம் அனுமதித்த உலக கல்வி
*மார்க்கம் தடை செய்த உதவாக்கல்வி

மார்க்க கல்வியை பொறுத்தவரையில் அது இம்மைக்கும்-மறுமைக்கும் பயனளிப்பவையாகும். ஆனால் துரதிஷ்டவசமாக இஸ்லாமிய சமூகம் மார்க்க கல்விக்கு இரண்டாம் இடத்தை வழங்கிவிட்டு, உலக கல்விக்கு முதலிடத்தை வழங்கி முக்கியத்துவம் அளிக்கிறது. காரணம் மார்க்க கல்வியை கற்பதால் பொருளாதார ரீதியில் என்ன பலன் என்ற கணக்கு போடுவதுதான். தன்னுடைய பிள்ளையை எல்.கே.ஜி.யில் சேர்க்க இரவு பகலாக முயற்ச்சிக்கும் பெற்றோர், மதரசாவில் சேர்ப்பதற்கு பெரிய அளவில் 'ரிஸ்க்' எடுப்பதில்லை. சில ஊர்களில் காலையில் பள்ளிவாசல் இமாம் ஓதிக்கொடுக்கும் மதரசாவிற்கு செல்லும் பிள்ளைகளை பார்த்தால் தூங்கிய முகத்தோடு, கிழிந்த அல்-குர்ஆணை எடுத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக செல்வதை பார்க்கலாம். அதே நேரத்தில் உலக கல்வி கற்க பள்ளிக்கு செல்லும்போது குளித்துமுழுகி, பவுடரடித்து, சீருடை அணிந்து அழகாக செல்வதை காணலாம். இதற்கு காரணம் அந்த பிள்ளைகளல்ல பெற்றவர்கள்தான். உலக கல்விக்கு தரும் இந்த முக்கியத்துவத்தை மார்க்க கல்விக்கும் தரவேண்டும். உலக கல்வியின் பலன் இந்த உலகத்தோடு முற்றுப்பெற்று விடும். மார்க்க கல்வி ஒன்றே மறுமைவரை துணையிருக்கும் என்பதையும், என்னதான் உலக கல்வியில் உச்சத்திற்கு சென்றாலும் மார்க்ககல்வி கற்றவர்களால்தான் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் தங்களின் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் பெற்றோர்களும் உணரவேண்டும். பிள்ளைகளும் உணரவேண்டும்.

அன்று அருமை சகாபாக்கள்மார்க்கத்தை கற்பதில் எந்த அளவுக்கு ஆர்வமாய் இருந்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சான்று;

உமர்[ரலி] அறிவித்தார்கள்;'நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார்.[புஹாரி]

பெண்களின் ஆர்வம்;

(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்.[புஹாரி]

மேற்கண்ட இரு நபி மொழிகளும் மார்க்கத்தை அறிந்து கொள்வதில் சத்திய சகாபாக்களுக்கு இருந்த ஆர்வத்தை படம்பிடித்து காட்டுகிறது. அதுபோல் நாமும் மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

உலக கல்வி;

உலக கல்வியை பொறுத்தவரையில் மார்க்கத்திற்கு உட்பட்டு அதை கற்பதில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் துரதிஷ்டவசமாக கல்வியை தூண்டக்கூடிய மார்க்கத்திற்கு சொந்தக்காரர்களாகிய நம் சமுதாயம், ஏனைய சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. இதற்கு காரணம் அறியாமை ஒருபுறம். வறுமை மறுபுறம். நம் பிள்ளை என்னத்த படிச்சாலும் நமக்கு என்ன அரசாங்க உத்தியோகமா கெடைக்க போகுது என்ற விரக்தி நம் மக்கள் மத்தியில் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அரசாங்கம் வேலை வாய்ப்பு தந்தால், அதை ஏற்கும் தகுதியுடைய கல்விமான்களாக நாம் தயாராக வேண்டும் எனபதை ஏனோ மறந்து விட்டோம். எதோ கையெழுத்து போடும் அளவுக்கு படிப்பது; மீசை வளர்ந்தவுடன் பாஸ்போர்ட் எடுப்பது; வளமான இளமையை வளைகுடாவில் தொலைப்பது; இப்படியே நம் சமுதாய மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது. இந்த நிலை மாறவேண்டும். இட ஒதுக்கீடு கொடு என்று கேட்பதற்கு முன்னால், அந்த இடத்திற்கு தகுதியானவர்களாக நாம் மாறவேண்டும்.

நம் சமுதாயம் கல்வியில் பின் தங்கியிருப்பதற்கு வறுமை காரணம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். அரசாங்கம் இலவசமாக புத்தகம் வழங்கினாலும், தன் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட மற்ற பொருட்கள் வாங்கி கொடுப்பதற்கு இயலாத எத்துணையோ பெற்றோர்கள் இருக்கிறார்கள். மேலும் மேல்படிப்பிற்கு செலவு செய்ய முடியாத பெற்றோர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை இடை நிறுத்தம் செய்துவிடாமல் கண்காணித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும். கோடிகளை கொட்டி மாநாடு நடத்தும் பணத்தில் குறைந்த பட்சம் நூறு பட்டதாரிகளை உருவாக்கிவிடலாம். உப்பு சப்பில்லாத விசயத்திற்கு கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யும் பணத்தில் பல நூறு பட்டதாரிகளை உருவாக்கிவிடலாம். இதையெல்லாம், சமுதாயத்தில் உள்ளவர்களிடம் வசூல் செய்து அமைப்பு நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் வறிய நிலையில் உள்ள முஸ்லீம் மாணவமணிகளுக்கு இலவச/குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க முன்வரவேண்டும்.

உதவா கல்வி;

சில வசதி படைத்த முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ் இதுபோன்ற மார்க்கம் தடுத்த கல்விகளுக்கு பயிற்றுவிக்கிறார்கள் . நிச்சயமாக இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இந்த கல்வி நன்மைக்கு பதிலாக தீமையையே பெற்றுத்தரும் எனபதை விளங்கவேண்டும்.

கல்விக்காக பிராத்தியுங்கள்;

فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (20:114)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தைச் மார்க்க கல்வியிலும்-உலக கல்வியிலும் தேர்ந்த சமுதாயமாக ஆக்கி அருள்வானாக!

-முற்றும்.