அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 15 ஜூன், 2012

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[5]

பொதுவாக ஒரு பெண் அவள் பருவ வயதை அடைந்தவுடன் திருமணத்திற்கான தகுதியை அடைந்துவிடுகிறாள். ஒரு பெண் பூப்பெய்வது அவளது உடல் நிலையை பொருத்து வயதுகள் மாறுபடலாம். இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் பதினொரு வயது முதல் பதினைந்து வயதுக்குள் பூப்பெய்தி விடுகிறார்கள். இந்த வயதில் அவர்களுக்கு இயற்கையாகவே இளமைக்கனவுகள் தோன்ற ஆரம்பித்துவிடும். எனவேதான் 'பதினாறு வயதினிலே' என்று படம் எடுத்தார்கள். 

ஆண்களை எடுத்துக்கொண்டால் 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' என்று சொல்லக்கூடிய பதிமூன்று முதல் பத்தொன்பது வயதிற்குள் 'அனைத்தையும்' கரைத்து குடித்துவிடுகிறார்கள். ஒரு காலத்தில் கல்லூரியில் வளர்ந்த காதல்கதைகள் இன்று நடுநிலை பள்ளியிலேயே முளைவிடத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமன்றி மொபைல் போன்கள், இணைய தளங்கள், சின்னத்திரை-வண்ணத்திரை-மஞ்சள் பத்திரிக்கைகள்-நீலப்படங்கள் இவைகளெல்லாம் இரு சாராரையும் பிஞ்சிலே பழுக்கவைக்கும் காரியத்தை கன கச்சிதமாக செய்துகொண்டிருக்கின்றன. இத்தகைய காலகட்டத்தில் ஆணுக்கு 21 வயதும், பெண்ணிற்கு 18 வயதும் திருமண வயதாக நடைமுறையில் சட்டத்தில் இருப்பது பெரும்பாலும் ஏட்டளவில்தான் உள்ளதேயன்றி, நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதற்கு மைனர் ஜோடிகளின் காதல் ஓட்டங்கள் நிதர்சன சான்றுகளாக நிதமும் பத்திரிக்கையை அலங்கரிப்பதை நாம் பார்க்கிறோம். 

இந்நிலையில் இந்த திருமண வயது குறித்து தெளிவான வரவேற்கத்தக்க தீர்ப்பை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு தீர்ப்பை டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியது. அதன் விபரம் வருமாறு;

டெல்லியை சேர்ந்த 18 வயது வாலிபர் 16 வயது பெண்ணை திருமணம் செய்தார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர், திருமண வயதை அடையாத தங்களின் மகளை அந்த வாலிபர் கடத்திக்கொண்டுபோய் திருமணம் செய்துவிட்டார் என்று புகார் கூறினார். இதையடுத்து மணமகன், நாங்கள் இருவரும் திருமண வயதை அடையாவிட்டாலும் இருவரும் விரும்பியே திருமணம் செய்துள்ளோம் எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். பி.டி. அஹ்மத், வீ.கே. ஜெயின் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில்;

'ஆணோ பெண்ணோ அவர்கள் திருமண வயதை எட்டாதவர்களாக இருந்தாலும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அந்த திருமணம் சட்டப்படி செல்லும். சிறு வயதில் விருப்பம் இல்லாமல் செய்துவைக்கும் திருமணம் தான் குழந்தை திருமணமாக கருதப்படும். திருமணம் செய்துகொள்ளும் இரண்டு பேரும் மைனர்களாக இருந்தால், அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணத்திற்கு சம்மதித்தால் அந்த திருமணம் செல்லும்.
இந்து திருமண சட்டப்படி ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிரம்பவேண்டும் என்று கூறினாலும் இந்த வழக்கிற்கு அது பொருந்தாது என்று தமது தீர்ப்பில் கூறினர்.

ஆனுக்கு 21 வயதும், பெண்ணிற்கு 18 வயதும் ஆன பின்னால் செய்யும் திருமணமே சட்டப்படி செல்லுபடியாகும் என்று மக்கள் கருதிவந்த நிலையில், இருவரும் விரும்பித் திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல என்றும், ஆனுக்கு 21 பெண்ணுக்கு 18 என தீர்மானித்தது அவர்களின் விருப்பமின்றி செய்யப்படும் கட்டாய திருமணத்திற்கே பொருந்தும் என்று ஒரு தெளிவான வரையறையை காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம், இதே பாணியில் முஸ்லிம்கள் விசயத்திலும் தீர்ப்பளித்து முரண்பட்டுள்ளதை பார்ப்போம்.

தனது16 வயது மகளை பையன் வீட்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி ஒரு முஸ்லிம் பெற்றோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் அவர்கள் தங்கள் தீர்ப்பில்,

''இஸ்லாமிய சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பருவம் அடைந்துவிட்டால் பெற்றோரின் சம்மதம் இல்லாவிட்டாலும் அவர் தனது மனதிற்கு பிடித்தவரை மணக்கலாம் என்றும், 18 வயதிற்குட்பட்டவராக இருந்தாலும் அவர் தனது கணவர் வீட்டில் வசிக்கலாம் என்பதை இந்த நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
அதன்படி பருவமடைந்த ஒரு முஸ்லிம் பெண் அதாவது 15 வயது பெண் தான் விரும்பியவரை மணக்கலாம் என்றனர்.
மேலும் தான் விரும்பித் தான் அந்த பையனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதனால் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று அந்த பெண் கேட்டுக் கொண்டதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி அவர் 18 வயதை அடையும் வரை அவரது கணவர் வீட்டார் ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியது போன்று ஒரு முஸ்லிம் பெண் தான் விரும்பியவரை மணக்கலாம் என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்றாலும், அந்த விரும்பியவர் யார் என்பதில் சில நிபந்தனைகளை இஸ்லாம் விதிக்கிறது. ஒரு முஸ்லிமான பெண், ஒரு முஸ்லிமல்லாத ஆண்மகனை விரும்பினால் அந்த ஆண்மகன் இஸ்லாத்தை தழுவினாலே தவிர திருமணம் செய்யமுடியாது. அதுபோன்று அப்பெண் விரும்பும் ஆண்மகன் ஒரு இஸ்லாமியனாகவே இருந்தாலும், திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அவனும் வருவான் என்றால், அவனை திருமணம் செய்யமுடியாது. உதாரணத்திற்கு தாய் மாமன் போன்ற உறவுகள். 

அதே நேரத்தில் இவ்வாறு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், திருமணத்தின் போது பெண்ணின் சம்மதத்தை பெறவேண்டும் என்பது கடவுளின் தூதர் முஹம்மது[ஸல்] அவர்களின் கட்டளையாகும். பெண்ணின் சம்மதம் இல்லாமல் பெற்றோரோ மற்றவரோ கட்டாயத் திருமணம் செய்விக்க இஸ்லாம் தடை விதிக்கிறது. எனவே ஒரு முஸ்லிமான பெண் யாரை விரும்புகிறாரோ அவரை திருமணம் செய்யலாம் என்ற நீதிபதிகளின் கூற்று, சில நிபந்தனைகளுடன் கூடிய இஸ்லாத்தில் உள்ள ஒன்றாகும்.

அடுத்து, தான் விரும்பித் தான் அந்த பையனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதனால் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று அந்த பெண் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்டதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். 

அந்தப் பெண் விரும்பியே அவனுடன் சென்றதால் கடத்தல் வழக்கு பதிவு செய்யமுடியாது என்ற நீதிபதிகளின் கூற்று ஏற்புடையதுதான் என்றாலும், இவ்வாறு விரும்பியவனுடன் ஓடிப் போவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரு முஸ்லிம் பெண், தனக்கு திருமணம் செய்ய இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உறவுமுறை கொண்ட ஒரு பையனை விரும்பினாலும், அவனை முறைப்படி தனது பெற்றோர் மூலமாகவோ, அவர்கள் மறுக்கும் பட்சத்தில் உறவினர்கள் மூலமாகவோ, ஊர் ஜமாஅத் மூலமாகவோ திருமணம் செய்யலாமேயன்றி, விரும்பியவனுடன் ஓடிப்போய் எங்கோ பதிவுத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஏனென்றால் ஒரு இஸ்லாமியப் பெண்ணின் திருமணம் அங்கீகாரம் பெறவேண்டுமானால், அப்பெண்ணிற்கு ''வலீ' எனும் பொறுப்பாளர் அவசியம். இந்தப் பொறுப்பாளர் என்பவர் பெண்ணின் தந்தை அல்லது சகோதரன் ஆவார்கள். அப்படி தந்தையோ சகோதரனோ இல்லை என்றால், ஜமாஅத் பிரமுகர்கள் பொறுப்பாளராக இருந்து அப்பெண்ணின் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும். அவ்வாறில்லாமல் ஒரு பெண் தான் விரும்பியவனை தானாக திருமணம் செய்து கொண்டாலோ, பொறுப்பாளர் என்ற விதி இல்லாத இந்திய பதிவுத் திருமணத்தை செய்துகொன்டாலோ அந்த திருமணம் இஸ்லாமிய அடிப்படையில் செல்லாது. ஏனென்றால் கடவுளின் தூதர் முஹம்மது [ஸல்] அவர்கள், ''பெண்ணிற்கு பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது'' என்று கூறியுள்ளார்கள்.

எனவே நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறிய விசயங்களை வைத்துப் பார்க்கும்போது, பொதுவான அளவுகோலைக் கொண்டு இஸ்லாமியத் திருமணத்தையும் அளந்துள்ளனர் என்று தெரிகிறது. எனவே சில நெருடல்கள் தெரிகின்றது. அதே நேரத்தில், 
ஒரு ஆணோ- பெண்ணோ அவர்களாக விரும்பி, தாமதமாக திருமணம் செய்தால் அது அவர்களின் விருப்பம். ஆனால் அவர்களை இத்தனை வயதில் தான் திருமணம் செய்யவேண்டும் என சட்டம் போட்டு தடுக்கமுடியாது என்பது நீதிபதிகளின் தீர்ப்பில் புலப்படுகிறது. எனவே திருமணம் செய்யும் ஜோடிகளின் வயதைப் பார்ப்பதைவிட அந்த ஜோடிகளுக்கு அவர்களின் பரிபூரண சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறதா என்பதையும், அத்திருமணத்தில் வரதட்சனை உள்ளிட்ட சட்டம் தடுத்தவைகள் இடம்பெறுகிறதா என்பதையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் கவனிக்க முன்வரவேண்டும் என்பதுதான் நாம் கூறும் செய்தியாகும்.

தீர்ப்புகள் வரும்...


கருத்துகள் இல்லை: