அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 3 ஜூலை, 2012

சன்மார்க்கத்தின் பார்வையில் ஷபே பராஅத் !

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனைத்துப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அல்லாஹ் முஃமீன்களுக்கு என சித்தப்படுத்தி வைத்திருக்கும் சொர்க்கத்தை அடைவதற்கு எண்ணிலடங்கா அமல்களை தனது சொல்லாலும், செயலாலும் அங்கீகாரத்தாலும் அருமைநபி[ ஸல்] அவர்கள் வழிகாட்டியிருக்க, அந்தோ பரிதாபம்! அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நபி[ஸல்] அவர்களால் காட்டித்தரப்படாத பல்வேறு அமல்களை மார்க்கம் என்ற பெயரில் முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் செய்வதை பார்க்கிறோம். அப்படிப்பட்ட பித்அத்தில் ஒன்றுதான் வரவிருக்கும் ஷபே பராஅத்தாகும்.ஷஅபான் மாதம் 15 இரவு ஷபே பராஅத் என்றும் அந்த நாளில் சில அமல்களை செய்யவேண்டும் என்றும் தமிழக முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.


மூன்று யாசீன் ஓதுதல்;இந்த மூன்று யாசீன்கள் எதற்காக என்றால்,


பாவமன்னிப்பிற்காக.
கப்ராளிகளுக்காக.
ஆயுள் மற்றும் அபிவிருத்திக்காக.

இத்தககைய மூன்று விஷயங்களுக்காக மூன்று யாசீன் ஓதுவதற்கு அல்-குர்ஆனிலோ-ஹதீஸிலோ ஆதாரம் இருக்கிறதா என்றால், இல்லை என்பதோடு இதற்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதை காணலாம்.
பாவங்கள் மன்னிக்கப்பட என்ன செய்யவேண்டும் என்று அல்-குர்ஆண் வழிகாட்டுகிறது;


(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.3:31

பாவங்கள் மன்னிக்கப்பட நபியவர்களை பின்பற்றவேண்டும் என்று வல்ல இறைவன் கூறுகின்றான். நபியவர்களை பின்பற்றுதல் என்றால்,
அல்-குர்ஆனையும்-ஹதீசையும் மட்டும் பின்பற்ற
வேண்டும் . அதைவிடுத்து நபி[ஸல்] அவர்கள் காட்டித்தராத யாசீன் ஓதிவிட்டால் பாவங்கள் மன்னிக்கப்படுமா? சிந்திக்க வேண்டும்.
அடுத்து யாசின் ஓதிவிட்டால் கப்ராளிகளுக்கு ஏதாவது பயனுண்டா என்றால் நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறந்தவர்களுக்கு நன்மை தரக்கூடியது எது என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதை பாருங்கள்;

ஒருவர் மரணித்து விட்டால் அவரை வட்டும் அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டு விடுகிறது மூன்றைத்தவிர;
நிலையானதர்மம்.
பயளிக்கும் கல்வி.
ஸாலிஹான பிள்ளைகளின் துஆ
.[நூல்;முஸ்லிம்]

நபி[ஸல்] அவர்களின் இந்த பொன்மொழியில் யாசீன் ஓதுங்கள் என்று கூறியுள்ளார்களா? யாசீன் ஓதுவது நாம் அழைத்து ஒதவைக்கும் ஆலிம்சாக்களுக்கு பயனளிக்குமே தவிர கப்ராளிகளுக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அடுத்து மூன்றாவது யாசீன் ஓதிவிட்டால் ஆயுள்- அபிவிருத்தி ஏற்படுமா என்றால் ஏற்படாது. ஆயுள்-அபிவிருத்தி ஏற்பட நபி[ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறை பாரீர்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.[நூல்;புஹாரி].
எனவே மூன்று யாசீன் ஓதுவது அப்பட்டமான பித்அத்தாகும்.
தஸ்பீஹ் தொழுகை;
பராஅத் இரவில் தஸ்பீஹ் தொழுகை தொழவேண்டும் என்று கூறுபவர்கள் ஒரு ஹதீஸை அதற்கு சான்றாக முன்வைப்பார்கள்;

ரசூல்[ஸல்] அவர்கள் தன் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களிடம், அப்பாஸே! என் பெரியதந்தையே! உங்களுக்கு அன்பளிப்பு வழங்கட்டுமா? நான்கு ரக்அத்துகள் தொழுவீராக! அதில் தக்பீர் கட்டியவுடன் சூரத்துல் பாத்திஹாவையும், மற்றொரு சூராவையும் ஓதுவீராக! சுப்ஹாநல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹுஅக்பர் என்ற தஸ்பீஹை 15 முறை ஓதுவீராக! பின்பு ருஃகூவிற்கு சென்று, 
ருஃ கூவில் 10 முறை, ருஃவிலிருந்து நிலைக்கு வந்தபின் 10 தடவை தஸ்பீஹை ஓதுவீராக! பின்பு சஜ்தா செய்வீராக! சஜ்தாவில் 10 தடவையும், இருப்பில் 10 தடவையும், இரண்டாவது சஜ்தாவில் 10 தடவையும் தஸ்பீஹ் ஓதுவீராக! இதே போன்று நான்கு ரக்அத்கள் தொழுங்கள் என்று கூறிவிட்டு, இத்தொழுகையை தினமும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது நிறைவேற்றுங்கள் என்று ரசூல்[ஸல்] அவர்கள் கூறியதாக வரும் இந்த செய்தி திர்மிதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஹதீஸில் பல்வேறு அம்சங்களை கவனிக்கவேண்டும். முதலில் இது பலவீனமான ஹதீஸாகும். இந்த ஹதீஸில் இடம்பெறும் மூஸாபின் உபைதா என்பவர் பலவீனமானவர். ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸை சரிகண்டால்கூட, இதில் ஷஅபான் என்ற வார்த்தையோ, அல்லது ஷஅபான் 15 என்ற வார்த்தையோ இல்லை. மேலும் இந்த தொழுகையை தினமும்- வாரத்தில் ஒருநாள்-மாதத்தில் ஒருநாள்- இரண்டு மாதத்தில் ஒருநாள்- வருஷத்தில் ஒருநாள் தொழுங்கள் என்ற நபியவர்களின் கூற்று இத்தொழுகை குறிப்பிட்ட நாளுக்குரியதல்ல என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும், தொழுகையில் தஸ்பீஹ் எண்ணிக்கொண்டிருப்பது சாத்தியமான ஒன்றா? நாம் வழக்கமாக தொழும் தொழுகையில் எந்தவித தஸ்பீஹும் எண்ணாமலே, நாலு ரக்அத் தொழுதோமா அல்லது மூன்று ரக்அத் தொழுதோமா என்ற சந்தேகம் வருகிறது. நம்மை விடுங்கள்! நபி[ஸல்] அவர்களுக்கே இத்தகைய சந்தேகம் வந்து பின்பு சகாபாக்களால் சுட்டிக்காட்டப்பட்ட பின் விடுபட்டதை பூர்த்தி செய்ததாக ஹதீஸ்களில் பார்க்கிறோம். நிலைமை இவ்வாறிருக்க, தஸ்பீஹ் என்னும் போது பத்துதடவை எண்ணினோமா  அல்லது ஐந்துதடவை எண்ணினோமா  என்ற சந்தேகம் வந்தால் அத்தொழுகை பூர்த்தியானதாக இருக்குமா? எனவே தஸ்பீஹ் தொழுகை ஆதாரத்தின் அடிப்படையிலும், தர்க்கரீதியிலும் சரியல்ல என்பதால் தஸ்பீஹ் தொழுகை ஒரு பித்அத்தாகும்.நோன்பு நோற்றல்;
பராஅத் இரவில் நோன்பு நோற்கவேண்டும் என்ற பழக்கம் முஸ்லிம்களிடத்தில் உள்ளது. இதற்கும் ஒரு ஹதீஸை ஆதாரம் காட்டுவார்கள்.
ரசூல்[ஸல்] அவர்கள் கூறினார்கள்; ஷஅபான் பாதி இரவை அடைந்துவிட்டால் இரவில் நின்று வணங்குங்கள் பகலில் நோன்பு வையுங்கள்.ஏனெனில், அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கிவந்து, என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன்! சோதனை துன்பங்களில் இருந்து பாதுகாப்பு தேடுவோர் உண்டா? அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறேன் என்று காலைவரை கூறிக்கொண்டே இருப்பான்.
அறிவிப்பாளர்;அலீ[ரலி] நூல்; இப்னுமாஜாஇந்த ஹதீஸில் இப்னுஅபீஸஃப்ரா என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.


மேலும் ஷஅபான் பாதியை அடைந்துவிட்டால் நோன்பு நோற்காதீர்கள் என்ற நபி[ஸல்] அவர்களின் பொன்மொழி திர்மிதி, இப்னுமாஜா,அஹ்மத் போன்ற நூற்களில் காணப்படுகிறது. எனவே ஷபேபராஅத் நோன்பும் நபியவர்களின் வழிமுறையல்ல.

எனவே ஷபேபராஅத் என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட பித்அத்களில் ஒன்று என்பதை விளங்கி அவற்றை புறக்கணித்து, மார்க்கத்தை உள்ளது உள்ளபடி பின்பற்றிட அல்லாஹ் நல்லருள்புரிவானாக!

கருத்துகள் இல்லை: