அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 1 ஜூன், 2012

சீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் சீட்டுக்'கிழிக்கப்படும்; தமிழக அரசு அதிரடி உத்தரவு.

''மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள்; இந்த பழமொழியில் நமக்கு உடன்பாடில்லை. ஆயினும் பெற்றெடுத்த பெற்றோருடன், படைத்த இறைவனுடன் வைத்து மதிக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் உயர்வான இடத்தில் மக்கள் மனதில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறோம். இதற்கு காரணமும் இல்லாமலில்லை. ஒரு குழந்தை பால்குடி மறக்கிறதோ இல்லையோ, அடுத்து அந்த குழந்தைகளை பெற்றோர் நம்பி ஒப்படைப்பது ஆசிரியர்களிடம் தான். ஒரு குழந்தை பெற்றோருடன் இருக்கும் நேரத்தை விட, ஆசிரியர்களுடன் கழிக்கும் நேரம் தான் அதிகம். குழந்தையை வார்த்தெடுக்கும் சிற்பியாக பெற்றோர்கள் கருதுவது ஆசிரியர்களைத்தான். இந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஆசிரியர்கள், தங்களின் நம்பகத்தன்மையை காப்பாற்றுகிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள், தம்மிடம் கல்வி பயிலும் பிள்ளைகளை அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளை நாசம் செய்யும் வேலையை நாள் தவறாமல் செய்தி ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம்.

தம்மிடம் படிக்கும் பெண் பிள்ளைகளிடம் வரம்பு மீறுவது, பணிய மறுத்தால் பெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டுவது, ஒருமுறை வலையில் வீழ்த்தி விட்டால் அதை சொல்லி மிரட்டியே தொடர் கற்பழிப்பில் ஈடுபடுவது, டியூசன் வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் தனது வீட்டிற்கு மாணவிகளை வரவழைத்து, தனிமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது, மாணவியர் தங்கும் விடுதிகளிள் ரகசிய கேமராக்கள் மூலம் மாணவிகளின் குளியலறை வரை கண்களை நுழைப்பது. இவ்வாறு ஆசிரியர்கள் என்ற பெயரில் சிலர் காமகொடுரர்களாகவே வலம் வந்தாலும், பெரும்பாலான பிள்ளைகள் இவர்களின் இந்த இழிசெயலை வெளியே சொல்வதில்லை. துணிந்து சில பிள்ளைகள் சொல்வது மட்டுமே வெளியுலகிற்கு வருகின்றது. 

இவ்வாறான இழிசெயலை செய்யும் ஆசிரியர்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கு பெரிய அளவிலான தண்டனை கிடைப்பதில்லை. துறைரீதியான சில கண்துடைப்பு விசாரணைகள்; நடவடிக்கைகள் என்ற அளவில் தான் உள்ளன. இது தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு தெம்பை தருவதாக இருப்பதாக மக்களால் விமர்சிக்கப்பட்ட நிலையில், அரசு அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிட்டு பெற்றோர் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது.

தமிழக அரசு 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:

மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியரைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2), இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

பள்ளி குழந்தைகளும், மாணவ, மாணவியரும், பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாணவ, மாணவியரின் மனநிலை பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக்கல்வித் துறை மூலம், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும். இவ்வாறு, சபிதா கூறியுள்ளார்.

இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் தனியார் கல்வியகத்தின் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கருதப்படுகிறது. சமூக சீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான இந்த தண்டனை என்பது ஏட்டளவில் இருந்துவிடாமல், செயல்பாட்டில் இருக்கவேண்டும் என்பதோடு, அத்தகையோருக்கு பள்ளியில் அனைத்து மாணவ-மாணவியர் முன்னிலையில் கசையடி வழங்கினால்தான் அவர்களும் திருந்துவார்கள்; இந்த தண்டனையைப் பார்க்கும் ஏனைய இதுபோன்ற எண்ணமுள்ள ஆசிரியர்களுக்கும் புத்தி வரும் என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது. 

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். ஆசிரியர் என்ற பெயரில் இழிசெயலை செய்வதை தடுக்க ஆர்வப்படும் அரசு, அத்தகைய தவறுக்கு வழிகோலும் காரணிகளை களைய முற்படவேண்டும். ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக பயிலும் வகையில் பள்ளிகள் கட்டப்பட்ட வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியரையும், பெண்களுக்கு பெண் ஆசிரியரையும் நியமிக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் முட்டுக்கால் அளவுக்கு ஸ்கர்ட்டும், இறுக்கமான சிறிய அளவிலான சட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இவைகள் மாற்றப்பட்டு அவர்களின் முழு உடலமைப்பும் மறையும் வகையிலான சீருடை வழங்கப்பட வேண்டும். மாணவியை வகுப்பறையில் சக மாணவியர் சகிதமாக இருக்கும் நிலையிலன்றி, வேறு எங்கும் ஆசிரியர் தனிமையில் சந்திப்பது தடுக்கப்பட வேண்டும். மாணவியை விசாரிப்பதாகவே இருந்தாலும் தனிமையில் ஆசிரியர் விசாரணை நடத்தக் கூடாது. இவ்வாறான இன்னும் சில கட்டுப்பாடுகளை அரசு அமுல்படுத்தினால் குற்றங்கள் குறையவும், பெற்றோர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவும் வாய்ப்பு உண்டாகும். அரசு கவனிக்குமா?
கருத்துகள் இல்லை: