அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
துல்ஹஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துல்ஹஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 அக்டோபர், 2013

அரஃபா நோன்பு.

அரஃபா நோன்பு :-
++++++++++++++++

அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்

[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]

சனி, 29 அக்டோபர், 2011

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.

இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;

ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.

5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.


குர்பானி பிராணியின் வயது;

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு “
முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில்
முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
  1. கண் குறுடு
  2. கடுமையான நோயானவை
  3. மிகவும் மெலிந்தவை
  4. நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
கூட்டு குர்பானி;
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.

“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் நேரம் ;
ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி,

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)


இறைச்சிகளை விநியோகித்தல்;

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5569

“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.


செய்யக்கூடாதவை;
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.

குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,


ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.


நன்றி; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

சனி, 30 அக்டோபர், 2010

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி, ஹஜ் செய்யலாம் என்ற புதுமை ஃபத்வாவுக்கு மறுப்பு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

புஹாரியின் 3595 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, ஒரு பெண் “மஹ்ரம்” இல்லாமல் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என நவீனவாதிகள்  வழங்கும் ஃபத்வா குறித்து, மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் விரிவான விளக்கம்;

கேள்வி :-

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி ஹஜ்-உம்றாச் செய்யலாமா?


பதில்:-

இது விரிவாக விளக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஹஜ் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கின்றது. இது வரவேற்கத் தக்கதுதான். எனினும், ஹஜ்ஜை முறையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானவர்களிடம் இல்லையென்பது வருந்தத் தக்க விடயமாகும்.

ஹஜ் யார் மீது கடமையென்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

“..மனிதர்களில் அதற்குச் சென்று வரச் சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்..” (3:97)

எனவே, ஹஜ்ஜுக் கடமையைச் செய்யும் சக்தியுள்ளவர் மீதுதான் ஹஜ் கடமையாகும். பயணத்திற்கு மஹ்றமான ஆண் துணை இல்லாத பெண்ணுக்கு ஹஜ் கடமையில்லை. அப்படி அவர் தன் மீதுள்ள கடமையை நிறைவு செய்ய வேண்டுமென்றால் மஹ்றமான ஓர் ஆண் துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தனது ஹஜ்ஜைத் தனது நெருங்கிய உறவுடைய ஒரு ஆண் மூலம் நிறைவேற்ற அங்கீகாரமுள்ளது.

ஒரு பெண் தனியாகவோ, நம்பிக்கையான மஹ்றமல்லாத ஆண் துணையுடன், நல்லொழுக்கமுள்ள பல பெண்களுடன் கூட்டுச் சேர்ந்தோ ஹஜ் செய்யலாம் என்பதற்குக் கூறப்படும் ஆதாரங்கள் குறித்தும் அது பற்றிய உண்மை விளக்கம் என்ன என்பது குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!” என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!” என கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!

எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் “நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!” என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் “மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.

ஐயம்:- ஹஜ் குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக்கொள்வதற்காக, தமது வசதிக்காகப் பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர்.

குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒரு படி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு அதிய்யே! அல்ஹீரா என்ற நகரைப் பார்த்திருக்கிறாயா? நான் அதைப் பார்த்ததில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன்!” எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந் தனியே) தவாஃப் செய்வாள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்.” (புகாரி ) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக்கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காகத் தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்


விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் படி நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவும் இந்தக் காலத்து மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா?

அதீ பின் ஹாதிம்(ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம்-பீதியற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக் கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.

மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதி(ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய்(ரழி) அவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகின்ற போது, “ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்!” எனக் குறிப்பிடுகிறார்கள். (புகாரி)

இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக் காலத்தை ஒப்பிடலாமா?” என்றால், அனைவரும் “இல்லை!” என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.

ஐயம்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கிப் பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காகச் செல்வதை எவ்வாறு தவறாகக்கொள்ள முடியும்?

தெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித் தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை. அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்து வைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத் தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக்கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.

நபி(ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

நன்றி; மவ்லவி இஸ்மாயில் ஸலபி மற்றும் இஸ்லாம் கல்வி.காம்.