அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 26 நவம்பர், 2009

இறைத்தூதரின் திருமணங்களும்; இடைச்செருகல் விளக்கங்களும்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட முஸ்லிமான ஆண்கள் அதிகபட்சமாக நான்கு திருமணம்வரை செய்துகொள்ள அல்லாஹ் அனுமதியளித்திருப்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ரசூல்[ஸல்] அவர்களுக்கு இதிலிருந்து அல்லாஹ் விதிவிலக்கு அளித்து அவர்கள் பல திருமணங்களை செய்துகொள்ள அனுமதியளித்துள்ளான்.
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاء اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ الْمُؤْمِنِينَ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.[33:50 ]

இந்த வசனத்தில் நபியவர்கள் பல திருமணங்களை செய்ய அனுமதியளித்த இறைவன், எதற்காக இந்த அனுமதி என்றால் நபி[ஸல்] அவர்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டுவிட கூடாது என்பதற்காக என்று மட்டும் சொல்கிறான். [ஒரு திருமணம் நீங்கலாக] வேறு எந்த திருமணத்திற்கும் எந்த விளக்கமும் இந்த வசனத்திலும் வேறு எந்த வசனத்திலும் நாமறிந்தவரை இல்லை. அதிகப்படியான திருமணங்களை செய்த நபி[ஸல்] அவர்களாவது நான் இன்ன காரனத்திற்காகத்தான் இத்துனை திருமணம் செய்தேன் என்று சொல்லவில்லை. உண்மை இவ்வாறிருக்க, நாமாக நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று
சில காரணங்களை சொல்வது வரம்பு மீறலாகும்.

நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று ஒரு கட்டுரை மவ்லவி பீஜே அவர்களது தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆக்கத்தில் காணப்படும் சில முரண்பாடுகளை இங்கே முன்வைக்கிறோம்.
  • அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு கூறப்பட்டுள்ள காரணம்; அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள்.

ஹதீஸில் இவர் கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார்; நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.[புஹாரி எண்; எண் 5081 ]

அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற இவர்களின் விளக்கத்திற்கு மாற்றமாக, அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மாறாக nabi [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர் என்று கூறுவது ஹதீசுக்கு முரணில்லையா..?

  • அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை மணந்து கொண்டதற்கான கூறப்பட்டுள்ள காரணம்; நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகலை நபிகள் நாயகம்[sal] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கு காரணம்.

ஹதீஸில் இவர் கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ]


அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, இவர்கள் கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மனம் செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னையை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர் என்பது ஹதீஸுக்கு முரணில்லையா..?

  • அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களை மனந்துகொண்டற்காக கூறப்படும் காரணம்; ஜைனப்[ரலி] தனது 35 வயதில் விவாகரத்து செய்யப்பட்டு திக்கற்றவராக இருந்தார். எனவே அவரை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் திருமணம் செய்தார்கள்.

அருள்மறை குர்ஆனில் இவரது விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களின் திருமணத்தை பொறுத்தவரையில், நபி[ஸல்] அவர்களின் மற்ற திருமணம் போன்றது அல்ல. அன்னையவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ்வே மனம் முடித்து தந்ததோடு, அதற்கு காரணத்தையும் சொல்கிறான்;

ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவரை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். என்று அல்லாஹ் கூறியிருக்க அதற்கு மாற்றமாக, அன்னையவர்கள் விதவையாக திக்கற்று நின்றதால் நபியவர்கள் திருமணம் செய்தார்கள் என்று இவர் விளக்கமளித்தது இந்த வசனத்திற்கு முரணில்லையா..?

  • அன்னை உம்மு ஸலாமா[ரலி] அவர்களை திருமணம் செய்தது பற்றி கூறப்பட்டுள்ள விளக்கம்; உம்மு சலமாவை நபிகள் நாயகம் திருமணம் செய்வதாக கூறியபோது, நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன் என் வயதுடையவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. குழந்தை பெறும் வயதை கடந்துவிட்டேன் என்று பதிலளித்தார்கள்.

இப்படி அன்னையவர்கள் சொன்னதாக எந்த நூலில் உள்ளது என்று குறிப்பிடவில்லை. இதற்கு மட்டுமல்ல மொத்த ஆக்கத்திற்கும் மறந்தும் கூட எந்த சான்றும் முன்வைக்கவில்லை. இது ஒரு புறமிருக்க, ஹதீஸில் இவரது கூற்றுக்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப்படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக்கொண்டேன்" என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 323 ]

அன்னை உம்மு சலாமா[ரலி] அவர்கள் தான் வயது முதிர்ந்தவர் என்றும் பிள்ளை பெறும் வயதை கடந்துவிட்டேன் என்றும் கூறியதாக பீஜே கூறுகிறார். ஆனால் ஹதீஸில் அன்னையவர்கள் மாதவிடாய் ஏற்படும் வயதுடையவராகn இருந்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மாதவிடாய் ஏற்படும் வயதுடையவர்கள் பிள்ளை பெறும் தகுதியுடையவர்கள் என்பது உலகறிந்த உண்மை. இவரது கூற்று ஹதீஸுக்குமுரணில்லையா..?

இது போன்று அந்த ஆக்கத்தில் முழுக்க முழுக்க அவரது சொந்த விளக்கமாகவே உள்ளது. மருந்துக்கு கூட குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் அவரது விளக்கம் குர்ஆணுக்கும்- ஹதீஸுக்கும் முரணாக உள்ளதை நாமறிந்தவரை சுட்டிக்காட்டியுள்ளோம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
குறிப்பு; அந்த ஆக்கம் மாற்று மதத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது எனவே குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்களை நாங்கள் முன்வைக்கவில்லை என்று கூற வருவார்களேயானால், மாற்று மதத்தவர் திருப்திக்காக குர்ஆண்-ஹதீசுக்கு முரணான விளக்கத்தை முன்வைக்கலாமா என்பதை தெரிவிக்க பீஜே கடமைப்பட்டுள்ளார்.

புதன், 25 நவம்பர், 2009

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த மரணத்திற்கு பின் இறைவனின் நீதி விசாரணைக்கு பின் சுவனம் எனும் சுக வாழ்க்கையை அடையவேண்டுமெனில், அதற்கான சேமிப்பு நன்மை மட்டுமே! ஒரு விவசாயி பருவகாலங்களில் தனது நிலத்தில் பயிரிட்டு அதன் மூலம் தானியங்களை சேகரித்து வைத்தால்தான் கோடை காலங்களில் கவலையற்று உண்டு வாழமுடியும். அதுபோல் இறைவன் வழங்கிய ஆயுளைக்கொண்டு இருக்கும் காலத்தில் நன்மைகளை சேகரித்து வைத்தால்தான் மறுமையில் சுவனத்தின் திறவுகோலாக அது அமையும். அதைவிடுத்து மனம் போன போக்கில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் மறுமையில் கைசேதப்படும் நிலைவரும். எனவேதான் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்;
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُواْ يَأْتِ بِكُمُ اللّهُ جَمِيعًا إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.[2:148 ]

இந்த வசனத்தில் அல்லாஹ் நன்மையின் பக்கம்நம்மை முந்திக்கொள்ளுமாறு பணிக்கிறான். நண்மையான செயல் என்றால் நாம் நினைப்பது போன்று தொழுகை-நோன்பு-ஹஜ் இதுபோன்றவை மட்டுமல்ல. இதுபோன்ற அமல்களோடு நம் அன்றாட வாழ்வை இறைமறை-இறைத்தூதர்[ஸல்] வழியில் அமைத்துக்கொண்டால் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் நன்மையானதாக மாற்றமுடியும். நாம் பேசும் பேச்சுக்களில் உண்மையை மையப்படுத்தினால் அது நன்மையாக மாறிவிடும். பொய்கள்-புறம்-அவதூறுகள் தவிர்ந்து கொன்டால் அது நமக்கு நன்மையானதாக மாறிவிடும். வீண் தர்க்கங்கள் தவிர்ந்து கொன்டால் அது நமக்கு நன்மையானதாக ஆகிவிடும். இதுபோக நம்முடைய நடை-உடை-உணவு-வியாபாரம்-இல்லறம்-உறவுமுறை பேணல்-போன்றவற்றில் நம்முடைய செயல்கள் குர்ஆண்-ஹதீஸ் வழியில் இருந்தால் அதுவும் நமக்கு நன்மையானதாக மாறிவிடும். மேலும் சின்ன சின்ன செயல்களுக்கும் பெரிய கூலி அல்லாஹ்வால் வழங்கப்படுகிறது.

உதாரணமாக ஸலாம் கூறுவதை எடுத்துக்கொண்டால்,ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் பத்து நண்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் என்றால் இருபது நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்றால் முப்பது நன்மையையும் கிடைக்கின்றது. இந்த நன்மைகளை பெறுவதற்காக பலமணி நேரம் நாம் செலவளிக்கவேண்டியதில்லை. ஒரு சில நிமிடங்களில் இந்த நன்மை நமக்கு கிடைத்துவிடும். நம்மில் எத்துனை பேர் ஸலாம் சொல்லுவதில் கவனம் செலுத்துகிறோம்..? இதுபோல் போல் நன்மையை அள்ளித்தரும் பல்வேறு சின்ன சின்ன செயல்கள் நம்மால் பாராமுகமாக விடப்பட்டதற்கு காரணம் நன்மையை சேகரிப்பதில் நமக்கு இருக்கும் ஆர்வமின்மைதான்.ஆனால் அருமை சஹாபாக்கள் நன்மையை அடைந்து கொள்ளும் அமல்கள் என்ன என்பதை ஆர்வத்துடன் நபியவர்களிடம் கேட்டதோடு, அதை உடனடியாக அமுல்படுத்திய காட்சியை ஹதீஸ்களில் காணலாம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நான் (நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்" என்று பதிலளித்தார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 2784 ]

ஆண்கள் அறப்போரில் பங்கெடுத்து அதன்மூலம் மிகப்பெரிய நன்மையை ஈட்டிக்கொள்கிறார்களே என்று ஆதங்கம் அடைந்த அன்னையவர்கள் பெண்களுக்கும் இந்த நன்மை கிடைக்காதா என்ற ஆர்வத்தில் அதுபற்றி நபியவர்களிடத்தில் கேட்கிறார்கள் எனில், சஹாபாக்களின் நன்மையை தேடும் தாக்கத்தை புரிந்துகொள்ளலாம்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்'. என்று விளக்கம் தந்தார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 843

இந்த பொன்மொழியில் ஏழை சஹாபாக்கள் வசதி படைத்தவர்கள் தங்களை விட நன்மையில் சில விசயங்களில் முந்துகிரார்களே என்ற ஆதங்கத்தில் நபியவர்களிடம் வந்து நன்மை பெற்றுத்தரும் அமலை பெற்று செல்கிறார்கள் எனில் சஹாபாக்களின் நன்மையை சேகரிக்கும் ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம்.

அலீ(ரலி) அறிவித்தார்கள்;
(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், 'நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.) அப்போது அவர்கள், 'நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.ஆதாரம் புஹாரி;எண் 5361

இந்த பொன்மொழியில் திரிகை சுற்றி கையெல்லாம் காய்த்துப்போனதால் பணியாள் கேட்ட தனது அருமை மகள் அன்னை பாத்திமா[ரலி] அவர்களுக்கு, பணியாளை தராமல் மறுமையில் பயனை தரும் அமலை சொல்லித்தருகிறார்கள் நபிகளார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஆதாரம்;புஹாரி எண் 6405

எனவே நன்மையை அள்ளித்தரும் அமல்களை அறிவோம். அதை செயல்வடிவில் கொண்டுவந்து மறுமைக்கான சேமிப்பாக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, 13 நவம்பர், 2009

துறவறம்/ கலப்புத் திருமணம் vs கண்ணிய மார்க்கம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அகிலத்தை படைத்து, அதில் மனிதனை படைத்து, மனிதன் வாழ்வின் வழிகாட்டியாக வேதத்தையும் -தூதரையும் தந்த இறைவன் மனிதனின் எல்லாவிதமான விஷயங்களுக்கும் இவ்விரண்டின் மூலம் வழிகாட்டியிருப்பதை காணலாம். அந்த வகையில் உணர்வுகளோடும்-உணர்ச்சிகளோடும் மனிதனை படைத்த இறைவன், அந்த உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சரியான வடிகால் தேவை என்பதால்தான் திருமணம் என்ற பந்தத்தையும் உருவாக்கினான்.இத்திருமணத்தின் மூலம் தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்;

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.[30:21 ]

இந்த வசனம் திருமணம் மட்டுமே அனைத்துவகையான மன சுமைகளையும் நீக்கி ஆறுதல் அளிக்கும் அருமருந்து என்று கூறுவதை உண்மையான தம்பதிகளால் உணர்ந்து கொள்ளமுடியும். எங்கோ வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்த ஆணும்-பெண்ணும் திருமணம் எனும் பந்தத்தின் மூலம் இணைந்தவுடன் ஒருவர் மற்றொருவருடன் கலந்துவிடுகிறார்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் தான். மனைவி மற்றும் அவள் மூலம் பெற்றெடுக்கும் தன் பிள்ளைகளின் அனைத்து வகையான தேவைகளை நிறைவேற்றும் கடமையில் அது கஷ்டமாகவே இருந்தாலும் அதில் ஈடுபடுவதில் ஒரு உண்மையான குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் இன்பம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை . அதுபோல் தனது கணவனின் உடல் தேவைக்கு மட்டுமன்றி, அவன் உள்ளத்தால் காயம்பட்டாலும் அவனது அனைத்து வலிகளுக்கும் அற்புதமான நிவாரணியாக இருக்கும் ஒரு உண்மையான குடும்பத்தலைவிக்கு அவளது இந்த பணியில் கிடைக்கும் இன்பமும் வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை. இதை தான் அல்லாஹ் ரத்தின சுருக்கமாக கூறுகின்றான்;

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.[2:187 ]
ஆடை என்பது எப்படி மனிதனின் மானத்தை மறைக்கும் காரணியாக இருக்கிறதோ , அது போன்று கணவனின் கண்ணியத்தை காப்பவளாக மனைவியும்- மனைவியின் கண்ணியத்தை காப்பவனாக கணவனும் எல்லா நேரமும் இருக்கவேண்டும் என்று இஸ்லாம் சொல்லிகாட்டுகிறது. மேலும் இந்த திருமண பந்தம் முறித்து துறவறம் எனும் நிலை மேற்கொள்ள ஆரோக்கியமான எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதியில்லை என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

ஸஅத் இப்னு ஆபி வக்காஸ்(ரலி) அறிவித்தார்கள்;
உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அப்படி) துறவறம் மேற்கொள்ள அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.
புஹாரி எண் 5074

இன்றைய நவீன உலகில் சிலர் குடும்ப வாழ்க்கை என்பது இறை நினைவை விட்டும் தடுத்துவிடும். மேலும் துறவறம் மட்டுமே மன அமைதியை தரும் என்று கூறி துறவறம் மேற்கொள்வதை பார்க்கிறோம். அப்படி துறவறம் மேற்கொண்டவர்களால் தனது உணர்வை கட்டுப்படுத்தி அவர்களால் இருக்கமுடிந்ததா என்றால் இல்லை. பல்வேறு மத குருமார்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது உலகறிந்த உண்மையாகும். இது ஒரு புறமிருக்க துறவறம் மன அமைதியை தராது என்ற இஸ்லாத்தின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் துறவறம் மேற்கொண்டு பின்பு மன வாழ்க்கையில் சங்கமித்து மன அமைதிகண்ட ஒருவரின் கூற்று உண்மை படுத்துவதை பாரீர்;

மூன்றாண்டுக்கு முன் "மாயமான' துறவி, இப்போது துறவறத்தை துறந்து, விவசாயியாகி விட்டார்.
இது குறித்து சுவாமி கூறுகையில்,"ஒரு மத நிறுவனத்தில் பணம் சேரும் போது, தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பக்தர்கள் அதில் நுழைகின்றனர். சீர்கேடு ஆரம்பிக்கிறது. என் மனசாட்சிப்படி, மடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், அதன் கணக்குகளை மக்கள் முன் வெளியிட தீர்மானித்தேன். துறவு வாழ்வில் கிடைக்காத அமைதி, நிம்மதி இல்லறத்தில் எனக்குக் கிட்டியது. இனி மடத் துக்குத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. சுவாமி பஸவேஸ்வரரின் "காயகதர்ம'த்தை கடைப்பிடிப்பதன் மூலம் இப் போது தான் அவரது உண்மையான சீடனாக நான் வாழ்கிறேன்' என்று மனம் திறந்து பேசினார். அவர் மனைவி கீதா,"நான் இனி வேறு எந்தப் பணியிலும் ஈடுபடப் போவதில்லை. இல்லத்தரசியாகவே இருக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் எதிர்கொண்ட பிரச்னைகளே இந்த உலகுக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் செய்தி' என்று கூறுகிறார். [தினமலர்]

எனவே இஸ்லாம் கூறும் இல்லற வாழ்க்கையே சிறந்தது என்பதை மேற்கண்ட செய்தி வலுவாக உறுதிப்படுத்துகிறது. இது ஒருபுறமிருக்க, சில அதிமேதாவிகள் சாதி வேறுபாடு ஒழிய கலப்புத் திருமணமே சிறந்தது என்ற தத்துவத்தை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்வதையும், அத்தகைய திருமணத்தை அரசே அங்கீகரித்துள்ளதையும் பார்க்கிறோம் . ஆனால் இஸ்லாம் ஒருபோதும் கலப்பு திருமணத்தை ஆதரிக்கவில்லை. ஒரு முஸ்லிம் ஆணாயினும்- பெண்ணாயினும் முஸ்லிமல்லாத ஒரு ஆணையோ- முஸ்லிமல்லாத பெண்ணையோ திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்;

أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُم مَّا أَنفَقُوا وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ذَلِكُمْ حُكْمُ اللَّهِ يَحْكُمُ بَيْنَكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை, மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம், அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள், (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும், உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.[60:10 ]

இந்த வசனத்தில் ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களை திருமணம் செய்வது கூடாது என்று அல்லாஹ் தெளிவாகவே கூறுகின்றான். காரணம் பலவாக இருந்தாலும் கலப்பு திருமணம் பெரும்பாலும் நிலைப்பதில்லை. அதில் ஒன்று ஆணும்-பெண்ணும் வெவ்வேறு மதத்தவராக இருந்தால் அவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்யும்போது, எந்த மதத்தின் அடிப்படையில் திருமணம் செய்வது, பிறக்கும் பிள்ளையை எந்தமதத்தில் அடிப்படையில் வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வரும். அப்போது கணவன் விட்டுக்கொடுத்தால் கணவனின் உரிமை அங்கே பாதிக்கப்படும். மனைவி விட்டுக்கொடுத்தால் அங்கே மனைவியின் உரிமை பதிக்கப்படும். வெளிப்படையாக கணவனோ-மனைவியோ விட்டுக்கொடுத்து ஏதாவது ஒரு மதத்தின் சாயலில் வாழ முற்ப்பட்டாலும் அங்கே மனதளைவில் இருவரில் ஒருவர் குமைந்துகொண்டு போலித்தனமான வாழ்க்கை வாழ நேரிடும். எனவேதான் இஸ்லாம் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கே! எனவே ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் திருமணம் செய்ய வழிகாட்டுகிறது. இந்த கலப்பு திருமணம் என்பது கதைக்கு உதவாததுஎன்பதற்கு நிகழ்கால சம்பவம் ஒன்று சான்றாக உள்ளது.

திண்டுக்கல் : ஒன்றரை ஆண்டு காதலித்து திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, எந்த மத சம்பிராயப்படி திருமணம் செய்வது என்ற தகராறில் பிரிந்து சென்றனர். திண்டுக்கல் லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (27). கோவையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவர் மூலம் அறிமுகம் ஆன சென்னை அசோக்நகர் முகமது என்பவர் மகள் ரியாஸ்பாத்துமாவை (19) ஒன்றரை ஆண்டுகளாக காதலித்தார். ரியாஸ் பாத்துமாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யவே, அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலன் தங்கியிருந்த கோவைக்கு சென்றார். அங்கிருந்து இந்த ஜோடி திருமணம் செய்ய திண்டுக்கல் வந்தது. இதற்கிடையில் ரியாஸ்பாத்துமாவை காணவில்லை என அசோக்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால் இந்த ஜோடி திண்டுக்கல் மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,கீதாதேவியிடம், தாங்கள் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் இந்து முறைப்படி திருமணம் செய்வதா, முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்வதா என ஸ்டேஷனில் காதல் ஜோடிகளுக்குள் விவாதம் நடந்தது. இது தகராறாக மாறி இருவரும் பிரிந்து தங்களது வீட்டிற்கு திரும்பினர்.[தினமலர்]

திருமணத்திற்கு முன்பே இங்கே கருத்து வேறுபாடு எனில் வருங்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதுதான் எதார்த்தம்! எனவே இன்றைய காலத்து ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு காதல்-கத்திரிக்காய் என்று மனதை அலைபாயவிட்டு அந்நிய மதத்தவரை திருமணம் செய்து அல்லல்படுவதை விட்டு அல்லாஹ் அனுமதித்த வகையில் அருமையான திருமண பந்தத்தில் இணைய சமுதாயம் முன்வரவேண்டும். அதுதான் நிரந்தர மகிழ்ச்சிக்கும் மறுமை வெற்றிக்கும் வழிவகுக்கும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

செவ்வாய், 10 நவம்பர், 2009

வான் மழையும்-படிப்பினையும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சில நாட்களாக பருவமழை பெரும் அளவில் பெய்துவருகிறது. தமிழக அளவில் மட்டும் சுமார் என்பது பேர்வரை இன்றளவில் மரணித்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் இந்த மழை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். முதலாவதாக மழையை மனிதனால் வரவழைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. சிலர் சொல்வார்கள்; இசையால் மழையை வரவழைக்கமுடியும், மரங்களை வளர்த்துவிட்டால் மழையை வரவழைத்து விடமுடியும், யாகங்கள் நடத்தினால் மழையை வரவழைத்துவிட முடியும், தவளைக்கும்-தவளைக்கும் கல்யாணம், கழுதைக்கும்-மரத்துக்கும் கல்யாணம் இப்படியாக சில மூடநம்பிக்கை சடங்குகளை செய்தால் மழையை வரவழைத்து விடமுடியும் என்பார்கள். ஆனால் இது நிச்சயமாக வெறும் கற்பனையே அன்றி வேறல்ல என்பதை நாம் நடைமுறையில் கண்டு வருகிறோம். அதுமட்டுமன்றி பெய்யக்கூடிய மழையை எந்த ஊரில் பெய்யும் என்று எவராலும் சொல்லமுடியாது. காரணம் மழையை இறக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்;
அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.[14:32 ]

இந்த வசனத்தில் வானத்திலிருந்து மழையை இறக்குவது நானே என்று கூறும் இறைவன்,வேறு ஒரு வசனத்தில் மழை மட்டுமன்றி ஐந்து விஷயங்கள் பற்றிய ஞானம் தனக்கு மட்டுமே உரியது என்று கூறுகின்றான்;

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.[31:34 ]

மேற்கண்ட வசனங்கள் மழை என்பது அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதும் அது எப்போது, எங்கே எந்த அளவு பெய்யும் என்பதும் மனிதனின் ஆற்றலுக்கு உட்பட்டது அல்ல என்பதை அறியமுடிகிறது. அதனால்தான் மழை தொடங்கிய பின்னும் கூட வானிலை ஆய்வு மைய்யங்களால் கூட துல்லியமான மழை அளவை சொல்லமுடியவில்லை என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இது ஒருபுறமிருக்க, மனிதனின் மிக முக்கியமான ஆதாரமாக நீர்நிலைகள் விளங்குகின்றன. அந்த நீர்நிலைகள் மூலமாகத்தான் மனிதன் தானும் பருகி, கால்நடைகளுக்கும் புகட்டி விவசாயமும் மேற்கொள்கிறான். அப்படிப்பட்ட நீர்நிலைகள் பொய்த்துவிடாமல் இருக்க மழை மிகமிக அவசியமாகும். இந்த மழை விஷயத்தில் இன்னும் சில விஷயங்களை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. குறிப்பாக பருவமழை தாமதமாக வறட்சி தென்படுமாயின், அந்த மழையை வேண்டி என்ன செய்யவேண்டும் என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

மழை வேண்டி தொழுதல்;
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 1012
இந்த ஹதீஸின் மூலம் மழை வேண்டி இரு ரக்அத்துகள் தொழவேண்டும் என்றும் அத்தொழுகை திடலில்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் விளங்கிக்கொள்ளலாம். மேலும் தொழுகைக்கு பின் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கவேண்டும்;
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பிரார்த்தனை எதிலும் தம் கைகளை (மிக உயரமாகத்) தூக்குவதில்லை; மழை வேண்டிப் பிராத்திக்கையில் தவிர. ஏனெனில், அதில் அவர்கள் தம் இரண்டு கைகளையும் தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு உயர்த்துவது வழக்கம். அபூ மூஸா(ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்; மேலும், (அப்போது) தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள்.
ஆதாரம்; புஹாரி எண் 3565

மழை வரும்போது நபியவர்களின் மனநிலை;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4829

வானில் மழை மேகம் தென்பட்டால் இந்த மேகம் இறைவனின் அருளை பொழியும் மழை மேகமா..? அல்லது அவனது தண்டனையை இறக்கிவைக்கும்மேகமா.? என்றெல்லாம் நபியவர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள். காரணம் முன்னர் வாழ்ந்த சமூகத்தார் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கலக்கம் அடைகிறார்கள். ஆனால் இன்று நாமோ மழை மேகத்தை கண்டுவிட்டால் நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. இந்த மேகம் அல்லாஹ்வின் அருள் மேகமா..? அல்லது அல்லாஹ்வின் தண்டனைக்குரிய மேகமா என்றெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதில்லை. இதுதான் நமது நிலை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள்,

நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)" என்று கூறுவார்கள்.[புஹாரி எண் 1032 ]

மழையை கண்ட நாம் என்றாவது இவ்வாறு பிரார்த்தித்துள்ளோமா என்று ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்வது சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மழையை வேண்டி பிரார்த்திப்பவர்கள் உண்டு. இன்னும் சிலர் மழை பைத் என்று சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டு தெருவை வலம் வருவதும் உண்டு. ஆனால் அதிகப்படியாயான மழை பெய்யும்போது அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்கும் பழக்கம் ஏனோ நம்மிடம் இல்லாமல் போனது வேதனைக்குரியது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்iயும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இழுந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!" என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.
நூல்;புஹாரி.

இந்த அடிப்படையில் நாமும் மழையின் பாதிப்பில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும்.

மழையின் பெறவேண்டிய மிக முக்கியமான படிப்பினை;

அல்லாஹ் கூறுகின்றான்;

பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.[41:௩௯ ]

இந்த வசனத்தில் மிகப்பெரிய படிப்பினை உள்ளது. காய்ந்து சருகாக இறந்து காட்சியளிக்கும் பூமியின் புற்பூண்டுகள், அதன் மீது அல்லாஹ்வின் அருள் மாரி பொழிந்தவுடன் பச்சை பசேல் என்று முளைப்பதை பார்க்கிறோம். இதுபோன்று தான் நாம் இறந்தவுடன் அல்லாஹ் நம்மை உயிர்ப்பிப்பான். அப்போது நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடி செயலுக்கும் நாம் பதில் சொல்லவேண்டும் என்ற சிந்தனை இந்த மழையின் மூலம் பூமி வெளியாக்கும் பயிரினங்கள் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனை சந்திக்கும் அந்த நாளில், அவன் பொருந்திக்கொண்டவர்களாக சந்திக்க கிருபை செய்வானாக!