அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 30 ஏப்ரல், 2009

உழைத்து வாழவேண்டும்! பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!!

மே 1 அன்று 'உலக தொழிலாளர் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை அனுஷ்டிப்பது சரியா?தவறா என்ற ஆய்வுக்கு செல்லாமல், இந்த நாள் உலகெங்கிலும் உழைப்பின் சிறப்பை எடுத்தியம்புவதால் இந்தநாளில், இஸ்லாம் உழைப்புக்கு தரும் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்வதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.

உலகமாந்தர்களில் உழைக்கும் வர்க்கம் ஒன்றுதான். ஆனால் உழைக்காமல் வாழும் வர்க்கம் பலஉண்டு. அடுத்தவர் உழைக்க அதில் வாழுபவர்கள் ஒரு ரகம். உழைக்க தெம்பிருந்தும் 'வெட்கத்தைவிட்டு' பிச்சை எடுத்து வாழுபவர்கள் ஒருரகம். படித்து பதவியில் இருப்பவர்களில் சிலர், லஞ்சம் என்ற பெயரில் கவுரவபிச்சை எடுப்பவர்கள் ஒருரகம்.உழைக்காமல் 'திருடி'வாழுபவர்கள் ஒருரகம். இப்படியான மக்கள் வாழும் நிலையில் இஸ்லாம் உழைப்பிற்கு உன்னதமான இடத்தைதந்து, அடுத்தவர் உழைப்பில் வாழாமல், அடுத்தவரை ஏய்க்காமல் உழைத்து வாழ்ந்தால் அதற்கும் நன்மையுண்டு என்று சொல்லிக்காட்டுகிறது.
உழைப்பின் முக்கியத்துவம்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்."
[நூல்;புஹாரி,1471]
பிச்சையெடுப்பதை காட்டிலும் உழைப்பு சிறந்தது;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்."
நூல்;புஹாரி,எண் 1427 ]
மேற்கண்ட இரு செய்திகளும் அடுத்தவர் உழைப்பில் வாழநினைப்பவர்களுக்கும், சுயமரியாதையை இழந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்த நினைப்பவர்களுக்கும் சாட்டையடியாக இருப்பதை காணலாம்.
லஞ்சம் ஒரு வஞ்சகச்செயல்;
அல்லாஹ் கூறுகின்றான்;
2:188
وَلاَ تَأْكُلُواْ أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُواْ بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُواْ فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

கவுரவமான பதவியில் இருந்தபோதும் பேராசையின் காரணமாக லஞ்சம் வாங்குபவர்களிடம், லஞ்சம் கொடுக்கக்கூடாது எனபதை இவ்வசனம் சொல்லிக்காட்டி லஞ்சத்தின் வாசலை அடைக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இவ்வசனத்தை கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம்களில் சிலர் தங்களுடைய அறியாமையின் காரணமாக லஞ்சம் கொடுத்து தங்களுடைய காரியத்தை முடித்துக்கொள்வதையும் பரவலாக பார்க்கிறோம். இந்த செயல் கண்டிப்பாக தடுக்கப்படவேண்டியதாகும்.
உழைப்பே உயர்வு;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்." [நூல்;புஹாரி,எண் 2072 ]
உழைத்து வாழ்ந்த சத்திய சகாபாக்கள்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது. [நூல்;புஹாரி எண் 2071 ]
வியர்வை சிந்தி உழைத்த சத்திய சகாபாக்களை புறந்தள்ளி, மார்க்கத்தையே பிழைப்பாக்கி கொண்ட 'மார்க்க அறிஞர்களை' என்னவென்று சொல்வது..?
தனக்கு மட்டுமல்ல.தர்மம் செய்யவும் உழைத்த உத்தமர்கள்;
அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். "நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி ஒரு 'முத்து' கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!" [நூல்;புஹாரி எண் 2273 ]

உழைத்து வாழச்சொல்லும் மார்க்கத்தையுடைய, உழைத்துவாழ்ந்த நபிமார்கள், சத்திய சகாபாக்கள் வழியில் உண்மை முஸ்லிம்களாகிய நாம் உழைத்துவாழ்வோம். ஏனெனில், மிம்பர் மீதேறி உத்தம நபி[ஸல்] கூறினார்கள்;அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது" என்றும் கூறினார்கள்.[புஹாரி]

முஸ்லிம்களின் கை எப்போதும், எதிலும் உயர்ந்த கையாக இருக்கவேண்டும். அதுதான் உயர்வின் அடையாளமும் கூட!

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

தற்கொலையை தடுத்து நிறுத்துவோம்!



بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
2:30
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلاَئِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الأَرْضِ خَلِيفَةً قَالُواْ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاء وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لاَ تَعْلَمُونَ
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ், நம்தந்தை ஆதம்[அலை] அவர்களையும் அவர்கள் மூலமாக இதுவரை வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற, இனி பிறக்கவிருக்கிற அத்துணை மாந்தரையும் அவனது பிரதிநிதிகளாக இவ்வுலகில் அனுப்பி, நமக்கு வாழ்வின் இலக்கணங்களை கற்றுத்தருவதற்காக
நபி மார்களையும் தொடர்ச்சியாக அனுப்பி இறுதியாக மரணம் என்றொரு முடிவையும் அல்லாஹ் ஆக்கிவைத்துள்ளான். அந்த இறுதி முடிவான மரணத்தை நாமாக தேடிக்கொள்வதற்கு அல்லாஹ் அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் குறிப்பிட்ட மரண நேரத்தை அல்லாஹ் தீர்மானித்துள்ளான். அந்த நேரம் வரும்வரை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இவ்வுலகில் வாழ்ந்துதான் தீரவேண்டும். ஆனால் இன்று நாம் பார்த்தோமானால் 'தற்கொலை' செய்துகொள்வது பேஷனாகி விட்டது. தற்கொலைக்கான காரணங்களாக உள்ளவைகளை பார்த்தால் அற்பமானவைகளாக இருப்பதை காணலாம்.

தற்கொலைக்கான காரணிகள்;

1.கடன்தொல்லை;கடன் வாங்குபவர்கள் அவசியத்தேவைக்கன்றி கடன் வாங்குவதை நிறுத்திக்கொள்வதன் மூலமும், இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ பழகிக்கொண்டாலே கடன் காணாமல் போகும். கடன் வாங்கி பிரியாணி சாப்பிடுவதைவிட, கடன் இல்லாத கஞ்சி சிறந்தது நிம்மதியானது எனபதை விளங்கிக்கொள்ளவேண்டும். ஒருவேளை அவசியத்தேவைக்காக் கடன் வாங்கும் நிலை வந்தாலும், அக்கடனை அடைக்கமுடியாத நிலை ஏற்பட்டாலும் அதற்காக உயிரை விட்டுவிடக்கூடாது. ஏனெனில், கடன் இன்றல்ல நாளை சம்பாதித்து கட்டிவிடலாம் ஆனால், உயிரை இழந்துவிட்டால் திரும்பவராது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

2 . வரதட்சனை கொடுமை;தினந்தோறும் பத்திரிக்கையில் ஒரு வரதட்சனை கொடுமை தற்கொலை பற்றிய செய்தி இடம்பெறாத நாள் இல்லை என்னும் அளவுக்கு ஆண்டுதோறும் வரதட்சனை தற்கொலைகள் இந்தியாவில் பெருகிவருவதாக ஆய்வறிக்கைகள் கூறிவரும் நிலையில், வரதட்சனை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட எத்துனை சட்டங்கள் போட்டும் தடுக்கமுடியாத இந்த வரதட்சனை விஷயத்தை அல்லாஹ் ஒரு வரி கட்டளையில் தடுத்து நிறுத்துகிறான்;4:4
وَآتُواْ النَّسَاء صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

முஸ்லிம்கள் இந்த வசனத்தை கடைபிடித்தால் வரதட்சனையும் இருக்காது. வரதட்சனை தற்கொலைகளும் இருக்காது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

3.காதல் தோல்வி; தற்கொலையில் பிரதானமான இடத்தை வகிப்பது காதல்தோல்வி தற்கொலைகள்தான். காதல்தோல்வி என்பது சற்று தாங்கமுடியாத இழப்புதான். ஆனாலும் அதற்காக உயிரை விடுவது என்பது முட்டாள்தனமானது. ஏனெனில், ஒரு முஸ்லிமுக்கு தன்னுடைய காதலியையும் தாண்டி, பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமைகள் உற்றார்-உறவினர்கள், சமுதாயத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் உண்டு. இதையெல்லாம் புறம்தள்ளி நேற்றுவந்தவளுக்காக உயிரைவிட்டால்செய்யத்தவறிய கடமைகளுக்காக இறைவனின் நீதிமன்றத்தில் பதிலளிக்கவேண்டும். மேலும், நாம் விரும்பும் பெண்ணைவிட நம்மை விரும்பும் பெண் சிறந்தவள் என்பதை விளங்கி, வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழவேண்டும்.


இவை போக தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை,ஆசிரியர் திட்டினால் தற்கொலை, கணவரோ அவர்சார்ந்தவர்களோ திட்டினால் தற்கொலை, தனது நேசத்துக்குரிய நடிகர்-அரசியல் தலைவர்களுக்காக தற்கொலை இந்த பட்டியலில் இப்போது 'லேட்டஸ்ட்டாக' இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது. தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்வில் பாசாகிவிடலாம். கணவர் திட்டினால் தவறை திருத்திக்கொண்டால் கணவரின் அன்பை பெறலாம் ஆனால் உயிரை இழந்தால் பெறமுடியுமா? மேலும் இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்கள் சுமார் இருபது பேர் இருக்கும். இப்படி அதிக தற்கொலைக்கு காரணம் அரசியல்வாதிகள், இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான். இலங்கை தமிழர்களுக்காக இத்துணை சகோதரர்கள் உயிரை மாய்த்தார்களே! ஒரு அரசியல்வாதி தற்கொலை செய்ததுண்டா? அரசியல்வாதிகளின் ஆவேசப்பேச்சுக்கு செவிமடுத்தால் நம்முடைய ஆவி[உயிர்]தான் போகும். நம்வீட்டில் சோத்துப்பானையில் ஆவிவராது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

தற்கொலை பற்றி இஸ்லாம்;

A. உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள்;4:29
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلاَ تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللّهِ يَسِيرًا
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.4:30.

B .தற்கொலை பெரும்பாவம்;அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

C .தற்கொலை செய்தவர் இறைவழியில் போரிட்டாலும் நரகமே;

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தம் படையினரிடமும், மாற்று அணியினர் அவர்கள் தம் படையினரிடமும் திரும்பியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களிடையே ('குஸ்மான்' என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். அவர், (யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலம்) தனியாகப் போரிட்ட எவரையும்விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தம் வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, 'இன்றைய தினம் இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்து போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை'' என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் நரகவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் இப்னு அபில் ஜவ்ன் என்ற) ஒருவர், 'நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப் போகிறேன்'' என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார். அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றால். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தன்னுடைய வாளை (அதன் கீழ் பகுதியை) பூமியில் வைத்து, அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'தாங்கள் இறைத்தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்'' என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என்ன அது?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், 'அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு'' என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடி நான் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்து போக விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்) முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பாh. இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்'' என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 4203 ]

D .நிரந்தர நரகம்;

ஹஸன் அறிவித்தார். இந்த (பஸராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப்(ரலி), நபி(ஸல்) அவர்களின் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர் கூறினார். 'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். [நூல்;புஹாரி 1364]

E. நெருப்பிற்குள்ளும் இரட்டிப்பு வேதனை;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். [நூல்;புஹாரி,எண் 5778 ]

'செத்துட்டோம்னா நிம்மதி' என்று நினைத்து தற்கொலை செய்து கொள்பவர்கள் மேற்கண்ட இறைமறை-இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பொன்மொழிகளை படித்து தங்களை திருத்திக்கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக உண்மையான முஸ்லிம்கள் உலகில் ஏற்படும் சோதனைகளை கண்டு துவண்டுவிடக்கூடாது. ஏனெனில், அல்லாஹ் மூமீன்களை சோதிப்பேன் என்று சொல்லிக்காட்டுகிறான்;2:155
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

இறைவன் நம்மை புடம்போட்ட தங்கங்கங்களாக மாற்றுவதற்காக சில சோதனைகளை ஏற்ப்படுத்துவான். அதில் பொறுமையோடு இருந்து மகத்தான சொர்க்கத்தில் மாநபி[ஸல்] அவர்களோடு வீற்றிடுவோம்இன்ஷா அல்லாஹ்.

சனி, 18 ஏப்ரல், 2009

பகைமை எனும் களைநீக்கி பாசமெனும் விதை விதைப்போம்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
3:103
وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ وَاذْكُرُواْ نِعْمَةَ اللّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىَ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

அன்றைய அறியாமை காலத்தில் மக்கத்து முஷ்ரிக்கீன்களுக்கு மத்தியில் சிறு பகை என்றாலும் அதை பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பழிதீர்த்து வந்தநிலையில், அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கம் மூலம் நேர்வழிகாட்டி தன்னுடைய அருளின்மூலம் அவர்களது உள்ளங்களை ஒன்றுபடுத்தி சகோதரர்களாக மாற்றியதை மேற்கண்ட வசனத்தில் சொல்லிக்காட்டுகிறான். அதுபோல் பல்வேறு பிரிவுகளில் இருந்த முஸ்லிம்களாகிய நமக்கு மத்தியிலும் அல்லாஹ், தவ்ஹீத் எனும் அருளை பொழிந்து நமது உள்ளங்களை ஒன்று படுத்தி நம்மை சகோதரர்களாக ஆக்கினான். அதற்கு உதாரணம் சொல்லவேண்டுமெனில், உடன்பிறந்த அண்ணனனையே பெரும்பாலும் பெயர்சொல்லி அழைக்கும் நம் சகோதரர்கள் சகோதரர் பீ.ஜே அவர்களை 'அண்ணன்' என அன்போடு அழைக்கும் அளவுக்கு நமக்கு மத்தியில் உள்ளப்பினைப்பை ஏற்படுத்தினான். ஆனால் அந்த பிணைப்பு இன்று சைத்தானின் சூழ்ச்சியால் பிளவுகளாகி பகைமை தொடர்வதை பார்க்கையில் நாம் வந்தவழியே [அறியாமைக்காலத்திற்கு] சென்று விடுவோமோ என்ற அச்சம் தலைவர்களுக்கு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமுக்கும் ஏற்படுவது இயற்கையே!

மேல்மட்ட தலைவர்களுக்கு மத்தியில் ஏற்படும் மோதல்களுக்கு 'கொள்கைமுலாம்' பூசப்பட்டு, தவ்ஹீத் சகோதரர்கள் நம்பவைக்கப்பட்டு, பிளவுகள் ஏற்பட்டு, ஒவ்வொரு பிரிவினரும் அடுத்தபிரிவினரை பகைமை கண்ணோட்டத்தோடு பார்ப்பதும், ஒரு அணியை தோற்கடிக்க நாங்கள் கடும் முயற்சி மேற்கொள்வோம் என்று சொல்லும் அளவுக்கு பகைமைஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இப்படி பிரிந்து , மேற்கண்ட வசனத்தை சுட்டிக்காட்டினால் 'அல்லாஹ்வின் கயிறை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள்' என்பது அல்-குர்'ஆண் அல்-ஹதீஸை பின்பற்றுவது என்று அர்த்தம். நாங்கள் அல்-குர்'ஆண்-ஹதீஸை தானே பின்பற்றுகிறோம் எனவே எங்கள்மீது தவறில்லை என்பார்கள் .ஆனால் உண்மையில் தவ்ஹீத்வாதிகளின் தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் இவர்கள், இந்த ஒற்றுமை விஷயத்தில் குர்'ஆண்-ஹதீஸை பின்பற்றவில்லை என்று நாம் அடித்து சொல்வோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

புஹாரி, 6076

இந்த ஹதீஸை அமுல்படுத்திய தலைவர் யார்? பிரிந்து பல ஆண்டுகளாகியும் சந்திக்காமலும், ஸலாம் சொல்லாமலும், குறைந்த பட்சம் போனில்கூட உரையாடாத இவர்களா ஒன்றுபடப்போகிறார்கள்? ஆனால் சத்திய சகாபாக்கள் நடைமுறைப்படுத்தினார்கள்!


நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார் ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது நான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள். ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாம்விட்டபோது பன} ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள். எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி), 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள். அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்' என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள். மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி) இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.

நூல்;புஹாரி,எண் 6073

'ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து காஃபிரே! (இறைமறுப்பாளனே!) என்று அழைத்தால் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நூல்;புஹாரி,எண் 6104

ஒரு முஸ்லிமை காஃபிர் என்று சொல்லக்கூடாது என்று நபி[ஸல்]அவர்கள் தடுத்திருக்க 'தடம்புரண்டவர்கள்' என்று பட்டியல் போட்டது குர்'ஆண் -ஹதீஸின் வழிமுறையா? கேட்டால் சொல்வார்கள் அவர்கள் ஷேய்க் அப்துல்லா ஜமாலி நிகழ்ச்சிக்கு சேர் போட்டார்கள் என்று! இது ஒன்றே அவர்கள் தடம்புரண்டுவிடார்கள் என்பதற்கு அளவுகோலாக முடியுமா? அவர்களின் உள்ளத்தை அறிவது இறைவனல்லவா?

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் அலீ(ரலி) கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: உயைனா இப்னு பத்ர்(ரலி), அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி), ஸைத் அல் கைல்(ரலி) நான்காவது நபர் அல்கமா(ரலி); அல்லது ஆமிர் இப்னு துஃபைல்(ரலி) அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்'' என்று கூறினார். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்த வண்ணமுள்ளன'' என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப் பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்'' என்று கூறனிhர். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடு தான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?' என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திருமபிச் சென்றார். அப்போது காலித் இப்னு வலீத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரின் தலையைக் கொய்து விடட்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கு காலித்(ரலி), 'எத்தனையோ தொழுகையாளிகள் தம் இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகிறார்கள்'' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை'' என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள். மேலும், கூறினார்கள்; 'இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நிறைய ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் 'ஆது' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்து விடுவேன்.

நூல்;புஹாரி,எண் 4351

உள்ளத்தை அதில் உள்ள எண்ணத்தை அறிவது அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்க, எங்களைவிட்டு பிரிந்தவர்கள் 'தடம்புரண்டவர்கள்' என பட்டியல்போடுவது குர்'ஆண்-ஹதீஸ் வழிமுறையா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்;புஹாரி,எண் 2442

இந்த ஹதீஸில் ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமுக்கு [மார்க்கத்திற்குடப்ட்டு] தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்றும், ஒரு முஸ்லீம் அநீதிக்கு உள்ளாவதை மற்றொரு முஸ்லீம் தடுக்கவேண்டும் என்றும், அவனது குறைகளை மறைக்கவேண்டும் என்றும் நபி[ஸல்]அவர்கள் கட்டளையிட்டிருக்க, இந்த தேர்தலில் ஒருமுஸ்லீம் அல்ல.ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயமும் புறக்கணிக்கப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையில், முஸ்லிம்களை ஆதரிக்காமல் யார் முஸ்லிம்களை புறக்கனித்தாரோ அவருக்கு ஆதரவு என்பதும், முஸ்லிம்களின் 'சமுதாயதுரோகத்தை' பட்டியலிடுவோம் என்பதும், முஸ்லிம்களை தோல்வியுறச்செய்து, முஸ்லிமல்லாதவர்களை வெற்றிபெறவைப்போம் என்பதும் மேற்கண்ட ஹதீஸை புறக்கணிப்பதில்லையா?

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நான் அலீ(ரலி) அவர்களிடம், '(நபிகளாரின் குடும்பத்தாராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?' என்று கேட்டேன். -அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் சில வேளைகளில் 'மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?' என்று அபூ ஜுஹைஃபா(ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்கள். அதற்கு அலீ(ரலி) அவர்கள், 'வித்துக்களைப் பிளந்தவனும் உயிரினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் உள்ளதைத் தவிர வேறெதுவும் (நபிகளாரின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை; இறைவேதத்தில் ஒருவருக்கு அளிக்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர' என்று பதிலளித்தார்கள். நான் 'இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?' என்று கேட்டேன். அலீ(ரலி) அவர்கள், 'இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக்கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளது' என்று பதிலளித்தார்கள்.59 இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நூல்;புஹாரி,எண் 6915.

மேற்கண்ட ஹதீஸில் ஒரு இறை நிராகரிப்பாலனுக்காக ஒருமுஸ்லீம் கொள்ளப்படக்கூடாது என கட்டளை உள்ளநிலையில், ஒரு இறைநிராகரிப்பாளனுக்காக ஒரு முஸ்லிமை தோற்கடிப்பது மேற்கண்ட ஹதீஸுக்கு முரணில்லையா? ஹஜ்ஜத்துல் வதாவில் நபி[ஸல்] அவர்கள், ஒரு முஸ்லிமின் உயிர், உடமை, மானம் இன்னொரு முஸ்லிமுக்கு ஹராம் என கூறவில்லையா? ஒரு முஸ்லிமை தோற்கடித்து ஒரு முஸ்லிமல்லாதவரை வெற்றிபெற வைப்பது ஒரு முஸ்லிமின் மானத்தோடு விளையாடுவதில்ல்லையா? இது நபிவழிக்கு முரணில்லையா?

எனவே, சகோதர்களே! எந்தவகையிலும் ஒரு முஸ்லிமுக்கு, ஒரு முஸ்லிமல்லாதவர் ஈடாகமாட்டார். ஒரு முஸ்லீம் என்னதான் பாவங்கள் செய்தாலும் அவனது உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருந்தாலும் அவர் இறுதியிலாவது சொர்க்கம் செல்வார். ஆனால் முஸ்லிமல்ல்லாதவர்கள் நிலை சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவே பகைமை மறந்து நமக்குள் பொதுப்பிரச்சினையிலாவது ஒன்றுபடுவோம். பலதரப்பு கொள்கையுடைய கட்சிகள் 'குறைந்தபட்ச செயல்திட்டம்' என்ற பெயரில் ஒன்றிணையும்போது, நாம் இறைவன் நமக்களித்த முஸ்லிம்கள் என்ற பெயரால் ஓரணியில் திரளுவது சாத்தியமே மனமிருந்தால்......!!!




















சனி, 11 ஏப்ரல், 2009

இது இல்லாதவர்கள் எதை வேன்டுமானாலும் செய்துகொள்ளட்டும்!

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் தவறிழைக்கக்கூடியவர்களே! அந்த தவறிலிருந்து மனிதர்களை திருத்தவேண்டுமென்ற நோக்கில், பல்வேறு சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டாலும் தவறுகள் குறைந்தபாடில்லை. நாகரீகம் வளர வளர தவறும் பல்வேறு பரிமாணங்களில் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இத்தகைய தீமையிலிருந்து இரண்டு விஷயங்களால் மட்டுமே மனிதனை தீமைக்ளைலிருந்து மீட்டெடுக்க முடியும்.

  1. இறை அச்சம்.
  2. வெட்கம்[நாணம்]

இறைவனுக்கு அஞ்சக்கூடிய ஒருவன், மக்கள் மத்தியில் இருந்தபோதும், தனிமையில் இருக்கும்போதும் தவறு செய்ய அஞ்சுவான். ஏனெனில், மனிதர்கள் நம்மை பார்க்காவிட்டாலும் அகிலமனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கும் இறைவன் நாம் செய்யும் தவறை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். நாளை நியாயத்தீர்ப்பு நாளில் நம்தந்தை ஆதம்[அலை] அவர்கள் முதல், உலகம் அழியும் காலத்தில் இறுதியாக பிறந்த மனிதன்வரை அனைவரையும் ஒன்றுதிரட்டும் அந்த மஹ்ஸர் மைதானத்தில், நம்முடைய தீமைகளை வெளிச்சம்போட்டு காட்டுவான் என்ற அச்சம் இருந்தால் ஒரு மனிதன் தவறு செய்வதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்வான்.

இறை அச்சம் பலவீனமாக இருக்கும் ஒருவனிடத்தில் வெட்கஉணர்வு இருந்தால், அவனும் தவறு செய்ய யோசிப்பான். ஏனெனில், நாம் தவறு செய்யும் போது யாராவது பார்த்துவிட்டால் மானம் போகுமே என்ற அவனுடைய வெட்கம் அவனை அந்த தவறிலிருந்து தற்காத்து காப்பாற்றும்.

இந்த இரண்டுமே பலவீனமாக உள்ள மனிதர்கள் தவறு செய்ய யோசிக்கமாட்டார்கள். அதுக்கு உதராணமாக இன்றைய அரசியல்வாதிகளை சொல்லலாம். மக்களின் பொதுப்பணத்தை சுருட்டுகிறார்கள் அதற்காக கைது செய்யப்படும்போது கொஞ்சம் கூட வெட்கமின்றி, தியாகிபோல கையசைத்துக்கொண்டு போலிஸ் ஜீப்பில் ஏறுகிறார்கள். அதுபோல நேற்றுவரை ஒரு தலைவரை தாறுமாறாக விமர்சித்துவிட்டு மறுநாளே, அந்த தலைவருக்கு பொன்னாடை போர்த்தி புகழ்மாலை சூட்டுகிறார்கள். நம்முடைய இந்த செயலை பார்த்து மக்கள் எள்ளிநகையாடுவார்களே என்ற வெட்கம் இவர்களுக்கு இருப்பதில்லை. இதில் வேதனை என்னவெனில், முஸ்லீம் அமைப்புகளும் ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அணியில் அங்கம் வகிக்கிரார்களோ அந்த அணியில் தலைவருக்கு ஆதரவாக, எதிரணி தலைவரை சாடுவதும் பின்பு இந்த அணிக்கு வந்தவுடன் அந்த அணியை சாடுவதுமாக சராசரி அரசியல்வாதிகளாக வலம்வருவதற்கு காரணம் வெட்கமின்மைதான். இப்படி பட்டவர்களை பற்றித்தான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;

மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்' என்பது. என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நூல்; புஹாரி, 6120

வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்;

ஈமான்[ இறை நம்பிக்கை] என்றால் நாம் என்ன விளங்கியிருக்கிறோம் என்றால், ஆறு அடிப்படையான விசயங்களை நம்பினால் போதும் அதாவது, அல்லாஹ்வை, மலக்குகளை, வேதங்களை, நபிமார்களை, மறுமையை,விதியை நம்பினால் போதும் நாம் பரிபூரண முஸ்லீம் என்று. ஆனால் இந்த ஆறு விஷயங்களும் மரத்தின் ஆணிவேர் போன்றது, முழுமையான ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாகும். நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;

'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' நூல்; புஹாரி,எண் 9 .

ஒரு மரம் வெறுமனே அதன் அடிப்பகுதியோடு நின்றால் அதை பசுமையான மரம் என்று சொல்லமாட்டோம். ஆனால் பல்வேறு கிளைகளுடனும், இலைகளுடனும் காட்சிதரும் மரத்தைத்தான் பசுமையான மரம் என்போம். அதுபோல் வெட்கம் என்ற கிளையும் நம்முடைய ஈமான் என்ற மரத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முழுமையான ஈமானாகும்.

ஆதிமணிதரும், நபியும், நம்தந்தையுமான ஆதம் மற்றும் ஹவ்வா[அலை]ஆகியோரின் வெட்கம்;


فَدَلاَّهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُل لَّكُمَا إِنَّ الشَّيْطَآنَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.[7:22]

ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியான ஆதம்[அலை] ஹவ்வா[அலை] இருவரும் இறைவன் தடுத்த மரத்தின் கனியை புசித்தபோது, அவ்விருவரின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டவுடன் இருவரும் தம்பதியர் என்றபோதிலும் அவர்கள் தங்களுக்குள் மறைத்துக்கொள்ளவேண்டியதில்லை என்ற போதிலும் வெட்க உணர்வு அவர்களுக்கு இருந்ததால் இலைகளை வைத்து மறைக்க முற்பட்டனர் என்றால், இன்று நம்சமுதாய பெண்களில் சிலர் கணவர் மட்டும் காணவேண்டிய அழகை கடைவிரிப்பது போன்று, பர்தா அணியாமல் கண்ணாடிபோன்ற சேலைகளை அணிந்து கொண்டு வலம்வருவதும் அதை தடுக்கவேண்டிய பொறுப்பிலுள்ள கணவனோ, அல்லது பெற்றோரோ 'நாகரீகம்' என்று கண்டுகொள்ளாமல் விடுவதும் வெட்கமின்மைதானே!

சினிமாவில் அரைகுறை ஆடைகளுடன் வலம்வரும் நடிகைகளை ரசிப்பதும், அத்தகைய ஆபாச காட்சிகளை மனைவி,மக்கள் சகிதமாக கண்டுகளிப்பதும் வெட்கமின்மைதானே!


وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاء بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاء بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31 ]

இந்த வசனத்தின் அடிப்படையில் தங்களை மறைத்துக்கொள்ளவேண்டிய முஸ்லீம் பெண்களில் சிலர், இறை கட்டளையை புறக்கணித்து, மச்சான் என்றும் கொழுந்தன் என்றும், குடும்ப நபர் என்றும், நெருங்கிய உறவினர் என்றும் சகஜமாக இவர்கள் முன்னாள் சாதாரணமாக வலம்வருவதும், கேலிசெய்து விளையாடுவதும் வெட்கமின்மைதானே!

ரசூல்[ஸல்] அவர்கள், அந்நிய பெண்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் விஷயத்தில் உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறியவுடன் சகாபாக்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய சகோதரன் வரலாமா? என வினவ நீங்கள் மரணத்தை விரும்புவீர்களா? என்று கேட்டார்கள் என்ற செய்தியை நாம் ஹதீஸில் பார்க்கிறோம் என்றால், அல்லாஹ்வின் தூதரின் இந்த கட்டளை நடைமுறையில் இல்லாததால் பல்வேறு குடும்பங்களில் சிக்கல்கள் ஏற்ப்பட்டதையும் பார்க்கிறோம். இனியேனும் உறவுகள் விஷயத்தில் ஆணாயினும், பெண்ணாயினும் கவனம் செலுத்தி தங்களை பேணிக்கொள்வது சிறந்தது.

ரசூல்[ஸல்] அவர்களின் வெட்கம்;

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்" என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள்.நூல்;புஹாரி,எண் 3562

சகாபாக்களின் வெட்கம்;

'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.நூல்;புஹாரி,எண் 24

ரசூல்[ஸல்] அவர்களிடத்திலும், சகாபாக்களிடத்திலும் இறையச்சமும் இருந்தது அதோடு வெட்கமும் இருந்தது. அதனால்தான் அவர்களால் வாய்மையிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கமுடிந்தது.

மார்க்கத்தை அறிய வெட்கப்பட கூடாது;

உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நூல்; புஹாரி,எண் 130

நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் வெட்கப்படவேண்டிய விஷயத்தில் வெட்கப்படமாட்டார்கள். ஆனால், மார்க்கவிஷயத்தில் ஆளிம்ஷாவிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டுமேனில் வெட்கப்படுவார்கள். மிகப்பெரிய ஆலிம்ஷாவான ரசூல்[ஸல்]அவர்களிடம் ஒரு பெண்மணி 'பெண்மை' சம்மந்தமான கேள்வியை கேட்டுள்ளார்கள் எனில், நம்மில் சிலர் குர்'ஆண் ஒததெரியாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் குர்'ஆணை கற்றுக்கொள்ளவேண்டியது தானே என்றால், இந்த வயசுல போயி குர்'ஆணை காத்துதாங்கன்னு யார்ட்டயாவது சொல்ல வெக்கமாயிருக்கு என்பார்கள். ஆனால் இந்த வயசிலும் கம்ப்யுட்டர் கற்றுக்கொள்ள வெட்கப்படமாட்டார்கள்.

எனவே மார்க்கத்தை கற்பது நீங்கலாக,மற்ற அனைத்திற்கும் வெட்கப்படவேண்டும்,அந்த வெட்க உணர்வும் இறையச்சமும்தான் நம்மை பக்குவப்படுத்தும் என்பதுதான் நிதர்சன உண்மையாகும்.