அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 31 அக்டோபர், 2009

தாடியிலும் தடுமாற்றமா...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தாடி வைப்பது நபி[ஸல்] அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் விளங்கி வைத்துள்ளோம். அதனால்தான் சமீபத்தில் கூட ஒரு மாணவன் தான் பயிலும் கல்வி நிலையம் தாடி வைப்பதற்கு தடை விதித்ததை எதிர்த்து கோர்ட்டு சென்றதால் கல்வி நிலையத்தால் நீக்கப்பட்டு, பின்பு கோர்ட்டு அந்த மாணவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதையும், இதன் மூலம் அந்த மாணவன் தனது மார்க்க உரிமையை நிலைநாட்டியதையும் நாம் அறிவோம். இது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களில் தாடி வைப்பவர்கள் மிக குறைவாக இருந்தாலும், தாடி எந்த அளவு வைப்பது எனபதில் கருத்து வேறுபாடு கொள்வதில் நிறைவாகவே உள்ளனர். காரணம் அவர்கள் எந்த அறிஞரிடம் தாடியின் அளவு பற்றி கேட்கப்படுகிறதோ , அந்த அறிஞர் தான் வைத்திருக்கும் தாடியின் அளவை ஒட்டியே ஃபத்வா வழங்குவதால் இந்த குழப்பம் நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக பீஜே என்பவர் வைத்திருக்கும் தாடியின் அளவு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தனக்கு அவ்வாறு வைப்பதுதான் வசதிப்படுகிறது என்பது அவரது நிலையாக இருக்குமானால், அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள விஷயம். ஆனால், இவர் தான் எந்த அளவு தாடி வைத்துள்ளாரோ அதையே மார்க்கத்தின் அளவாக காட்ட முற்படுகிறார்.

மும்பையில் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தாடி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தாடி வைக்கவேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அளவு என்று வரையறுத்து சொல்லப்படவில்லை எனவே தலைமுடி பற்றி ரசூல்[ஸல்] சொன்னதன் அடிப்படையில் நாங்கள் தாடியின் அளவு பற்றி முடிவெடுத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு,ஒரு சிறுவன் பாதி தலையை சிரைத்து பாதி முடி வைத்தவனாக வருகிறான். அவனை பார்த்த நபி[ஸல்] அவர்கள், என்ன இது..? ஒன்னு முழுசா முடிவை! இல்லன்னா முழுசா சிரை[அதாவது மொட்டை போடு] என்று சொன்னார்கள். [இது எந்த நூலில் உள்ளது என்று அவர் குறிப்பிடவில்லை] இதிலிருந்து என்ன வெளங்குது..? முழுசா முடியை விடு அப்பிடீன்னு நபியவர்கள் சொன்னதுனால தலைல முடிய வெட்டாம விட்டா பொம்பள மாதிரி வளந்துரும். அப்புறம் சடை போடலாம். பின்னல் பின்னலாம். இப்படி எடுத்துக்கொள்வதா? இந்த மாறி யாரும் இந்த விஷயத்தை எடுத்துக்கிறது கெடயாது. இதே மாரிதான் தாடிய முழுமையா விடுங்கள் என்றால் என்ன அர்த்தம்னா..? அகல வாக்கில் ஒதுக்காமல் முகத்தில் தாடி எந்த அளவு படர்ந்துள்ளதோ அதை ஒன்றும் செய்யாமல், நீள வாக்கில் அவரவர் தமக்கு எது அழகு என்று கருதுகிறாரோ அந்த அளவுக்கு குறைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். இவர் சுட்டிக்காட்டியதற்கு ஒப்பான ஒரு செய்தி புஹாரியில் கிடைக்கிறது.

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடுமி ('கஸஉ') வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்' என்று கூறினார்கள்.உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, 'கஸஉ' என்பது அவனுடைய தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியேவிட்டுவிடுவதாகும். (இதுதான் கூடாது). இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியேவிட்டு விடுவதும் கூடாது' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 5920 ]

இந்த செய்தியை கவனமாக படித்தால், இதில் தனது தலையில் பாதியை சிரைத்து பாதியை விட்டுவிடுவது கூடாது[உதாரணம்; சில அய்யர்கள் போன்று] என்றுதான் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தாடியை குறைப்பதற்கு எப்படி சட்டமெடுக்கs முடியும்..? சரி! தாடி சம்மந்தமான் வேறு ஹதீஸ்களே இல்லையென்றால் இதிலிருந்து எதாவது சட்டம் எடுக்கமுடியுமா என்று யோசிக்கலாம். ஆனால் தாடி சம்மந்தமாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளனவே!அல்லாஹ் அருள் மறை குர்ஆனில் கூறுகின்றான்;

(இதற்கு ஹாரூன்;) "என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்" என்று கூறினார்.[அல்குர்ஆன்20:94 ]

நபி மூஸா[அலை] அவர்கள் அல்லாஹ்விடம் வேதம் வாங்குவதற்காக நாற்பது இரவுகள் சென்ற வேளையில் தனது சமூகத்தை தனது சகோதரும் நபியுமான ஹாரூன்[அலை] அவர்களின் பொறுப்பில் விட்டு செல்கிறார்கள். மூஸா[அலை] அவர்கள் திரும்பி வருபோது, மக்கள் சாமிரி என்பவனின் தூண்டுதலால் காளை கன்றை வணங்கியதை அறிந்து கோபமுற்றவர்களாக தனது சகோதரர் ஹாரூன்[அலை] அவர்களின் தாடியையும் தலைமுடியையும் பிடித்தபோது, ஹாரூன்[ சொன்ன வார்த்தைகள் தான் மேல் உள்ளவசனம். இதில் இந்த அதிமேதாவி அளவுக்கு ஹாரூன்[அலை] அவர்களுக்கு தாடி இருந்திருக்குமானால் மூஸா[அலை] அவர்களால் பிடித்திருக்கமுடியுமா..? சிந்திக்கவேண்டுகிறோம். இந்த அதிமேதாவிகள் இப்படியும் கூறலாம்; அதாவது மூஸா[அலை] மற்றும் ஹாரூன்[அலை] ஆகியோர் முன்னால் வாழ்ந்த நபி மார்கள். எனவே அவர்களை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று. எனவே நபி[ஸல்] அவர்களின் தாடி எப்படி இருந்தது என்பதை பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.ஆதாரம்;புஹாரி எண் 5893 ]

இந்த பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி[ஸல்] அவர்கள், ஒன்றை நறுக்க சொல்கிறார்கள். மற்றொன்றை வளர விட சொல்கிறார்கள் எனில், தாடியில் கை வைக்கக்கூடாது என்பது தெளிவு. அப்படியாயின் தரையை தொடும் அளவுக்கு வளர்க்க சொல்கிறீர்களா என்று சிலர் கேட்கலாம். தாடியை நீங்கள் வெட்டாமல் விட்டால் அது ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி வளராது[சிலருக்கு விதிவிலக்காக இருக்கலாம்]. பெண்கள் தங்களின் முடியை வெட்டுவதில்லை. அதற்காக எல்லா பெண்களுக்கும் தரையை தொடும் அளவுக்கு முடியிருக்கிறதா என்றால் இல்லை. எனவே எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம். நிர்பந்தத்திற்கு மார்க்கத்தில் தடையில்லை என்பதை நாம் அறிவோம்.

நபி[ஸல்] அவர்களின் தாடி அளவு;

ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபி[ஸல்] அவர்களுடன் சமாதானம் பேச வந்தவர்களில் முதலாமவரான உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ என்பவர், நபி(ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களின் தாடியைப் பிடித்தபடி இருந்தார். அப்போது முகீரா இப்னு ஷுஅபா(ரலி) (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி(ஸல்) அவர்களின் தலைப்பக்கமாக நின்றிருந்தார்கள். எனவே உர்வா, நபி(ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா(ரலி), அவரின் கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, 'உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து" என்று கூறிய வண்ணமிருந்தார்கள். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2731 ]

இந்த ஹதீஸில் உர்வா என்பவர் நபி[ஸல்] அவர்களின் தாடியை பிடிக்கும் அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் தாடி பெரியதாக இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அபு மஃமர் கூறினார்: 'நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?' என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் 'ஆம்' என்றார். 'நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். 'நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்' என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.

ஆதாரம்; புஹாரிஎண் 746 ]

இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடி அசைவை கொண்டு நபி[ஸல்] அவர்கள் ஓதுவதை அறிந்துள்ளனர் சகாபாக்கள். தாடி பெரியதாக இருந்தால்தான் ஓதும்போது தாடி அசையும். இல்லையேல் நாடிதான் அசையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 933 ]

இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடியிலிருந்து நீர் வடிகிறது எனில் தாடி நீளமாக இருந்தாலே இது சாத்தியம். இப்போதுள்ள நவீன வாதிகள் மாதிரி 'சுரண்டி' வைத்திருந்தால் சாத்தியமாகாது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

சஹாபாக்களின் தாடி;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 5283 ]

கண்ணீர் தாடி வழியாக வழிய வேண்டுமானால், பெரியதாடியாக இருந்தாலே சாத்தியம் என்பதை புரிந்துகொள்க. ஆக நபி[ஸல்] அவர்கள் மற்றும் சகாபாக்கள் தாடியை பெரிதாகவே வைத்துஇருந்தனர். அவர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்கு தாடி வைக்கவில்லை என்பது மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கலாம்.

அவ்வளவு ஏன் மடையன் அபூஜஹ்ல் கூட தாடி என்றால் பெரிதாகத்தான் இருக்கவேண்டும் என்று விளங்கியிருந்தான்; பெரிதாகவே தாடி வைத்திருந்தான். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் "அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே!" என்று கேட்டார்கள். "நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.[புஹாரி எண் 3962 ]

இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், அபூ ஜஹ்ல் உடைய தாடியை பிடித்துக்கொண்டு அவனிடம் பேசுகிறார்கள் எனில், அபூஜஹ்ல் உடைய தாடி அந்த அளவுக்கு பெரிதாக இருந்திருக்கிறது. ஆக தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு பெரிதாக இருக்கவேண்டும் என்று அபூ ஜஹ்ல் விளங்கியது கூட இந்த குர்ஆண்-ஹதீஸ் பேசும் மேதைக்கு விளங்கவில்லை என்பதற்காக அபூ ஜஹ்ல் பற்றியதை குறிப்பிட்டோம் மாறாக ஆதாரத்திற்காக அல்ல.

ஆகவே அன்பானவர்களே! நபி[ஸல்] அவர்களும், சகாபாக்களும் தாடியை பெரிதாகவே வைத்துள்ளார்கள் என்பதற்கு பல்வேறு ஹதீஸ்களை ஆதாரமாக வைத்துள்ளோம். எனவே தாடி சுன்னத் என்பதை உணர்ந்து பெற்றோர்- மனைவி மக்கள் எதிர்ப்பையும் மீறி தாடிவைக்கும்சகோதரர்கள், நபி[ஸல்] அவர்கள் வைத்தது போன்று முழுமையாக தாடி வைக்க முன்வாருங்கள். தனிநபர் மனோ இச்சை அடிப்படையிலான ஃபத்வாக்களை புறந்தள்ளுங்கள். நிர்பந்தம் காரணமாக நீங்கள் தாடியை குறைத்தால் அதுபற்றிய விஷயம் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் மத்தியில் உள்ளதாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
சனி, 24 அக்டோபர், 2009

கோ எஜுகேஷனும்; கோணல் நிலைப்பாடும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் கூட ஆண்களும்-பெண்களும் இணைந்து படிக்கும் கோ எஜுகேஷன் எனும் கல்வி நிலையங்களே பெருமளவில் உள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் கல்வி கற்பது மார்க்க அடிப்படையில் சரியல்ல என்றாலும், நிர்பந்தம் காரணமாக நமது சமுதாய மாணவ-மனைவியர் கல்வி கற்று வருகின்றனர். இந்த கோ எஜுகேஷன் கல்வி பற்றி பீஜே எனும் அறிஞர், தனது இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா..? என்ற நூலில்

'இஸ்லாம் கல்வியை வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் முறையைத்தான் இஸ்லாம் எதிர்க்கிறது' என்று பதிவு செய்துள்ளார். அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் கோ எஜுகேஷன் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று கூறுகிறார். ஆனால் இந்த தடைக்கு அவர் எந்த சான்றையும் முன்வைக்கவில்லை. ஆயினும் சில காரணங்களை முன்வைக்கிறார்.

 • அதாவது கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களால் வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும் , சக மாணவர்களால் ஏமாற்றப்படுவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன.
 • இவ்வாறு சேர்ந்து படிப்பதால்தான் ஆண்களின் கவனமும் சிதறடிகப்படுகின்றன.பெண்கள் தனியாக படித்தால் படிப்பு ஏறாது என்று கூறமுடியாது.
 • எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது என்று இஸ்லாம் கூறுகிறது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது கோ-எஜுகேஷனுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று திடமாக மறுக்கிறார்.

இதே அறிஞர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் கோ-எஜுகேஷன் கூடுமா என்ற கேள்விக்கு, நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இதுபோன்ற கல்விக்கூடங்கள் வைத்து கற்றுக்கொடுத்தல் என்ற நடைமுறை இருந்ததில்லை. எனவே கல்வியை விட்டுப்புட்டு பொதுவாக ஒரு சபையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து உக்காருவதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா..? அப்பிடீன்னு பாத்தம்னா அனுமதியிருக்குது. நபிகள் நாயகம்[ஸல்] பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழ வந்தார்கள்.. அந்த அடிப்படையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து படித்தல் என்பதில, ஒரு சபைல சேர்ந்து உக்காருதல் என்பதில தப்பு கெடயாது...பக்கத்து பக்கத்துல உக்காரலன்னா தப்பில்லை. என்கிறார். அதாவது கோ-எஜுகேஷன் கூடும் என்று கூறி தனது முந்தய 'கூடாது' என்ற நிலைக்கு முரண்படுகிறார். சரி! இது ஒருபுறமிருக்க பெண்கள் தொழுகைக்கு பள்ளிக்கு வந்தார்கள் என்பதை கோ-எஜுகேஷனுக்கு ஆதாரமாக கொள்ளமுடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. ஏனெனில் முதலாவது பள்ளிக்கு தொழுகைக்கு வருவதற்கும்-கல்லூரியில் கல்வி கற்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஆண்களாகிய நம்மையே எடுத்துக்கொண்டாலும் பள்ளிவாசலில் தொழுகைக்கு நிற்கும் போது நமக்குள்ள இறையச்சம், ஒரு மதரசாவில் இருக்கும்போதோ, ஒரு கல்லூரியில் இருக்கும்போதோ இருக்கிறதா...? இல்லையே! மேலும் பெண்கள் நபி[ஸல்] அவர்கள காலத்தில் தொழுகைக்கு வந்தார்கள். அதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிக்கு வந்தார்கள் என்று நாமறிந்தவரை எந்த ஹதீசும் கிடையாது. பெண்கள் எந்த வக்துக்கு பள்ளிக்கு வந்தார்கள் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகிறது;

 • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 865 ]

இந்த ஹதீஸில் 'இரவில்' என்ற வார்த்தையை நபி[ஸல்] அவர்கள் சேர்த்து கூறியதன் மூலம் பெண்கள் தொழுகைக்கு இரவில் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் என்பதை விளங்கலாம். இல்லை இல்லை எல்லா வக்துக்கும் வரலாம் என்று வாதிடுவார்களானால், 'இரவில்' என்று நபி[ஸல்] அவர்கள் தேவைஇல்லாமல் கூறினார்களா என்பதை விளக்கவேண்டும்.

 • இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார். [புஹாரிஎண் 900 ]

இந்த ஹதீஸ் பெண்கள் பஜ்ர் மற்றும் இஷா தொழுகையில் மட்டுமே பங்கெடுப்பவர்களாக நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இருந்துள்ளார்கள்என்பதை தெளிவாக விளக்குகிறது. மேலும் இவ்வாறு பெண்கள் பள்ளிக்கு வருவது இருட்ட்டின் காரணமாக மற்றவர்கள் அறியமுடியாது என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

 • ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.[புஹாரிஎண் 578 ]

எனவே பஜ்ர் மற்றும் இஷா தொழுகை நீங்கலாக வேறு எந்த தொழுகைக்கும் நபி[ஸல்] அவர்கள் காலத்து பெண்கள் பள்ளிக்கு சென்றதில்லை என்பது தெளிவு. நிலை இவ்வாறிருக்க பட்டப்பகலில் விதவிதமான ஆடையுடன் பெண்கள்-ஆண்களோடு பயில கல்லூரிக்கு செல்வதற்கு இது ஆதாரமாகுமா..? சிந்திக்கவேண்டுகிறோம். இப்படி நாம் சொல்லும்போது அப்படியாயின் இரவு நேர கல்லூரிக்கு செல்லமா என்று சில விதண்டாவாதங்கள்' கேள்வி எழுப்பலாம்..? பெண்கள் பள்ளிக்கு தொழுகைக்கு வந்ததை கோ-எஜுகேஜனுக்கு ஆதாரமாக கொள்ளமுடியாது என்பதோடு, அது பகலோ-இரவோ எந்த காலத்திற்கும் இந்த ஹதீஸை சான்றாக கொள்ளமுடியாது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம். ஆக முன்னுக்கு பின் முரானான ஃபத்வாக்களை சம்மந்தமில்லாத சான்றுகளுடன் வழங்குவதை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

சரி! கோ எஜுகேஷனுக்கு தடை ஏதாவது இருக்கிறதா என்றால், நாமறிந்தவரை இருக்கிறது.

(நாங்கள் உங்களை அணும் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

[ஆதாரம் புஹாரி எண் 101 ]

இந்த பொன்மொழியில், எப்போதும் ஆண்கள் சூழ நபி[ஸல்] அவர்கள் இருப்பதால் தங்களால் நபியவர்களிடத்தில் மார்க்கத்தை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தை பெண்கள் வெளிப்படுத்தி தங்களுக்கென ஒரு நாளை ஒதுக்கவேண்டும் என்று கோரியபோது, கோ-எஜுகேஷன் மார்க்கத்தில் அனுமதிக்கபட்டதுதான் என்றால்,

பெண்களே! எதற்கு உங்களுக்கு தனி நாள்..? வாருங்கள்! ஆண்கள் உள்ள இந்த சபையில் நீங்கள் ஒருபக்கம் அமர்ந்து உபதேசங்களை கேளுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பெண்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி நபி[ஸல்] அவர்கள் உபதேசம் செய்கிறார்கள் எனில், கோ-எஜுகேஷன் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் நபி[ஸல்] அவர்கள் பெண்களுக்கு பொதுவான உபதேசத்திற்காக தனி நாளை ஒதுக்கினார்கள் என்றும் இது கல்வியை குறிக்காது என்று எவரும் கூறவருவார்களேயானால், மேற்கண்ட ஹதீஸை இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள் 'கல்வி' என்ற பாடத்தில் பதிவு செய்துள்ளதையும் இங்கு குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம்.

எனவே கோ-எஜுகேஷனுக்கு மார்க்கத்தில் நேரடியாக அனுமதி எதுவும் இல்லை. ஆனால் தடை இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். நிர்பந்தம் என்பது அல்லாஹ்வுக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் உள்ள விஷயம். எனவே நாம் அன்பாக வேண்டுவது என்னவெனில், மார்க்க விஷயத்தில் யார் எது சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாமல் சொன்ன கருத்துக்களை சீர்தூக்கி பாருங்கள். தவறானதை எவ்வளவு பெரிய அல்லாமா சொன்னாலும் தூக்கி வீசுங்கள். சரியானதை ஒரு பாமரன் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுதான் நமது இம்மை-மறுமைக்கு பயனளிக்கும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நபிகள் நாயகத்தின் பரிந்துரையில் சில தள்ளுபடி செய்யப்படும்..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே! அதிலும் குறிப்பாக முஸ்லிம்களும் தவறு செய்யக்கூடியவர்களே! இந்நிலையில் உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாளில் அனைவரும் நியாயத்தீர்ப்புக்காக நமது ரட்சகனின் முன் நிற்கும் வேளையில், மக்கள் நபிமார்களிடம் பரிந்துரைக்காக செல்வார்கள். அப்போது ஒவ்வொரு நபியும் அடுத்த நபியை கைகாட்டி அவர்களிடம் செல்லுங்கள் என்று கூற, இறுதியாக நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் இறைவன் முன் சஜ்தாவில் விழுவார்கள். இறைவனின் கட்டளைப்படி பரிந்துரை செய்வார்கள். என்பதை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ள செய்திதான். இந்த பரிந்துரை பற்றி ரசூல்[ஸல்] அவர்கள் கூறும்போது;
حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا ‏
"ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை ஒவ்வோரு நபிக்கும் இருந்தது. அனைத்து நபிமாரும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தக்கவைத்திருக்கிறேன். அல்லாஹ் நாடினால், என் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணித்தவருக்கு அது கிடைக்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்எண்: 296 ]

இந்த பரிந்துரை பற்றி ஒரு முஸ்லிமல்லாதவர்களின் நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி, குர்ஆனில் பரிந்துரை இல்லை என்று வருகிறது; ஆனால் ஹதீஸில் லா இலாஹஇல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்தவரை நபிகள் நாயகம் பரிந்துரை செய்து சொர்க்கத்துக்கு அழைத்து செல்வார் என்று வருகிறதே? இது இரண்டும் முரண்படுகிறதே..? என்ற கேள்விக்கு பதிலளித்த பீஜே எனும் அறிஞர்,
அல்லாஹ்வின் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்வது யார் என்று அல்லாஹ் கேட்கிறான். எனவே அல்லாஹ் நாடியவர்களுக்கு பரிந்து செய்ய அனுமதிப்பான். அந்த வகையில் நபிகள் நாயகம் பரிந்துரை செய்வார்கள். ஆனால் அதில் சிலருக்கான பரிந்துரையை அல்லாஹ் நிராகரித்துவிடுவான்; முஹம்மதே! நீ செஞ்சுட்டே; ஆனா தப்பு. இன்னின்ன ஆள்களுக்கு நீ பன்னீருக்கக்கூடாது . இவங்க எப்பிடி ஆளு தெரியுமா..? நீ நல்லவங்கன்னு நெனச்சுக்கிட்டுருக்க.. ஒன்னையையும் ஏமாத்தீட்டு நல்லவனா நடிச்சவங்க இவன்லாம். இவனுககெல்லாம் பரிந்துரை பண்ணினா நான் எத்துக்கிரமாட்டேன்னு கடவுள் சொல்வாரு...
என்று பதிலளிக்கிறார்.

அன்பானவர்களே! நன்றாக மேற்கண்ட அவரின் பதிலை படியுங்கள். அதாவது நபி[ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய சொல்லும் இறைவன், நபி[ஸல்] அவர்கள் சிலருக்கு செய்யும் பரிந்துரையை நிராகரிப்பான் என்கிறார். அதோடு நபி[ஸல்] அவர்கள் தப்பான சிலருக்கு பரிந்துரை செய்வார்கள் என்ற தோற்றத்தையும் தருகிறார். நாம் ஆரம்பத்தில் வைத்துள்ள ஹதீஸில் நபி[ஸல்] அவர்கள் தான் யாருக்கு பரிந்துரை செய்வேன் என்று அதாவது அல்லாஹ்விற்கு இனைவைக்கதவர்களுக்கு மட்டும் பரிந்துரை செய்வதாக தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அல்லாஹ்வால் நிராகரிக்கக்கூடிய பரிந்துரையை அல்லாஹ்வின் தூதர் செய்வார்கள் என்று இவர் வாய் கூசாமல் கூறுகிறார். சரி! நபி[ஸல்] அவர்கள் பரிந்துரை ஏதாவது நிராகரிக்கப்படுமா என்பதை கீழ்கண்ட ஹதீஸை பாருங்கள்;

மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் 'ளுஹா' தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் 'பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்' என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், 'அபூ ஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்' என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்:
முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று '(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்' என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'நான் அதற்குரியவன் தான்' என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அதற்கு அவன், 'செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன். நான்காம் முறையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, 'முஹமமதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்' என்று சொல்வான்.
[ஆதாரம் புஹாரி எண் 7510 ]

அன்பானவர்களே! இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையை கேட்ட இறைவன், அவர்களின் எந்த ஒரு பரிந்துரையாயாவது நிராகரித்தானா..? இல்லையே! அவ்வாறிருக்க, குர்ஆனில் இல்லாத-ஹதீஸில் இல்லாத ஒரு விஷயத்தை அதுவும் நபி[ஸல்] அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தை சர்வ சாதரணமாக சொல்கிறார் எனில், மக்களே புரிந்து கொள்ளுங்கள். மேலும், சிலர் அது முஸ்லிமல்லாதவர் நிகழ்ச்சி எனவே அவர்கள் 'வெளங்கிக்' கொள்வதற்காக அவ்வாறு பேசினார் என்று யாரேனும் கூற முன்வருவார்களானால், அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை வைக்கிறோம்;
 • முஸ்லிமல்லாதவர்கள் 'வெளங்கிக்' கொள்வதற்காக மார்க்கத்தில் இல்லாத ஒன்றையோ, அல்லது கூட்டியோ-குறைத்தோ சொல்லலாமா..? என்ற எமது கேள்விக்கு பதிலளிக்கட்டும்!

செவ்வாய், 20 அக்டோபர், 2009

இறைவா! இவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக!!

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?[2:107 ]

 • நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்![7:194 ]
 • அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.[16:20 ]
 • மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.[22:73 ]
 • அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.[33:17 ]
 • நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.[4:48 ]

அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளே போதுமானது.

படம் நன்றி;தினத்தந்தி