அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ஏ.ஆர்.ரஹ்மான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ.ஆர்.ரஹ்மான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

இமயத்தின் உச்சத்தில் இசைப்புயல்; ஒரு இஸ்லாமியப்பார்வை!


சகோதரர் ஏஆர். ரஹ்மான் அவர்கள் உலகின் மிகச்சிறந்த விருது எனக்கருதப்படும் ஆஸ்கார் விருதை வென்றதையடுத்து, நாட்டின் பெரும்தலைவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை வாழ்த்துமழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். சில இஸ்லாமிய சகோதரர்கள் கூட இச்செய்திக்கு முன்னிலை கொடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரஹ்மான் விருதுபெற்றதையடுத்து நாகூர் தர்காவில் சிலர் சிறப்பு பிரார்த்தனை நடத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றது.

சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் பிறமதத்தில் பிறந்திருந்தாலும் அவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர். அந்தவகையில் பரம்பரை முஸ்லிம்களை விட அவர் சிறந்தவர். அந்தவகையில் அவர்மீது நமக்கு உயர்வான மதிப்பு எப்போதும் உண்டு. அதே நேரத்தில் அவர் சார்ந்துள்ள இசைத்துறை இஸ்லாம் தடுத்த ஒருதுறையாகும். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒருதுறையில் ஒருமுஸ்லீம் வெற்றிபெற்றால் அதை ஏனைய முஸ்லிம்கள் ஊக்குவிப்பதோ, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோ கூடாது.

இசை பற்றி இஸ்லாம் ;

அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)


நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
நூல்;புஹாரி,எண் 5590

இறைத்தூதர்[ஸல்] அவர்களால் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை இன்று முஸ்லிம்களில் சிலர் செய்வதையும், சிலர் அந்த இசையில் மயங்குவதையும், சிலர் ஆதரிப்பதையும் பார்க்கிறோம். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் ஒரு பிரபல மவுலவி இசைக்கு வித்தியாசமான விளக்கம் கொடுக்கிறார். அதாவது ஒரு கருவியின் மூலம் இசைப்பது ஹராம் இல்லையாம், பல கருவிகள் கொண்டு இசைப்பதுதான் ஹராமாம். என்ன விந்தை பாருங்கள்; ஒரே ஒரு கீபோர்டை கொண்டு எத்துனையோ வகையான இசையை வெளிப்படுத்தலாமே! அப்படியானால் அது ஹலாலாகிவிடுமா? இப்படிப்பட்டவர்களைத்தான் மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சொல்லியிருப்பார்களோ?

எனவே சகோதர்களே/சகோதரிகளே! இசை மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகளை சமர்பிக்கமுடியும். படிப்பவர்களின் நேரம்கருதி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப ஒரே ஒரு ஆதாரம் மட்டும் சமர்பித்துள்ளோம். ஷைத்தானின் மாயவலையான இசையிலிருந்து நம் சமுதாயத்தை அல்லாஹ் காப்பானாக!

திங்கள், 19 ஜனவரி, 2009

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஒரு ஏகத்துவ கடிதம்!

அன்பிற்கினிய சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்கள் 'தங்க பூமி' விருதை வென்று, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மட்டுமன்றி,இந்தியாவின் பிரதமர்-தமிழகமுதல்வர் இப்படி பரவலாக அனைத்து தரப்பாரும் உங்களை வாழ்த்திவரும் நிலையில், நீங்கள் சார்ந்த இஸ்லாமிய மார்க்கத்தையுடைய நாங்கள் மட்டும் வாழ்த்தமுடியாத நிலையில் உள்ளோம். காரணம் மனமின்மையால் அல்ல.மார்க்கம் தடுப்பதால்!

தாங்கள் இஸ்லாத்தின் மீது ஆழமான பற்றுடையவர் என்பதையும், தவறாமல் தொழுகை உள்ளிட்ட அமல்களை நிறைவேற்றுபவர் என்பதையும், ஹஜ் கடமையை முடித்தவர் என்பதையும், தங்களின் உரை துவக்கத்திலும்சரி, பிறர் தங்களை பாரட்டும்போதும்சரி 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று நீங்கள் சொல்ல மறப்பதில்லை என்பதையும் நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.

இருப்பினும் தங்களிடத்தின் அன்போடு இரு கோரிக்கைகள் வைக்கக் விரும்புகிறோம். முதலாவது நீங்கள், பொன்னேரி அருகேயுள்ள பூதூர் என்ற இடத்தில் வாழ்ந்த பாபா அவர்கள்மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருந்ததாகவும் , நீங்கள் எதை செய்யவிரும்பினாலும் அவரிடத்தில் ஆலோசனை அல்லது ஆசி பெற்றுதான் செய்துவந்ததாகவும், அந்த பாபா மறைவுக்குப்பின் அவரது அடக்கத்தலத்தை தங்களின் நேரடிப்பரமரிப்பில் கவனித்து வருவதாகவும் நீண்ட நாட்களுக்குமுன் பத்திரிக்கையில் படித்த நினைவு. [தவறென்றால் மன்னிக்கவும்]

மேலும், மேற்கண்ட படத்தில் ஒரு தர்காவில் நீங்கள் வழிபடுகிறீர்கள். தர்கா என்பது நல்லடியார் என்று நம்பப்பட்ட ஒருவர் இறந்தவுடன் அவரை அடக்கம் செய்து அவர்இடத்தில் உதவி தேடுவது! அல்லது அவர் மூலம் உதவி தேடுவது! இந்த இரண்டுமே மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

இறந்தவர்களின் கப்ருகளை உயர்த்தாதீர்கள்- அதை பூசாதீர்கள்-அதில் விளக்கு ஏற்றாதீர்கள்-உங்கள் செருப்பு வார் அறுந்தாலும் அதை அல்லாஹ்விடமே கேளுங்கள் என்றெல்லாம் நமது நபி[ஸல்] அவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது அந்த தர்காக்களுக்கு தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து, இறைவனுக்கு இணைவைப்பதை விட்டு விலகுமாறும் உங்களை வேண்டுகிறோம்.

அடுத்து தங்களின் இசைத்துறை என்பது இஸ்லாமிய அடிப்படையில் ஹராம் எனபதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என நம்புகிறோம். 'இசைக்கருவிகளை உடைத்து எறியவே நான் வந்தேன் ' என்ற நபி[ஸல்] அவர்களின் நல்லுபதேசத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். இந்த துறையின்மூலம் நீங்கள் எத்துனை கோடிகளை ஈட்டினாலும், எத்துனை விருதுகளை பெற்றாலும் அவை மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டதல்ல என்பதையும் பணிவோடு சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, சகோதரர் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணக்குங்கள்! அவனுக்கு யாதொன்றையும்/யாரையும் இணையாக்காதீர்கள். இசைத்துறையை விட்டு விலகி, அல்லாஹ் உங்களுக்களித்த அற்புதமான அறிவாற்றலை மார்க்கத்துக்கு உட்பட்ட வேறு துறைகளில் செலுத்துங்கள். அல்லாஹ் தங்கபூமி என்ன! மறுமையில் விலைமதிக்க முடியா தங்க சுவனத்தை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்.

'உபதேசம் செய்யுங்கள்; அது முமீன்களுக்கு பயனளிக்கும்! என்ற அருமறை வாக்கின்படி இந்த மடல் உங்களுக்கு வரையப்பட்டது. அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அவன் மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்ந்து மரணித்து சுவனம் செல்லும் பாக்கியத்தை அளிப்பானாக!

நலம் விருப்பும் சகோதரன்; முகவை அப்பாஸ்.


படம் நன்றி;தமிழ் முரசு.