அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 30 ஜூலை, 2012

அந்த மூன்று விஷயங்கள்[15] மண்ணறை வாழ்விலும் தொடரும் நன்மைகள்!:

மண்ணறை வாழ்விலும் தொடரும் நன்மைகள்!:

ஒரு மனிதன் மரணித்துவிடும் போது அவனது அனைத்து செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. மூன்று காரியங்களைத் தவிர அவைகள்:

 1. அவன் செய்த நிலையான தர்மம்,
 2. அவனது கல்வியின் மூலம் பிறர் பயனடைந்தது,
 3. அவனது ஸாலிஹான குழந்தை அவனுக்காக கேட்கும் பிரார்த்தனை.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம்).

            ***************************************************

-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....

சனி, 28 ஜூலை, 2012

அந்த மூன்று விஷயங்கள்[14] உண்மையில் உமது பொருள் எது?


அடியான் எனது பொருள், எனது பொருள் என கூறுகின்றான். அவனது பொருள்:
 1. அவன் உண்டு கழித்தவைகளும்,
 2. அவன் உடுத்தி கிளித்தவைகளும்,
 3. அவன் முன் கூட்டி (அல்லாஹ்விற்காக) செய்த தர்மங்களும்.
அதைத் தவிர அவன் பாதுகாக்கும் மற்றவைகள் அனைத்தும் ஏனையவர்களுக்கு விட்டுச் செல்பவைகளே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).
            ***************************************************
-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....

புனித ரமலானும்- புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

அல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானில் நோன்பு நோற்கவேண்டும் என்று அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த நோன்பின் தாத்பரியத்தையும்- சட்டங்களையும் அறியாதவர்களாகவும், இன்னும் சிலர் பேணுதல் என்ற பெயரில் இந்த நோன்பை சிரமமானதாக மாற்றிக்கொள்வதையும் பார்க்கிறோம். எனவே, அப்படிப்பட்டவர்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது .

நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது என்று நம்மவர்களில் சிலரிடம் கேட்டால், ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் கடமையாக்கப்பட்டது என்பார்கள். ஒரு பாடகர் கூட, 'மண் வீட்டின் பசியை மாளிகைகள் உணர்ந்து மனிதாபிமானம் கொள்ள போதிப்பது நோன்பு' என்று பாடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஏழைகளின் பசியை வசதிபடைத்தவர்கள் உணர்வதுதான் நோன்பின் நோக்கம் என்றால், பணக்காரர்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வல்ல இறைவன் கூறுகின்றான்;

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்[அல்-குர்ஆன்2:185 ]

இந்த வசனத்தில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் ஏழைகள்-பணக்காரர்கள் என்ற வேறுபாடு கிடையாது அனைவர் மீதும் கடமை. சரி! வேறு என்னதான் காரணம்?

அல்லாஹ் கூறுகின்றான்;


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.[அல்-குர்ஆன் 2:183 ]

இந்த வசனத்தில் நோன்பு கடமையாக்கப்பதின் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் என்பது தெளிவாக புரிகிறது. சரி! மற்ற அமல்களில் வராத இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும்.

எப்படியெனில், ஒருவன் தொழுகையாளியா-ஜக்காத் கொடுப்பவனா-ஹஜ் செய்தவனா என்று நாம் வெளிப்படையாக அறியமுடியும். ஆனால் நோன்பை பொறுத்தவரையில், ஒருவன் நோன்பு நோற்காமலேயே நான் நோன்பாளி என்று கூறினால் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. எனவே இறைவனுக்கு அஞ்சுபவன் மட்டுமே நோன்பு பிடிப்பான். மேலும் நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிரானே அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!

அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும்.

இந்த மாதத்தின் சிறப்புகளில் சில;

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புஹாரி 1901]


"ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.[புஹாரி எண் 1898 ]


"ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்." [புஹாரி எண் 1899 ]


நோன்பாளியின் சிறப்புகள்; கிடைக்கும் பரிசுகள்;


நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்![புஹாரிஎண் 1894 ]


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!" [புஹாரி எண் 1896 ]


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக மகிழ்ச்சியடைகிறான்." [புஹாரி எண் 1904 ]


நோன்பாளி செய்யவேண்டியவை;

தான தர்மங்களை வாரிவழங்குதல்;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்[புஹாரி எண் 1902 ]


ஸஹர் உணவை உட்கொள்ளுதல்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!" [புஹாரி எண் 1923 ]

பெரும்பாலானோர் இரவின் முற்பகுதியிலேயே சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார். ஸஹர் நேரத்தில் எழும்புவதில்லை. சாப்பிடுவதுமில்லை. இவர்களில் சிலர் 'பஜ்ர்தொழாமல் தூங்குபவர்களும் உண்டு. எனவே இதுபோன்ற செயல்களை விட்டு, ஸஹர் நேரத்தில் சாப்பிடும் நபிவழியை அமுல்படுத்தவேண்டும்.

நோன்பு திறப்பதை விரைவு படுத்துதல்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!" [புஹாரி எண் 1957 ]


நோன்பு நிறைப்பதை பொருத்தமட்டில் தவ்ஹீத்வாதிகள் நீங்கலாக, மற்றவர்கள் சூரியன் மறையும்நேரத்தையும் தாண்டி பேணுதல் என்ற பெயரில் பத்துநிமிடம் தள்ளிவைத்து பின்பு nabi [ஸல்] அவர்களால் காட்டித்தரப்படாத நிய்யத்தை சொல்ல ஐந்துநிமிடம் இவ்வாறாக தாமதப்படுத்தி நோன்பு திறப்பதை பார்க்கிறோம். இது தவறாகும். எனவே சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதுதான் சிறந்ததாகும்.

பிரார்த்தனைகளை அதிகமாக செய்தல்.

நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்பது நபிமொழியாகும்.


நோன்பாளி செய்யக்கூடாதவை;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை[புஹாரி]

இந்த பொன்மொழியில் நம்முடைய நோன்பு அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் பொய்யான பேச்சுக்கள்-செயல்களை விட்டு விலகவேண்டும். ஆனால் நடப்பது என்ன? ஸஹர் இறுதி நேரம் வரை பகலில் அடிக்கும் 'தம்'மையும் சேர்த்து அடிப்பது. பகலில் வழக்கம் போல் பொய்யான பேச்சுக்களை பேசுவது பின்பு நோன்பு திறந்தவுடன் முதல்வேலையாக ஒரு பாக்கெட் சிகரெட்டை காலிசெய்வது. பின்பு வழக்கம்போல் மானாட-மயிலாட-குயிலாட என்று தொலைக்காட்சியில் குதூகலிப்பது. இப்படியான செயல்களை செய்பவர்கள் நோன்பிருந்து எந்த புண்ணியமுமில்லை. எனவே இந்த செயல்களை தவிர்ந்துகொள்ளவேண்டும்

நோன்பை முறிப்பவை;
உண்ணுதல்;பருகுதல்;உடலுறவு கொள்ளுதல்.

நோன்பை முறிக்காதவை;

மறதியாக உண்பதும்-பருகுவதும்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்." [புஹாரி எண் 1933 ]

முள் குத்தியோ, காயமோ ஏற்பட்டு ரத்தம் வந்தால்;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்தார்கள்[புஹாரிஎண் 1939 ]

பல் துலக்குவதால்;

நபி[ஸல்] அவர்கள் நோன்பு நோற்றிருந்தபொது என்னால் எண்ணிச்சொல்ல முடியாத அளவுக்கு பல் துலக்கியதை பார்த்தேன். அறிவிப்பவர்;ஆமிர் இப்னு ரபிஆ [நூல்;திர்மிதி]

எச்சிலை விழுங்குவதால்;

எச்சிலை விழுங்கினால் நோன்பு முறிந்துவிடும் என்று சிலர் தவறாக விளங்கிக்கொண்டு எப்ப பார்த்தாலும் எச்சிலை துப்பிக்கொண்டே திரிவார்கள். எச்சில் விழுங்கினால் நோன்பு முறியும் என்று நபி[ஸல்] அவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை.

வாந்தி எடுத்தால்;

தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் [நோன்பை]களா செய்யவேண்டியதில்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் நோன்பை களா செய்யவேண்டும் என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா [ரலி] அறிவிக்கும் செய்தி அஹ்மத் போன்ற நூல்களில் உள்ளது.

வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வதால் நோன்பு முறியும் என்ற நம்பிக்கையும்தவறானது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நோன்பை பரிபூரணமாக நோற்று அதன் மூலம் இறையச்சத்தை பெற்று சுவனத்தை பெறுபவர்களாக ஆக்கியருள்வானாக!

புதன், 18 ஜூலை, 2012

முஸ்லிம் ஆண்களே! நீங்கள் ஆண் சிங்கமா? பெண் சிங்கமா?


முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிமாக இருக்க விரும்புகிறீர்களா?
அப்படியானால் இந்த பொன்மொழிகளை படியுங்கள்;

அபூ உமாமா (ர­லி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரை கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அன்சாரி கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

வேதமுடையவர்களுக்கு மாறுசெய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுகால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் முழுகால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தறித்துக்கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தறியுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். 
நூல் : அஹ்மது (21252)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) 
நூல் : புகாரி (5892)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு) களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா [ரலி] 
நூல் : முஸ்­லிம் (435)

ஞாயிறு, 15 ஜூலை, 2012

அந்த மூன்று விஷயங்கள்[13] மூன்று விடயங்களுக்காக பொய் சொல்பவன் பொய்யனாகக் கருதப்படமாட்டான்:

மூன்று விடயங்களுக்காக பொய் சொல்பவன் பொய்யனாகக் கருதப்படமாட்டான்:

 1. மக்களிடம் நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொய் சொன்னவன்.
 2. ஒரு கணவன், மனைவி தங்களுக்குள் பேசும் பேச்சுக்களில்.
 3. எதிரிகளுடன் நடைபெறும் போர்களத்தில்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உக்பதிப்னு அபீ முஈத் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

            ***************************************************

-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....வியாழன், 12 ஜூலை, 2012

செவ்வாய், 10 ஜூலை, 2012

அந்த மூன்று விஷயங்கள்[12] ஈமான் பயனளிக்காத அந்த மூன்று நேரங்கள்.

ஈமான் எப்போது பயனளிக்காது! 

மூன்று விடயங்கள் வெளிப்பட்டு விட்டால் எவரது ஈமானும் அதன் பின் பயனளிக்கமாட்டாது (ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).

 1. சூரியன் மேற்கில் உதிக்க ஆரம்பித்துவிடல்.
 2. தஜ்ஜால் வெளிப்படுதல்.
 3. அதிசயப்பிரானி வெளிப்படுதல்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

            ***************************************************

-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....


வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்று நாயகர்.

வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்று நாயகர்.இப்பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் The 100 என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம்.இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள்.

அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. 

அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.

இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள். 

பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.

இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன. 

இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன, அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள். 

அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின. 

அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் (ரளியல்லாஹ¤ அன்ஹ¤ம்) ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன. 

கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத -இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.

ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன. 

முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. 

ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL)

ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன.

அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். 

குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம். 

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை. 

எனவே அன்னார் இல்லாமலே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான். 

ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம். 

இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன். 

Source ;
The 100, ஆசிரியர்: மைக்கேல் ஹெச். ஹார்ட்
தமிழில்: இரா. நடராசன்
மவ்லவி எம். அப்துல் வஹ்ஹாப்
பதிப்பாசிரியர் : மணவை முஸ்தபா
Published by: Meera Publication AE 103, Anna Nagar, Chennai - 600 040, India
nantri-mpmpages

இறைவா! இந்த தம்பதியர்களுக்கும், இந்த பிள்ளைக்கும் நீ இஸ்லாமிய வழியைக் காட்டுவாயாக!

விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கே சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

மேலும், அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.[புகாரி] 

செவ்வாய், 3 ஜூலை, 2012

சன்மார்க்கத்தின் பார்வையில் ஷபே பராஅத் !

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனைத்துப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அல்லாஹ் முஃமீன்களுக்கு என சித்தப்படுத்தி வைத்திருக்கும் சொர்க்கத்தை அடைவதற்கு எண்ணிலடங்கா அமல்களை தனது சொல்லாலும், செயலாலும் அங்கீகாரத்தாலும் அருமைநபி[ ஸல்] அவர்கள் வழிகாட்டியிருக்க, அந்தோ பரிதாபம்! அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நபி[ஸல்] அவர்களால் காட்டித்தரப்படாத பல்வேறு அமல்களை மார்க்கம் என்ற பெயரில் முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் செய்வதை பார்க்கிறோம். அப்படிப்பட்ட பித்அத்தில் ஒன்றுதான் வரவிருக்கும் ஷபே பராஅத்தாகும்.ஷஅபான் மாதம் 15 இரவு ஷபே பராஅத் என்றும் அந்த நாளில் சில அமல்களை செய்யவேண்டும் என்றும் தமிழக முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.


மூன்று யாசீன் ஓதுதல்;இந்த மூன்று யாசீன்கள் எதற்காக என்றால்,


பாவமன்னிப்பிற்காக.
கப்ராளிகளுக்காக.
ஆயுள் மற்றும் அபிவிருத்திக்காக.

இத்தககைய மூன்று விஷயங்களுக்காக மூன்று யாசீன் ஓதுவதற்கு அல்-குர்ஆனிலோ-ஹதீஸிலோ ஆதாரம் இருக்கிறதா என்றால், இல்லை என்பதோடு இதற்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதை காணலாம்.
பாவங்கள் மன்னிக்கப்பட என்ன செய்யவேண்டும் என்று அல்-குர்ஆண் வழிகாட்டுகிறது;


(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.3:31

பாவங்கள் மன்னிக்கப்பட நபியவர்களை பின்பற்றவேண்டும் என்று வல்ல இறைவன் கூறுகின்றான். நபியவர்களை பின்பற்றுதல் என்றால்,
அல்-குர்ஆனையும்-ஹதீசையும் மட்டும் பின்பற்ற
வேண்டும் . அதைவிடுத்து நபி[ஸல்] அவர்கள் காட்டித்தராத யாசீன் ஓதிவிட்டால் பாவங்கள் மன்னிக்கப்படுமா? சிந்திக்க வேண்டும்.
அடுத்து யாசின் ஓதிவிட்டால் கப்ராளிகளுக்கு ஏதாவது பயனுண்டா என்றால் நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறந்தவர்களுக்கு நன்மை தரக்கூடியது எது என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதை பாருங்கள்;

ஒருவர் மரணித்து விட்டால் அவரை வட்டும் அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டு விடுகிறது மூன்றைத்தவிர;
நிலையானதர்மம்.
பயளிக்கும் கல்வி.
ஸாலிஹான பிள்ளைகளின் துஆ
.[நூல்;முஸ்லிம்]

நபி[ஸல்] அவர்களின் இந்த பொன்மொழியில் யாசீன் ஓதுங்கள் என்று கூறியுள்ளார்களா? யாசீன் ஓதுவது நாம் அழைத்து ஒதவைக்கும் ஆலிம்சாக்களுக்கு பயனளிக்குமே தவிர கப்ராளிகளுக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அடுத்து மூன்றாவது யாசீன் ஓதிவிட்டால் ஆயுள்- அபிவிருத்தி ஏற்படுமா என்றால் ஏற்படாது. ஆயுள்-அபிவிருத்தி ஏற்பட நபி[ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறை பாரீர்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.[நூல்;புஹாரி].
எனவே மூன்று யாசீன் ஓதுவது அப்பட்டமான பித்அத்தாகும்.
தஸ்பீஹ் தொழுகை;
பராஅத் இரவில் தஸ்பீஹ் தொழுகை தொழவேண்டும் என்று கூறுபவர்கள் ஒரு ஹதீஸை அதற்கு சான்றாக முன்வைப்பார்கள்;

ரசூல்[ஸல்] அவர்கள் தன் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களிடம், அப்பாஸே! என் பெரியதந்தையே! உங்களுக்கு அன்பளிப்பு வழங்கட்டுமா? நான்கு ரக்அத்துகள் தொழுவீராக! அதில் தக்பீர் கட்டியவுடன் சூரத்துல் பாத்திஹாவையும், மற்றொரு சூராவையும் ஓதுவீராக! சுப்ஹாநல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹுஅக்பர் என்ற தஸ்பீஹை 15 முறை ஓதுவீராக! பின்பு ருஃகூவிற்கு சென்று, 
ருஃ கூவில் 10 முறை, ருஃவிலிருந்து நிலைக்கு வந்தபின் 10 தடவை தஸ்பீஹை ஓதுவீராக! பின்பு சஜ்தா செய்வீராக! சஜ்தாவில் 10 தடவையும், இருப்பில் 10 தடவையும், இரண்டாவது சஜ்தாவில் 10 தடவையும் தஸ்பீஹ் ஓதுவீராக! இதே போன்று நான்கு ரக்அத்கள் தொழுங்கள் என்று கூறிவிட்டு, இத்தொழுகையை தினமும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது நிறைவேற்றுங்கள் என்று ரசூல்[ஸல்] அவர்கள் கூறியதாக வரும் இந்த செய்தி திர்மிதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஹதீஸில் பல்வேறு அம்சங்களை கவனிக்கவேண்டும். முதலில் இது பலவீனமான ஹதீஸாகும். இந்த ஹதீஸில் இடம்பெறும் மூஸாபின் உபைதா என்பவர் பலவீனமானவர். ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸை சரிகண்டால்கூட, இதில் ஷஅபான் என்ற வார்த்தையோ, அல்லது ஷஅபான் 15 என்ற வார்த்தையோ இல்லை. மேலும் இந்த தொழுகையை தினமும்- வாரத்தில் ஒருநாள்-மாதத்தில் ஒருநாள்- இரண்டு மாதத்தில் ஒருநாள்- வருஷத்தில் ஒருநாள் தொழுங்கள் என்ற நபியவர்களின் கூற்று இத்தொழுகை குறிப்பிட்ட நாளுக்குரியதல்ல என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும், தொழுகையில் தஸ்பீஹ் எண்ணிக்கொண்டிருப்பது சாத்தியமான ஒன்றா? நாம் வழக்கமாக தொழும் தொழுகையில் எந்தவித தஸ்பீஹும் எண்ணாமலே, நாலு ரக்அத் தொழுதோமா அல்லது மூன்று ரக்அத் தொழுதோமா என்ற சந்தேகம் வருகிறது. நம்மை விடுங்கள்! நபி[ஸல்] அவர்களுக்கே இத்தகைய சந்தேகம் வந்து பின்பு சகாபாக்களால் சுட்டிக்காட்டப்பட்ட பின் விடுபட்டதை பூர்த்தி செய்ததாக ஹதீஸ்களில் பார்க்கிறோம். நிலைமை இவ்வாறிருக்க, தஸ்பீஹ் என்னும் போது பத்துதடவை எண்ணினோமா  அல்லது ஐந்துதடவை எண்ணினோமா  என்ற சந்தேகம் வந்தால் அத்தொழுகை பூர்த்தியானதாக இருக்குமா? எனவே தஸ்பீஹ் தொழுகை ஆதாரத்தின் அடிப்படையிலும், தர்க்கரீதியிலும் சரியல்ல என்பதால் தஸ்பீஹ் தொழுகை ஒரு பித்அத்தாகும்.நோன்பு நோற்றல்;
பராஅத் இரவில் நோன்பு நோற்கவேண்டும் என்ற பழக்கம் முஸ்லிம்களிடத்தில் உள்ளது. இதற்கும் ஒரு ஹதீஸை ஆதாரம் காட்டுவார்கள்.
ரசூல்[ஸல்] அவர்கள் கூறினார்கள்; ஷஅபான் பாதி இரவை அடைந்துவிட்டால் இரவில் நின்று வணங்குங்கள் பகலில் நோன்பு வையுங்கள்.ஏனெனில், அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கிவந்து, என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன்! சோதனை துன்பங்களில் இருந்து பாதுகாப்பு தேடுவோர் உண்டா? அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறேன் என்று காலைவரை கூறிக்கொண்டே இருப்பான்.
அறிவிப்பாளர்;அலீ[ரலி] நூல்; இப்னுமாஜாஇந்த ஹதீஸில் இப்னுஅபீஸஃப்ரா என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.


மேலும் ஷஅபான் பாதியை அடைந்துவிட்டால் நோன்பு நோற்காதீர்கள் என்ற நபி[ஸல்] அவர்களின் பொன்மொழி திர்மிதி, இப்னுமாஜா,அஹ்மத் போன்ற நூற்களில் காணப்படுகிறது. எனவே ஷபேபராஅத் நோன்பும் நபியவர்களின் வழிமுறையல்ல.

எனவே ஷபேபராஅத் என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட பித்அத்களில் ஒன்று என்பதை விளங்கி அவற்றை புறக்கணித்து, மார்க்கத்தை உள்ளது உள்ளபடி பின்பற்றிட அல்லாஹ் நல்லருள்புரிவானாக!

ஞாயிறு, 1 ஜூலை, 2012

அந்த மூன்று விஷயங்கள்[9] மூன்று விடயங்களில் மிகப் பெரிய பொய்யன் யார்?

மஸ்ரூக் இப்னு அஜ்த (ரஹ்) அறிவித்தார், நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் "அன்னையே முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின?) அவற்றை உங்களிடம் தெரிவிக்கிறவர் பொய்யுரைத்துவிட்டார்.

 1. முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார்" என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக), "கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்" எனும் (திருக்குர்ஆன் 06:103 வது) வசனத்தையும், "எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகிறவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை" எனும் (திருக்குர்ஆன் 42:51 வது) வசனத்தையும் ஒதினார்கள்.
 2. "உங்களிடம் முஹம்மது(ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்" என்று சொல்கிறவரும் பொய்யே கூறினார்" என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக,) "எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை" எனும் (திருக்குர்ஆன் 31:34 வது) வசனத்தை ஓதினார்கள்.
 3. "உங்களிடம் முஹம்மத்(ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்" என்று சொன்னவரும் பொய்யே கூறினார்" என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக) "தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்…" (எனும் 5:67 வது) வசனத்தை ஓதினார்கள். "மாறாக, முஹம்மத்(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களையே அவரின் (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்" என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி).

                                    ***************************************************

-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....