அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இறைவழியில் தியாகப்பயணம்[பாகம்3]...[மறுபதிப்பு]


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


தனது ஆருயிர் தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களுடனும், ஆமிர் இப்னு ஃபுஹைரா[ரலி]  அவர்கள் சகிதமாக அருள்செய்யப்பட்ட மதினா நோக்கி நபியவர்கள் பயணப்பட்ட செய்தி மக்கத்து குறைஷிகளுக்கு எட்டியது.இதற்கிடையில் நபி[ஸல்]அவர்களும், அபூபக்கர்[ரலி] அவர்களும் ஸவ்ர் என்ற குகையை அடைந்துவிட்டனர் அந்த குகையில் நபியவர்கள் ஓய்வெடுப்பதற்காக அபூபக்கர்[ரலி] சுத்தம் செய்திட அபூபக்கர்[ரலி] அவர்களின் மடிமீது தலைவைத்து மாநபி[ஸல்]அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மறுபுறம் குறைஷிகள் முஹம்மது விசயத்தில் நாம் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோமே என மனம் புழுங்கி அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.

ஆலோசனை முடிவில்,
'நபி (ஸல்) அபுபக்ர் (ரழி) இவ்விருவரில் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும் இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரிஅவருக்கு இந்தப் பரிசுஉண்டு" என்று பொது அறிவிப்பு செய்தனர். (ஸஹீஹுல் புகாரி).

எதிரிகள் நபி (ஸல்) அவர்களைத் தேடி அலைந்து அவர்கள் தங்கியிருந்த குகைவாசலை வந்தடைந்தனர். அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன. நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்துவிடுவார்களே" என்று கூறினேன். நபி (ஸல்) 'அபூபக்ரே! சும்மா இருங்கள். நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றான்." என்று கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய அல்லாஹ் மாபெரும் அற்புதமாகும் இது. சில எட்டுகளே நபி (ஸல்) அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இருந்தன. எனினும், தேடி வந்தவர்களால் நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் திரும்பிவிட்டனர்.

நபியவர்களும், அபூபக்கர்[ரலி]அவர்களும், ஸவ்ர் குகையிலிருந்து வெளியேறி வழிகாட்டியின் வழிகாட்டுதல்படி மதினா நோக்கி சென்று கொண்டிருக்கையில், அபூபக்கர்[ரலி] அவர்களை அறிந்திருந்த, நபியவர்களை அறிந்திராத சிலர் அபூபக்கர்[ரலி]இடம் நபியவர்களை காட்டி, யார் இவர் என வினவ இக்கட்டான சூழ்நிலையில் அதே நேரத்தில் பொய்யுரைக்காமல் அபூபக்கர்[ரலி] அவர்கள், இவர்கள்[நபி ஸல்]எனது வழிகாட்டி என்றார்கள். கேட்டவர்களோ எதோ பாதை காட்டுபவர் போலும் என எண்ணி சென்றுவிட்டனர்.[புஹாரி]

மேலும்,குறைஷிகளின் பரிசுக்கு ஆசைப்பட்ட சுரக்கா இப்னு மாலிக் என்பவர் நபியவர்களை பிடிக்கும் நோக்கில், நபியவர்கள் பயணித்த திசையை அறிந்து நபியவர்களை நெருங்கும் வேளையில், நடந்த விஷயத்தை சுரக்கா இப்னுமாலிக் வார்த்தையிலேயே  கேளுங்கள்;

நபி (ஸல்) அவர்களுக்கு நெருக்கத்தில் வந்தவுடன் எனது குதிரை தடுமாறவே நான் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். பின்பு எழுந்து, எனது அம்புக் கூட்டிலிருந்து நான் அவர்களுக்குத் தீங்கு செய்யட்டுமா? வேண்டாமா? என்று குறிபார்க்கும் எண்ணத்தில் ஓர் அம்பை எடுத்தபோது 'வேண்டாம்" என்ற அம்பு வந்தது. அதில் எனக்கு திருப்தி ஏற்படாததால் மீண்டும் குதிரையில் ஏறி அவர்களை நெருங்க ஆரம்பித்தேன். நபி (ஸல்) ஓதும் சப்தத்தை கேட்கும் அளவிற்கு நான் அவர்களை நெருங்கி விட்டேன். நபி (ஸல்) திரும்பி பார்க்காமல் சென்றார்கள். ஆனால், அபூபக்ரோஅதிகம் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். அப்போது எனது குதிரையின் முன்னங்கால்கள் முழங்கால் வரை பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்தேன்.

பின்பு எழுந்து, எனது குதிரையை விரட்டவே, அது மிகச் சிரமத்துடன் கால்களை வெளியே எடுத்தது. அது நேராக நின்றவுடன் வானத்திலிருந்து புகை போன்று வந்த ஒரு புழுதி அதன் முன்னங்கால்களில் காயத்தை ஏற்படுத்தியது. நான் என்ன செய்யலாம் என்று குறிபார்க்க அம்பை எடுத்தபோது எனக்குப் பிடிக்காத அம்பே இப்போதும் வந்தது. நான் அவர்களை எனக்கு பாதுகாப்புத் தரக்கோரி கூவி அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டு அவர்கள் நின்று விட்டார்கள். நான் குதிரையில் ஏறி அவர்களிடம் வந்தேன். நான் அவர்களை நெருங்குவதற்கு தடை ஏற்படுவதிலிருந்தே நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் மிகைத்தே தீரும் என்று உறுதிகொண்டேன்.

நபி (ஸல்) அவர்களிடம் 'உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் உண்டு என அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். எனவே, மக்கள் உங்களை பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்" என்று கூறினேன். நான் அவர்களிடம் என்னிடம் இருந்த பிரயாண உணவையும், சாமான்களையும் அவர்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்கள் முன் வைத்தேன். ஆனால், அவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கொண்டு என்னிடம் எதுவும் விசாரிக்கவும் இல்லை. இருப்பினும் 'எங்களின் செய்திகளை மறைத்துவிடு" என்று மட்டும் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் எனக்காக பாதுகாப்புப் பத்திரம் ஒன்று கொடுக்குமாறு கூறினேன். நபி (ஸல்) ஆமிர் இப்னு புஹைராவிடம் கூறவே அவர் எனக்கு சிறிய துண்டுத் தோலில் எழுதிக் கொடுத்தார். பின்பு நபி (ஸல்) சென்று விட்டார்கள். ( புகாரி)

இவ்வாறாக பல்வேறு சோதனைகளை இறைவனின் அற்புதத்தால் வென்று நபியவர்களும் அபூபக்கர்[ரலி] அவர்களும் புனித மதினாவில் பாதம் பதித்தனர். நபியவர்களை கண்ட மதினத்து பெருமக்கள் மட்டில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்கள(து வருகைய)ால், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், 'இதோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்' என்று கூறினர். நூல்;புஹாரி,எண் 4941

இவ்வாறாக நபியவர்களின் ஹிஜ்ரத்பயணம் அமைந்தது. மதினாவிற்கு முதன்முதலாக அழைப்பு பணிக்காக அனுப்பபட்ட முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களின் தியாத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்;

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்கள்;

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அத்தகையவர்களில் ஒருவர் தாம். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரின் தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின் அவரின் கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரின் தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரின் தலையை மூடி விடும்படியும் அவரின் கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர். நூல்;புஹாரி,எண் 3914

சத்திய மார்க்கத்திற்காக இம்மையை விற்று மறுமையை விலைக்கு வாங்கிய மாநபி[ஸல்] வழியிலும், மகத்தான சகாபாக்கள் வழியிலும் மறுமையை இலக்காகக்கொண்டு தொடரட்டும் நமது பயணம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
                                                                                                                                    முற்றும்.

கருத்துகள் இல்லை: