அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இறைவழியில் தியாகப்பயணம்[பாகம்1] ...[மறுபதிப்பு]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல்நபி[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை அன்றைய அறியாமைக்கால மக்களிடம் எடுத்தியம்பியபோது பல்வேறு ஏச்சுக்களும்,பேச்சுக்களும், எள்ளிநகையாடல்களும்தான் பதிலாக பரிசாக கிடைத்தது. நாளடைவில் அல்லாஹ்வின் அருளால் சிறுக சிறுக மக்கள் தூய இஸ்லாத்தை தழுவியபோது,அன்றைய குறைசிகளும், ஏனைய இறைமறுப்பாளர்களும் முஸ்லிம்களை சொல்லொணா துன்பத்திற்கு உள்ளாக்கினர்.

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக அருமை பிலால்[ரலி],அம்மார்[ரலி],யாசிர்[ரலி] உள்ளிட்ட சகாபாக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். உச்சகட்டமாக யாசிர்[ரலி] சுமைய்யா[ரலி] உள்ளிட்ட சகாபாக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தங்கள் இன்னுயிரையும் இழக்கும் நிலை ஏற்ப்பட்டது.

இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில்தான் நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான்

قُلْ يَا عِبَادِ الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ
(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். (அல்குர்ஆன் 39:10) என்ற வசனம் இறங்கியது.

நபியவர்களின்கட்டளை;

ஹபஷாவின் மன்னராக இருந்த 'அஸ்மஹா நஜ்ஜாஷி நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு 'ஷ{அய்பா துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்" என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)

இந்நிலையில்,குறைசிகள் முஸ்லிமாகி விட்டனர் என்ற தவறான தகவல் அபிசீனியாவில் உள்ள முஸ்லிம்களிடம் பரவ அதனால் அதே ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அந்த முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினர். மக்காவிற்கு சற்று முன்னதாகவே உண்மை நிலவரம் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தவுடன் சிலர் ஹபஷாவிற்கே திரும்பிவிட்டனர். சிலர் எவருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் குறைஷிகள் சிலர் பாதுகாப்பில் மக்காவிற்குள் நுழைந்தனர்.

மெல்ல மெல்ல குறைஷிகள் இவர்களையும் மற்ற முஸ்லிம்களையும் கடுமையாக வேதனை செய்தனர். அவர்களது நெருங்கிய உறவினர்களும் கூட அவர்களுக்குக் கொடுமை செய்தனர். இந்நிலையில் மறுமுறையும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்லுங்கள் என தங்களது தோழர்களுக்கு ஆலோசனை கூற வேண்டிய கட்டாயம் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது.

இரண்டாவது ஹிஜ்ரா;
முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரா முந்திய ஹிஜ்ராவை விட மிக சிரமமாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காக தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால், அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி, நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துதப்படுத்தி ஹபஷா மன்னர் நஜ்ஜாஷியை அடைந்தனர்.
இம்முறை 83 ஆண்களும் 18 அல்லது 19 பெண்களும் ஹபஷா சென்றனர். (சிலர் அம்மார் (ரழி) இப்பயணத்தில் செல்லவில்லை. எனவே, ஆண்களில் 82 நபர்கள்தான் என்றும் கூறுகின்றனர்.) (ஜாதுல் மஆது)

குறைஷியர்களின் சூழ்ச்சி;
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மார்க்கத்திற்கும் பாதுகாப்புள்ள இடமான ஹபஷாவில் நிம்மதியாக வசிப்பது இணைவைப்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் நுண்ணறிவும், வீரமுமிக்க அம்ரு இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபி ரபீஆ ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் நஜ்ஜாஷியையும் அவரது மத குருக்களையும் சந்தித்துப் பேசி, முஸ்லிம்களை நாடு கடத்தும்படி வேண்டுகோள் வைக்கும்போது அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு மதிப்புமிக்க வெகுமதிகளுடன் ஹபஷா அனுப்பி வைத்தனர்.

முதலில் அவ்விருவரும் மத குருக்களிடம் சென்று அவர்களுக்குரிய அன்பளிப்புகளை கொடுத்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக தகுந்த காரணங்களைக் கூறினர். அந்த மத குருக்களும் அதனை ஏற்று, முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு நஜ்ஜாஷியிடம் ஆலோசனை கூறுவோம் என்று ஒப்புக் கொண்டனர். பிறகு அவ்விருவரும் நஜ்ஜாஷியிடம் வந்து அவருக்குரிய அன்பளிப்புகளைச் சமர்ப்பித்து அவரிடம் இது குறித்து பேசினர்.

'அரசே! தங்கள் நாட்டுக்கு சில அறிவற்ற வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களது இனத்தவர்களின் மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். உங்களது மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் நமக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தை பின்பற்றுகின்றனர். இவர்களது இனத்திலுள்ளவர்கள் அதாவது இவ்வாலிபர்களின் பெற்றோர்கள், பெற்றோர்களின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இவர்களை அழைத்து வருவதற்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் இவர்களை நன்கு கண்காணிப்பார்கள்பாதுகாப்பார்கள். அவர்களைப் பற்றி இவர்கள் கூறிய குறைகளை, நிந்தனைகளை அவர்களே நன்கறிந்தவர்கள். ஆகவே, நீங்கள் அவர்களை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள்!" என்று கூறினர்.

 உடனே அங்கிருந்த மத குருக்களும் 'அரசே! இவ்விருவரும் உண்மைதான் கூறுகின்றனர். அவர்களை இவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களது இனத்தவர்களிடம் இவர்கள் அவர்களை அழைத்து செல்வார்கள்" என்றனர்.
ஆனால், பிரச்சனையைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து நஜ்ஜாஷி முஸ்லிம்களை அவைக்கு வரவழைத்தார். எதுவாக இருப்பினும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற ஒரே முடிவில் முஸ்லிம்கள் அங்கு சென்றனர்.

முஸ்லிம்களிடம் 'உங்களது இனத்தை விட்டுப் பிரிந்து எனது மார்க்கத்தையும் மற்றவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புதுமையான மார்க்கத்தை ஏற்றிருக்கிறீர்களே! அது என்ன மார்க்கம்?" என்று நஜ்ஜாஷி கேட்டார்.
முஸ்லிம்களின் பேச்சாளராக இருந்த ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) பதில் கூறினார்கள்: '

அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம். சிலைகளை வணங்கினோம். இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம். மானக்கேடான காரியங்களைச் செய்தோம். உறவுகளைத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகள் விளைவித்து வந்தோம். எங்களிலுள்ள எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் (அழித்து வந்தனர்.) இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போதுதான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான்.

அவரது வமிசத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும். உண்மையே உரைக்க வேண்டும். அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும். உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும். அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு இணைவைக்கக் கூடாது தொழ வேண்டும். ஏழை வரி (ஜகாத்து) கொடுக்க வேண்டும். நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார் (ஜஅஃபர் இன்னும் பல இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய விவரங்களை கூறினார்.)

நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம். அவரை விசுவாசித்தோம். அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம். அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம். அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம். அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம். அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறினர். எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும். முன்பு போலவே கெட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து எங்களை எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயற்சித்தனர். எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மார்க்க(மத) சுதந்திரத்துக்கும் அவர்கள் தடையானபோது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்" என இவ்வாறு ஜஅஃபர் (ரழி) கூறி முடித்தார்.

'அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் கொண்டு வந்த ஏதாவது உம்மிடம் இருக்கிறதா?" என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார். அதற்கு ஜஅஃபர் 'ஆம்! இருக்கின்றது" என்றார். நஜ்ஜாஷி, 'எங்கே எனக்கு அதை காட்டு" என்றார். காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் 'மர்யம் எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர் (ரழி) ஓதிக் காண்பித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாடி நனையும் அளவு நஜ்ஜாஷி அழுதார். அவையில் உள்ளவர்களும் ஜஅஃபர் (ரழி) ஓதியதைக் கேட்டு தங்களின் கையிலுள்ள ஏடுகள் நனையுமளவு அழுதனர். பிறகு நஜ்ஜாஷி, இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது
(முஸ்லிம்களை அழைக்க வந்த இருவரையும் நோக்கி) 'நீங்கள் இருவரும் சென்று விடுங்கள். உங்களிடம் நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்" என்று கூறினார்.

அவையில் இருந்த எவரும் அவ்விருவரிடமும் பேசுவதற்குத் தயாராகவில்லை.
அவ்விருவரும் வெளியேறி வந்தவுடன் அம்ர் இப்னு ஆஸ் தமது நண்பர் அப்துல்லாஹ் இப்னு அப+ரபீஆவிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர்களை அடியோடு வேரறுப்பதற்குண்டான வேலையை நான் நாளை செய்வேன்" என்று கூறினார். 'ஆனால் அப்படி செய்துவிடாதே! அவர்கள் நமக்கு மாறு செய்தாலும் நமது இரத்த பந்தங்களே ஆவார்கள்" என்று அப்துல்லாஹ் கூறினார். ஆனால், அம்ரு தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

மறுநாள் அம்ரு நஜ்ஜாஷியிடம் வந்து 'அரசே! இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்" என்று கூறினார். 'அப்படியா! அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார் நஜ்ஜாஷி. இதை அறிந்தவுடன் சற்று பயமேற்பட்டாலும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் முஸ்லிம்கள் அவைக்கு வந்தனர். நஜ்ஜாஷி அவர்களிடம் அது பற்றி விசாரணை செய்தார்.

'எங்களது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்: அவர் அல்லாஹ்வின் அடிமை அவனது தூதர். அவனால் உயிர் ஊதப்பட்டவர். கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்" என்று ஜஅஃபர் (ரழி) கூறினார்.
நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவுகூட நீ கூறியதைவிட அதிகமாக கூறியதில்லை" என்றார். இதைக் கேட்ட அவரது மத குருமார்கள் முகம் சுழித்தனர். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகம் சுழித்தாலும் இதுவே உண்மை" என்று நஜ்ஜாஷி கூறிவிட்டார்.

பிறகு நஜ்ஜாஷி முஸ்லிம்களை நோக்கி 'நீங்கள் செல்லலாம்! எனது பூமியில் நீங்கள் முழு பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்கத்தின் மலையை எனக்கு கொடுத்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார். தனது அவையில் உள்ளவர்களிடம் அவ்விருவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்ப கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் முன்னர் பறிபோன எனது ஆட்சியை எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா? எனக்கு எதிராக அல்லாஹ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவாதபோது அவனுக்கு எதிராக நான் பிரச்சனையாளர்களுக்கு உதவுவேனா? (எனக்கு எதிராக என் எதிரிகளுக்கு அவன் உதவி செய்யாதபோது அவனுக்கு எதிராக நான் அவனது எதிரிகளுக்கு உதவி செய்வேனா?)" என்று கூறினார்.


இச்சம்பவத்தை அறிவிக்கும் உம்மு ஸலமா (ரழி) கூறுவதாவது: அவ்விருவரும் அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர். அவர்களது அன்பளிப்புகளும் திரும்ப கொடுக்கப்பட்டன. நாங்கள் சிறந்த நாட்டில் சிறந்த தோழமையில் அவரிடம் தங்கியிருந்தோம். (இப்னு ஹிஷாம்)

தொடரும்...


கருத்துகள் இல்லை: