அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 14 ஜனவரி, 2009

நபித்தோழர்கள்வாழ்வும்-நமதுநிலையும்![பாகம் 1]

ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர், அக்கட்சியில் இருக்கும்வரை அக்கட்சியின் தலைவரை வானளாவ புகழ்வதும், அதேபோன்று அந்த தலைவரும் இவரை 'என்னுடய போர்வாள்' என்று புகழ்மாலை சூட்டுவதும் பிற்காலத்தில் இவ்விருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரியும்போது, தலைவர் பிரிந்தவரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க செய்யும்வகையில் வசைமாரி பொழிவதும், பிரிந்தவர் தலைவர்மீது வசைமாரி பொழிவதும் அரசியல் அரங்கில் நாம் அன்றாடம் காணும் அலங்கோலங்கள்.

துரதிஷ்டவசமாக, முஸ்லீம் அமைப்புகள்/இயக்கங்களில் இது போன்ற தலைவர்-முக்கியஸ்தர் பிரிவின்போது அரசியல்வாதிகளையும் தாண்டி சேற்றைவாரி பூசிக்கொள்வதை பார்க்கிறோம். மனிதனுக்கு கோபம் என்ற ஒன்று இருக்கும்வரை மனஸ்தாபங்கள் ஒருவருக்கொருவர் ஏற்படுவது இயற்கையே! ஆனால் நமது சமுதாயத்தில் சகோதரர்களுக்குள் ஏற்படும் சிறிய மனஸ்தாபங்கள் ஜென்மப்பகை போல தொடர்வதைப்பார்க்கிறோம்.

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற நமது அறிஞர்களுக்கு மத்தியில் சில பிளவுகள் ஏற்பட்டது.பிரிந்த அந்த அறிஞர்களில் ஒருவர் மற்றவரை சந்தித்து சலாம் கூறியதுண்டா? உங்களுக்குள் பினங்கிக்கொன்டால் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருக்கவேண்டாம் என்ற நபிமொழி இவர்களுக்கு பொருந்தாதா?

ஆனால், அல்லாஹ்வின் தூதரிடம் பாடம்பயின்ற சத்திய சகாபாக்கள் தமக்குள் பிணக்கு வரும்போது எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை பார்ப்போம்;

அபுத் தர்தா(ரலி) அறிவித்தார் ;
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாம் விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

நூல்;புஹாரி,எண் 3661

இந்த ஹதீஸ்சில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களில் சில;

* இருவரும் சாதாரண நபர்கள்அல்ல. சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்கள். சொர்க்கம் உறுதி செய்யப்பட்டவர்கள்.

* சண்டையிட்டபின் 'அவன் வீட்டிலையா எனக்கு சாப்பாடு' என்று திமிராக இருக்காமல் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க ஒருவரை ஒருவர் தேடி வருதல்.

*உமர்[ரலி] அவர்களிடம், அபூபக்கர்[ரலி] மன்னிப்பு கேட்டும், உமர்[ரலி] மன்னிக்க மறுத்த பின்னும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்]மூலம் உமர்[ரலி] அவர்களிடம் மன்னிப்பைவேண்டுவோம் என்று நபியவர்களை தேடிச்சென்ற நற்பண்பு.

அபூபக்கர்[ரலி]மன்னிப்பு கேட்டும் நாம் கோபத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என வருத்தி அபூபக்கர்[ரலி] அவர்களை தேடிச்சென்ற உமர்[ரலி]அவர்கள்.

இறைவனின் திருப்தியே இலக்காக கொண்டு வாழ்ந்த அந்த மனிதமேதைகள் எங்கே! தவ்ஹீத், தவ்ஹீத் என்று வாய் கிழிய பேசிக்கொண்டு அற்ப பிரச்சினைக்காக ஆயிரம் கூறாக பிரிந்து அதற்காகவே வாழும் நாம் எங்கே! சிந்திப்போமா?

அது சரி! நாமதான் சகாபக்களை பின்பற்றவேண்டியதில்லையே! அப்புறம் அபுபக்கராவது- உமராவது என்கிறீர்களா?

கருத்துகள் இல்லை: