அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 31 அக்டோபர், 2009

தாடியிலும் தடுமாற்றமா...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தாடி வைப்பது நபி[ஸல்] அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் விளங்கி வைத்துள்ளோம். அதனால்தான் சமீபத்தில் கூட ஒரு மாணவன் தான் பயிலும் கல்வி நிலையம் தாடி வைப்பதற்கு தடை விதித்ததை எதிர்த்து கோர்ட்டு சென்றதால் கல்வி நிலையத்தால் நீக்கப்பட்டு, பின்பு கோர்ட்டு அந்த மாணவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதையும், இதன் மூலம் அந்த மாணவன் தனது மார்க்க உரிமையை நிலைநாட்டியதையும் நாம் அறிவோம். இது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களில் தாடி வைப்பவர்கள் மிக குறைவாக இருந்தாலும், தாடி எந்த அளவு வைப்பது எனபதில் கருத்து வேறுபாடு கொள்வதில் நிறைவாகவே உள்ளனர். காரணம் அவர்கள் எந்த அறிஞரிடம் தாடியின் அளவு பற்றி கேட்கப்படுகிறதோ , அந்த அறிஞர் தான் வைத்திருக்கும் தாடியின் அளவை ஒட்டியே ஃபத்வா வழங்குவதால் இந்த குழப்பம் நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக பீஜே என்பவர் வைத்திருக்கும் தாடியின் அளவு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தனக்கு அவ்வாறு வைப்பதுதான் வசதிப்படுகிறது என்பது அவரது நிலையாக இருக்குமானால், அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள விஷயம். ஆனால், இவர் தான் எந்த அளவு தாடி வைத்துள்ளாரோ அதையே மார்க்கத்தின் அளவாக காட்ட முற்படுகிறார்.

மும்பையில் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தாடி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தாடி வைக்கவேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அளவு என்று வரையறுத்து சொல்லப்படவில்லை எனவே தலைமுடி பற்றி ரசூல்[ஸல்] சொன்னதன் அடிப்படையில் நாங்கள் தாடியின் அளவு பற்றி முடிவெடுத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு,ஒரு சிறுவன் பாதி தலையை சிரைத்து பாதி முடி வைத்தவனாக வருகிறான். அவனை பார்த்த நபி[ஸல்] அவர்கள், என்ன இது..? ஒன்னு முழுசா முடிவை! இல்லன்னா முழுசா சிரை[அதாவது மொட்டை போடு] என்று சொன்னார்கள். [இது எந்த நூலில் உள்ளது என்று அவர் குறிப்பிடவில்லை] இதிலிருந்து என்ன வெளங்குது..? முழுசா முடியை விடு அப்பிடீன்னு நபியவர்கள் சொன்னதுனால தலைல முடிய வெட்டாம விட்டா பொம்பள மாதிரி வளந்துரும். அப்புறம் சடை போடலாம். பின்னல் பின்னலாம். இப்படி எடுத்துக்கொள்வதா? இந்த மாறி யாரும் இந்த விஷயத்தை எடுத்துக்கிறது கெடயாது. இதே மாரிதான் தாடிய முழுமையா விடுங்கள் என்றால் என்ன அர்த்தம்னா..? அகல வாக்கில் ஒதுக்காமல் முகத்தில் தாடி எந்த அளவு படர்ந்துள்ளதோ அதை ஒன்றும் செய்யாமல், நீள வாக்கில் அவரவர் தமக்கு எது அழகு என்று கருதுகிறாரோ அந்த அளவுக்கு குறைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். இவர் சுட்டிக்காட்டியதற்கு ஒப்பான ஒரு செய்தி புஹாரியில் கிடைக்கிறது.

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடுமி ('கஸஉ') வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்' என்று கூறினார்கள்.உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, 'கஸஉ' என்பது அவனுடைய தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியேவிட்டுவிடுவதாகும். (இதுதான் கூடாது). இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியேவிட்டு விடுவதும் கூடாது' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 5920 ]

இந்த செய்தியை கவனமாக படித்தால், இதில் தனது தலையில் பாதியை சிரைத்து பாதியை விட்டுவிடுவது கூடாது[உதாரணம்; சில அய்யர்கள் போன்று] என்றுதான் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தாடியை குறைப்பதற்கு எப்படி சட்டமெடுக்கs முடியும்..? சரி! தாடி சம்மந்தமான் வேறு ஹதீஸ்களே இல்லையென்றால் இதிலிருந்து எதாவது சட்டம் எடுக்கமுடியுமா என்று யோசிக்கலாம். ஆனால் தாடி சம்மந்தமாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளனவே!அல்லாஹ் அருள் மறை குர்ஆனில் கூறுகின்றான்;

(இதற்கு ஹாரூன்;) "என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்" என்று கூறினார்.[அல்குர்ஆன்20:94 ]

நபி மூஸா[அலை] அவர்கள் அல்லாஹ்விடம் வேதம் வாங்குவதற்காக நாற்பது இரவுகள் சென்ற வேளையில் தனது சமூகத்தை தனது சகோதரும் நபியுமான ஹாரூன்[அலை] அவர்களின் பொறுப்பில் விட்டு செல்கிறார்கள். மூஸா[அலை] அவர்கள் திரும்பி வருபோது, மக்கள் சாமிரி என்பவனின் தூண்டுதலால் காளை கன்றை வணங்கியதை அறிந்து கோபமுற்றவர்களாக தனது சகோதரர் ஹாரூன்[அலை] அவர்களின் தாடியையும் தலைமுடியையும் பிடித்தபோது, ஹாரூன்[ சொன்ன வார்த்தைகள் தான் மேல் உள்ளவசனம். இதில் இந்த அதிமேதாவி அளவுக்கு ஹாரூன்[அலை] அவர்களுக்கு தாடி இருந்திருக்குமானால் மூஸா[அலை] அவர்களால் பிடித்திருக்கமுடியுமா..? சிந்திக்கவேண்டுகிறோம். இந்த அதிமேதாவிகள் இப்படியும் கூறலாம்; அதாவது மூஸா[அலை] மற்றும் ஹாரூன்[அலை] ஆகியோர் முன்னால் வாழ்ந்த நபி மார்கள். எனவே அவர்களை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று. எனவே நபி[ஸல்] அவர்களின் தாடி எப்படி இருந்தது என்பதை பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.ஆதாரம்;புஹாரி எண் 5893 ]

இந்த பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி[ஸல்] அவர்கள், ஒன்றை நறுக்க சொல்கிறார்கள். மற்றொன்றை வளர விட சொல்கிறார்கள் எனில், தாடியில் கை வைக்கக்கூடாது என்பது தெளிவு. அப்படியாயின் தரையை தொடும் அளவுக்கு வளர்க்க சொல்கிறீர்களா என்று சிலர் கேட்கலாம். தாடியை நீங்கள் வெட்டாமல் விட்டால் அது ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி வளராது[சிலருக்கு விதிவிலக்காக இருக்கலாம்]. பெண்கள் தங்களின் முடியை வெட்டுவதில்லை. அதற்காக எல்லா பெண்களுக்கும் தரையை தொடும் அளவுக்கு முடியிருக்கிறதா என்றால் இல்லை. எனவே எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம். நிர்பந்தத்திற்கு மார்க்கத்தில் தடையில்லை என்பதை நாம் அறிவோம்.

நபி[ஸல்] அவர்களின் தாடி அளவு;

ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபி[ஸல்] அவர்களுடன் சமாதானம் பேச வந்தவர்களில் முதலாமவரான உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ என்பவர், நபி(ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களின் தாடியைப் பிடித்தபடி இருந்தார். அப்போது முகீரா இப்னு ஷுஅபா(ரலி) (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி(ஸல்) அவர்களின் தலைப்பக்கமாக நின்றிருந்தார்கள். எனவே உர்வா, நபி(ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா(ரலி), அவரின் கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, 'உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து" என்று கூறிய வண்ணமிருந்தார்கள். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2731 ]

இந்த ஹதீஸில் உர்வா என்பவர் நபி[ஸல்] அவர்களின் தாடியை பிடிக்கும் அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் தாடி பெரியதாக இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அபு மஃமர் கூறினார்: 'நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?' என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் 'ஆம்' என்றார். 'நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். 'நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்' என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.

ஆதாரம்; புஹாரிஎண் 746 ]

இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடி அசைவை கொண்டு நபி[ஸல்] அவர்கள் ஓதுவதை அறிந்துள்ளனர் சகாபாக்கள். தாடி பெரியதாக இருந்தால்தான் ஓதும்போது தாடி அசையும். இல்லையேல் நாடிதான் அசையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 933 ]

இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடியிலிருந்து நீர் வடிகிறது எனில் தாடி நீளமாக இருந்தாலே இது சாத்தியம். இப்போதுள்ள நவீன வாதிகள் மாதிரி 'சுரண்டி' வைத்திருந்தால் சாத்தியமாகாது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

சஹாபாக்களின் தாடி;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 5283 ]

கண்ணீர் தாடி வழியாக வழிய வேண்டுமானால், பெரியதாடியாக இருந்தாலே சாத்தியம் என்பதை புரிந்துகொள்க. ஆக நபி[ஸல்] அவர்கள் மற்றும் சகாபாக்கள் தாடியை பெரிதாகவே வைத்துஇருந்தனர். அவர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்கு தாடி வைக்கவில்லை என்பது மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கலாம்.

அவ்வளவு ஏன் மடையன் அபூஜஹ்ல் கூட தாடி என்றால் பெரிதாகத்தான் இருக்கவேண்டும் என்று விளங்கியிருந்தான்; பெரிதாகவே தாடி வைத்திருந்தான். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் "அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே!" என்று கேட்டார்கள். "நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.[புஹாரி எண் 3962 ]

இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், அபூ ஜஹ்ல் உடைய தாடியை பிடித்துக்கொண்டு அவனிடம் பேசுகிறார்கள் எனில், அபூஜஹ்ல் உடைய தாடி அந்த அளவுக்கு பெரிதாக இருந்திருக்கிறது. ஆக தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு பெரிதாக இருக்கவேண்டும் என்று அபூ ஜஹ்ல் விளங்கியது கூட இந்த குர்ஆண்-ஹதீஸ் பேசும் மேதைக்கு விளங்கவில்லை என்பதற்காக அபூ ஜஹ்ல் பற்றியதை குறிப்பிட்டோம் மாறாக ஆதாரத்திற்காக அல்ல.

ஆகவே அன்பானவர்களே! நபி[ஸல்] அவர்களும், சகாபாக்களும் தாடியை பெரிதாகவே வைத்துள்ளார்கள் என்பதற்கு பல்வேறு ஹதீஸ்களை ஆதாரமாக வைத்துள்ளோம். எனவே தாடி சுன்னத் என்பதை உணர்ந்து பெற்றோர்- மனைவி மக்கள் எதிர்ப்பையும் மீறி தாடிவைக்கும்சகோதரர்கள், நபி[ஸல்] அவர்கள் வைத்தது போன்று முழுமையாக தாடி வைக்க முன்வாருங்கள். தனிநபர் மனோ இச்சை அடிப்படையிலான ஃபத்வாக்களை புறந்தள்ளுங்கள். நிர்பந்தம் காரணமாக நீங்கள் தாடியை குறைத்தால் அதுபற்றிய விஷயம் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் மத்தியில் உள்ளதாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.








கருத்துகள் இல்லை: