*அம்ரு இப்னு ஆஸ்[ரலி]-கிரிமினல்.
அபூ மூஸா அல் அஸ்ஸரி[ரலி]- ஏமாளி.
அலீ[ரலி]- எடுப்பார் கைப்பிள்ளை.
முஆவியா[ரலி] பதவி ஆசை பிடித்தவர்.
இவ்வாறாக இன்னும் பல சஹாபாக்களை வரலாறு என்ற பெயரில் விமர்சித்து, உச்சகட்டமாக சஹாபாக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான் என்ற அளவில் சகாபாக்களை பற்றிய மதிப்பீடு சமுதாயத்தில் இன்று விதைக்கப்பட்டுள்ளது.
உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பதைப்போல என்னதான் நாம் அமலில் மூழ்கியிருந்தாலும், அந்த சத்திய சீலர்களுக்கு சமமாக முடியாது எனும்போது, அவர்களை விட நாம் எப்படி மேன்மக்களாக ஆகமுடியும்? நாம் வாழ்க்கையில் என்றோ, எப்போதோ ஒரு தியாகம் செய்வோம். ஆனால் தியாகமே வாழ்க்கையாக கொண்ட சகாபாக்களின் வரலாற்றை எடுத்தெழுத எண்ணினால் எமது ஆயுள் போதாது. எனவே சகாபாக்களின் சிறப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.
தவ்ராத்திலும், இன்ஜீலிலும் சத்திய சஹாபாக்கள்;
مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவெ தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.[48:29]
தவ்ராத்திலும், இன்ஜீலிலும் உங்களையும் என்னையும் பற்றி கூறப்பட்டுள்ளதா? இல்லையே? நபி[ஸல்] அவர்களோடு இருந்த அந்த உத்தம தோழர்களை அல்லவா அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். மேலும், காபிர்களிடம் கடுமையானவர்களாக, மூமீன்களுக்கு மத்தியில் இரக்கமுடையவர்களாக இருக்கக்கூடிய அந்த உயந்த தோழர்கள் எங்கே? சக முஸ்லிம்களோடு கருத்து வேறுபாடு வந்துவிட்டால் அவர்களை பரம வைரிகளாக கருதும் நாம் எங்கே? எப்படி சமமாக முடியும்? எப்படி சஹாபாக்களை விட சிறந்தவர்களாக முடியும்?
மன்னிப்பு வழங்கப்பட்ட மேதைகள்;
لَقَد تَّابَ الله عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِن بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَؤُوفٌ رَّحِيمٌ
நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.[9;117 ]
சகாபாக்களில்
சிலருக்கு தடுமாற்றம் வந்தபோதிலும் , அவர்கள் கஷ்ட காலத்தில் நபியவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டதாக கூறுகின்றான்! உங்களுக்கும் எனக்கும் இந்த உத்திரவாதம் இருக்கிறதா? எப்படி அந்த சத்திய சீலர்களோடு நாம் சமமாக முடியும்? எப்படி அவர்களைவிட மேன்மக்களாக ஆகமுடியும்?சகாபாக்களே சிலர் சிலருக்கு சமமாக மாட்டார்கள்;
وَمَا لَكُمْ أَلَّا تُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا يَسْتَوِي مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُوْلَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِينَ أَنفَقُوا مِن بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.[57:10 ]
மக்கா வெற்றிக்கு முன்னாள் செலவு செய்து போரிட்டவர்களுடன், மக்கா வெற்றிக்கு பின்னால் செலவு செய்து போரிட்டவர்கள் சமமாக முடியாது எனும்போது, இஸ்லாத்திற்காக ஒரு துளி ரத்தம் சிந்தாத இன்னும் சொல்லப்போனால் எதிரிகளின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாதியளவு ஆகும் வரை போர் நம்மீது கடமையில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிற நாம் , எப்படி அந்த தியாக சீலர்களுக்கு சமமாக முடியும்? எப்படி அவர்களைவிட நாம் மேன்மக்களாக ஆகமுடியும்?
உண்மையான மூமீன்கள் அந்த மேதைகள்;
وَالَّذِينَ آمَنُواْ وَهَاجَرُواْ وَجَاهَدُواْ فِي سَبِيلِ اللّهِ وَالَّذِينَ آوَواْ وَّنَصَرُواْ أُولَـئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَّهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்குப் புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும்தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்-அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.[8:74
முஹாஜிர்களையும்-அன்ஸாரிகளையும் உண்மையான மூமீன்கள் என்று அல்லாஹ் உத்திரவாதம் அளித்துவிட்டான். நமக்கு அத்தகைய உத்திரவாதம் உண்டா? நாம் உண்மையான மூமீன்களா? போலிகளா? என்று மறுமையல்லவா தீர்மானிக்கும். நம்பிக்கையாளர்கள் என்று வரையருக்கப்பட்டவர்களும், நம்பிக்கை கேள்விக்குறியாக நிற்பவர்களும் எப்படி சமமாக முடியும், எப்படி மேன்மக்களாக முடியும்?
வாக்குறுதி மாறா வாய்மையாளர்கள்;
مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُم مَّن قَضَى نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.[33:23 ]
சஹாபாக்கள் கொடுத்த வாக்குறுதிகள் அது அவர்களின் உயிர் விஷயமாக இருந்தாலும் அதை நிறைவேற்றிய வாய்மையாளர்கள் என்று அல்லாஹ் சான்று பகர்கிறான். நம்மில் யாரேனும் கொடுத்த வாக்குறுதி அத்தனையும் நூறு சதவிகிதம் நிறைவேற்றியதாக கூறமுடியுமா? வாய்மையாளர்களும்-வாய்மையில் குறைபாடு உள்ளவர்களும் சமமாக முடியுமா? வாய்மையாளர்களைவிட மேன்மக்களாக ஆகமுடியுமா?
சிறந்த சமுதாயம் என்று சான்று பெற்றவர்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் சொல்லும்படி கேட்கப்படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.[புஹாரி]
மூன்று சிறந்த தலைமுறையில் முதலிடத்தை பிடித்துள்ள சகாபாக்களோடு, பல தலைமுறை கடந்து வந்த நாம் சமமாக முடியுமா? மேன்மக்களாக ஆகமுடியுமா?போட்டியிலே கலந்துகொள்ளாத ஒருவர், முதல் பரிசு வாங்கியவரும்-நானும் சமம். அல்லது முதல் பரிசு வாங்கியவரைவிட நான் மேலானவன் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளமுடியுமா?
எட்டிப்பிடிக்க முடியா உச்சம் அவர்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. [புஹாரி]
இறைவனின் பாதையில் தங்களின் உடலாலும், பொருளாலும் தியாகம் செய்த அந்த உத்தமர்களின் இடத்தை நாம் உஹது மலையளவு தர்மம் செய்தாலும் எட்டிப்பிடிக்க முடியாது எனும் போது எவ்வாறு மேன்மக்களாக ஆகமுடியும்?
சகாபாக்களின் தவறுகள் அலட்சியம் செய்யப்படவேண்டும்;
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لاَنفَضُّواْ مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.[3:159 ]
மனிதர்கள் என்ற முறையில் சஹாபாக்கள் ஏதேனும் தவறு செய்தால்[குற்றவியல் நீங்கலாக] அதை அலட்சியப்படுத்துவதோடு, அவர்களுக்காக பாவமன்னிப்பு தேடுமாறு தனது நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான் எனில், அந்த சகாபாக்களின் தவறுகளை பட்டியல் போடுவதும், அவர்களின் விரல்விட்டு என்னும் அளவுக்குள்ள தவறுகளோடு தங்களை சம்மந்தப்படுத்தி ஒப்பிட்டு பார்த்து சஹாபாக்களை விட நாங்கள் மேன்மையானவர்கள் என்று கருதுவதும் மேற்கண்ட திருமறை வசனத்திற்கு அப்பட்டமான முரணாகும்.
இறுதியாக சஹாபாக்கள் சில தவறுகள் செய்துள்ளார்கள் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால் அந்த தவறுகளை அவர்கள் உணர்ந்தபோது அதற்காக அவர்கள் கைசேதப்பட்டுள்ளார்கள். இதற்கு பல சான்றுகளை கூறலாம்.
ரஸூல்[ஸல்] அவர்கள் மரணித்தவுடன் கொள்கை குழப்பம் தலை தூக்கியது. அதில் பிரதானமாக உமர்[ரலி] அவர்கள் இருந்தார்கள் என்ற கருத்து சிலரால் கூறப்படுகிறதே! நபி[ஸல்] அவர்களை தங்களின் பெற்றோரை/மனைவி-மக்களை விட, ஏன் தங்களின் உயிரைவிட அதிகமாக நேசித்தவர்கள் சஹாபாக்கள். அதிலும் குறிப்பாக உமர்[ரலி]அவர்கள் நபியவர்கள் மீது அளவுகடந்த அன்புடையவர்கள். அப்படிப்பட்ட நபியவர்களின் மரண செய்தியை உமர்[ரலி]அவர்களால் ஜீரணிக்கமுடியாமல் சொன்ன வார்த்தைதான் நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது. பின்பு அபூபக்கர்[ரலி]அவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை ஒதிக்காட்டியவுடன் உமர்[ரலி] தன்னை திருத்திக்கொண்டார்களா? இல்லையா?
ஆஊன்னா, ஆயிஷா[ரலி] அவர்களுக்கும்- அலி[ரலி] அவர்களுக்கும் நடந்த போரை சொல்லிக்காட்டுகிறோமே! அதை வைத்து அவர்களை மட்டமானவர்களாகவும், நம்மை மேன்மக்களாகவும் கருதுகிறோமே! அந்தபோர் முடிவில் நடந்தது என்ன? அன்னை ஆயிஷா[ ரலி] அவர்கள் தோற்றவுடன், தன்னை எதிர்த்து போரிட்டவர்- தன்னுடைய எதிரி என்றெல்லாம்[நம்மை போல் வஞ்சம் வைக்காமல்] கருதாமல் அலீ[ரலி] அவர்கள், அன்னையை கண்ணியமாக பத்திரமாக அனுப்பவில்லையா? அலீ[ரலி] அவர்களுக்கெதிராக போர் தொடுத்தது தவறு என்று அன்னையவர்கள் அழுது வருந்தவில்லையா?
இவ்வாறாக சஹாபாக்கள் தவறு செய்தாலும், பின்பு அந்த தவறை உணர்ந்து வருந்தியிருக்கிறார்கள்.திருந்தியிருக்கிறார்கள். சுமார் தொண்ணூறு சதவிகித பாவத்தையும்-சுமார் பத்து சதவிகித அமல்களையும் செய்யும் நாம், தொன்னூற்றி ஒன்பது சதவிகித நற்செயலையும் ஒரு சதவிகித தவறையும் செய்த நன்மக்களோடு எந்த காலத்திலும் ஒப்பாகவே முடியாது! ஒப்பாகவேமுடியாது!! ஒப்பாகவேமுடியாது!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக