அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 30 அக்டோபர், 2010

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி, ஹஜ் செய்யலாம் என்ற புதுமை ஃபத்வாவுக்கு மறுப்பு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

புஹாரியின் 3595 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, ஒரு பெண் “மஹ்ரம்” இல்லாமல் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என நவீனவாதிகள்  வழங்கும் ஃபத்வா குறித்து, மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் விரிவான விளக்கம்;

கேள்வி :-

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி ஹஜ்-உம்றாச் செய்யலாமா?


பதில்:-

இது விரிவாக விளக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஹஜ் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கின்றது. இது வரவேற்கத் தக்கதுதான். எனினும், ஹஜ்ஜை முறையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானவர்களிடம் இல்லையென்பது வருந்தத் தக்க விடயமாகும்.

ஹஜ் யார் மீது கடமையென்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

“..மனிதர்களில் அதற்குச் சென்று வரச் சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்..” (3:97)

எனவே, ஹஜ்ஜுக் கடமையைச் செய்யும் சக்தியுள்ளவர் மீதுதான் ஹஜ் கடமையாகும். பயணத்திற்கு மஹ்றமான ஆண் துணை இல்லாத பெண்ணுக்கு ஹஜ் கடமையில்லை. அப்படி அவர் தன் மீதுள்ள கடமையை நிறைவு செய்ய வேண்டுமென்றால் மஹ்றமான ஓர் ஆண் துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தனது ஹஜ்ஜைத் தனது நெருங்கிய உறவுடைய ஒரு ஆண் மூலம் நிறைவேற்ற அங்கீகாரமுள்ளது.

ஒரு பெண் தனியாகவோ, நம்பிக்கையான மஹ்றமல்லாத ஆண் துணையுடன், நல்லொழுக்கமுள்ள பல பெண்களுடன் கூட்டுச் சேர்ந்தோ ஹஜ் செய்யலாம் என்பதற்குக் கூறப்படும் ஆதாரங்கள் குறித்தும் அது பற்றிய உண்மை விளக்கம் என்ன என்பது குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!” என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!” என கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!

எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் “நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!” என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் “மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.

ஐயம்:- ஹஜ் குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக்கொள்வதற்காக, தமது வசதிக்காகப் பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர்.

குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒரு படி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு அதிய்யே! அல்ஹீரா என்ற நகரைப் பார்த்திருக்கிறாயா? நான் அதைப் பார்த்ததில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன்!” எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந் தனியே) தவாஃப் செய்வாள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்.” (புகாரி ) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக்கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காகத் தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்


விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் படி நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவும் இந்தக் காலத்து மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா?

அதீ பின் ஹாதிம்(ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம்-பீதியற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக் கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.

மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதி(ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய்(ரழி) அவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகின்ற போது, “ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்!” எனக் குறிப்பிடுகிறார்கள். (புகாரி)

இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக் காலத்தை ஒப்பிடலாமா?” என்றால், அனைவரும் “இல்லை!” என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.

ஐயம்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கிப் பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காகச் செல்வதை எவ்வாறு தவறாகக்கொள்ள முடியும்?

தெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித் தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை. அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்து வைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத் தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக்கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.

நபி(ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

நன்றி; மவ்லவி இஸ்மாயில் ஸலபி மற்றும் இஸ்லாம் கல்வி.காம்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

இரண்டாம் திருமணமும்- இல்லாத கட்டுப்பாடுகளும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
மனிதனை படைத்த அல்லாஹ், அந்த மனிதனின் பலம்- பலவீனம் அனைத்தையும்  உணர்ந்து மனிதனின் ஆசைகளுக்கு அனுமதியளிக்கும் அதே நேரத்தில், ஆசை அளவுகடந்து சென்றுவிடாமல் இருப்பதற்கான கடிவாளத்தையும்  போடுகிறான். அந்தவகையில் ஆண்களுக்கு நான்கு திருமணம் வரை செய்வதற்கு அல்லாஹ் அனுமதியளிக்கிறான்.

பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி என்று தத்துவம் கூறப்பட்டாலும், அது தத்துவத்திற்குத் தான் நன்றாக இருக்குமேயன்றி, நடைமுறை வாழ்க்கைக்கு பெரும்பாலும் ஒத்துவருவதில்லை. பெரும்பாலான ஆண்கள் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொள்வதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், 'அன்அபிஷியல்' ஆக பல பெண்களோடு தொடர்புடையவர்களாக இருப்பதைக் காணலாம். இதனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதை நாள்தோறும் பத்திரிக்கைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மேலும், பிரபலமானவர்கள் கூட, ஒருவரை மனைவியார் என்றும் மற்றவரை துணைவியார் என்றும் சொல்லிக்கொண்டு வலம்வருவதைக் காண்கிறோம். இதெல்லாம் எதை  உணர்த்துகிறது என்றால், பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு மனைவி என்பது போதுமானாதாக இல்லை என்பதைத்தான். எனவே இன்னொரு மனைவி தேவை என்று கருதுபவனுக்கு சட்டப்படி திருமணம் செய்ய சட்டம் குறுக்கே நின்றால், அவன் சட்டத்திற்கு புறம்பாக அந்த பெண்ணுடன் வாழ முற்படுகிறான். இப்படி இவன் சேர்த்து வைத்திருக்கும் பெண்ணை இவன் புறக்கணித்தால் அப்பெண்ணிற்கு ஜீவனாம்சம் சட்டப்படி கிடைக்காது  என்பதுதான்  இப்போதுள்ள நிலை. எனவே இஸ்லாம் இதற்கு அழகான தீர்வை சொல்கிறது. அதுதான் பலதார மணம்.

وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)

இறைவனின் மேற்கண்ட அனுமதியை கொண்டு ஒரு முஸ்லிம் இரண்டாம் திருமணம் செய்ய முற்படுகையில், இன்றைய நவீன அறிஞர்கள் சிலர் அதற்கு பொருந்தாத சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அதில் பிரதான கட்டுப்பாடு என்னவெனில், இரண்டாம் திருமணம் செய்யும் ஒருவன் முதல்மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்பது. அதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரம்;
 
وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا

அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21

இந்த வசனத்தை வைத்து, மனைவி கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார். இந்த உடன்படிக்கையில், மனைவி கணவனைத் தவிர வேறு ஆனை  நாடக்கூடாது என்பதும் , கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடக்கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல்மனைவியிடம் முன்கூட்டியே அதுபற்றி தெரிவிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.
 
உண்மையில் இந்த வசனம் திருமணத்தை 'வாக்குறுதி' என்று கூறினாலும், இந்த வசனம் சொல்லும் முழுக்கருத்து என்ன என்பதை பார்க்கவேண்டும். இதற்கு முந்தைய வசனம் இதுதான்;
وَإِنْ أَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلاَ تَأْخُذُواْ مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَاناً وَإِثْماً مُّبِيناً

நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? (4:20)

மேற்கண்ட இரு வசனங்களையும் பார்க்கும்போது இதன்மூலம் இறைவன் இடும் கட்டளை தெளிவானது. அதாவது, முதல்மனைவியை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாம் திருமணம் செய்யும் ஒருவன் முதல்மனைவிக்கு  தந்த மகரை ஒருபோதும் திரும்ப வாங்கக்கூடாது என்பதுதான்.

எனவே இதில் வரும் 'வாக்குறுதி' என்ற வார்த்தையை வைத்து தங்களின் வார்த்தைஜாலத்தை பயன்படுத்தி, ஒப்பந்தம் என்றும் அந்த ஒப்பந்தத்தில்,
மனைவி கணவனைத் தவிர வேறு ஆனை  நாடக்கூடாது என்பதும் , கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடக்கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல்மனைவியிடம் முன்கூட்டியே அதுபற்றி தெரிவிக்கவேண்டும் என்று கூற வருவார்களானால், திருமண ஒப்பந்தப்படி அந்நியப் பெண்ணை  நாடுவதற்குத்தான் தடையே தவிர; இன்னொரு பெண்ணை மணப்பதற்கு அல்ல எனபதையும் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும், இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல் மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் திருமணம் செய்யவேண்டுமென்றால், அதற்கு நபி[ஸல்] அவர்கள், ஒவ்வொரு திருமணத்தின் போதும் தமது முந்தைய மனைவியரிடத்தில்  இவ்வாறு  சொல்லிவிட்டுத்தான் செய்தார்கள் என்று ஆதாரத்தை  வைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு வைக்கமுடியாது ஏனெனில், நபியவர்கள் போர்களத்திலும், பயணத்திலும் கூட சில  மனைவியரை திருமணம் செய்துள்ளார்கள். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் திருமணத்திற்கு முன்பே மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்ற வாதத்திற்கு எந்த ஆதாரமுமில்லை.

அதே நேரத்தில் முதல் மனைவியிடம் சொல்லாமல் திருமணம் செய்யும் கணவன், தனது இரண்டாம் மனைவியை, முதல் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்த  அனுமதியில்லை. ஏனெனில் நபி[ஸல்] அவர்கள் தனது வாழ்வில், ஒரு மனைவிக்கு தெரியாமல் இன்னொரு மனைவியோடு குடும்பம் நடத்தவில்லை. மாறாக இன்று எந்த மனைவியிடம் தங்குவார்கள் என்று அனைத்து மனைவியரும் அறியும் வகையில்  நாட்களை ஒதுக்குவார்கள். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன், தனது இரண்டாம் மனைவியை முதல் மனைவி அறியும் வகையிலும், மற்றவர்கள் அறியும் வகையிலும் பகிரங்கமாக  குடும்பம் நடத்த  வேண்டும்.

அடுத்து இரண்டாம் திருமண விஷயத்தில் இன்னொரு புதுமையான ஃபத்வா வழங்கப்படுகிறது. அது என்னவெனில், புஹாரியில் இடம்பெறும் 3110 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, நபியவர்கள் தமது மகள் ஜைனப்[ரலி] அவர்கள் மனைவியாக இருக்கும் நிலையில் வேறு பெண்ணை  மணக்கக் கூடாது என அபுல் ஆஸ்[ரலி] அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள் எனக்கூறி, இந்த அடிப்படையில் ஒரு ஆனை திருமணம் முடிக்கும் பெண், நான் மனைவியாக இருக்கையில் என்னைத் தவிர எந்த பெண்ணையும் அடுத்து மணம் முடிக்கக் கூடாது  என  நிபந்தனை விதிக்க மார்க்கத்தில் அனுமதியிருக்கிறது என்று கூறுகிறார்கள். அவர்கள் வைக்கும் ஹதீஸ் இதுதான்;

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) ஃபாத்திமா(ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். - அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை - (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) - அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். 'அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அiதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன்;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது" என்று கூறினார்கள்.


மேற்கண்ட ஹதீசை கவனமாக படியுங்கள். அதில் இவர்கள் கூறுவது போன்று,
அபுல் ஆஸ்[ரலி] அவர்களிடம் நபியவர்கள் அத்தகைய ஒப்பந்தம் எடுத்ததாக இவர்கள் மேற்கோள் காட்டும் ஹதீஸில் ஒரு வரி கூட இல்லை. எனவே திருமணத்திற்கு முன்பே கணவனிடம் 'நான் மனைவியாக இருக்கையில் வேறு பெண்ணை  மணக்கக் கூடாது  என கணவனிடம் ஒப்பந்தம் செய்ய மார்க்கத்தில் எந்த அனுமதியும் இல்லை.

மேலும் பெரும்பாலான  பெண்கள் [குறிப்பாக தமிழக முஸ்லிம் பெண்கள்] தான் இருக்கும்போது இன்னொரு பெண்ணை  தனது கணவன் மணப்பதை விரும்பமாட்டாள். இவர்களின் ஃபத்வா படி பெண்கள் திருமணத்திற்கு முன்பே இத்தகைய ஒப்பந்தத்தை செய்ய முற்பட்டால், எந்த ஆணும் இரண்டாம் திருமணம் செய்யமுடியாது. ஆக அல்லாஹ் கொடுத்த அனுமதியை பறிக்கும் வேலையை இந்த ஃபத்வா கொடுப்பவர்கள் செய்கிறார்கள் என்று விளங்கிக் கொளவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம்.  அப்படியானால் அபுல் ஆஸ்[ரலி]யை நபியவர்கள் பாரட்டியது ஏன் என்று.  அபுல் ஆஸ்[ரலி]யை நபியவர்கள் பாரட்டியது ஏன் என்பதற்கு , ரஹீக் என்ற வரலாற்று நூலில் விளக்கம் கிடைக்கிறது;

பத்ருப் போரில் மக்கத்து நிராகரிப்பாளர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டதனால், பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகனார் மற்றும் ஜய்னப் அவர்களின் கணவனரான அபுல் ஆஸ் அவர்களும் ஒருவராக இருந்தார்.



ஜய்னப் அவர்களும் தமது கணவனாரை மீட்க தம் சார்பாக ஒருவரை பணயத் தொகையுடன் அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் பிரதிநிதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல் ஆஸ் அவர்களை மீட்டுச் செல்வதற்கான பணயப் பொருளுடன் வந்தார். அந்தப் பணயப் பொருளைப் பார்த்தவுடன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவராக அவரது முகம் கவலையால் வாடி சோகம் ததும்பி நின்றது. ஆம், ஜய்னப் அவர்கள் தம் கணவரை மீட்க, தமது தாயார் கதீஜா அவர்கள் இறப்பதற்கு முன் தனக்கு அளித்திருந்த நெக்லஸை பணயத் தொகையாக அனுப்பி இருந்ததே, நபிகளாரின் கவலைக்குக் காரணமாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கிக் கூறினார்கள் :


எனதருமைத் தோழர்களே, அபுல் ஆஸை மீட்பதற்காக ஜய்னப் இந்தப் பொருளைப் பணயப் பணமாக அனுப்பி உள்ளார். நீங்கள் விரும்பினால், இவரை விடுதலை செய்து, இந்தப் பொருளையும் அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லை எனில் நீஙகள் விரும்பியவாறு நடந்து கொள்ளலாம் என்றார்கள்.


நபிகளாரின் மனச்சுமையை கண்ட அண்ணலாரின் தோழர்கள், உங்கள் விருப்பப்படியே நாங்கள் செய்கின்றோம் என்று கூறி, அபுல் ஆஸ் அவர்களி;ன் பணயத் தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவர்களை விடுதலை செய்வதற்கு முன், தன் மகள் ஜயனப் அவர்களை தன்னிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை, அண்ணலார் (ஸல்) அவர்கள் அவருக்கு விதித்தார்கள்.


அவ்வாறே அபுல் ஆஸ்[ரலி] அவர்களும் தனது மனைவி ஜைனப் அவர்களை நபியவர்களிடத்தில் திருப்பி அனுப்புகிறார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அவர் என்னிடம் கூறியதில், உண்மையுடனும், அவர் என்னிடம் சத்தியம் செய்ததில் வாய்மையுடனும் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.

அபுல் ஆஸ்[ரலி] அவர்களை நபியவர்கள் பாராட்டியதற்கு காரணம் இதுதானேயன்றி, இவர்கள்  கூறியது போன்று எந்த ஒப்பந்தமும் காரணமில்லை. அப்படியிருந்தால் நேரடியான ஹதீஸை முன்வைக்கட்டும்.
 
அதோடு, ஒரு வாதத்திற்கு இந்த நவீனவாதிகள்  கூறுவது போன்று வைத்துக் கொண்டாலும், ஜைனப்[ரலி] அவர்களின் திருமணம் நபித்துவத்திற்கு முன்னால் நடந்ததாகும். இவர்கள்  கூறியது போன்ற ஒப்பந்தத்தை நபியவர்கள் செய்திருந்தாலும், நபித்துவத்திற்கு முன்னால் நபியவர்கள் செய்ததை பின்பற்றலாம் என கூறுவார்களா..? இது கீழ்கண்ட வசனத்திற்கு முரணில்லையா..?


وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)
 
அடுத்து, அபூஜஹ்லின் மகளை மணப்பதாக இருந்தால், எனது மகளை விவாகரத்து செய்துவிடு என்று அலீ[ரலி] அவர்களிடம் கூறியதை ஆதாரமாக காட்டி, இரண்டாம் திருமணம் செய்யும் கணவனை பிரியும் உரிமை பெண்ணிற்கு உண்டு என்பதால் அந்த உரிமையை நபியவர்கள் இங்கு பயன்படுத்துகிறார்கள்  என்றும் கூறி, இரண்டாம் திருமணம் செய்யும் கணவன், தான் இரண்டாம் திருமணம் செய்யப்போவதை முன்கூட்டியே மனைவியிடம் சொன்னால்தான், அவனது முதல் மனைவி விரும்பினால் இவனோடு வாழவும்- விரும்பினால் இவனை விவாகரத்தும் செய்யமுடியும் என்று ஒரு வாதத்தை  வைக்கிறார்கள். கணவனின் இரண்டாம் திருமணத்தை  காரணம் காட்டி ஒரு பெண் தனது கணவனை பிரியலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை முன்  வைக்கவேண்டும். 
 
அப்படியானால்,  அலீ[ரலி]  அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய நாடுகையில், நபி[ஸல்] அவர்கள் தனது மகளை விவாகரத்து செய்யக்  கூறியதற்கு காரணம், நபியவர்கள் அலீ[ரலி] அவர்களின் திருமணத்திற்கு தடையாக நின்றதற்கு காரணம் அதே புகாரி 3110 ஹதீஸில் உள்ளது.


மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன்;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது" என்று கூறினார்கள்.  
 
அலீ[ரலி] அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய நாடுகையில், தனது மகளை விவாகரத்து செய்யக்  கூறியதற்கு காரணம் 'விவாகரத்து உரிமையை' நிலைநாட்ட அல்ல. மாறாக அல்லாஹ்வின் எதிரியின் மகளோடு ஒன்று சேர்ந்து வாழமுடியாது  என்பதற்காகவே.
 
எனவே, இரண்டாம் திருமணம் தொடர்பாக இந்த நவீனவாதிகள் வழங்கும் ஃபத்வாக்கள் அல்லாஹ் வழங்கிய பலதாரமண உரிமையை பறிப்பதாகவும், கணவனின் மறுமணத்தை காரணம் காட்டி பெண்களை விவகாரத்து செய்ய தூண்டுவதாகவும் அமைந்துள்ளதை நம்மால் உணரமுடிகிறது.
 
எல்லாம்  வல்ல அல்லாஹ், ஃபத்வாக்களை பாக்கெட்டில் இருந்து அள்ளிவீசும் நவீன வாதிகளுக்கு நேர்வழி காட்டுவானாக!

வெள்ளி, 15 அக்டோபர், 2010

உலக கைகழுவும் தினமும்; உன்னத மார்க்கமும்!

அக்டோபர் பதினைந்தாம் தேதி 'உலக கை கழுவும் தினம்' அனுஷ்டிக்கப்பட்டதை நாமெல்லாம் அறிவோம். இந்த கை கழுவுவதை வலியுறுத்துவதன் நோக்கம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் பெரும்பாலான நோய்கள் கைகளின் தூய்மையின்மையால் ஏற்படுகிறது.

கைகளில் நம்மையும் அறியாமல் பரவியிருக்கும் அசுத்தத்தின் காரணமாக, நாம் கையை சுத்தம் செய்யாமல் நமது உடலின் ஏனைய பகுதிகளை தொடுவதாலும், கைகளை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதாலும் உடல்ரீதியாக பல்வேறு நோய்களை நாம் சந்திக்கவேண்டியுள்ளது.

மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு அவனது முழு உடல் தூய்மை மிகஅவசியம். அதிலும் குறிப்பாக கைகளின் தூய்மை மிக மிக அவசியம். எனவே இஸ்லாம் இந்த தூய்மையை என்றோ அனுஷ்டிக்கும் ஒரு சடங்காக சொல்லாமல், அன்றாடம் மனித வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் தூய்மையை கடமையாகவே ஆக்கியிருப்பதை காணலாம்.

தொழுகையில்....
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆண்-பெண் அனைவர் மீதும் தொழுகை கடமை என்பதை அனைவரும் அறிவோம். அந்த தொழுகை நிறைவேற வேண்டுமானால் 'உளூ' எனும் சுத்தம் மிகமிக அவசியம். அல்லாஹ் கூறுகின்றான்;


يا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ وَإِن كُنتُم مَّرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاء أَحَدٌ مَّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لاَمَسْتُمُ النِّسَاء فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ مَا يُرِيدُ اللّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـكِن يُرِيدُ لِيُطَهَّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள் ;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.[5:6 ]

இந்த வசனத்தில் 'உளூ' எனும் அங்கசுத்தி செய்தல், உடலுறவு செய்வதன் மூலம் குளிப்புகடமையானால் குளித்தல் அல்லது தயம்மும் செய்தல் ஆகிய கடமைகளை வலியுறுத்திய இறைவன், இதன் மூலம் அல்லாஹ் உங்களை தூய்மைப்படுத்த நாடுகிறான் என்று கூறுவதன் மூலம் இஸ்லாம் தூய்மையை எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால்....
'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் தூங்கியிருக்கிறார்களா?' என ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குரிய உளூச் செய்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்..[புஹாரி]

இல்லற வாழ்க்கையில் ஈடுபடும்போது அதன் மூலம் ஏற்படும் அசுத்தங்களை களையும் பொருட்டு நபி[ஸல்] அவர்கள் உளூ செய்து தூங்கியிருக்கிறார்கள். அவ்வாறே முஸ்லிம்களும் பணிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இங்கும் தூய்மை வலியுறுத்தப்பட்டுள்ளதை காணலாம். மேலும் உடலுறவு கொள்ளாமல் சாதரணாமாக தூங்க நாடினாலும் அப்போதும் உளூ செய்யுமாறு நபி[ஸல்] அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்;

'நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூ செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் 'யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்' என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆம்விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.[புஹாரி]

குளிப்பு கடமையான நிலையில் உண்ண நாடினால்....
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உண்ண அல்லது உறங்க விரும்பும் போது உலூச் செய்து கொள்வார்கள். குளிப்புக் கடமையாக இருக்கும் போது (அவ்வாறு செய்தார்கள்) என்பதையே அவர்கள் குறிப்பிட்டார்கள்.[அபூதாவூத்]

மீண்டும் உறவுகொள்ள நாடினால்...
உங்களில் ஒருவர் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)[அபூதாவூத்]

சிறு நீர் கழித்தால்.....
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, தனது வலது கையால் தனது மர்மஉறுப்பைத் தொட வேண்டாம். மேலும் அவர் கழிப்பிடத்திற்கு சென்றால், தனது வலது கையால் சுத்தம் செய்ய வேண்டாம், மேலும் அவர் நீர் அருந்தினால் ஒரே மூச்சில் நீர் அருந்த வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.[புஹாரி]

இவ்வாறாக அன்றாடம் தூய்மையை வலியுறுத்தும் ஏராளமான விஷயங்களை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளது. அதில் சிலவற்றை மட்டுமே இங்கு மேற்கோள் காட்டியுள்ளோம். ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தாலே அவன் தூய்மையானவனாகவும், ஆரோக்கியமானவனாகவும் திகழ்வான் [இறைவன் நாடியவை நீங்கலாக] என்பதில் ஆச்சரியமில்லை.






அந்த ஏழு விஷயங்கள்!


بســــم الله الـر حـمـن الرحـــيــم
எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதனை படைத்து அந்த மனிதனுக்கு பூமியை  வசிப்பிடமாக்கி, அதில் அவனுக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கி, மனிதன் அனுபவிக்க அனுமதித்துள்ள இறைவன், அவற்றில் ஆகுமானவை  எது..? தடுக்கப்பட்டவை எது..? என்பதையெல்லாம் விளக்கி, அந்த மனிதனை பக்குவப்படுத்தி, பண்பாளனாக மாற்றி, சுவனத்திற்கு உரியவனாக மாற்ற தன் புறத்திலிருந்து வேதத்தையும், தூதர்களையும் அனுப்பி வைத்தான். அந்த தூதர்கள் குறித்து, அதிலும் குறிப்பாக ரஸூல்[ ஸல்] அவர்கள் குறித்து நமக்கு கட்டளையிடும் போது,
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். [59 ; 7 ]
என்று வல்ல ரஹ்மான் தன் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

அந்த அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் பல்வேறு ஏவல், விலக்கல்களை சொல்லியுள்ளார்கள். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான ஏழு ஆகுமான விஷயங்களும், ஏழு தடுக்கப்பட்ட விஷயங்களும் புஹாரியில் 6235 மற்றும் பல்வேறு இலக்கங்களில் காணப்படுகிறது. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகிறது;

 ஏவப்பட்ட விஷயங்கள்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

நாம் நோயாளிகளை நலம்  விசாரிக்க மருத்துவமனைக்கோ, அல்லது வீடுகளுக்கோ செல்வோம். ஆனால் யாரை விசாரிப்போம் என்றால் அவர்கள் நமக்கு நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள். அல்லது நெருங்கிய நண்பர்களாக  இருப்பார்கள். அல்லது ஏதேனும் ஒரு வகையில்  அவர்கள் நமக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் விசாரிப்போம். இந்த நிலை மாறவேண்டும். அறிந்தவர் அறியாதவர் அனைவரையும் அவர் நோயுற்ற செய்தியறிந்தால் நாம்  நலம் விசாரிப்பதை பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், நோய் விசாரிக்க சென்றால்,
'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' .

(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)
என்ற நபியவர்கள் காட்டித்தந்த துஆவை நோயாளிகளுக்காக நாம் செய்யவேண்டும்.

2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது.
ஒருவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவை அவரது வீட்டில் பார்த்து விட்டு நடையை கட்டுபவர்கள் நம்மில் பெரும்பாலோர் உண்டு. காரணம் ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று, அடக்கம்செய்யும் வரை உடன் இருந்தால் அதற்கு கிடைக்கும் நன்மையை  அறியாத  காரணத்தினால்தான்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஜனாஸா தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்றார்கள். [புகாரி 1325 ]
இரண்டு மலையளவு நன்மையை  அள்ளித்தரும் செயலான ஜனாசாவுக்காக தொழுதல், பின் தொடர்தல், அடக்கம் செய்தல் ஆகிய செயலை இனியும் நாம் விடலாமோ..?

 3. தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.

தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வது அரிதாகிவிட்டது. ஆடு, மாடு தும்முவது போல் தும்மிவிட்டு, அல்ஹம்துலில்லாஹ் சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். அப்படியே தும்மியவர் சொன்னாலும் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற அறிவு பெரும்பாலோருக்கு இல்லை. காரணம் தும்மியவருக்கு பதிலளிப்பதும் ஒரு நல்லமல் என்ற  அறியாமைதான்.

4. நலிந்தவருக்கு உதவுவது.

நலிந்தவர்களுக்கு நம்மில் பலர் உதவி செய்கிறோம். அதை இன்னும் அதிகமாக செய்யவேண்டும். அமைப்புகள் பல நலிந்தவர்களுக்கு உதவி செய்து வருகின்றன. பாராட்டுகிறோம். ஆனால் அவைகளை விளம்பரப் படுத்துவதை  தவிர்க்க வேண்டும். கட்டாயம் விளம்பரப் படுத்தியே ஆகவேண்டும் என அமைப்புகள் கருதினால், குறைந்த பட்சம் உதவி பெறுபவரின் முகத்தை மறைத்தாவது படத்தை வெளியிட முன்வர வேண்டும்.

5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது.

அநீதியிழைத்தல்   என்பது ஒருவருக்கு அவரது சொத்து- மானம்- உயிர் ஆகியவற்றில் அநீதியிழைக்கப் பட்டிருக்கலாம். அப்படி ஒருவர் அநீதிக்கு உள்ளானால், அவரை அநீதிக்கு உள்ளாக்கியவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அவரை எதிர்த்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்திட உதவவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தனக்கு பிடிக்காதவர்களின் கண்ணியத்தை கப்பலேற்றும் வேலையை கற்றறிந்தவர்களே செய்வது வேதனைக்குரியதாகும்.

6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.

ஸலாம் சொல்லுதல் என்பது பெரிய தாடி, ஜிப்பா சகிதம் ஒரு கெட்டப்பில் இருப்பவர்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் என்றாகி விட்டது. மேலும் நாகரிக வளர்ச்சியில் ஸலாம் காணாமல் போய், 'குட்மார்னிங்'  வழக்கில் வந்துவிட்டது. முஸ்லிம்களில் கணிசமானோர் குட்மார்னிங் சொல்வதை பார்க்கிறோம். குட்மார்னிங் சொன்னால் மார்க்கத்தில் எந்த நன்மையுமில்லை. ஆனால் ஸலாம் சொன்னால் அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் பத்து நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்றால் இருபது நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்றால் முப்பது நன்மைகளும்  கிடைக்கும். இது சொன்னவருக்கு கிடைப்பதாகும். கேட்டு விட்டு பதில் சொல்பவருக்கும் இதுபோன்ற நன்மை கிடைக்கும். இப்படி எந்த செலவும் செய்யாமல் நன்மைகளை கொள்ளையடிக்கும் வாய்ப்பை நாம் தவறவிடலாமா..?

7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

சத்தியம் செய்தவர் மார்க்கத்திற்கு உட்பட்ட சத்தியத்தை  செய்திருப்பின், அந்த சத்தியத்தை நிறைவேற்ற நாம் உதவ வேண்டும். ஒருவர் பொருளாதார விஷயத்தில் ஒரு சத்தியத்தை செய்திருப்பார். எதிர்பாராத விதமாக அவர் பொருளாதார பின்னடைவை சந்தித்து சத்தியத்தை நிறைவேற்ற முடியா நிலையில் இருப்பார். இப்படிப்பட்டவருக்கு நாம் உதவி செய்வதன் மூலம் நாம் நன்மையை அடைந்து கொள்ளமுடியும்.
தடுக்கப்பட்டவைகள்;
1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.

வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது என்பது வசதி படைத்த சில முஸ்லிம்கள் கவுரவமாக கருதுகிறார்கள். ஏழைகள் வீட்டில் வெள்ளிப் பாத்திரங்கள் இருக்காது. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவதை இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள். மேலும் நபியவர்களின் கட்டளையை ஏற்று வெள்ளிப் பாத்திரத்தில் உண்ணல்- பருகுதல் செய்வதை சஹாபாக்கள் நஞ்சென  வெறுத்துள்ளார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்கள்;

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) (இராக்கில் உள்ள) 'அல்மதாயின்' (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூலியான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா(ரலி) அதை அவரின் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) 'நான் இவரை(ப் பலமுறை தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக் கொள்ளாததால் தான் நான் இதை அவரின் மீது வீசியெறிந்தேன். நபி(ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றம் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும், அவர்கள், 'அவை இம்மையிலும் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.[புகாரி 5632 ]

2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.
முஸ்லிம்களில் பெரும்பாலான ஆண்கள் தங்கம் அணிபவர்களாக இருக்கிறர்கள். இன்னும் திருமண நேரத்தில் பெண் பேசும்போதே மாப்பிள்ளைக்கு தனியாக இத்தனை சவரன்   போடவேண்டும் என்றும் பேசப்படுகிறது. ஆண்கள் தங்கம் அணிவதை நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதுகிறார்கள். கழுத்தில் மைனர்  செயினோடும், கையில் பிரஸ்லேட்டோடும் இவர்கள் செய்யும் அளப்பரை தாங்க முடியலை. ஆனால் அவை நரகத்தின் நெருப்பு என்பதை உணர மறுக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
ஒரு மனிதரின் கையில் தங்க மோதிரத்தைக் கண்ட நபி[ஸல்] அவர்கள் அதை கழற்றி எறிந்துவிட்டு, உங்களில் யாரேனும் தீக்கங்கை எடுத்து அதை தனது கையில் வளையமாக அணிவதை விரும்புவாரா என்று கேட்டார்கள். நபி[ஸல்] அவர்கள் சென்றபிறகு, அந்த மோதிரத்தை  எடுத்து அதை வேறு வழியில் பயன்படுத்திக் கொள் என்று அந்த மனிதருக்கு கூறப்பட்டது. அதற்கவர், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அதை தூர எறிந்திருக்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக, அதை ஒருபோதும் நான் எடுக்கமாட்டேன் என்று கூறினார்.[முஸ்லிம்]

தங்கம் அணியும் விசயத்தில் இறைத்தூதரின் கட்டளைக்கு சஹாபாக்கள் எந்த ளவு கட்டுப்பட்டுள்ளார்கள். இன்று  நாம் எவ்வாறு இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.
3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.
4. சாதாரணப் பட்டு அணிவது.
5. அலங்காரப் பட்டு அணிவது.
6. எகிப்திய  பட்டு அணிவது.
7. தடித்த பட்டு அணிவது.

இங்கே பாட்டின் அனைத்து வகைகளையும் ஆண்களுக்கு நபியவர்கள் தடுத்துள்ளார்கள். ஒரு  காலத்தில்  திருமணம் என்றாலே மாப்பிள்ளை பட்டு வேட்டி சரசரக்க ஊர்வலம் வருவார். இன்று நாகரிக மாற்றம் காரணமாக திருமணத்தில் பட்டு அணிவது குறைந்தாலும், முஸ்லிம் சமுதாயத்தில் பட்டு அணிவது முற்றிலும் ஒழிந்து விட்டது என்று கூறிட முடியாது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;

பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். "மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது" என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். [புகாரி எண்; 886 ]

இம்மை பகட்டுக்காக பட்டாடை அணியும் ஆண்கள் மறுமை பாக்கியத்தை இழக்கத் தயாரா என்பதை சிந்திக்கட்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் ஏவியதை செய்பவர்களாக, தடுத்ததை தவிர்ந்து கொள்பவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

திங்கள், 13 செப்டம்பர், 2010

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் ஆய்வுகள்[2]; போதுமென்ற மனமே..

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா, வளைகுடா  போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.


"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.[தினமலர்].

அன்பானவர்களே! நிறைய சம்பாதிக்கவேண்டும்; நிரப்பமான மகிழ்ச்சியாக  வாழவேண்டும் என்ற நோக்கமுடையவர்கள் வெளிநாடுகளில் வாழ்பவர்கள்  மட்டுமன்றி, உள் நாட்டிலே வாழ்ந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டாக்கனிதான்.

ஏனெனில், நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற  ஆவலில் ஒரு குடும்பத்தில் கணவனும்-மனைவியும் பணிக்கு செல்கின்றனர். இதனால் கணவனும் மனைவியும் சேர்ந்திருக்கும் நேரம் குறைந்து, அலுவலகத்தில் இருக்கும் நேரம் அதிகரிக்கிறது. வீடு வந்தாலும் பணிச்சுமை காரணமாக  அவரவர் மனம் ஓய்வைத்தன் நாடுகிறதே தவிர; கணவனும்- மனைவியும் மனம்விட்டு மகிழ்ச்சியாக பேசுவதற்கு இயலவில்லை. அப்படியே இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டாலும் அதுவும் பெரும்பாலும் இயந்திரத்தனமாகவே இருக்கும்.

மேலும், இவ்விருவரும் பணிக்கு செல்வதால் பெற்ற குழந்தைகள பெற்றோரின் பாசத்திற்கு எங்கும் நிலை.  இவ்வாறாக பல்வேறு காரணங்களை கூறலாம். எனவே, பறப்பதற்கு ஆசைப்பட்டு; இருப்பதை விட்ட கதையாக, வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, இருந்ததையும் இழந்து நிற்கிறது மனித சமுதாயம்.

எனவேதான் அன்றே இஸ்லாம் இதற்கு அழகான தீர்வை சொன்னது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்;


(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். நூல்; புஹாரி எண் 6446
 
இறைத்தூதரின் இந்த இனிய பொன்மொழியை இன்றைய ஆய்வுகள் ஒருபுறம் உண்மைப் படுத்திக் கொண்டிக்க, இந்த பொன்மொழியை சிரமேற்கொண்டு அமுல்படுத்த வேண்டிய முஸ்லிம் சமுதாய மக்களில் பெரும்பாலோர் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பாலைமணலில் ஆயுளை அற்பமாக கழித்துக் கொண்டிருக்கிறோம். [நான் உட்பட]
 
எல்லாம் வல்ல அல்லாஹ், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொன்ன 'போதுமென்ற' மனதை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை நமக்கு வழங்கிடுவானாக! 

சனி, 11 செப்டம்பர், 2010

அரசியல் தலைவர்களும் - அகிலத்தின் அருட்கொடையும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
'பாதுகாப்பு என்பது, கட்சித் தலைவர்களுக்கு முக்கியம் அல்ல. மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதுதான் முக்கியம்'
இந்த அற்புதமான கருத்தை மொழிந்தவர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆவார். அவரின் கருத்திற்கேற்ப, தமிழக மற்றும் இந்திய அளவில் மக்களின்  பாதுகாப்பு  என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

ஒருவன் கலையில் தனது வீட்டைவிட்டு பணி நிமித்தமாக வெளியே சென்றால், அவன் மீண்டும் வீடு திரும்புவானா என்ற உத்திரவாதம் இல்லை. தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலும், ஏனைய பகுதிகளிலும்  நடைபெறும் தொடர்கொலைகள் இதை உறுதிப்படுத்துகிறது.

நேற்றுக் கூட சென்னையில் பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை ஒருவர் சில ரவுடிகளால் சினிமாவில் வருவது போன்று சர்வசாதரணமாக ஓட ஓட விரட்டி வெட்டிக் கொள்ளப்படுகிறார். பெற்றவர்களின் கண்முன்னே இந்த படுபாதகம் அரங்கேறுகிறது. கொலை மட்டுமல்ல. கொள்ளைகளுக்கும் குறைவில்லை. அண்ணாதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ஜெயலலிதா கூறியது போன்று மிட்டாய்களை கூட பேங்கின் லாக்கரில் வைக்கவேண்டிய அளவுக்கு கொள்ளைகளுக்கும் குறைவில்லை.

விபச்சராம் நவீனமாகி ஆன்லைன் விபசாரம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. இதுபோக பல்வேறு போலிகள், மோசடிகள் இவ்வாறாக சட்டத்திற்கு சவால்விடும் ஏராளமான் குற்றச்செயல்கள் நாட்டில் அரங்கேறிக் கொண்டுள்ளதை நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.

அவ்வாறாயின், இவ்வாறான குற்றங்களை தடுத்து நிறுத்தி மக்களுக்கு பாதுகாப்பளித்து சுபிட்சமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டிய காவல்துறை எங்கே..? என்ற கேள்வி வருகிறதல்லவா.! ஆம்! காவல் துறை இருக்கிறது. ஆனால் மக்களை பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட காவல்துறையின் பெரும்பகுதி காவலர்கள், மக்களின் பிரதிநிதிகள் எனக் கருதப்படும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரமுகர்கள், சிலைகள் இவற்றைக் காப்பதற்கு பயன்படுத்தப் படுகிறார்கள்.

ஆம்! சமீபத்தில் அண்ணாதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு  வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும்  என அவரது கட்சி முக்கிய தலைவர்கள் மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள். இதையொட்டி ஜெயலலிதாவுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை விவரித்து, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

ஜெயலலிதாவுக்கு 'இசட்பிளஸ்' பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் 'என்.எஸ் .சி' பாதுகாப்புக்கு உரியவர் என்பதால்  அவருக்கு தமிழ்நாடு காவல்துறையிலிருந்து,
  •  இரு காவல்துறை கண்காணிப்பாளர்கள்.
  • மூன்று ஆய்வாளர்கள்.
  • 12 உதவி ஆய்வாளர்கள்.
  • 58 காவலர்கள்.
ஆக 75 காவலர்கள்.
இதுபோக அவர் பயணிக்கும் போது அவரது வாகனத்திற்கு முன்னும்  பின்னும் அணிவகுக்கும் 12 காவலர்கள். மேலும், ஓட்டுனருடன் கூடிய குண்டு துளைக்காத கார். அதோடு அனைத்து காவலர்களுக்கும் நவீன ரக ஆயுதங்கள் வழங்கப்படுள்ளது. மேலும், அவர் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் போது 2000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு.

இதுமட்டுமன்றி, அவர் போயஸ்தோட்டத்தில் இருந்தாலும், கொடநாடு -சிறுதாவூர் பங்களாக்களில் இருந்தாலும் இதே அளவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

என்ன சகோதரர்களே! மூச்சு  வாங்குகிறதா..?

ஜெயலலிதா என்ற எதிர்கட்சித் தலைவருக்கே இத்தனை பாதுகாப்பு; இத்தனை காவலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்  என்றால், முதல்வருக்கு இதையும் தாண்டி இருக்கலாம். கவர்னருக்கு முதல்வரையும்  தாண்டி இருக்கலாம். பிரதமருக்கு கவர்னரையும் தாண்டி இருக்கலாம். ஜனாதிபதிக்கு பிரதமரையும் தாண்டி பாதுகாப்பு இருக்கலாம்.

ஆக, மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட காவலர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இவ்வாறாக முக்கியப் பிரமுகர் பாதுகாப்பையே பிரதானமாக கொண்டு செயல்படுத்தப்படுவதால், மக்களை பாதுகாக்கும் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு. காவலர்கள் எண்ணிக்கை குறையும்போது, குற்றச்செயல்கள் அதிகரிக்கவே செய்யும்.

எனவே, அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கு அவரது முன்புறமும்,பின்புறமும், வலது மற்றும் இடது புறமும் அணிவகுக்கும் ஆயுதம் ஏந்திய நான்கு காவலர்கள் மட்டுமே அரசின் செலவில் வழங்கப்பட வேண்டும். அதையும் தாண்டி  ஒருவர் தனக்கு பாதுகாப்பு தேவை என அவர் கருதினால், அவர் கூடுதலாக கேட்கும் காவலர்களுக்குரிய ஊதியம் உள்ளிட்ட அத்துணை செலவினங்களையும் சம்மந்தப்பட்ட பிரமுகரே ஏற்கவேண்டும். இல்லையேல் அவர் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறாக  சட்டம் கொண்டுவந்தால்தான் மக்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலர்கள் கிடைப்பதோடு, மக்களின்  வரிப்பணமும் மிச்சமாகும்.

இல்லையேல், வார்டு கவுன்சிலர் கூட 'இசட்பிளஸ்' பாதுகாப்பு கேட்கும் நிலை உருவாகும். இங்கே இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமது வெளியுறவுக் கொள்கையினால் உலகமெங்கும் எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் அமெரிக்காவின் அதிபராக உள்ள ஒபாமா கூட, பல நேரங்களில் எவ்வித பாதுகாப்பு  அதிகாரிகள் துணையின்றி, சர்ச்சுக்கும் மார்க்கெட்டிற்கும் சகஜமாக  சென்றுவருவதை பத்திரிக்கையில்  பார்க்கிறோம். ஆனால் நம்முடைய தலைவர்களுக்கோ பாத்ரூம் போனாலும் பாதுகாப்பு வேணும் என்று சொல்லும் நிலைதான்  உள்ளது.

இந்த நேரத்தில் அகிலத்தின் அருட்கொடையாக, அல்லாஹ்வின் திருத்தூதராக, அரபுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த முஹம்மத்[ஸல்] அவர்கள் வாழ்கையை நாம்  இவர்களுக்கு முன்வைக்கிறோம்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;.


நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள், 'இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், 'என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார் ?' என்று கேட்டார். நான் 'அல்லாஹ்' என்று (மூன்று முறை) கூறினேன்" என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை. [நூல்;புஹாரி எண் 2910 ]

நபியவர்களின் இந்த செய்தியிலிருந்து கடவுளை நம்பாமல், காவலர்களையும், ஆயுதங்களையுமே தன்னுடைய பாதுகாவலர்களாக கருதும் பிரமுகர்களுக்கு மிகப்பெரிய படிப்பினை உள்ளது. அரபுலகத்தின் மன்னர் முஹம்மது[ஸல்] அவர்கள்,
  • தனக்கென ஒரு பாதுகாப்பு படையை வைத்திருக்கவில்லை.
  • போர் செய்துவிட்டு திரும்பியுள்ள நிலையில், எதிரிகள் தாக்கக்கூடும்  என்ற நிலையிலும் தனியாக ஓய்வெடுக்கும் துணிவு.
  • அப்படி ஓய்வெடுக்கும் போதும் தனது வாளை மரத்தில் தொங்கவிட்டுவிட்டு சகஜமாக உறங்கும் துணிவு.
  • எதிரி,  வாளை எடுத்துக்கொண்டு, உம்மை என்னிடமிருந்து காப்பவர் யார்..? என கர்ஜித்தபோது, பதறி தனது தோழர்களை துணைக்கு அழைக்காத வீரம்.
  • என்னுடைய இறைவன் அல்லாஹ் என்னை பாதுகாப்பான் என்று சாந்தமாக சொன்ன வார்த்தைகள்.
இவையாவும் எதை  உணர்த்துகிறது. நம்முடைய வாழ்க்கையின் நாட்கள் அல்லாஹ்வால் குறிக்கப்பட்டுவிட்டது. அந்த நாள்வரும்வரை நாம் படையோடு இருந்தாலும், தனியாக இருந்தாலும் எவரும் ஒன்றும் செய்யமுடியாது. அதே நேரத்தில் எத்துனை பெரிய படை பட்டாளத்தின் பாதுகாப்போடு இருந்தாலும், அந்த நேரம் வந்துவிட்டால் அதாவது நம்முடைய உயிர் போகும் நேரம் வந்துவிட்டால், எந்த படையாலும் நம்மை தடுத்திட முடியாது. இதற்கு சான்றாக கூட,

மெய்க்காப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களை கூறலாம். அவர் நினைத்திருப்பாரா இவ்வாறு நடக்கும் என்று. அங்குதான் இறைவனின் விதி தனது பணியை செய்கிறது. எனவே 40 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவனும் அதிசயமாக பிழைத்திருக்கிறான்; புல் தடுக்கி விழுந்தவனும் அதிசயமாக செத்திருகிறான். இதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி!

வியாழன், 9 செப்டம்பர், 2010

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள்!



ஒழுங்காக பல் துலக்கவேண்டும். இல்லையேல் வாயில்  துர்நாற்றம்  ஏற்படுத்தி பல் வழியை உண்டாக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒழுங்காக பல் துலக்காவிட்டால், வாயில் பாக்டீரியாக்கள் ஏற்பட்டு இதயநோயை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் அயர்லாந்து ராயல் அறுவைச்சிகிச்சை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். சரிவர பல் துலக்காதவர்களின் வாயில் ஸ்டெப்ரோ காகங் என்ற பாக்டீரியா உருவாகிறது. அது ஈறுகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அதன் வழியாக ரத்தத்தில் கலக்கிறது.
பின்னர் ரத்தத்தை உறையவைத்து மாரடைப்பு போன்ற இதய சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது என கண்டறிந்துள்ளனர். ஆகவே இதய நோயிலிருந்து தப்பிக்க ஒழுங்காக பல் துலக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய பல் துலக்குதலை அன்றே வலியுறுத்தியுள்ளது வல்ல நாயனின் மார்க்கமான இஸ்லாம்;
ஒவ்வொரு தொழுகைக்கும்;
  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

"என் சமுதாயத்திற்குச் சிரமமாகி  விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்." [புஹாரி எண் 887 ]

ஜும்மா நாளன்று;
  • அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;.

"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். [புஹாரி எண் 880 ]

உறங்கி விழித்தவுடன்;
  • ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.[புஹாரி எண் 1136 ]

இறக்கும் தருவாயிலும்;
  • ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறை வரும்) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) இறந்தார்கள். (அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் நோயுற்றுவிடும்போது பிரார்த்தனையின் மூலம் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவது வழக்கம். (அவ்வாறே இம்முறையும்) நான் அவர்களுக்காகப் பிரார்த்தித்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிக்கொண்டே சென்றேன். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, '(இறைவா!) சொர்க்கத்தில் உயர்ந்த தோழர்களடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று பிரார்த்தித்தார்கள். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) தம் கரத்தில் பச்சைப் பேரீச்ச மட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு (அப்பக்கமாகச்) சென்றார். நபி(ஸல்) அவர்கள் அவரைக் கூர்ந்து பார்க்கலானார்கள். அப்போது நான், அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று எண்ணி, அதை வாங்கி அதன் நுனியை மென்று, அதை உதறி நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் இதுவரை பல் துலக்கியதிலேயே மிக அழகான முறையில் அதனால் பல் துலக்கினார்கள். பிறகு அதை என்னிடம் கொடுத்துவிட்டார்கள். பிறகு 'அவர்களின் கரம் விழுந்துவிட்டது' அல்லது 'அ(க்குச்சியான)து அவர்களின் கரத்திலிருந்து விழுந்துவிட்டது' இவ்விதம் நபி(ஸல்) அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் (அவர்களின்) உலக வாழ்வின் இறுதி நாளில், மறுமை வாழ்வின் முதல் நாளில் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். [புஹாரி எண் 4451 ]

பல் தூக்குவதை தூய்மைக்காக சிலர் செய்யலாம்; ஆனால் அதையும் மார்க்கத்தின் அமலாக்கி ஊக்கப்படுத்தி செய்யச்சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் முக்காலமும் அறிவியலாலும், ஆய்வாலும் மெய்ப்படுத்தப்படுகிறது.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

திருவிடைச்சேரி படுகொலை; கடும் நடவடிக்கை தேவை!

கொல்லப்பட்ட இரு முஸ்லிம்கள்

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரபரப்பாகும் திருவாரூர் மாவட்டம், இந்த தடவை அதற்கு முன்பாகவே பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.  வழக்கமாக பரபரப்பு உண்டாக்குபவர்கள் இந்துத்துவாக்கள்; ஆனால் இந்த முறையோ இஸ்லாமியர்கள்.

புனித மிகு ரமலான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு உள்ளாகவே, ரமலான்  எங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என காட்டியுள்ளனர் சில முஸ்லிம்கள். நோன்பு நோற்றிருக்கும் நிலையில் ஒருவன் வம்புக்கு வந்தால், 'நான் நோன்பாளி' என்று ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியை புறக்கணித்து, வாக்குவாதம்; கைகலப்பு; கொலை என அனைத்தையும் அரங்கேற்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு இழுக்கை ஏற்படுத்தித் தந்ததோடு,

எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.[புஹாரி] என்ற இறைத்தூதரின் பொன்மொழியை புறக்கணித்ததன் மூலம் , இன்று முஸ்லிம்களின் ரத்தத்தை ஓட்டச்செய்ததன் மூலம்  நிராகரிப்பாளர்களாய் மாறவும் துணிந்து விட்டனரோ..!


எதிரிகள் எம்மைக் கருவறுக்க கண்ணில் எண்ணைவிட்டுத் தேடிக்கொண்டிருக்க, அவனுக்கு ஓய்வளித்து என் கண்ணை நானே குத்திக் கொள்கிறேன்; என் உடம்பைப் போன்ற சகோதரனை நானே சவமாக்குகிறேன் என்று துணிந்து கொலை செய்து, முதன் முதலில் தனது சொந்த சகோதரனைக் கொன்று  கொலையை அறிமுகப்படுத்திய ஆதமுடைய மக்களில் ஆதிக் கொலைகாரனாக அவதாரமெடுத்து விட்டனரோ..!

கொலைக்கு யார் காரணம்; என்ன காரணம் என்பதில் ஆளுக்கொரு கருத்து அவனியில் ஆளுமை கொண்டாலும், இறையில்லத்தை விட்டுவிட்டு, வெறும் இல்லத்தை தொழுகையிடமாக கொண்டதுதான் பிரச்சினைக்கு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். சில ஆண்டுகளுக்கு முன்னால்வரை, 'அவர்கள் அடித்தாலும்; நம்மை  தடுத்தாலும்; சஜ்தாவில் இருக்கும் போது நம்மை  குண்டுக் கட்டாக தூக்கி வெளியே போட்டாலும், மீண்டும் செல்வோம் அப்பள்ளிக்கு; மீட்டுவோம் நபிவழியில்; என்றல்லாம் சொன்ன நாம், இன்று அவை 'பித்அத்' அரங்கேறும் பள்ளிகள்; அவை இறையச்சத்தின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. எனவே நாம் முடிந்தால் எழுப்புவோம் தனிப் பள்ளி; இல்லையேல்  இயங்குவோம் இல்லத்தின் மாடியில் என்று கிளம்பியதன் விளைவு திருவிடைச்சேரியின் ரத்த ஓட்டம். எனவே முதலில் அறிஞர்கள் ஒன்று கூடி  அவசியமாக, அவசரமாக அலசவேண்டிய பிரச்சினை 'தனிப் பள்ளி அவசியமா என்பதே!

கொலையாளி சரணடைந்திருக்கிறார். அவர் 'தற்காப்புக்காகத்தான்'  சுட்டார் என்று கொலையாளிகளை தற்காக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்க தக்கதாகும். தற்காப்புக்காக சுட்டாரா..? அல்லது தறுதலையாகி சுட்டாரா என்பதை சட்டம் தீர்மானிக்கட்டும். மேலும் கொலைக்கு காரணமானவர்  'இயக்க'மானவரா.? அல்லது 'இயக்க'மற்றவரா என்பதையும் சட்டம் தீர்மானிக்கட்டும். ஆனால் அப்பாவி இஸ்லாமானவர் கொல்லப்பட்டதை  வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், கொல்லப்பட்டவர்களில் தனது கட்சி கிளைச் செயலாளரின் மைத்துனரும் ஒருவர் என்பதால், அதிமுக பொதுச்செயலாளர் இந்த படுகொலையை வன்மையாக கண்டித்திருக்கிறார். கொல்லப்பட்டவர் எந்த மதமென்று ஜெயலலிதா பார்க்கவில்லை; ஆனால் தனது கட்சிக்காரர் என்றவுடன் கண்டிக்க முன்வருகிறார். ஜெயலலிதாவின் இந்ந்த மனப்பக்குவம் கூட எமது இயக்கத் தலைவர்களுக்கு இல்லை என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. நாமறிந்தவரை இக்கொலையை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது தமுமுக மட்டுமே.

மேலும் இறந்தவர்களின் எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! இறந்தவரின் குடும்பத்தினருக்கு பொறுமையைத் தந்தருள்வானாக!! அவர்கள் இழந்ததைவிட சிறந்தததை அவர்களுக்கு பரிசளிப்பானாக!! இன்னுமொரு 'திருவிடைச்சேரி'  பயங்கரம் திருமார்க்கத்தின் பெயரால் நடந்திடாமல் பாதுகாத்திடுவானாக!!

வியாழன், 2 செப்டம்பர், 2010

முஸ்லிம் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி....?

பள்ளிகள் மற்றும்  கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் வேடம்புனைந்து வருமாறு மாணவமணிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடும். அத்தகைய நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ-மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை  நிகழ்ச்சியில் பங்கெடுப்பதைக்  காண்கிறோம்.

இதை ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகத் தான்  சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியரும்  அவர்களின் முஸ்லிம் பெற்றோரும் பார்க்கிறார்களேயன்றி, அவற்றை மார்க்கத்தோடு  ஒப்பிட்டு பார்ப்பதில்லை. பெற்றோரின் இத்தகைய 'கண்டுகொள்ளாமை'  பின்னாளில், நாங்கள்  இருப்பதோ  இஸ்லாம் மதம்;  ஆனால் எம்மதமும் எங்களுக்கு  சம்மதமே' என்ற மனநிலைக்கு பிள்ளைகளை கொண்டுவந்துவிடுகின்றது. எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது.

ஒரு மண்பாண்டம் செய்பவர் தனது கையில் உள்ள மண்ணை என்ன கோணத்தில் வடிக்க நினைக்கிறாரோ அந்த கோணத்தில் வடிக்கிறார். அதுபோலவே ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட காலம் வரை பெற்றோர் கையில் இருக்கும் பச்சை மண் போன்றதுதான்; அதை பெற்றோர் நினைக்கும் வடிவில் உருவாக்கலாம். இதைத்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தெளிவாக கூறினார்கள்;

ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டும் திருப்பி,) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப், பிறகு, 'எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில், (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது' எனும் (திருக்குர்ஆன் 30:30 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

நூல்;புஹாரி எண் 4775

இறைத்தூதரின் இந்த பொன்மொழி எந்த அளவிற்கு சத்தியமானவை என்பதை நாம் நடைமுறையில் கண்டுவருகிறோம். இந்துக்களால் கடவுள் என கருதப்படும் கிருஷ்ணன் என்பவரது ஜெயந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதையொட்டி நடந்த நிகச்சிக்காக தனது பிள்ளையை கிருஷ்ணராக வேடமிட்டு, ஒரு முஸ்லிம் தாய் அழைத்து செல்வதை கீழே  உள்ள படத்தில் பார்க்கிறோம்.  இது போன்று அந்த தாய்  செய்வதற்கு அவரது மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால் தான் முழுமையான  பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதியதுதான்.

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

'யார் பிற சமுதாயக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே!

எனவே,அன்பான முஸ்லிம் சமுதாயமே! நாம் நம்முடைய ஒவ்வொரு அசைவையும்  இஸ்லாத்தோடு உரசிப்பார்ப்போம். இறைவனின் அன்பைப் பெறுவோம்.
படம் நன்றி;தினமணி

புதன், 1 செப்டம்பர், 2010

குறைந்துவிட்ட ஆடையும் , நெருங்கிவிட்ட மறுமையும் .....!..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

பாவிகளைத் தவிர இந்த தலைப்பு "இறையச்சம்" உள்ளவர்களுக்கு மென்மேலும் இறையச்சம் உண்டாக்கி பாவங்களை விட்டு தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை .


நபி ஸல் அவர்கள், உலக அழிவு நாளின் நெருக்கத்தில் பெண்களின் மூலமாக இந்த சமுதாயத்தில் நிகழும் "சமூக ஒழுக்க சீர்கேடுகளை" குறித்து எச்சரிக்கை செய்தார்கள். அதில் ஒன்றுதான் ஆடை குறைப்பு, அன்று அவர்கள் சொன்னது இன்று பெண்களால் கச்சிதமாக அரங்கேற்றப்படுவதை காணும்பொழுது நம்மை நெருங்கிவிட்ட மருமையை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது.. ஆயினும் நம்மில் பலர் இது குறித்து கவலை கொள்ளாதது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.


அறியாமைகால "யூத கிறித்துவ " அநாகரீகங்களை நாகரீகம் என்று செய்து வரும் பெண்களில், நமது பெண்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர், என்று என்னும் பொழுது வெட்க்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. .இதுகுறித்து நமது பெண்களை அச்சமூட்டுவதும், எச்சரிக்கை செய்வதும் காலத்தின்கட்டாயம் என கருதுகிறேன்.


குறைந்துவிட்ட ஆடை:



இன்று ஆடைகளை மேலே குறைத்துக்கொள்வதும், கீழே குறைத்துக்கொள்வதும், நாகரீகம் ஆகிவிட்டது. இது போதாது என்று இறுக்கியும் கொள்கின்றனர். அது உண்டாக்கும் விளைவுகளை குறித்து யாரும் கவலை கொள்வது கிடையாது. அரசும் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிப்பதும் கிடையாது. மாறாக, இதனால் பாலுணர்வு தூண்டப்பட்டு, லேசாக தடுமாறும் ஆண்களைத்தான் "ஈவ்டீசிங்" என்ற பெயரில் கொண்டுபோய் குமுறு, குமுறு என்று குமுறுகின்றனர். அதற்க்கு காரணமானவர்களை விட்டுவிடுகின்றனர். காமத்தை கலையாகவும், ஆபாசத்தை ஆன்மிகமாகவும்,கொண்ட நாடும் அதைச்சார்ந்த அரசும் வேண்டுமானால் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிக்காமல் இருக்கலாம். ஆனால் ஆபாசத்தை ஆபாசமாகவே பார்க்கவேண்டும் என்று கருதக்கூடிய, அதை கண்டிக்கக்கூடிய இஸ்லாத்தை, கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம் நாடுகளிலேயே இந்தகூத்துக்கள் அரங்கேருவதுதான் வேதனையிலும் வேதனை.



பாலுனர்வைதூண்டுதல்:



ஆடைகளை இறுக்கியும், குறைத்தும் அணிவதால் மறையவேண்டிய பகுதிகள் மறையாமலும், இறுக்கத்தினால் உடலுறுப்புக்கள் நெறிக்கப்பட்டு, பெண்ணிடம் பாலுணர்வை தூண்டக்கூடிய கனபரிமாணங்கள் மெருகூட்டப்பட்டு, கவர்ச்சியின் விளிம்பிற்கே சென்று, ஆண்களின் கண்களையும், சிந்தனையையும் தன்பக்கம் ஈர்த்துவிடுகிறது. சில ஆண்கள் தங்களின் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் வரம்பு மீறும் சூழ்நிலை ஏற்படுகிறது. .இதனால் பாதிப்பு என்னவோ இரு தரப்பினருக்கும் தான். இருந்தாலும் அனேக ஆண்கள் கூச்ச உணர்வின் காரணத்தால் தலைகுனிந்து விடுவதையும் காணமுடிகிறது. ஆண்களுக்கு இருக்கும் இந்த வெட்க்க உணர்வும் பெண்களிடத்தில் இல்லாமல் போனது ஏனோ?

.

திரைஅரங்குகளிலும்,தொலைக்காட்சிகளிலும்,இணையதலங்களிலுமே ஆபாசத்தை கண்டு பிஞ்சிலேயே பழுத்துவிட்ட சிறுவர்கள், திரைகளே இல்லாமல் live ல் காணும் பொழுது, மென்மேலும் கெட்டு நாசம் அடைகின்றனர். காதல் கத்திரிக்காய் என்று சிறுவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கிறது. இளைய சமுதாயமே சீரழிந்து வருகிறது



ஆடை எந்த நோக்கத்திற்காக அணியப்படுகிறதோ,அந்த நோக்கம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு,குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டத்தையும் காணமுடிகிறது. மறையவேண்டிய மர்ம உறுப்புக்கள்,மறையாததாலும், பாலுணர்வை தூண்டுவதாலும் ,இப்படிப்பட்ட ஆடைகள் ஆடைகளே அல்ல,மாறாக இத்தகைய ஆடைகளை அணிந்திருக்கும் பெண்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருபப்வர்களைப் போன்றவர்கள் என்பதுதான் உண்மை.

குறைத்து அணிந்தாலே போதும் என்ற நிலையில் இருக்கும் ஆண்களே கூடுதலாக உடையணிந்து கண்ணியமாக இருக்கும்போது கூடுதல் ஆடையனியவேண்டிய பெண்கள் குறைத்து அணிவது எந்தவகையில் ஏற்புடையதாகும்.இப்படிப்பட்ட கழிசெடைகளைப்பற்றிதான் நபி ஸல் அவர்கள்,உலக அழிவு நாளின் அடையாளமாக பின்வருமாறு கூறுகிறார்கள்.



ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம்]



அன்று நபி ஸல் அவர்கள் சொன்ன இந்த நிகழ்வு , இன்று நாம் காணும் பொழுது நம்மை நெருங்கிவிட்ட மறுமையின் நெருக்கம் உறுதியாகிறது.



இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு:



ஒழுக்கத்திலும்,பண்பாட்டிலும்,மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும்,முதுகெலும்பாகவும் இருக்கவேண்டிய நமது பெண்கள் ஆபாச யூத,கிருத்துவ கலாச்சாரத்தில் மூழ்கி,அவர்களையே மிஞ்சிவிடும் அளவுக்கு சென்றுக்கொண்டிருக்கின்றனர்.குறிப்பாக செல்வம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த அவல நிலையைக் காணலாம். நமது அரபு பெண்களின் அட்டுழியங்களும்,மார்க்கமுரனான காரியங்களையும் சொல்லிமாளாது. இறுக்கமான பேன்ட்டும்,இறுக்கமான பனியன்களும்,அணிந்துக்கொண்டு மார்புகள்மீது துணியே(கூடுதல்) இல்லாமல் இரு விரல்களுக்கு இடையில் சிகரெட் வைத்துக்கொண்டு கூத்தடிப்பதும்,கும்மாளம் அடிப்பதும் காணும் பொழுது நபி ஸல் அவர்கள் உருவாக்கிய அந்த அரபு சமூதாயம் எங்கே?என்று என்ன தோன்றுகிறது.



இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்பைத்தேடி செல்லும் நமது பெண்மணிகளும் இவர்களுடைய இந்த நாகரீகத்தில்[?] தடம்புரண்டு தாவிவிடுகின்றனர்.இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று அலசுவோமேயானால் இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு அறவே எடுபட்டுபோனதுதான்.

நமது தந்தை ஆதம் நபி (அலை)அவர்களிடமும்,தாய் ஹவ்வா (அலை) அவர்களிடமும் இருந்த வெட்கம் குறித்து இறைவன் கூறும்பொழுது....



இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.[7:22]



நபி ஆதம்(அலை)அவர்களும்,அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால்,ஏக இறைவனால் தடை செய்யப்பட்ட குறப்பிட்ட மரத்தின் கனியை சுவைத்ததால் தங்களுக்கு வெட்கத்தலங்கள் ஏற்பட்டதை உணர்ந்தனர்.உடனே வெட்க்க உணர்வின் காரணத்தால் அங்குள்ள மரத்தின் இலைகளால் மர்ம உறுப்புக்களை மறைத்துக்கொள்ள முற்ப்பட்டனர் என்று இறைவன் கூறுகிறான்.



ஆபாசம் தொடர்பான சட்ட திட்டங்களை இறைவன் கூறுவதற்கு முன்பே அது தொடர்பான உணர்வு அவர்களிடத்தில் இருந்திருக்கிறது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியமுடிகிறது. ஆனால் இன்றுள்ள நமது பெண்கள், இறைவன் கூறிய ஆபாசம் குறித்த சட்ட திட்டங்களை தெளிவாக அறிந்தபிறகும் அதில் மேம்ப்போக்கான நிலையில் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.



நபி ஸல் அவர்களும் வெட்க்க உணர்வின் அவசியத்தையும்,முக்கியத்துவத்தையும் இறையச்சத்தோடு தொடர்புபடுத்தி பின்வருமாறு கூறுகிறார்கள்:



'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' நூல்; புஹாரி,எண் 9 .



'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.



வெட்கத்தை இறை நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி கூறியுள்ளதால் வெட்கத்தில் குறை வைப்போமேயானால் அது இறை நம்பிக்கையில் குறையை ஏற்ப்படுத்தும்.எனவே இறை நம்பிக்கை முழுமையடையாமல் போய்விடும்.ஆகவே வெட்க்கவிஷயத்தில் பெண்கள் கவனமாகவும் பேணுதலாக இருக்கவேண்டும்.



வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த ஆயுதம் என்றும் சொல்லலாம்.இந்த ஆயுதத்தை பெண்கள் பேணுதலாக பயன்படுத்தினாலே அவர்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களை குறைத்துவிடலாம். எஞ்சியவைகளை வேறு வழிகளில் ஒழித்து விடலாம்.


அன்றைய பெண்களும் இறையச்சத்துடன் கூடிய வெட்க உணர்வும்:



அன்றைய பெண்களிடம் இருந்த வெட்க்க உணர்வையும்,இறையச்சத்தையும்,அறிந்து கொள்வதற்கு முன் அது தொடர்பான சில உண்மைகளை அறிந்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.



நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் ,(ஏனைய சஹாபி பெண்களும்) தனது சுய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொழுது சாதாரண உடையிலேயே செல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.அந்நிய ஆண்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஆடைகள் போதாது என்ற காரணத்தினால்,கூடுதல் ஆடை அணிவதை வலியுறித்தி,உமர் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். நபி ஸல் இதை கண்டுக்கொள்ளவில்லை.ஒரு தடவை நபி ஸல் அவர்களின் மனைவிகளில் ஒருவரான சவ்தா (ரலி) ஓர் இரவு நேரத்தில் கழிப்பிடம் நாடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இவர்களின் உயரத்தை வைத்து, இறைதூதரின் மனைவிதான்(இறைதூதர் மனைவியரிலேய அவர்தான் உயரமானவர்கள்) என்பதை அறிந்துக்கொண்ட உமர் அவர்கள், சவ்தா அவர்களே! நீங்கள் யாரென கண்டுகொண்டோம் என்று உரத்த குரலில் அழைத்துள்ளார். அப்பொழுதாவது கூடுதல் உடை அணிவது தொடர்பான சட்டம் அருளப்படாதா என்ற ஆசையில் !அப்பொழுதான் பின்வரும் இறைவசனம் இறங்கியது.



وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاء بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاء بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ



இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31 ]



ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி புஹாரியில் (பாகம் 1, அத்தியாயம் 4, எண் 146 ) பதிவு செய்யப்பட்டுள்ளது.



இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்;. எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும். (4:13)


எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (4:14)



ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (4:124)



இறைவனுக்கும்,அவனது தூதருக்கும்,எவர் மாறு செய்கிறார்களோ!அவர்களின் நிலை குறித்தும்,எவர் கட்டுப்படுகிறார்களோ அவர்களின் நிலை குறித்தும் மேற்கூறிய வசனத்தில் இறைவன் தெளிவு படுத்திவிட்டான்.எனவே ஆடை குறித்த சட்டத்தை பின்பற்றி, அவனுக்கு(இறைவனுக்கு)கட்டுப்பட்டும்,நபிஸல் அவர்கள் வலியுறுத்திய இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வை பின்பற்றி, நபிஸல் அவர்களுக்கு கட்டுப்பட்டும் வாழ்வதன் மூலம் நம் சமூதாய பெண்கள் மறுமை வெற்றிக்கு வழி செய்து கொள்ள வேண்டும்.



இறையச்சமுள்ளவர்களுக்கு இதுவே போதுமானதாகும்.



ஆக்கம்; முபாரக். துணைச்செயலாளர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நரகிலிருந்து புனித ரமளானில் பாதுகாப்புத் தேடுவோம்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்தின் அருட்கொடை நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
புனிதமிக்க ரமலானின் இறுதிக் காலகட்டத்தை அடைந்துள்ளோம். ஆயிரம் மாதங்களைவிட சிறந்த லைலத்துல் கதர் எனும் சிறப்புமிக்க இரவை தாங்கி வரும் இந்த இறுதிப் பத்தில், இறைவன் நிராகரிப்பாளர்களுக்காகவும்-இணைவைப்பாளர்களுக்காகவும்-பாவிகளுக்ககவும் சித்தப்படுத்தியுள்ள நரகத்திலிருந்து பாதுகாப்புப்பெற எஞ்சியுள்ள புனித ரமலானை நாம் பயன்படுத்த முன்வரவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக அமல்களை கொண்டு அழகுபடுத்த வேண்டிய இந்த நாட்களை, அழகான ஆடைகள் எடுப்பதிலும், அழகுசாதன பொருட்களை வாங்குவதிலும், வீட்டை அழகுபடுத்துவதிலும் சமுதாய மக்கள்  கூடுதல் கவனம் செலுத்துவதை பார்க்கிறோம். இதற்கு காரணம் நரகம் எவ்வளவு கடுமையானது என்பதை அறியாமலிருப்பதுதான். இன்னும் சிலர் நரகத்தை வேடிக்கையாககருதுவதையும் பார்க்கிறோம்.

சமீபத்தில் ஒரு அறிஞர் தலைமை தாங்கிய இஸ்லாமிய பட்டிமன்றம் பார்த்தோம். அதில் நகைச்சுவைக்காக சுவனத்தையும்-நரகத்தையும் பற்றி ஒருதம்பதியர் சம்பாஷணையில் இப்படி வர்ணிக்கிறார்

கணவன்;[மனைவியிடம்] அடியே! மவ்த்துக்கு பின்னால், நீ சொர்க்கத்துக்கு செல்வாயா? நரகத்துக்கு செல்வாயா?

மனைவி; நான் சொர்க்கத்துக்குத்தான் செல்வேன் என்று சொல்லிவிட்டு, கணவனை நோக்கி; நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்களா? நரகத்திற்கு செல்வீர்களா?

கணவன்; நான் நரகத்திற்குத்தான் செல்வேன் ஏனெனில், நீ போன பின்னாடி சொர்க்கம் சொர்க்கமாவாஇருக்கும்?

மனைவி; அப்ப நானும் நரகத்திற்கு வருவேன்.

கணவன்; என்மீது உனக்கு அவ்வளவு பாசமா?

மனைவி; பாசமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. நீங்கள் நரகில் படும் வேதனையை நான் பார்த்து ரசிக்கத்தான்..!


இப்படியாக நகைச்சுவை என்ற பெயரில் சொர்க்கம்-நரகை பற்றி ஏளனமாக வர்ணிக்கிறார். இவர் மட்டுமல்ல சமுதாயத்தில் பெரும்பாலோர் நரகின் வேதனை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. காரணம் நரகத்தின் வேதனைகளை தெளிவாக அறியாததினால்தான். நரகத்தின் வேதனையை பற்றி வர்ணித்தால் அது பல பக்கங்களை எட்டும். எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, நரகின் கடுமையை அறிய ஒரே ஒரு பொன்மொழி;


அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், 'அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்' என்று சொல்ல கேட்டேன்.[புஹாரி]



மிக குறைவான தண்டனையை அனுபவிக்கும்  அபூதாலிப் அவர்களின் மூளைகொதிக்கும் என்றால், அதிகப்படியான தண்டனை பெறுபவர்களின் நிலை என்ன என்பதை யோசித்து பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட நரகிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இந்த இறுதிப்பத்தில் செய்யவேண்டியவைகள்;


லைலத்துல் கத்ரை தேடுதல்;

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (97:1)
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (97:2)
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். (97:3)
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். (97:4)
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:5)




ஒரு இரவில் நாம் நின்று வணங்குவதன் மூலம் ஆயிரம் மாதத்திற்கும் மேலாக வணங்கிய நன்மையை வாரித்தரும் இரவுதான் லைலத்துல் கதர் இரவு. இந்த இரவு எப்போது என்று நபி[ஸல்] அவர்கள் அறுதியிட்டுக்கூறாமல், ரமலானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.


அந்த இரவு நோன்பு 21 -23 -25 -27 -29 ஆகியவற்றில் எதாவது ஒரு இரவில் இருக்கலாம். இத்தகைய சிறப்புவாய்ந்த இரவின் அமலை கெடுக்கும் வகையில் சுன்னத்ஜமாத் என்று தங்களை கூறிக்கொள்வோர் நோன்பு 27 அன்றுதான் லைலத்துல் கத்ர் என்று தீர்மானமாக முடிவு செய்து அமல் செய்வதை பார்க்கிறோம்.
ஒருவேளை அன்று லைலத்துல் கத்ர் இல்லாமல் முந்திய-அல்லது பிந்தைய நாளில் இருந்தால் என்னாகும் என்ற அச்சம் இவர்களுக்கு இல்லை. எனவே இவர்கள் பேச்சை கேட்டு அமலை வீணாக்கிவிடாமல், நபி[ஸல்] அவர்களின் கூற்றுப்படி இறுதிப்பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேட முற்படவேண்டும்.


இறுதிப்பத்தில் நபி[ஸல்] அவர்களின் அமல்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!"
நூல்;புஹாரி எண் 2024 ]

முன்-பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நபி[ஸல்] அவர்களே இறுதிப்பத்தில் இல்லறத்தொடர்பு துறந்து இறைவனை வணங்குவதோடு-தமது குடும்பத்தாரையும் அல்லாஹ்வின் அருளைப்பெரும் அமல் செய்ய தூண்டுகிறார்கள் எனில், பாவங்களில் புரளும் நாம் எந்த அளவுக்கு இந்த இறுதிப்பத்தில் அமல் செய்யவேண்டும் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
'இஃதிகாப்' இருத்தல்;
ரமலானில் இறுதிப்பத்தில் நபி[ஸல்] அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள். இஃதிகாப் என்பது [அவசிய தேவைக்கன்றி] வெளியே வராமல் பள்ளிவாசலில் தங்கி அமல் செய்வதாகும். துரதிஷ்டவசமாக இந்த நபி வழியை பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் கூட செய்யத்தயாரில்லை. இனியேனும் இந்த நபி வழிக்கு உயிர்கொடுக்க முன்வரவேண்டும்.
பிரார்த்தனைகளை அதிகமாக்குவது;
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)[திர்மிதி]


எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த புனித ரமலான் மூலம் பாவங்களை விட்டும் தூரமாகி, அவனது அருளுக்குரிய நல்லடியார்களாக ஆக்கியருள்வானாக!

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்!

இன்னும் இரு தினங்களில் இந்தியாவின் 64 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது . சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் படு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில்,சுதந்திர தினத்தை முன்னிட்டு சில முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த மாதிரி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது சரியா என்றால், இல்லை என்பதுதான் சரியாகும். முஸ்லிம்களை பொறுத்தவரையில் கொண்டாடக்கூடிய திருநாள்கள் இரண்டுமட்டுமே!
1 . ஈகைத்திருநாள்.
2 .தியாகத்திருநாள்
.
இவையல்லாத எந்த ஒரு நாளையும் நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியதாகவோ, வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டதாகவோ ஹதீஸ்களில் காணமுடியாது. அவ்வளவு ஏன்! இதே சுதந்திரம் சம்மந்தப்பட்டதுதான் மக்கா வெற்றி. மக்காவிலிருந்து முஷ்ரிக்கீன்களின் தொல்லை காரணமாக மதீனா வந்த நபி[ஸல்] அவர்கள், சில ஆண்டுக்களில் மக்காவை நோக்கி படையுடன் புறப்பட்டு சென்று கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி மக்காவை, தன் சொந்த மண்ணை முஷ்ரிக்கீன்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்களே! அந்த புனித நகரம் சுதந்திரம் பெற்ற நாளை நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியது உண்டா? இல்லையே! நாட்டை நேசிப்பதை காட்டுவதற்காக சுதந்திரதினத்தை கொண்டாடுகிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு முஸ்லிம் முதன்முதலில் நேசிக்கவேன்டியது புனித பூமியான மக்கா அல்லவா? அப்படியாயின் மக்கா வெற்றி நாளை கொண்டாடாதது ஏன்? நாட்டை நேசிப்பது என்பது வெறுமனே வாழ்த்துகளை கூறுவதோ, அல்லது அன்றைய தினம் கிடைக்கும் விடுமுறையை அனுபவிப்பதோ, அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுதந்திரப்போராட்ட தியாகிகளான[?] கூத்த்தாடிகளின் நிகழ்ச்சிகளை ரசிப்பதோ அல்ல. மாறாக நாட்டை நேசிப்பது என்பது நாட்டிற்கு ஆபத்தென்றால் நாட்டை காப்பதில், நாட்டை சீரழிக்கும் தீமைகளை நாட்டிலிருந்து களைவதில் உறுதியாக முன்வருவதுதான் உண்மையான நேசமாகும்.அடுத்து இந்தியாவில் சுதந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும்- இஸ்லாம் வழங்கும் சுதந்திரத்தையும் பார்ப்போம்.

இந்தியக்கொடியில் மூவர்ணம் இருக்கும். அதாவது பச்சை-வெள்ளை-ஆரஞ்சு. இந்த கலர்கள் மும்மதத்தை குறிக்கும் என்று சிலர் கூற கேட்டதுண்டு. அதாவது பச்சை முஸ்லிம்களையும், வெள்ளை கிறிஸ்தவர்களையும், ஆரஞ்சு[காவி] இந்துக்களையும் குறிக்கும் என்று! இப்படி கொடியில் மும்மதமும் சமம் என்று காட்ட முற்படுபவர்கள் மும்மதத்தினரும் சமமான சுதந்திரத்துடன்தான் வாழ்கிறார்களா என்பதை கவனிக்க தவறிவிட்டனர்.

முதலாவது இந்து மதத்தை எடுத்துக்கொள்வோம். இந்து மதத்தை சார்ந்த ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டவர்களாக-தீண்டத்தகாதவர்களாக கருதுவதை பார்க்கிறோம். இவ்வாறு பிறப்பின் அடிப்படையில் தனது மதத்தை சார்ந்தவர்களையே பேதம் பார்க்கும் இந்த செயல் பாமரர்கள் மட்டுமன்றி படித்தவர்கள்- உயர் பதவி வகித்தவர்களிடம் கூட இருந்ததை நாம் கடந்த கால நிகழ்வுகளில் காணமுடியும். மத்திய அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருவர், காந்தியின் சிலையை திறந்துவைத்தார். இவர் திறந்துவைத்ததால் அந்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக ஒரு கூட்டம் கருதி கங்கை நீரை கொண்டுவந்து சிலையை கழுவியதாக நாம் அறிந்துள்ளோம். அவ்வளவு ஏன் ? தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும்- உயர்பதவிகளிலும் உயர்வான நிலையை அடைந்துவிட்டாலும், இன்னும் சமத்துவபுரங்கள் என்ற பெயரிலும், சேரி என்ற பெயரிலும் இவர்களை சமூகம் ஒதுக்கித்தானே வைத்துள்ளது. இதில் எங்கே வாழ்கிறது சுதந்திரம்?

இப்போது இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரம் பாரீர்;

'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள ) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.[புஹாரி எண் 30 ]

எந்த வித உரிமையும் இல்லாத அடிமையை நபித்தோழர் அபூதர்[ரலி] அவர்கள் திட்டியதற்காக, அபூதர்[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் கண்டிக்கிறார்கள். அன்றிலிருந்து அந்த அடிமையை தனது சகோதரன் போல பாவித்து தான் அணியும் ஆடை போன்றே தனது அடிமைக்கும் அணிவித்து மகிழும் அளவுக்கு அபூதர்[ரலி] அவர்களை மாற்றியது எது இஸ்லாம் அல்லவா? மனிதனுக்கு மத்தியில் ஏற்ற தாழ்வை நீக்கியது இஸ்லாமிய சுதந்திரமல்லவா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக கருப்பு நிற ஹபஷி அடிமையாக இருந்த பிலால்[ரலி] அவர்களை தனது காரியதரிசியாக-தோழராக- தொழுகைக்கு அழைக்கும் அழைப்பாளராக ஆக்கி, அங்கும் வர்ண பேதத்தை ஒழித்த நபி[ஸல்] அவர்கள் ஒரு முன்மாதிரியல்லவா?

அடுத்து கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிரார்களா? என்றால், சுதந்திரமாக அவர்கள் இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நியாயம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியார் தனது மூன்று பிள்ளைகளுடன் உயிரோடு இந்துத்துவாக்களால் கொளுத்தப்பட்டார். கொளுத்தியவனுக்கு 'தேச பக்தர்' என்று நற்சான்று அளித்தார் அன்றைய துணைப்பிரதமர். இன்றுவரை இந்த அநீதிக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளதா?

மும்பை-கோவை குண்டுவெடிப்பு குற்றங்களை செய்தார்கள் என்று முஸ்லிம்கள் சிலருக்கு தண்டனை கூட விதிக்கப்பட்டது. வரவேற்கிறோம். ஆனால், அதே மும்பை- கோவையில் முஸ்லிம்களை கருவறுத்த சங்க்பரிவார கும்பல் ஜாலியாக நடமாடுகிறதே இதுதான் இந்திய சுதந்திரம். குஜராத்தில் கோத்ரா ரயிலை எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டை கூறி பல நூறு முஸ்லிம்களை பொடாவில் தள்ளியது குஜராத் அரசு. அதே குஜராத்தில் சங்க்பரிவார கும்பலால் கற்பழிக்கப்பட்ட, உயிரோடு கொளுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்பட்டதா? இல்லையே! மாறாக பெயருக்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த சிலரையும் சமீபத்தில் கோர்ட் விடுதலை செய்கிறது. ஆக பட்டபகலில் பலபேர் சாட்சியாக முஸ்லிமை ஒருவன் கொன்றால் அவன் ஜாலியாக நடமாடலாம். அவனயோ சட்டம் ஒன்றும் செய்யாது இதுதானே இந்திய சுதந்திரம்! இப்போது நீதி விஷயத்தில் இஸ்லாமிய சுதந்திரத்தை பாருங்கள்;

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம் 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று (பதிலுக்கு) கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி) 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள்.[நூல்;புஹாரி]

இந்த செய்தியை நன்றாக பாருங்கள்; அடித்தவர் ஒரு முஸ்லிம் , அடிவாங்கியவர் ஒரு யூதர். வழக்கு நபி[ஸல்] அவர்களிடம் வந்தபோது, தன்னை உயர்த்திக்கூறி தானே யூதனை முஸ்லீம் அறைந்தார் என்று முஸ்லிமுக்கு நபியவர்கள் 'சப்போர்ட்' செய்யவில்லை. மாறாக யூதர் எந்த மூஸா நபியை சிறந்தவர் என்று சொன்னாரோ, அதே மூஸா நபியைவிட நான் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள் என்று தனது தோழருக்கு அதாவது முஸ்லிமுக்கு அறிவுரை வழங்கினார்கள் என்றால் இஸ்லாம், நீதி விசயத்தில் நீதியை மட்டுமே பார்க்குமேயன்றி சாதியை பார்க்காது இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.

காந்தி சொன்னார், ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியாக சுதந்திரமாக நடமாடும் நாளே உண்மையான சுதந்திர நாள் என்று! இன்று நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணக்கிலடங்குமா? கிரிமினல்கள்தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்றால் சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரில் சிலரும்-ராணுவத்தில் சிலரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை பார்க்கும்போது, எங்கே வாழ்கிறது சுதந்திரம்? நபி[ஸல்] காலத்தில் வழிப்பறி பற்றி புகார் கூறப்பட்டபோது வழிப்பறி செய்பவர்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கப்படும் என்ற தண்டனையை அறிவித்துவிட்டு நபி[ஸல்]சொன்னார்கள்; ஹீரா எனும் இடத்திலிருந்து கஃபா வரை ஒரு பெண் தன்னந்தனியாக பயணித்து அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் சென்றுவருவதை பார்பீர்கள் என்றார்கள்.[புஹாரி] அந்த நிலையை உருவாக்கியும் காட்டினார்கள். இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.

அட! இதையெல்லாம் விடுங்கள். சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக பிரதமரும்-முதல் அமைச்சரும் கொடியேற்ற முடிகிறதா? தமிழகத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் முதல்வர் கொடியேற்றுகிறார் எனில், சுதந்திரத்தை புரிந்து கொள்ளலாம். குவைத் போன்ற அரபு நாடுகள் சிலவற்றில் சுதந்திரதினம் கொண்டாடுகிறார்கள். இங்கு எந்த அடுக்கு பாதுகாப்பும் இல்லை எந்த பயமும் இல்லாமல் கொண்டாடுகிறார்கள். எனவே மக்களின் நிம்மதியான பயமற்ற வாழ்க்கை உறுதி செய்யப்பட்டு, அனைத்து மதத்தவரும் சமமாக பாவிக்கப்பட்டு, அனைவருக்கும் சமநீதி வழங்கப்படும் நாளே சுதந்திரதினம். அந்த நாளை எதிர்நோக்கி இறைவனிடம் கையேந்துவோம்.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

இருந்த நிம்மதியையும் பறித்த அவுலியா[!]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மரணித்து மண்ணோடு மக்கிப் போன மகான்[!]களுக்கு எந்த 'பவரும்' இல்லை என்பதற்கு ஏர்வாடியில் கரிக்கட்டையாகிப் போனவர்கள் சரித்திர சான்றாக இருந்து கொண்டிருக்க, அதையெல்லாம் புறந்தள்ளி 'இன்னும் கெடுவோம் என்ன பந்தயம்' என்ற ரீதியில் மக்களில் ஒரு சாரார் தர்காக்களை நோக்கி படையெடுப்பதை பார்க்கிறோம்.

இப்படித்தான், மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த கவுஸ் பாட்ஷா விபத்தில் இறந்துவிடுகிறார். கணவனை இழந்த ஒரு முஸ்லிம் பெண்மணி செய்யவேண்டியது என்ன..? பொறுமையை கைகொண்டு அதோடு, 'இறைவா! என்னிடமிருந்து எடுத்துக் கொண்டதை விட சிறந்ததை தந்தருள்வாயாக' என்று அல்லாஹ்விடம் துஆ செய்துவிட்டு அவனது ஆதரவை நாடி வாழ்க்கையை தொடர்ந்திருக்கவேண்டும். ஆனால் அப்பெண்ணோ கோரிப்பாளையம் தர்காவில் தனது பச்சிளம் பாலகனுடன் நிம்மதியை[!] நாடி தங்கியிருக்கிறார். அப்போது அதே தர்காவில் தங்கியிருந்த முஸ்லிம் மந்திரவாதி[!] அந்த பாலகனை கடத்திச்சென்று அதை துண்டு துண்டாக வெட்டி அதன் ரத்தத்தையும் குடித்துள்ளான் அந்த பாவி. இவ்வாறு செய்ததற்கு காரணம் கனவில் அசரீரி கேட்டதுதான் என்கிறான் இந்த பாவி.

மார்க்கம் அனுமதிக்காத இடத்தில் நிம்மதியை நாடி சென்ற பெண், தனது பாலகனை பறிகொடுத்து இருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியையும் இழந்து தவிக்கிறார். தன்னிடம் நிம்மதியை நாடி வந்த பெண்ணுக்கு நிம்மதியை தர முடிந்ததா இந்த அவுலியாவால்..? என்பதை அவுலியா பக்தர்கள் சிந்திக்கவேண்டும். எவ்வித பாதுகாப்பின்றி தன்னை மட்டுமே பாதுகாப்பாக கருதி தனது தளத்தில் தங்கிய அபலைப் பெண்ணின் பாலகனை 'நரபலி'யில் இருந்து பாதுகாக்க முடிந்ததா இந்த அவுலியாவால்..? பச்சிளம் பாலகனை இரக்கமின்றி கொல்லச்சொல்லும் அசரீரி ஒரு இறைநேசர் சொன்னதாக இருக்குமா..? ஷைத்தான் மட்டுமே இத்தகைய செயலை செய்யுமாறு தூண்டுவான். [நாம் கோரிப்பாளயத்தாரை ஷைத்தான் என்று சொல்லவில்லை] மார்க்கம் சொல்லாத இடத்தில் அமைதியோ, அருளோ நாடி சென்றால் இதுதான் நடக்கும் என்பதற்கு ஏர்வாடிக்கு அடுத்த சான்றாக இந்த சம்பவம் திகழ்கிறது. இத்தகைய முஸ்லிம்களின் பார்வைக்கு ஒரு வசனம்;



அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீமையை நாடினால், அவனிடமிருந்து உங்களை பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் [அதை தடுப்பவர் யார்?] அல்லாஹ்வையன்றி [வேறு யாரையும்] பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள் என்று [நபியே] நீர் கூறுவீராக.
[அல் குர்ஆன் 33 ;17 ]

அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக!

திங்கள், 12 ஏப்ரல், 2010

'கை'காட்டி ஜோசியம் பார்த்தேன்; கதை முடிவு சொல்லலியே...!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மனிதர்களில் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் தமது வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் ஆனாலும் சரி, ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி, ஒரு ஜோதிடனிடம் சென்று கையை கட்டியோ, அல்லது ஜாதகம் என்ற பெயரில் ஒரு புரோகிதன் குறித்துத் தந்த குறிப்பைக் காட்டியோ ஜோதிடம் பார்த்து அந்த ஜோதிடன் சொல்லும் அறிவுரைக்கேற்ப தமது அசைவுகளை அமைத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். புரோகிதர்கள்- சாமியார்கள்- ஜோதிடர்கள் என பல்வேறு பெயர்களில் உலவும் இவர்கள் வானிலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. நம்மை போன்று ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சராசரி மனிதன்தான் என்பதை இந்த ஜோசியப்பிரியர்கள் உணர்வதில்லை. நமது வருங்கால வாழ்வை கணித்து சொல்லும் ஜோசியனுக்கு அடுத்தநோடியில் அவனுக்கு என்ன நடக்கும் என்று கணிக்கத் தெரியாது இதுதான் எதார்த்தம். ஆனாலும் இந்த குறி சொல்லும் பார்ட்டிகளை நம்பி ஏமாறும் கூட்டத்திற்கோ பஞ்சமில்லை.


இப்படித்தான், சிங்கம்புணரி அருகே
உள்ள மருதிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு (வயது 65). இவரது மகன் ராஜா (20). இதே ஊரைச் சேர்ந்த நல்லையா மகன் அழகுராஜா (21). இவர்கள் 3 பேரும் ஜோதிடம் பார்ப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சிங்கம்புணரிக்கு வந்தனர். ஆகிய 3 பேரும் ஜோதிடம் பார்ப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். சிங்கம்புணரியில் ஜோதிடம் பார்த்து விட்டு அவர்கள் அதே மோட்டார் சைக்கிளில் மருதிப்பட்டிக்கு திரும்பிச்சென்று கொண்டு இருந்தனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் மருதிப்பட்டியை நெருங்கியபோது ஒரு வளைவில் திரும்பியது. அப்போது மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த மினி வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி எறியப்பட்டனர். இந்த சம்பவத்தில் அழகுவின் தந்தை ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அழகு மற்றும் அழகுராஜா ஆகியோர் படுகாயத்துடன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகு இறந்து விட்டார். அழகுராஜாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.[தினத்தந்தி]


ஜோதிடம் உண்மையென நம்பிச்சென்ற இந்த மும்மூர்த்திகளிடம், நீங்கள் திரும்பிச்செல்லும் வழியில் உங்களுக்கு விபத்து ஏற்படும். அதில் இருவர் மரணிப்பீர்கள். ஒருவருக்கு காயம் ஏற்படும் என்று ஜோசியனால் சொல்லமுடிந்ததா..? சொல்லமுடியாது. ஏனெனில் எந்த மனிதனுக்கும் அல்லாஹ் மறைவான ஞானத்தை வழங்கவில்லை. மறைவான ஞானம் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட உரிமையாகும். இதுபற்றி உலகப்பொது மறையாம் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்;


அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.[6:59 ]


நிச்சயமாக! அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.[31:34 ]


எனவே மனிதனை மனிதனாக மட்டும் பார்ப்போம். இனியும் அவனிடம் அதீத சக்தியுள்ளதாக நம்பும் மூடத்தனத்தை விட்டொழிப்போம். அதிலும் குறிப்பாக ஜோசியம் எனும் மூடத்தனத்தை நம்பும் முஸ்லிம்களுக்கு இதில் மிகப்பெரும் படிப்பினை உள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் பகுத்தறிவு மார்க்கமாம் இஸ்லாத்தை புரிந்து நடந்திட அருள்புரிவானாக!