அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நபி[ஸல்] அவர்களின் திருமணங்கள்; பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
நபி[ஸல்] அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளதை நாம் அறிவோம். இத்தனை திருமணங்கள் என்ன காரணத்திற்காக நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள் என்று அல்லாஹ் தனது வேதத்தில் கூறியிருக்க வேண்டும். [ஒரு திருமணம் நீங்கலாக] நபி[ஸல்] அவர்களின் வேறு திருமணங்களுக்கான காரணம் அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்படவில்லை. அடுத்து  சம்மந்தப்பட்ட நபி[ஸல்] அவர்களும் இத்தனை திருமணம் செய்ததற்கான காரணத்தை சொல்லவில்லை. ஆக குர்'ஆனிலும்-ஹதீஸிலும் இல்லாத சுய விளக்கம் தரமுயன்றால் அங்கே முரண்பாடு வரும் என்பதற்கு அறிஞர் பீஜே ஒரு அற்புத சான்றாக திகழ்கிறார். இவரது சுய விளக்கம் குர்'ஆன்- ஹதீஸோடு முரண்படுவது மட்டுமன்றி, இவருக்கு இவரே முரண்படுவதையும் நீங்கள் இப்போது படியுங்கள்;
 
நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் எழுதிய விளக்கத்தை அவரது தளத்தில் வெளியிட்டுள்ளார்  மவ்லவி பீஜே. பார்க்க;
அதில் நபி[ஸல்] அவர்கள்  ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் இதுதான் காரணம் என்று சொல்கிறார். அவரது சுய வியாக்கியானம் எந்த அளவுக்கு குர்'ஆன்- ஹதீஸோடு மோதுகிறது என்பதை முதலில் இங்கே முன்வைக்கிறோம்.
  • அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு பீஜே கூறியுள்ள  காரணம்;

அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள்.

ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.[புஹாரி எண்; எண் 5081 ]

அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற பீஜேயின் விளக்கத்திற்கு மாற்றமாக, நபி [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மேலும், நபி[ஸல்] அவர்கள், அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை பெண் கேட்டவுடன் அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர்[ரலி] என்று பீஜே கூறுவது ஹதீஸுக்கு முரணில்லையா..?

  • அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்து கொண்டதற்கு பீஜே கூறும் காரணம்;

 நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகளை  நபிகள் நாயகம்[ஸல்] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கும்  காரணம் என்கிறார் பீஜே.

ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ]

அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, பீஜே  கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி உமர்[ரலி] அவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மணம்  செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், பின்பு அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு பலப்படும் என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர்[ரலி] என்று பீஜே கூறுவது  ஹதீஸுக்கு முரணில்லையா..?

மேலும், மேற்கண்ட இரு திருமணங்களும்  நட்புக்காக நடந்தது என்று கூறி ஹதீஸுக்கு முரண்பட்ட பீஜே,  நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற தனது நூலில்,  ''நட்புக்காக அந்த திருமணங்கள் நடந்ததாக கூறுவது பொருந்தாத காரணம்'' என்று கூறி தனக்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;
 
 நட்பைப்  பலப்படுத்துவதற்கா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே  இஸ்லாத்தை  ஏற்றுகொண்ட  உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த  உறவை   பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபியவர்கள் சில திருமணங்களை  செய்ய வேண்டிய  நிலைக்கு  ஆளானார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் புதல்வி ஹப்ஸா (ரலி) ஆகியோரை  நபியவர்கள் திருமணம் செய்ததை  இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.
இந்தக் காரணமும் பொருந்தாக்  காரணேமயாகும். 
 
மேலும்,  திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே  இடைவெளி  எதுவுமிருக்கவில்லை.. இந்தத் திருமணங்கள்  நடந்திருந்தாலும் , நடக்காதிருந்தாலும்  அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை  எதிர்பார்க்காது தங்கள் தலைவராக  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை  நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.
இந்தக் காரணம் சரியென  வைத்துக் கொண்டாலும்  ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தி  வருமேயன்றி அனைத்து  திருமணங்களுக்கும் இது பொருந்தி வராது என்பதால் இந்தக் காரணத்தையும்  ஏற்க இயலாது
.
                                ***************************************
அன்பானவர்களே! விளக்கம் என்ற பெயரில் குர்'ஆனுக்கும்-ஹதீஸுக்கும் முரண்படுவது மட்டுமன்றி, தனக்குத் தானே முரண்படும் இவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நபி[ஸல்] அவர்களின் ஏனைய திருமணங்கள் பற்றிய இவரது வியாக்கியானங்களும்- முரண்பாடுகளும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: