அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

திருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும்.

بسم الله الرحمن الرحيم
குர்'ஆனும்-ஹதீஸும் மட்டுமே மார்க்கம் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த குர்'ஆனுக்கும்- ஹதீசுக்கும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கருத்தை விட, நபி[ஸல்] அவர்களின் நிழலாக வாழ்ந்த சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது  தவ்ஹீத் அறிஞர்களில் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. இவ்வாறு நபித்தோழர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கருத்துடையவர்களை வழிகேடர்கள் என்று விமர்சிக்கும் அறிஞர் பீஜே, அன்று திருக்குர்'ஆனை விளங்க நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும் என்ற கொள்கையில் இருந்துள்ளார் என்பதை கீழே படியுங்கள்;

''முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செய்த தீர்ப்புகள், சட்டங்கள் யாவுமே அவர்கள் தனது திருமறையில் திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளப்பட்டதற்கான காரணங்களைச் சொல்லும் போது அதனையே அவர்கள் முன் எழும் சட்டப்பிரசினைகளுக்கு அவர்களே விளக்கம் தரக் கடமைப்பட்டவர்கள் என்பதாகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.

"(நபியே!) மக்களுக்கிடையில் (எழும் பிரசினைகளுக்கு) அல்லாஹ் உமக்கு அறிவித்தவாறு நீர் தீர்ப்பளிக்க வேண்டுமென்பதற்காக, சத்தியத்தைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாகவே நாம் தான் உமக்கு அருளினோம் (4:105) (இந்த வேதத்திலிருந்து) மக்களுக்குச் சிறுக சிறுக அருளப் படுபவற்றிற்கு நீர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே உமக்கு நாம் இந்த நினைவூட்டும் வேதத்தை அருளினோம் (உமது விளக்கத்தின் மூலம் அதனை) அவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள்.

இதைத்தான், நபிக் நாயகம் (ஸல்) அவர்கள் "நான் திருக்குர்ஆனையும், அதனுடன் அதுபோன்ற (மதிப்பும் சிறப்பும் உடைய) வற்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்" என்றார்கள். திருக்குர்ஆன் போன்றது என்பதற்கு, "திருக்குர்ஆனின் விளக்கமாக அமைந்து விட்ட நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் என்றே அனைவரும் விளக்கம் தந்துள்ளனர். அதுவும் இறைவன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் தான் எனினும், திருக்குர்ஆன் ஓதி உணரப்பட வேண்டிய ஒன்றாகவும், அதனுடைய ஒரு காற்புள்ளி உட்படப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும், அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்குகள் குர்ஆன் அளவுக்கு சொல்லுக்கு சொல் பாதுகாக்கப்பட்டதில்லை. எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுடையவைதான் எனத் தெரிய வரும்போது பின்பற்றப்பட்டாக வேண்டியவையாகவும் திகழ்கின்றன.

மொத்தத்தில் திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை பெற முயல்வோர் திருக்குர்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது "முஆது(ரழி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று, இஜ்திஹாது என்ற சுயநிர்ணய ஆற்றல் மூலம் தெளிவுரை பெற முயல வேண்டம்.

திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இருபத்தி மூன்றாண்டு காலத்தில் அதனுடன் ஒட்டி உறவாடி, அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, நடந்து குர்ஆன் விரும்பும் இலட்சிய சமுதாயதாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம்(ஸல்)அவாகளின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும். அவர்களிலும் குறிப்பாக

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு பின், அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும். எனினும் இப்னு மஸ்ஊது(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் கூட "இஸ்ரவேலர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்" என்ற நபிமார்களின் அனுமதிகேற்ப, இஸ்ரவேலர்களிடமிருந்து வாழையடி வாழையாக வந்த கருத்துகளைத் தமது திருமறைத் தெளிவுரைகளில் கலந்துவிட்டிருக்கின்றனர்.

ஆயினும் அவற்றை, இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு ஒத்து வரும் போது அதற்கொரு சான்றாகக் கொள்ளலாமே தவிர, அதனையே தீர்ந்த முடிவாகவும், உறுதியாகவும் நம்பிட முடியாது.

இஸ்ரவேலர்களின் மூலம் அறிவிக்கப்படுபவை, அறிஞர்களால் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டிருக்கின்றன.

(1) குர்ஆன், நபிமொழி மூலம் அவை நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டவை.

(2) குர்ஆன் நபிமொழி மூலம் நம்பத்தகாதவை என்று நிரூபிக்கபட்டவை.

(3) இந்த இரண்டு வகைகளிலும் சேராத கதைகள், இவைகளை நாம் உண்மை என்றும் கூறத்தேவையில்லை. பொய் என்றும் அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை நபிகள்(ஸல்) அவர்கள் அனுமதித்து இருப்பதால் எடுத்துச் சொல்வதில் தவறில்லை. எனினும், ஒன்றை நிரூபிக்கும் ஆதாரமாக அவற்றைப் பயன்படுத்த முடியாது.

இவற்றில் பெரும்பாலான கதைகளில் எவ்வித மார்க்க நன்மையும் இல்லை. சுவையூட்டுவதாக தமது திருமறைத் தெளிவுரைகளில், இவற்றை எடுத்துச் சொல்வதின் மூலமே பெரும்பாலும் அவர்களின் தெளிவுரைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.

(கஹ்ஃபு) குகை என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளின் பெயர்கள், அவர்களுடன் சென்ற நாயின் நிறம், அவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், மூஸா(அலை) அவர்களிடமிருந்த கைத்தடி எந்த மரத்தில் ஆனது என்பதையும், இப்ாஹிம்(அலை) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லாஹ், உயிர்ப்பித்துக் காட்டிய நான்கு பறவைகள் எவை என்பதையும், அந்த நான்கு பறவைகளையும் அல்லாஹ் ஏன் தெரிவு செய்தான் என்பதற்குக் கட்டிவிடப்பட்ட கதைகளையும், மூஸா(அலை) அவர்களின் சமூகத்தவரில், ஒருவர் கொல்லப்பட, கொல்லப்பட்டவரை உயிர்ப்பிக்க ஒரு மாட்டை அறுத்து, அதன் உறுப்புகளில் ஒன்றால் அடித்ததும், அவர் உயிர் பெற்ற வரலாற்றில், எந்த உறுப்பில் கொல்லப்பட்டவன் அடிக்கப்பட்டான் என்பதையும், மூஸா(அலை) அல்லாஹ்விடம் உரையாடிய போது நின்று பேசிய மரம் எந்த மரம் என்பதையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டபடி குர்ஆனுக்கு "குர்ஆன் மூலம், நபிமொழி மூலம், ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். இவர்களில் பெரும்பாலோர் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களும் அவர்களின் மாணவர்களுமாவார்கள்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.

எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.

பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களின் திருமறைத் தெளிவுரைக்குத் தந்திருக்கின்ற முன்னுரையை உங்கள் முன் வைத்திருக்கிறோம்.

அவர்கள் தந்துள்ள விளக்கங்களுக்கு உட்பட்டு திருமறைத் தெளிவுரையை "நஜாத்" மாத இதழில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். வாசகர்கள் தொடர்ந்து அதனைப் படித்து வரும்போது "இன்ஷா அல்லாஹ்" திருமறையின் சரியான தெளிவுரையைப் பெறும் வாய்ப்பினை பெறுவார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பணியை அவனுக்காகவே துவக்கி அவனுக்காகவே முடித்து, அதற்கான நன்மையை மறுமையில் நமக்கு வழங்கிட அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.[ 1986 மே,by அந்நஜாத்]

அன்பு சகோதரர்களே! மேலே நீங்கள் படித்த விளக்கம் என்பது, அந்நஜாத்தில் திருக்குர்'ஆன் விரிவுரை எழுதிய காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், திருக்குர்'ஆனுக்கு விரிவிரை எழுத தொடங்குவதற்கு முன்பாக பிரபல மேதை இமாம் இப்னு கஸீர் அவர்களின் முன்னுரையை பதிவு செய்து, இமாம் இப்னு கஸீர் அவர்கள் எந்த வழிமுறையை காட்டினார்களோ அந்த வழிமுறையில் நான் திருக்குர்'ஆனுக்கு விரிவுரை எழுத இருக்கிறேன் என்று அறிஞர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் கூறுகிறார்கள்.

மேற்கண்ட செய்தியின் மூலம் திருக்குர்'ஆன் விரிவுரை எழுத விரும்பும் எவராகினும் பேன வேண்டிய விதிமுறைகள்;

  1. திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும்.
  2. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும்.
  3. அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும்.
  4. அவர்களிலும் குறிப்பாக அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.
  5. ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும்.
மேற்கண்ட ஐந்து வழிமுறைகளை பின்பற்றாமல் குர்'ஆனில் விளக்கம் இல்லை; நபிமொழியில் விளக்கம் இல்லை எனு கூறிக்கொண்டு, தனது சொந்த வியாக்கியானத்தை திணிக்கக் கூடாது என்றும், கீழ்கண்டவாறு இமாம் இப்னு கஸீர் அவர்களின் கருத்தை பதிவு செய்கிறார் அறிஞர் பீ.எஸ்.அலாவுதீன்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.

எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.

மேலே உள்ள விஷயங்களை காய்தல் உவத்தலின்றி படித்தால், குர்'ஆனை விளங்க குர்'ஆன் மட்டும் போதாது; நபிமொழி மட்டும் போதாது. சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், தாபியீன்களின் விளக்கம் வேண்டும் என்ற கருத்தை பீ.எஸ். அலாவுதீன் ஏற்றுள்ளார். பீ.எஸ். அலாவுதீனின்  இந்த விதிமுறையை பீஜேயும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அந்நஜாத்தில் இடம்பெற செய்துள்ளார். இதன் மூலம் பீஜேயும் அன்று குர்'ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதையும் தாண்டி தாபியீன்கள் கருத்தையும்  ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

இன்று மார்க்கத்தில் நமது கருத்தை விட சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்பவர்களை 'வழிகேடர்கள்' 'தடம் புரண்டவர்கள்' என்று விமர்சிக்கும் பீஜே, இவரது அண்ணனை வழிகேடர் என்று சொல்வாரா?  ஏன் அண்ணனின் கருத்தை வழிமொழிந்த பீஜே, தன்னைத் தானே 'வழிகேடர்' என்று சொல்லிக் கொள்வரா?

சிந்தியுங்கள் மக்களே!

குர்'ஆனுக்கு நபித்தோழர்கள் விளக்கத்தை ஏற்காமல் இவரது மனோஇச்சை விளக்கத்தை தினித்ததால் ஏற்பட்ட விளைவுகள்  பட்டியலிடப்படும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: