அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 11 மே, 2012

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[1]

விளைநிலத்தின் வரப்புச் சண்டைக்காக கோர்ட்டு படியேறிய பங்காளிகள் இருவர், வயலையே விற்று கோர்ட்டுக்கு செலவு செய்த பின்னும் கூட தீர்ப்பு வந்தால் ஆச்சர்யமே என்று சொல்லும் அளவுக்கு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதை மனதில் கொண்டு பின் வரும் சம்பவத்தை பார்ப்போம்.

கேரளா, கொல்லம் நீண்டகரா துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, அந்த வழியாகச் சென்ற, "என்ரிகா லக்சி' என்ற இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில், இரு மீனவர்கள் பலியாகினர். கடற்கொள்ளையர்கள் என, தவறாக நினைத்து, மீனவர்களை சுட்டு விட்டனர். இந்த சம்பவத்தில், படகிலிருந்த 11 மீனவர்களில், தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஜலஸ்டின், 45, மற்றும் அஜீஷ் பிங்கி, 25 ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் லத்தோர் மற்றும் ஜரோன் ஆகியோர் பிப்ரவரி 17ம் தேதி கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க, இத்தாலி வெளியுறவு இணை அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சர், இந்திய நிர்வாகத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பயன் தரவில்லை. மேலும், இவ்வழக்கு இந்திய தண்டனை சட்டப்படி, கேரளாவில் நடைபெறும் என்றும், தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த மீனவர்கள் இருவருடைய குடும்பத்துக்கும் கேரளா மாநில அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கி இருப்பது மட்டுமல்லாமல், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெலஸ்டின் மனைவி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், பிங்கியின் சகோதரி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் அனுமதித்ததுடன், கப்பல் நிறுவனம் ரூ.3 கோடியை வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களை சந்திக்க, அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினர், திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள், பலியான மீனவர்கள் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, இத்தாலிய பாதுகாவலர்களின் குடும்பத்தினர், இத்தாலிய நிர்வாகத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில் பலியான தமிழக மீனவர்கள் இருவர் குடும்பத்திற்கு, தலா ஒரு கோடி ரூபாய் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில், இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் குடும்பத்தினரும், பலியான மீனவர்கள் குடும்பத்தினரும் கையெழுத்திட்டுள்ளனர். 

இதையடுத்து, இத்தாலிய பாதுகாவலர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என, ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டிருந்த, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்களின் குடும்பத்தினர், "இத்தாலியர்கள் இருவருக்கும் எதிராக எந்த வழக்கையும் நடத்தப் போவதில்லை என்றும், அவர்கள் இருவரையும் மன்னித்து விட்டோம்' என்றும் தெரிவித்தனர். 

இதற்கிடையில், இத்தாலிய பாதுகாவலர்களுக்கு எதிரான, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி, இத்தாலிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, மீனவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஆவணங்களை வாபஸ் பெற, கேரள ஐகோர்ட் அனுமதி அளித்தது. தங்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர, இத்தாலிய நிர்வாகத்தினர் சம்மதித்து விட்டதால், தாங்கள் வழக்குகளைத் தொடர விரும்பவில்லை என, மீனவர்கள் குடும்பத்தினர் தெரிவித்ததை அடுத்து, நீதிபதி கோபிநாதன் அனுமதி வழங்கினார். இதையடுத்து இத்தாலியர்கள் இருவரும் விரைவில் விடுதலையாகலாம் என எதிர்பார்த்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு இவ்வழக்கில் ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் பெற அனுமதித்த கேரள நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருப்பதுடன், இது சட்டத்துக்கு விரோதமானது, இது செல்லாது என்று தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

இந்தப்பிரச்சினையில் கேரளா உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை சட்டத்திற்கு முரணானதா என்பதை பார்ப்பதை விட, நியாயப்படி சரியானதா என்று பார்த்தால் சரிதான். ஏனென்றால் சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர், கொலையாளிகளிடம் இழப்பீடு வாங்கிக்கொண்டு ஒதுங்கிக் கொண்ட நிலையில், அந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக கூறிய நிலையில், அந்த வழக்கை நடத்தியே தீருவோம் என்று கேரளா நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும்? யாருடைய புகாரின் பேரில், யாருடைய நலனுக்காக இந்த வழக்கு பதியப்பட்டதோ, அவர்களே நஷ்டஈடு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை மன்னித்து விட்ட பின்னால், நீதிமன்றங்களுக்கு என்ன வேலை இருக்கிறது? கேரளா நீதிமன்றத்தின் நடவடிக்கை இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்ப உள்ளது. இறைவன் கூறுகின்றான்; 

ஈமான் கொண்டோரே! கொ லைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். இருப்பினும் [கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

[2 ;178 ]

இந்த இறை வசனத்தில் கொலைக்கு கொலைதான் தீர்வு என்று சட்டம் சொல்லும் இறைவன், கொலை செய்தவனை, கொலையுண்டவரின் வாரிசுகள் மன்னித்து விட்டால், அந்த வாரிசுகளுக்கு உரிய இழப்பீட்டை கொலை செய்தவன் நியாயமான முறையில் வழங்கவேண்டும் என்று கட்டளையிடுகின்றான். ஒரு கொலையாளியை தண்டிப்பதற்கும், மன்னிப்பதற்கும் கொலையுண்டவரின் குடும்பத்திற்கே இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. அந்த வகையில் இத்தாலி கொலையாளிகளை கொலையுண்டவரின் குடும்பமே மன்னித்து விட்டதால் அதை கேரளா உயர்நீதிமன்றமும் அங்கீகரித்து பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு கொலைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணக் கூடாது என்பது ஒரு அறிவுப்பூர்வமான வாதமல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த வழக்கில் கொலையுண்டவரின் வார்சுகள் நீதிமன்றத்தை அணுகியே  இதற்கு தீர்வு கண்டுள்ளனர். எனவே நீதிமன்றத்திற்கு வெளியே என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. மேலும், ஒரு பொருளுக்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு விபத்திற்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு உயிர் விசயத்தில் இழப்பீடு வாங்கிக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறுவது புதிராக உள்ளது. மேலும், இந்த விசயத்தில் தம்மைப் போலவே சட்டம் படித்த கேரளா நீதிபதிகளை கண்டிக்கும் உச்சநீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் விசயத்தில் என்ன செய்திருக்கிறது?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரணைக்கு எடுத்து கொள்கிறது. ஜூலை 10-ம் தேதி முதல் விசாரணை நடைபெறும்" என்று கூறியுள்ளது.

இந்த மூவர் சம்மந்தப்பட்ட இந்த வழக்கு ஏற்கனவே தமிழகத்தின் கீழ்கோர்ட்டு தண்டனை விதித்து, அதை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி, பின்பு உச்சநீதிமன்றத்தில் இந்த தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, பின்பு ஜனாதிபதியாலும் நிராகரிக்கப்பட்டு, தூக்குத்தண்டனைக்கு நாள் குறித்த பின்னால், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு; அதான் தொடர்ச்சியாக இப்போது மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றால், ஒரே வழக்கில் எத்தனை முறை சுழற்ச்சி விசாரணை; எத்தனை முறை தீர்ப்பு? ஒரு பிரதமர் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட முடியாத நிலை உள்ள நாட்டில், கொலைக்கு நஷ்டஈடு பெற்றுக்கொண்டு விரைவான தீர்வு காண மக்கள் முயற்ச்சிப்பதில் என்ன குறை காண முடியும்? 

ராஜிவ்காந்தி கொலையாளிகள் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து விட்டதால் அவர்களுக்கு இதுவே ஒரு தண்டனை; இனியொரு தண்டனை விதிக்க முடியாது என்று சொன்னால், இந்த தாமதத்திற்கு யார் காரணம்? ஜனாதிபதியல்லவா? கொலையுண்டவர்களுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கிய அரசியல் சாசனம் அல்லவா? இப்படி ஜவ்வாக ஒரு வழக்கு இழுபடுவதைத் தான் உச்சநீதிமன்றம் விரும்புகிறதா? அல்லது இஸ்லாம் சொல்லும் வழிமுறையை பின்பற்றி கொலையுண்டவன் குடும்பத்தாரிடம் கருத்துக் கேட்டால் ஒரு நாளில் வழக்கு முடிவுக்கு வந்து விடுமே! மேலும், இருபது ஆண்டுகள் கண்ணித்தீவாக நீளும் இந்த கொலைவழக்கில் வெறுமனே ராஜீவ் மட்டும் தான் கொல்லப்பட்டாரா? ராஜீவோடு சேர்த்து பதினைந்து பேர் கொல்லப்பட்டார்களே! அவர் தம் குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்று என்றாவது நீதிமன்றங்கள் கவலைப்பட்டதுண்டா? ஆண்டுக்கணக்கில் நீளும் இந்த வழக்கால் கொலையுண்டவரின் குடும்பத்திற்கு நயாப்பைசா பிரயோஜனம் உண்டா? இல்லை. அதே நேரத்தில் இந்த கைதிகளை பாதுகாக்க, இவர்களின் வழக்கை நடத்த என்று பலகோடிகள் மக்களின் வரிப்பணம் பாழானது தான் மிச்சம். இதையெலாம் உணர்ந்துதானோ என்னவோ, அந்த இரு மீனவ குடும்பத்தினர் உடனடி நிவாரணத்திற்கு வழிகண்டு விட்டனரோ!

எனவே, கொலையுண்டவனுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கும் சட்டம், கொலையுண்டவனின் குடும்பம் மன்னித்தால் அதை எதிர்ப்பது எந்தவகையிலும் நியாயமில்லை தானே! எனவே குற்றவாளியை தண்டிக்கும் அல்லது மன்னிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதை மறு பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்கினால் வழக்குகள் தேங்குமா? வரிப்பணங்கள் பாழாகுமா? சிந்திப்போம்- சீர்திருத்தம் செய்வோம். சட்டங்கள் நீதியை நிலைநாட்டவே என்பதை உணர்வோம்.

தீர்ப்புகள் வரும்....கருத்துகள் இல்லை: