அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 10 நவம்பர், 2009

வான் மழையும்-படிப்பினையும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சில நாட்களாக பருவமழை பெரும் அளவில் பெய்துவருகிறது. தமிழக அளவில் மட்டும் சுமார் என்பது பேர்வரை இன்றளவில் மரணித்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் இந்த மழை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். முதலாவதாக மழையை மனிதனால் வரவழைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. சிலர் சொல்வார்கள்; இசையால் மழையை வரவழைக்கமுடியும், மரங்களை வளர்த்துவிட்டால் மழையை வரவழைத்து விடமுடியும், யாகங்கள் நடத்தினால் மழையை வரவழைத்துவிட முடியும், தவளைக்கும்-தவளைக்கும் கல்யாணம், கழுதைக்கும்-மரத்துக்கும் கல்யாணம் இப்படியாக சில மூடநம்பிக்கை சடங்குகளை செய்தால் மழையை வரவழைத்து விடமுடியும் என்பார்கள். ஆனால் இது நிச்சயமாக வெறும் கற்பனையே அன்றி வேறல்ல என்பதை நாம் நடைமுறையில் கண்டு வருகிறோம். அதுமட்டுமன்றி பெய்யக்கூடிய மழையை எந்த ஊரில் பெய்யும் என்று எவராலும் சொல்லமுடியாது. காரணம் மழையை இறக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்;
அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.[14:32 ]

இந்த வசனத்தில் வானத்திலிருந்து மழையை இறக்குவது நானே என்று கூறும் இறைவன்,வேறு ஒரு வசனத்தில் மழை மட்டுமன்றி ஐந்து விஷயங்கள் பற்றிய ஞானம் தனக்கு மட்டுமே உரியது என்று கூறுகின்றான்;

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.[31:34 ]

மேற்கண்ட வசனங்கள் மழை என்பது அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதும் அது எப்போது, எங்கே எந்த அளவு பெய்யும் என்பதும் மனிதனின் ஆற்றலுக்கு உட்பட்டது அல்ல என்பதை அறியமுடிகிறது. அதனால்தான் மழை தொடங்கிய பின்னும் கூட வானிலை ஆய்வு மைய்யங்களால் கூட துல்லியமான மழை அளவை சொல்லமுடியவில்லை என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இது ஒருபுறமிருக்க, மனிதனின் மிக முக்கியமான ஆதாரமாக நீர்நிலைகள் விளங்குகின்றன. அந்த நீர்நிலைகள் மூலமாகத்தான் மனிதன் தானும் பருகி, கால்நடைகளுக்கும் புகட்டி விவசாயமும் மேற்கொள்கிறான். அப்படிப்பட்ட நீர்நிலைகள் பொய்த்துவிடாமல் இருக்க மழை மிகமிக அவசியமாகும். இந்த மழை விஷயத்தில் இன்னும் சில விஷயங்களை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. குறிப்பாக பருவமழை தாமதமாக வறட்சி தென்படுமாயின், அந்த மழையை வேண்டி என்ன செய்யவேண்டும் என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

மழை வேண்டி தொழுதல்;
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 1012
இந்த ஹதீஸின் மூலம் மழை வேண்டி இரு ரக்அத்துகள் தொழவேண்டும் என்றும் அத்தொழுகை திடலில்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் விளங்கிக்கொள்ளலாம். மேலும் தொழுகைக்கு பின் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கவேண்டும்;
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பிரார்த்தனை எதிலும் தம் கைகளை (மிக உயரமாகத்) தூக்குவதில்லை; மழை வேண்டிப் பிராத்திக்கையில் தவிர. ஏனெனில், அதில் அவர்கள் தம் இரண்டு கைகளையும் தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு உயர்த்துவது வழக்கம். அபூ மூஸா(ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்; மேலும், (அப்போது) தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள்.
ஆதாரம்; புஹாரி எண் 3565

மழை வரும்போது நபியவர்களின் மனநிலை;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4829

வானில் மழை மேகம் தென்பட்டால் இந்த மேகம் இறைவனின் அருளை பொழியும் மழை மேகமா..? அல்லது அவனது தண்டனையை இறக்கிவைக்கும்மேகமா.? என்றெல்லாம் நபியவர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள். காரணம் முன்னர் வாழ்ந்த சமூகத்தார் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கலக்கம் அடைகிறார்கள். ஆனால் இன்று நாமோ மழை மேகத்தை கண்டுவிட்டால் நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. இந்த மேகம் அல்லாஹ்வின் அருள் மேகமா..? அல்லது அல்லாஹ்வின் தண்டனைக்குரிய மேகமா என்றெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதில்லை. இதுதான் நமது நிலை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள்,

நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)" என்று கூறுவார்கள்.[புஹாரி எண் 1032 ]

மழையை கண்ட நாம் என்றாவது இவ்வாறு பிரார்த்தித்துள்ளோமா என்று ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்வது சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மழையை வேண்டி பிரார்த்திப்பவர்கள் உண்டு. இன்னும் சிலர் மழை பைத் என்று சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டு தெருவை வலம் வருவதும் உண்டு. ஆனால் அதிகப்படியாயான மழை பெய்யும்போது அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்கும் பழக்கம் ஏனோ நம்மிடம் இல்லாமல் போனது வேதனைக்குரியது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்iயும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இழுந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!" என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.
நூல்;புஹாரி.

இந்த அடிப்படையில் நாமும் மழையின் பாதிப்பில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும்.

மழையின் பெறவேண்டிய மிக முக்கியமான படிப்பினை;

அல்லாஹ் கூறுகின்றான்;

பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.[41:௩௯ ]

இந்த வசனத்தில் மிகப்பெரிய படிப்பினை உள்ளது. காய்ந்து சருகாக இறந்து காட்சியளிக்கும் பூமியின் புற்பூண்டுகள், அதன் மீது அல்லாஹ்வின் அருள் மாரி பொழிந்தவுடன் பச்சை பசேல் என்று முளைப்பதை பார்க்கிறோம். இதுபோன்று தான் நாம் இறந்தவுடன் அல்லாஹ் நம்மை உயிர்ப்பிப்பான். அப்போது நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடி செயலுக்கும் நாம் பதில் சொல்லவேண்டும் என்ற சிந்தனை இந்த மழையின் மூலம் பூமி வெளியாக்கும் பயிரினங்கள் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனை சந்திக்கும் அந்த நாளில், அவன் பொருந்திக்கொண்டவர்களாக சந்திக்க கிருபை செய்வானாக!

கருத்துகள் இல்லை: