அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 21 மே, 2009

சாபத்திற்குரியவர்கள் யார்..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும் சாபம், நபிமார்களின் சாபம், இறைவனின் கட்டளைப்படி மலக்குகள் விடும் சாபம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக படைத்த இறைவனின் சாபம். இத்தகைய சாபங்களில் எந்த வகைசாபத்தை நாம் பெற்றாலும் நாம் மறுமையில் ஈடேற்றம் பெறமுடியாது. எனவே, சாபத்திற்குரியவர்களாக நாம் ஆகிவிடக்கூடாது என்ற அடிப்படையில் சாபத்தை பெற்றுத்தரக்கூடிய சிலவிஷயங்களை இந்த ஆக்கத்தில் பார்க்கவிருக்கிறோம்.
அல்லாஹ்வின் சாபம்;
அல்லாஹ்வின் சாபத்தை பொறுத்தவரையில், பாரதூரமான பெரிய பாவங்களை செய்தால்தான் அல்லாஹ்வின் சாபம் நம்மீது ஏற்படும் என்றில்லை. நாம் சாதாரணமாக செய்துவரும் சிலவிஷயங்கள் கூட அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரக்கூடியதாக இருக்கலாம். நாம் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகாலையில் ரயிலில் பயணம் செய்தால் ஒரு காட்சியை காணலாம். அதாவது ரயில் தண்டவாளங்களின் அருகே சிலர் 'காலை கடன்களை' நிறைவேற்றிக்கொண்டிருப்பதை காணலாம். மேலும் சில இடங்களில் தெருக்களில் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ளபகுதிகளில், மரங்களின் மறைவில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மலஜலம் கழிப்பவர்களையும் நாம் பார்க்கிறோம். இது அவர்களின் பார்வையில் சாதாரணம். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு இது பாரதூரமான விஷயமாகும்.

நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரக்கூடிய இரு விஷயங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்றவுடன், சகாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே! என்ன அந்த இரு விஷயங்கள் என்று வினவ, மக்கள் நடமாடும் பாதைகளிலும், இளைப்பாறும் மரநிழல்களிலும் சிறுநீர் கழிக்காதீர்கள் என்று கூறினார்கள்.[நூல்;அஹ்மத்]
நிராகரிப்பாளர்கள் மீது அல்லாஹ்வின் சாபம்;
அல்லாஹ் மனிதனை படைத்திருக்க, அவனைபற்றி அவனது ஆற்றல் பற்றி தனது வேதத்தின் மூலமும், தூதர் மூலமும் தெளிவுபடுத்தியபின்னும் அல்லாஹ்வை நிராகரித்து கல்லையும்-மண்ணையும்-கண்டவரையும் வணங்கும் பெரும்பாலோரை பார்க்கிறோம். இத்தகையோர் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்;
نَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللّهِ وَالْمَلآئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.[2:161
மார்க்கத்தை மறைப்பவர்கள் மீது;
இன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பெரும்பாலோரிடம் மார்க்கத்தில் காட்டித்தராத பித்அத்களும், மூட நம்பிக்கைகளும் மலிந்து காணப்படுவதற்கு காரணம் மார்க்கத்தை கரைத்துக்குடித்தவர்கள் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆலிம்கள் தங்களின் சுயனலனுக்ககவோ, அல்லது வேறு ஏதேனும் ஆதாயத்திற்காகவோ மார்க்கத்தை மறைத்ததுதான். மேலும், ஒரு விஷயத்தில் அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் ஒரு சட்டத்தை சொல்லியிருக்க அதற்கு மாற்றமாக செயல்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக தலாக்; மீட்டிக்கொள்ளக்கூடிய தலாக் இருமுறை என்று அல்லாஹ் தன் அருள்மறையில் கூறியிருக்கிறான். அதோடு நபி[ஸல்] அவர்கள் காலத்திலும், அபூபக்கர்[ரலி]அவர்கள் காலத்திலும், உமர்[ரலி] அவர்கள் ஆட்சியின் பாதிவரையிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகத்தான் இருந்தது [முஸ்லிம்] என்ற தெளிவான ஹதீஸ் இருக்க, இன்று சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக்கொள்வோர் ஒரே தடவையில் முத்தலாக்கை நடைமுறைப்படுத்தி மார்க்கத்தை மறைத்து, திரிப்பதை பார்க்கிறோம்.
அல்லாஹ் கூறுகின்றான்;
نَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَـئِكَ يَلعَنُهُمُ اللّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.[2:159]
அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியோர் மீது;
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللّهِ كَذِبًا أُوْلَـئِكَ يُعْرَضُونَ عَلَى رَبِّهِمْ وَيَقُولُ الأَشْهَادُ هَـؤُلاء الَّذِينَ كَذَبُواْ عَلَى رَبِّهِمْ أَلاَ لَعْنَةُ اللّهِ عَلَى الظَّالِمِينَ
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.[11:18]
அல்லாஹ்வுக்கு மகனை கர்ப்பித்தவர்கள் மீது;
நபி ஈஸா[அலை] அவர்கள் அல்லாஹ்வின் மகனென்று ஒரு சாராரும், உஸைர்[அலை] அல்லாஹ்வின் மகனென்று ஒரு சாரரும் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகின்றனர். அல்லாஹ் இவைகளைவிட்டும் தூய்மையானவன். மேற்கண்ட இருவரும் அல்லாஹ்வின் அடிமைகள் அன்றி அல்லாஹ்வின் மகனல்ல என்று திருமறையில் அல்லாஹ் தெளிவாக அறிவித்துள்ளான். இதன் பின்னும் யாரேனும் இவர்களை அல்லாஹ்வின் மகனென்று வாதிட்டதால்,
அல்லாஹ் கூறுகின்றான்;

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللّهِ وَقَالَتْ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللّهِ ذَلِكَ قَوْلُهُم بِأَفْوَاهِهِمْ يُضَاهِؤُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُواْ مِن قَبْلُ قَاتَلَهُمُ اللّهُ أَنَّى يُؤْفَكُونَ
யூதர்கள் உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?[9:30 ]
முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு;
நம்மில் பெரும்பாலோர் சாதாரணமாக நல்ல பெண்கள் மீது சேற்றை வாரியிறைக்கும் விதமாக, அவர்களின் நடத்தை சம்மந்தமாக ஏதேனும் ஒரு அவதூறை வீசிவிட்டு செல்வதை பார்க்கலாம். அதனால் அந்த ஒழுக்கமான பெண் சமூகத்தில் படும் அவலங்களையும், அப்பெண்ணுக்கு ஏற்படும் மன வேதனைகளையும் இந்த அவதூறு கூறுவோர் சற்றும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அல்லாஹ் இப்படிப்பட்டவர்கள் மீது கடும் கோபம் கொள்கிறான்;

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.[24:23]
தர்காக்களை எழுப்பியோர் மீது;
நமது தமிழகத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்கு பள்ளிவாசல் இல்லாத ஊரை காணலாம். ஆனால் தர்கா இல்லாத ஊரை காணமுடியாது என்று சொல்லுமளவுக்கு தடுக்கிவிழுந்தால் தர்காவில் விழும் அளவுக்கு தர்காக்கள் மலிந்து காணக்கிடைக்கிறது. அதோடு இந்த தர்காக்களுக்கு பயணம் மேற்கொள்வதோ எதோ மார்க்கத்தில் பர்ளாக்கப்பட்டது போன்று மக்கள் படை எடுப்பதையும் பார்க்கிறோம். இந்த தர்காக்களுக்கு வக்காலத்து வாங்கும் மார்க்க அறிஞர்களையும்[?] பார்க்கிறோம். ஆனால் இந்த தர்காக்கள் சாபத்திற்குரிய செயலாகும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்;
நபி[ஸல்]அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள். பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். [நூல்;புஹாரி]
இன்னும் சில சாபத்திற்குரிவைகள்;
#அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார் பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.[புஹாரி]

#இப்னு உமர்(ரலி) கூறினார்; பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்[புஹாரி]

#இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.[புஹாரி]

#அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்; ஒரு பெண் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் என் மகளுக்கு மணமுடித்துவைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?' என்று கேட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள். [புஹாரி]

அன்பானவர்களே! சாபத்திற்குரிய செயல்களின் பட்டியல் ஏராளம் உண்டு. இருப்பினும் விரிவஞ்சி தவிர்க்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் சாபத்திற்குரிய செயலகளிவிட்டு நம்மை பாதுகாத்து, அவனது அருளுக்குரிய அமல்களை செய்பவர்களாக ஆக்கி அருள்வானாக!

கருத்துகள் இல்லை: