அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 4 மே, 2009

கோபப்படாதே சகோதரா!

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற அருமையான பழமொழியை நாம் செவிமடுத்திருப்போம். உலகில் ஏற்படும் அத்துணை இன்னல்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் கோபம் ஒரு காரணமாக அமைந்து இருப்பதை நாம் காணலாம். ஒரு நாட்டின் அதிபர் மீது இன்னொரு நாட்டு அதிபர் கொள்ளும் கோபம் இருநாட்டு மக்களின் இன்னுயிரை 'போர்' என்ற பெயரில் பறிக்கிறது. ஒரு அமைப்பின் நிர்வாகிகளுக்குள் ஏற்படும் கோபம் அமைப்பு பிளவுபடவும், அதன்மூலம் நேற்றுவரை சகோதரர்களாக இருந்தவர்கள் பகைவர்களாக வலம் வரவும் காரணமாவதோடு, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் தடையாகவும் அமைகிறது. ஒரு சாரார் மீது கொண்ட கோபம், அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் சமுதாயத்தை 'புறம்தள்ளியவர்களுடன்' கரம் கோர்க்கவைக்கிறது. இது ஒருபுறமிருக்க, குடும்ப அளவில் கணவன்-மனைவி இடையில் ஏற்படும் கோபம் குடும்பமெனும் கப்பல் மூழ்கியேவிடுகிறது. அற்பமான விஷயங்களில் அருமையான உறவினர்கள்மீது கொண்ட கோபம் உறவெனும் கயிறு அறுபட்டு பிரிகிறது. இத்தகைய கோபம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். [70:19]

மனிதனின் அவசர முடிவின் காரணமாகவும், கோபத்தின் காரணமாகவும் அவனுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதால்தான் மனிதன் அதிகமாக அவசரப்பட்டு முடிவெடுக்கும் தலாக் விசயத்தில் இறைவன், மூன்று வாய்ப்புகளை வழங்குகிறான்;


الطَّلاَقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلاَ يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُواْ مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلاَّ أَن يَخَافَا أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَإِنْ خِفْتُمْ أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللّهِ فَلاَ تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ اللّهِ فَأُوْلَـئِكَ هُمُ الظَّالِمُونَ
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.[2:229]
யார் வீரன்..?
நம்மிடத்தில் ஒரு வீரனை அடையாளம் காட்டுமாறு கேட்கப்பட்டால், நாம் பலசாலியான ஒருவரைத்தான் அடையாளம் காட்டுவோம். ஆனால் உண்மையான வீரன் யார் என்று நபியவர்கள் கூறுவதை பாருங்கள்;

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: பலசாலி என்பவன் (எதிரியை) கீழே வீழ்த்துபவன் அல்லன். மாறாக கோபத்தின்பொழுது யார் தன்னைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் தான் பலசாலி![ நூல்: புகாரி, முஸ்லீம்
பலமிருந்தாலும் பணிவு காட்டுங்கள்;
முஆத் பின் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹ_ருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூதாவூத் , திர்மிதி)
கோபத்தை மென்று விழுங்கிய உமர்[ரலி]அவர்கள்;
சகாபாக்களில் உமர்[ரலி] அவர்கள், மார்க்க விஷயத்தில் எவருக்கும் வளைந்து கொடுக்காதவர்கள் என்பதும், மார்க்கத்திற்கு எதிரானவர்கள் விஷயத்தில் கடும் கோபமுடையவர்கள் என்பதும் நாம் அறிந்ததே! இதற்கு சான்றாக ஹுதைபியா உடன்படிக்கையை எடுத்துக்கொள்ளலாம். அந்த உடன்படிக்கையின்போது நபி[ஸல்]அவர்கள், அல்லாஹ்வின் உத்தரவின்பேரில் அல்லது அனுமதியின்பேரில் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு பாதகமான விஷயங்கள் இடம்பெற்றதையும், உம்ரா செய்யவிடாமல் தடுப்பதையும் கண்ட உமர்[ரலி]அவர்கள், இந்த இணைவைப்பாளர்களுக்கு நாம் எதற்காக விட்டுக்கொடுக்கவேண்டும் என்று நபியவர்களிடமும், அபூபக்கர்[ரலி]அவர்களிடமும் கடுமையான கோபத்துடன் வாதிட்டதை நாம் ஹதீஸில் பார்க்கிறோம்.அப்படிப்பட்ட உமர்[ரலி]அவர்களின் வாழ்வில் ஒரு சம்பவம்;

ப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "உயைனா இப்னு ஹிஸ்ன் என்பார் (மதீனா) வந்து தன்னுடைய சகோதரர் மகனாகிய ஹ{ர்ரு பின் கைஸ் என்பாரிடம் தங்கியிருந்தார். உமர்(ரலி) அவர்கள் யார் யாரையெல்லாம் தங்களது அவையில் நெருக்கமான அந்தஸ்தில் வைத்தி ருந்தார்களோ அத்தகைய நபர்களுள் ஹ{ர்ரும் ஒருவர். குர்ஆனை கற்ற றிந்த அறிஞர்கள்தான் உமர்(ரலி) அவர்களது அவைத் தோழர்களாகவும் ஆலோசகர்களாவும் இருந்தனர். அவர்கள் பெரிய வயதுடையவர்களாயினும் இளைஞர்களாயினும் சரியே! தன் சகோதரர் மகனிடம் உயைனா சொன்னார்: "மகனே! இந்த அமீரிடத்தில் உனக்கு செல்வாக்குள்ளது. எனவே அவரைச் சத்திப்பதற்கு எனக்கு அனுமதி வாங்கிக் கொடு!"அவ்வாறே அவர் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அனுமதி கொடுத்தார்கள்.
உமர்(ரலி) அவர்களின் சமூகத்தில் உயைனா வந்தபொழுது சொன் னார்: "இதோ! கத்தாபின் மகனாரே! நீர் எங்களுக்கு அதிக மானியம் கொடுப்பதில்லை. மேலும் எங்களிடையே நீதியுடன் தீர்ப்பு அளிப்பதில்லை!" (இதனைக் கேட்டதும்) உமர்(ரலி) அவர்கள் அதிகஅளவு கோபம் கொண்டு அவரைத் தண்டிக்கவே முனைந்து விட்டார்கள்!
அப்பொழுது உமர்(ரலி) அவர்களிடம் ஹ{ர்ரு சொன்னார்: "அமீருல் முஃமினீன் அவர்களே! (குர்ஆனில்) அல்லாஹ் தன்னுடைய நபியை நோக்கிக் கூறுகிறான்: (நபியே! மக்களிடத்தில்) மென்மையையும் மன்னிக் கும் போக்கையும் மேற்கொள்வீராக! நன்மை புரியுமாறு ஏவுவீராக. மேலும் அறிவீனர்களைவிட்டும் விலகியிருப்பீராக! (7 : 199) - இந்த மனிதரும் அறிவீனர்களில் ஒருவர்தானே!" - அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த வசனத்தை அவர் ஓதிக்காட்டியபொழுது உமர்(ரலி) அவர்கள் அதை மீறிச் செல்லவில்லை! அவர்கள் இறைவேதத்தின் வரம்புக்குக் கட்டுப்படுப வர்களாய்த் திகழ்ந்தார்கள்!" நூல்: புகாரி.

மிகப்பெரிய ஜனாதிபதியாக இருந்தபோதும், அல்லாஹ்வின் வசனம் ஒதிக்காட்டியபோது அப்படியே கோபத்தை கட்டுப்படுத்திய உமர்[ரலி] அவர்கள் எங்கே? அந்த வசனம் இன்றும் குர்ஆனில் இருந்தும் அதை கண்டுகொள்ளாமல் கச்சைகட்டிக்கொண்டு திரியும் நாம் எங்கே? சிந்திப்போமா?
நபிகளாரின் அறிவுரை;
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றார்கள். மீண்டும் அறிவுரை கூறுமாறு பல தடவை அவர் கேட்டதற்கும் நபிகளார்(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றே பதில் அளித்தார்கள்! (நூல்: புகாரி)

எத்துணையோ அறிவுரைகள் இருந்தும், மனிதனின் அத்தனை தீமைக்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய கோபத்தை தவிர்க்குமாறு நபியவர்கள் சொன்ன உபதேசத்தை நாம் கவனத்தில் கொள்வது சிறந்தது.
கோபத்தை போக்கும் வழி;
சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி(ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்' என்றார். [புஹாரி;6115 ]

பொறுமை என்பது இறைவன் புறத்திலிருந்து வருவது, கோபம் என்பது ஷைத்தானின் புறத்திலிருந்து வருவது. எனவே ஷைத்தானின் தூண்டுதலான கோபத்தை விட்டொழித்து, இறைவனின் நேசத்திற்குரிய பொருமையாலர்கலாக நாம் மாறவேண்டும்.

ஆத்திரத்தில் ஆகாதெனினும், அன்பு; தன்னை வளர்க்க கூலி தரும்.

கருத்துகள் இல்லை: