அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 26 நவம்பர், 2009

இறைத்தூதரின் திருமணங்களும்; இடைச்செருகல் விளக்கங்களும்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட முஸ்லிமான ஆண்கள் அதிகபட்சமாக நான்கு திருமணம்வரை செய்துகொள்ள அல்லாஹ் அனுமதியளித்திருப்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ரசூல்[ஸல்] அவர்களுக்கு இதிலிருந்து அல்லாஹ் விதிவிலக்கு அளித்து அவர்கள் பல திருமணங்களை செய்துகொள்ள அனுமதியளித்துள்ளான்.
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاء اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ الْمُؤْمِنِينَ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.[33:50 ]

இந்த வசனத்தில் நபியவர்கள் பல திருமணங்களை செய்ய அனுமதியளித்த இறைவன், எதற்காக இந்த அனுமதி என்றால் நபி[ஸல்] அவர்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டுவிட கூடாது என்பதற்காக என்று மட்டும் சொல்கிறான். [ஒரு திருமணம் நீங்கலாக] வேறு எந்த திருமணத்திற்கும் எந்த விளக்கமும் இந்த வசனத்திலும் வேறு எந்த வசனத்திலும் நாமறிந்தவரை இல்லை. அதிகப்படியான திருமணங்களை செய்த நபி[ஸல்] அவர்களாவது நான் இன்ன காரனத்திற்காகத்தான் இத்துனை திருமணம் செய்தேன் என்று சொல்லவில்லை. உண்மை இவ்வாறிருக்க, நாமாக நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று
சில காரணங்களை சொல்வது வரம்பு மீறலாகும்.

நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று ஒரு கட்டுரை மவ்லவி பீஜே அவர்களது தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆக்கத்தில் காணப்படும் சில முரண்பாடுகளை இங்கே முன்வைக்கிறோம்.
  • அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு கூறப்பட்டுள்ள காரணம்; அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள்.

ஹதீஸில் இவர் கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார்; நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.[புஹாரி எண்; எண் 5081 ]

அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற இவர்களின் விளக்கத்திற்கு மாற்றமாக, அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மாறாக nabi [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர் என்று கூறுவது ஹதீசுக்கு முரணில்லையா..?

  • அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை மணந்து கொண்டதற்கான கூறப்பட்டுள்ள காரணம்; நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகலை நபிகள் நாயகம்[sal] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கு காரணம்.

ஹதீஸில் இவர் கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ]


அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, இவர்கள் கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மனம் செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னையை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர் என்பது ஹதீஸுக்கு முரணில்லையா..?

  • அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களை மனந்துகொண்டற்காக கூறப்படும் காரணம்; ஜைனப்[ரலி] தனது 35 வயதில் விவாகரத்து செய்யப்பட்டு திக்கற்றவராக இருந்தார். எனவே அவரை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் திருமணம் செய்தார்கள்.

அருள்மறை குர்ஆனில் இவரது விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களின் திருமணத்தை பொறுத்தவரையில், நபி[ஸல்] அவர்களின் மற்ற திருமணம் போன்றது அல்ல. அன்னையவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ்வே மனம் முடித்து தந்ததோடு, அதற்கு காரணத்தையும் சொல்கிறான்;

ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவரை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். என்று அல்லாஹ் கூறியிருக்க அதற்கு மாற்றமாக, அன்னையவர்கள் விதவையாக திக்கற்று நின்றதால் நபியவர்கள் திருமணம் செய்தார்கள் என்று இவர் விளக்கமளித்தது இந்த வசனத்திற்கு முரணில்லையா..?

  • அன்னை உம்மு ஸலாமா[ரலி] அவர்களை திருமணம் செய்தது பற்றி கூறப்பட்டுள்ள விளக்கம்; உம்மு சலமாவை நபிகள் நாயகம் திருமணம் செய்வதாக கூறியபோது, நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன் என் வயதுடையவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. குழந்தை பெறும் வயதை கடந்துவிட்டேன் என்று பதிலளித்தார்கள்.

இப்படி அன்னையவர்கள் சொன்னதாக எந்த நூலில் உள்ளது என்று குறிப்பிடவில்லை. இதற்கு மட்டுமல்ல மொத்த ஆக்கத்திற்கும் மறந்தும் கூட எந்த சான்றும் முன்வைக்கவில்லை. இது ஒரு புறமிருக்க, ஹதீஸில் இவரது கூற்றுக்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப்படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக்கொண்டேன்" என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 323 ]

அன்னை உம்மு சலாமா[ரலி] அவர்கள் தான் வயது முதிர்ந்தவர் என்றும் பிள்ளை பெறும் வயதை கடந்துவிட்டேன் என்றும் கூறியதாக பீஜே கூறுகிறார். ஆனால் ஹதீஸில் அன்னையவர்கள் மாதவிடாய் ஏற்படும் வயதுடையவராகn இருந்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மாதவிடாய் ஏற்படும் வயதுடையவர்கள் பிள்ளை பெறும் தகுதியுடையவர்கள் என்பது உலகறிந்த உண்மை. இவரது கூற்று ஹதீஸுக்குமுரணில்லையா..?

இது போன்று அந்த ஆக்கத்தில் முழுக்க முழுக்க அவரது சொந்த விளக்கமாகவே உள்ளது. மருந்துக்கு கூட குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் அவரது விளக்கம் குர்ஆணுக்கும்- ஹதீஸுக்கும் முரணாக உள்ளதை நாமறிந்தவரை சுட்டிக்காட்டியுள்ளோம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
குறிப்பு; அந்த ஆக்கம் மாற்று மதத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது எனவே குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்களை நாங்கள் முன்வைக்கவில்லை என்று கூற வருவார்களேயானால், மாற்று மதத்தவர் திருப்திக்காக குர்ஆண்-ஹதீசுக்கு முரணான விளக்கத்தை முன்வைக்கலாமா என்பதை தெரிவிக்க பீஜே கடமைப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: