அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 16 ஜூலை, 2009

அடாடா! இதுக்கும் கூட தண்டனையா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
அல்லாஹ் தன்னுடைய அடியார்கள் எப்படியேனும் சுவர்க்கம் வந்துவிட வேண்டும் என்ற ஆசையினால், நாம் செய்யும் சின்ன சின்ன அமல்களுக்கும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவதை இதற்கு முந்தைய ஆக்கத்தில் பார்த்தோம். இதில் அல்லாஹ்வின் - அவனது தூதரின் கட்டளைகளை புறக்கணித்து நாம் செய்யும் தீமைகள் நமது பார்வையில் சிறியதாகவே தெரிந்தாலும் அதற்கும் அல்லாஹ் தண்டனையை அளிப்பான்.[நாடினால் மன்னிப்பான்] அவ்வாறு நமது பார்வையில் சாதரணமாக தெரியக்கூடிய சில தீமைகளும் அதற்கு அல்லாஹ் அளிக்கக்கூடிய தண்டனைகளையும் இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 216 ]
இந்த பொன்மொழியில், நாம் சாதாரணமாக கருதும் இரண்டு விஷயங்களுக்காக கப்ரில் வேதனை தரப்படும் என்பதை அறியமுடிகிறது. நம்மில் சிலர் சிறுநீர் கழிக்கும்போது பார்த்தால் மக்கள் வந்துபோகும் இடங்களில் அணிந்திருக்கும் ஆடையை தொடை தெரியும் அளவுக்கு இழுத்துவிட்டு யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சாதரணமாக சிறுநீர் கழிப்பதை பார்க்கலாம். இன்னும் சிலர் கால்நடைகளைப்போல் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாதவர்களும் உண்டு. இதை பெரிய குற்றமாக அவர்கள் கருதுவதில்லை. ஆனால் இதற்கு கப்ரில் வேதனை தரப்படுகிறது. மேலும், புறம் பேசாதவர்களை காண்பது அரிது. அதுவும் நடைமுறையில் பெரிய தவறாக கருதப்படுவதில்லை. ஆனால், அதற்கும் கப்ரில் வேதனையுண்டு என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் - 'நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை" என்று அல்லாஹ் கூறினான். [நூல்;புஹாரி எண் 2365 ]
இந்த பொன்மொழியில், ஒரு பூனையை சரியாக பராமரிக்காமல் அதை சாகடித்த காரணத்தால் நரகத்தில் வேதனை செய்யப்படுகிறாள் எனில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதற்கு உரிய நேரத்தில் தண்ணீர், உணவு தரவேண்டும். அதோடு அது நோய்வாய்பட்டால் அதற்கு மருத்துவம் செய்யவேண்டும். அதன் மூலம் வருவாய் வந்தால் அதை பராமரிப்பது. அதன் மூலம் வருவாய் வரவில்லையானால் அதை பட்டினி போடுவது இவ்வாறான செயல்களை செய்பவர்களும், தெருவில் சும்மா படுத்திருக்கும் நாயை கல்லால் அடிப்பவர்களும், கழுதையின் வாலில் மட்டையை கட்டி அதில் நெருப்பு வைத்து அது விரண்டோடுவதை பார்த்து ரசிப்பவர்களும், சேவல் சண்டை- கிடாய் சண்டை - மஞ்சு விரட்டு- ஜல்லிக்கட்டு- ரேக்ளா ரேஸ் இதுபோன்ற போட்டியில் வாயில்லா ஜீவன்களை வதைப்பவர்களும் மேற்கண்ட நபிமொழியை கண்டு திருந்தவேண்டும் இல்லையேல் நரகில் வருந்தவேண்டும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையற்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி(ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரண்டு கதவுகளுக்கிடையே நின்றார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத் தொடங்கியது. நான், 'நாங்கள் என்ன (தவறு) செய்து விட்டோம்? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என்ன இந்தத் தலையணையில்?' என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், 'இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக் கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'உருவப் படம் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்வதன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்' என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள்.[நூல்;புஹாரி எண் 3224 ]
இந்த பொன்மொழியில் உயிர் உள்ளவைகளின் உருவப்படம் பற்றி நபியவர்கள் கடுமையாக கண்டிப்பதோடு, அதற்கு மறுமையில் வேதனையுண்டு என்பதையும் சொல்லிக்காட்டுகிறார்கள். முஸ்லீம் ஓவியர்கள் உயிர்உள்ளவைகளின் உருவப்படங்கள் வரைவதை விட்டொழிக்கவேண்டும். வீடுகளில் முன்னோர்கள் தொடங்கி முந்தாநாள் பிறந்த குழந்தை வரை போட்டோ எடுத்து வரிசையாக மாட்டி வைத்திருப்பவர்களும், அழகுக்காக வீடுகளில் மிருகங்கள்- பறவைகளின் உருவங்கள் அடங்கிய பாய்கள்-போர்வைகள்- தலையணைகள்-திரைசீலைகள் பயன்படுத்துவோர் அதை மாற்றவேண்டும்.
'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி எண் 7042 ]
இந்த நபிமொழியில் காணாத கனவை கண்டதாக 'ரீல்' விடுபவர்களை பற்றி விவரிக்கிறது. இன்று நம்மில் சிலர் தன் காதலியிடம், அவளை பற்றி எந்த கனவு காணாத நிலையிலும் உன்னை கனவில் அப்படி கண்டேன் இப்படி கண்டேன் என்று புளுகுவதும், நண்பர்களுக்கு மத்தியில் தன் இமேஜை உயர்த்துவதற்காக நேற்று கனவில் பிரபலமான நடிகை என் கனவில் வந்து என்னையே திருமணம் செய்வேன் என்று ஒத்தக்காலில் நின்றார்aஎன்று புளுகுவதும், இதையெல்லாம் தாண்டி சிலர் நான் ரசூல்[ஸல்] அவர்களை கனவில் கண்டேன் என்று பினாத்துவதும் நடைமுறையில் பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்கள் இரு வார்கோதுமைகளை முடிச்சுபோடும்வரை வேதனை செய்யப்படுவர் எனில், ஏன் புரூடா விடவேண்டும் ?ஏன் தண்டனையை அனுபவிக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அடுத்து ஒட்டுக்கேட்பவர் காதில் ஈயத்தை காச்சி ஊற்றப்படும் என்பதை கவனத்தில் கொண்டு அடுத்தவீட்டில் என்ன நடக்கிறது என்பதை சுவரில் காதைஒட்டிவைத்து கேட்பவர்கள் சிந்திக்கவேண்டும்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
புறாக்களின் மார்பு பகுதியை போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக்காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவனத்தின் வாடையை கூட நுகரமாட்டார்கள்.[நூல் நசயீ]
சிலருக்கு இளநரை ஏற்படுவதுண்டு. அவர்கள் கூட தலைக்கு பெரும்பாலும் 'டை' அடிப்பதில்லை. ஆனால் கிழநரை ஏற்பட்ட கிழங்கள் கருப்பு கலரில் 'டை' அடித்துக்கொண்டு மைனராக வலம்வருவதை பார்க்கிறோம். இவர்கள் இந்த நபிமொழியை சிந்திக்கவேண்டும். கருப்பு அல்லாத வேறு கலரை கொண்டு தமது நரையை மாற்ற முன்வரவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், பாவங்களில் சிறியதோ- பெரியதோ அனைத்தையும் தவிர்ந்து நடக்க நமக்கு அருள் புரிவானாக!

கருத்துகள் இல்லை: