அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 14 ஜூலை, 2009

அட! இதுக்கும் கூட நன்மையா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
மனிதர்களை படைத்த இறைவன் தன்னுடைய அடிமைகளான மனிதர்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டவன். ஒரு தாய் தன் பிள்ளை மீது காட்டும் அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது காட்டும் அன்பு அளப்பரியது.
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள்;
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள்.[நூல்; புஹாரி எண் 5999 ]
நம் மீது அளவற்ற அன்பு கொண்ட இறைவன் நாம் நரகம் சென்று விடக்கூடாது என்பதற்காக நாம் செய்யும் சின்ன சின்ன செயல்களுக்கும் நன்மைகளை வழங்குகிறான். அவற்றில் சிலவற்றை இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.
எண்ணத்திற்கும் கூலி வழங்கும் வள்ளல்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.[நூல்; புஹாரி எண் 6491 ]
இந்த நபி மொழியில் வல்லோனின் வள்ளல்தன்மையை பாருங்கள். நாம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் மட்டும் பசியடங்கிவிடாது. சாப்பிட்டால்தான் பசியடங்கும். ஆனால் நாம் ஒரு நன்மையான செயலை செய்ய நினைத்து செய்யாமல் விட்டுவிட்டால் கூட நாம் செய்ய நினைத்த அந்த என்னத்திற்கு ரஹ்மான் கூலிதருகிறான். அதுமட்டுமா ஒரு தீமையை செய்ய நினைத்து அதை அல்லாஹ்வுக்கு பயந்து செய்யாமல் விட்டால் அதையும் நன்மைக்குரியதாக கருதி நன்மையை பதிவு செய்கிறான். மேலும் ஒரு நல்ல செயலுக்கு பன்மடங்கு நன்மையை பதிவு செய்யும் ரஹ்மான், தீமைக்கு மட்டும் ஒரே ஒரு தீமையாக பதிவு செய்கிறான் எனில், நம் மீதுதான் நாயனுக்கு எத்துனை பாசம்?
மனைவிக்குஊட்டும் உணவுக்கும் கூலி;
நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே' என்றார்கள். [நூல்; புஹாரி எண் 6373 ]
தம்பதியர் ஒவ்வொருவரும் தங்களுக்கிடையில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் முகமாக ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி விடுவது சாதாரண விஷயம். இதில் இறைவனுக்கு செய்யும் எந்த அமலுமில்லை. ஆனாலும், மனைவியை பராமரிப்பது அவள்மீது அன்பு செலுத்துவது ஆகியவற்றை நம்மீது இறைவன் விதியாக்கியுள்ளான் என்ற எண்ணத்தில் ஒருவன் தன் மனைவியின் வாயில் ஒரு கவள உணவை ஊட்டினால் அதற்கும் நன்மையை இறைவன் அளிப்பதை நினைக்கும்போது அவன் எவ்வளவு பெரிய கருணையாளன் என்பதை புரிந்து கொள்ளலாம்.
நாய்க்கு உதவினாலும் நன்மையே;
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 'ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (ம்ணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள். [நூல்; புஹாரி எண் 6009 ]
நாய் வளர்ப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது [இரு விஷயங்களுக்கன்றி] பொதுவாக நாயை யாரும் கண்டுகொள்வதில்லை. யாரையாவது திட்டுவதாக இருந்தால் கூட சீ நாயே! என்று திட்டுபவர்களை பார்க்கிறோம். அத்தகைய மதிப்பில்லாத நாய்க்கு நீர் புகட்டியதற்காக ஒருவரின் பாவங்களை இறைவன் மன்னிக்கிறான் என்றால் அவனின் அருளுக்குத்தான் எல்லையுண்டோ;
மரம் நட்டாலும் மகத்தான கூலி;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.[நூல்; புஹாரி எண் 6012 ]
மரம் நடுவதில் இறைவனுக்கு செய்யும் அமல் எதுவுமில்லை. ஆனாலும், அந்த மரத்தின் மூலம் தனது படைப்பினங்கள் பயனடைந்தால், அந்த மரத்தை நட்டியவருக்கு அல்லாஹ், தர்மம் செய்த கூலியை வழங்கி தனது தாராள கருணையை காட்டுகின்றான்.
முள்ளை அகற்றினாலும் கூலி;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[நூல்; புஹாரி எண் 2472 ]
நாம் நடந்து செல்லும் பாதைகளில் மக்களுக்கு இடையூறு தரும் அல்லது துன்பம் தரும் முள்ளையோ அல்லது கல்லையோ அகற்றினாலும் அதற்கும் கூலியுண்டு என்று நபியவர்கள் கூறியிருக்க, இன்று நடைபாதைகளில் இது போன்றவைகளை கண்டும் காணாமல் செல்லும் நம்மவர்கள் இனியேனும் அவைகளை அகற்றும் நற்செயலை செய்து நன்மையை பெற முன்வரவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், அவனிடத்தில் நன்மையை பெற்றுத்தரும் எல்லா அமல்களையும் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

கருத்துகள் இல்லை: