அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 12 ஜூலை, 2009

ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீருல்முஃமினீனும்

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆக்கிரமிப்புகள் ஆட்சியாளர்கள் தொடங்கி சாமான்யர்கள் வரை செய்வதை காணலாம். நம் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட் சமுதாயத்திற்குசொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பங்களா எழுப்பிக்கொண்டார் என்றும், மந்திரிகள் தொடங்கி வார்டு மெம்பர் வரை அவரவர் சக்திக்கு உட்பட்டு சிலர் ஆக்கிரமித்துள்ள செய்தியும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வருவதுண்டு. சென்னையில் நாம் சொந்தமாக நிலம் வாங்கி அதற்கு சுற்றுவேலி எழுப்பாமல் சிறிதுகாலம் விட்டுவிடுவோமேயானால் ஒரு கும்பல் நமது இடத்தில் சிறு குடிசை போட்டுக்கொண்டு, பின்பு அதை காலி செய்ய சில ஆயிரங்களை கையூட்டாக கேட்பார்கள். அரசாங்க நிலத்தில் குடிசை போட்டு குறிப்பிட்ட வருஷம் வசித்து விட்டால், அவர்களுக்கு மாற்று இடம் தராதவரை அவர்களை காலி செய்ய முடியாது என்ற நிலை.மேலும் முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக முன்னோர்களால் தனமாக வழங்கப்பட்ட வக்ப் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ளதையும் அறிவோம். ஏரிகளும்-ஆறுகளும் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கி சிறுத்து காட்சி தருகிறது. ஒரு காலத்தில் வயல் வரப்புகள் இருவர் பேசிக்கொண்டே நடந்து செல்லும் நிலை இருந்தது. இன்றோ வயலுக்கு சொந்தாக்காரர்கள் வரப்பை ஆக்கிரமித்து ஒரு கையளவு இடத்தில் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஓர் தாய் வயிற்றில் பிறந்த அண்ணன்-தம்பிக்குள் ஒரு சான் நில ஆக்கிரமிப்பால் ஓட்டாண்டியாக ஆகும் அளவுக்கு கோர்ட் படிஏறுகிறார்கள். இவ்வாறான ஆக்கிரமிப்புகள் பல விதங்களில் அரங்கேறி வருவதை நாம் அன்றாடம் காண்கிறோம்.


இஸ்லாம் இந்த ஆக்கிரமிப்பு செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது.
அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்;
எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்" என்று கூறினார்கள்.[நூல் நூல் நூல்; 2453 ]
நடைபாதைக்கும் நல்வழி காட்டிய மார்க்கம்;
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். [நூல்;புஹாரி 2473 ]


அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அடியொற்றி வாழ்ந்த அருமை உமர்[ரலி] அவர்கள், ஆட்சி தலைவராக இருந்தபோதும் அடுத்தவர் நில விஷயத்தில் அதுவும் தனது உடலை அடக்கம் செய்ய தேவைப்படும் ஆறு அடி நிலத்திற்க்காக சம்மந்தப்பட்டவரிடம் அனுமதி கேட்ட அற்புதமான வாழ்க்கை பாரீர்;

அம்ர்இப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்;
உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள்.[ ஹதீஸ் சுருக்கம் நூல்;புஹாரி]

இந்த ஹதீஸில், முதலில் தன் மகன் மூலம் அனுமதி பெற்ற உமர்[ரலி] அவர்கள், தன்னை அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு முன்பாக மறுபடியும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களிடம் அனுமதி கேட்குமாறு கூறுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அல்லாஹ் உமர்[ரலி] அவர்களின் உள்ளத்தை விசாலமாக்கியிருக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிமல்லாத காந்தி அவர்கள், உமருடைய ஆட்சி போன்று ஆட்சி வேண்டும் என்று சிலாகித்து சொல்லும் அளவுக்கு உமர்[ரலி] அவர்களின் வாழ்க்கை/ஆட்சி இருந்தது. அந்த உமர்[ரலி] அவர்களின் கொள்கை வழிவந்த நாம் இனியாகிலும் அடுத்தவர் நிலத்தையோ, அடுத்தவர் உரிமையையோ பறிக்காமல் வாழ்ந்து மரணிக்க முயற்ச்சிப்போம்.

கருத்துகள் இல்லை: