பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்ற கருத்து அனைவராலும் பேசப்பட்டாலும், உண்மை என்னவோ நேர்மாறாகத்தான் இருக்கிறது. ஒரு தவறை எளியவன் செய்தால் எளிதில் பாயும் சட்டம், அதே தவறை வலியவன் செய்தால் அவனுக்கு வாயிற்காவல் காக்கிறது. இதுபோக நாட்டின் அரசியலமைப்பு சட்டங்கள் அதிகார மையத்தில் வீற்றிருப்பவர்கள் சிலருக்கு கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. ஒரு ராமசாமி மீது யார் வேண்டுமானாலும் வழக்குப் போடலாம். எப்போது வேண்டுமானலும் கைது செய்யப்படலாம். அதே ராமசாமி ஒரு மாநிலத்தின் முதல்வர் என்றால் அவர் ஊழலே செய்தாலும் அது பகிரங்கமாக தெரிந்தாலும் அவர் மீது யாரும் வழக்குப் போட்டுவிட முடியாது. கவர்னரின் அனுமதி தேவை.
அதே போன்று ஒரு நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்து, அந்த உத்தரவுக்கு மாற்றமாக நமது நாட்டு அதிகார வர்க்கம் நடந்துகொண்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா என்றால் பாயும்; ஆனால் பாயாது. உதாரணமாக பாபர் மஸ்ஜிதுக்கு எந்த பங்கமும் வராமல் பாதுக்காப்பேன் என்று உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த அன்றைய உ.பி. சங்பரிவார முதல்வர் கல்யாண்சிங், நீதிமன்றத்திற்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்க எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்தார். நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய நீதிமன்றத்தை அவமதித்த இவருக்கு எத்தனை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது? ஒரு நாள். அதுவும் வீட்டுக்காவல். இதையே ஒரு சாமான்யன் செய்திருந்தால் அவன் ஜாமீனில் கூட வெளியே வரமுடியாத அளவுக்கு தண்டனை பெற்றிருப்பான் என்பதில் மாற்றுக்கருத்து உண்டா? ஏன் இந்த வேறுபாடு? காரணம் அதிகார மையம் என்பதால் தானே!
நமது நாடுதான் இப்படியிருக்கிறது என்றால் அண்டை நாடுகள் சிலவற்றில் கூட ஆண்டான்-அடிமை நீதி பரிபாலனம் நிலவுவதைப் பார்க்கிறோம். பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பைப் பார்ப்போம்.
தற்போதைய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கடந்த 1990களில் ஏராளமான ஊழல் வழக்குகளில் சிக்கினார். அவற்றில், சுவிட்சர்லாந்தில் தொடரப்பட்ட சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கும் ஒன்றாகும்.
ஆனால், கடந்த 2007ம் ஆண்டு முஷரப் அதிபராக இருந்தபோது கொண்டு வந்த சட்டத்தால், ஆயிரக்கணக் கான ஊழல் வழக்குகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, சர்தாரி மீதான ஊழல் வழக்குகளும் கைவிடப்பட்டன. ஆனால், முஷரப் கொண்டு வந்த இச்சட்டம் செல்லாது என்று கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்த பிரதமர் யூசுப் ராசா கிலானி முன்வரவில்லை. கோர்ட்டு கூறியபடி, சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை மீண்டும் நடத்தும்படி, சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதமும் எழுதவில்லை. இதனால், கிலானி மீது சுப்ரீம் கோர்ட்டு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதை நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணைக் காக, இரண்டு தடவை சுப்ரீம் கோர்ட்டில் கிலானி ஆஜரானார். அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி, அவர் தாக்கல் செய்த மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் 26ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கிலானியும் ஆஜரானார்.
கோர்ட்டு அறையின் மத்தியில் உள்ள கூண்டுக்கு கிலானி சென்றார். சிறப்பு பெஞ்சின் தலைவர் நீதிபதி நசிருல் முல்க், தீர்ப்பை வாசித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்காக, பிரதமர் கிலானி மீதான கோர்ட்டு அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். எனவே, கோர்ட்டு கலையும்வரை அவர் நிற்க வேண்டும் என்று அடையாள தண்டனை விதித்தார். தண்டனை அறிவிப்புக்கு பிறகு அவர் 30 வினாடிகள் மட்டுமே நின்றதால், அதுதான் அவர் அனுபவித்த தண்டனை ஆகும். அதே நேரத்தில் கிலானி மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதால் அவர் பதவிக்கு ஆபத்து என்றும் கூறப்படுகிறது.
இந்த தீர்ப்பை நாம் பார்க்கும் போது, பள்ளிக்கூடத்தில் சேட்டை செய்யும் மாணவனை, ''இந்த பீரியட் முடியும் வரை நீ பெஞ்சில் ஏறி நிற்கவேண்டும்' என்று ஆசிரியர் தண்டனை விதிப்பது போல் உள்ளது. பலகோடி ரூபாய்கள் ஊழல் செய்ததாக கூறப்படும் சர்தாரியின் மீதான வழக்கை புறந்தள்ளியதன் மூலம் நாட்டுமக்களுக்கு துரோகம் இழைத்துள்ள ஒருவருக்கு சில வினாடிகள் நிற்பது மட்டுமே தண்டனை என்ற தீர்ப்பு, கல்யான்சிங்கிற்கு நமது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நினைவு படுத்துகிறது.
அதே நேரத்தில், கிலானி ஒரு பிரதமராக இருந்ததும் நம்முடைய தமிழக முதல்வர் பாணியில் வழக்கு விசாரணைக்கு ஆண்டுக்கணக்கில் வாய்தா வாங்கவில்லை. நம்முடைய முதல்வர் பாணியில் கோர்டில் ஆஜராகாமல் இருக்க காரணம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால் நீதி விசயத்தில் நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த ஆண்டான் அடிமை பாரபட்சம் ஒழியவேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நிலைவரவேண்டும். அதற்கு இஸ்லாம் ஒரு அழகான தீர்வைக் காட்டுகிறது. இறைத்தூதர் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்;
(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி [பாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃ பாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள்.
நூல்; புகாரி.
இந்த சம்பவத்தில் என்னுடைய மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கரத்தை நான் துண்டிப்பேன் என்று முஹம்மத் நபி அவர்கள் சொல்லி, சட்டத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது; யாருக்காகவும் சட்டம் வளையக்கூடாது. ஒரு தவறை செய்யும் சாமான்யனுக்கு கிடைக்கும் அதே தண்டனை எத்தகைய அதிகார மையத்தில் உள்ளவராக இருந்தாலும் கிடைக்கவேண்டும் என்ற நீதியின் இலக்கணத்தை செயல்படுத்திய பாங்கை நீதிமன்றங்கள் கையிலெடுத்தால், அநீதி அடியோடு மாண்டுவிடும் தானே!
-தீர்ப்புகள் வரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக