அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

உலக சிக்கன நாள்; சிக்கனமும்-கஞ்சத்தனமும்!



அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இன்று உலக சிக்கன நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும். கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய தேவையை மறுப்பதாகும். மனிதனை படைத்த அல்லாஹ், மனிதனின் வாழ்வில் அத்துணை பிரச்சினைக்கும் தீர்வு சொல்லும் தனது மார்க்கமான இஸ்லாத்தில் குர்ஆன்-மற்றும் நபிமொழிகள் வாயிலாக இந்த விசயத்திற்கும் வழிகாட்டியுள்ளான்.பொதுவாக இஸ்லாம் வணக்கமாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் அதில் நடுநிலை பேன சொல்லும் மார்க்கமாகும். அந்தவகையில் செலவு செய்வதை பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில்;

இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.[அல்-குர்ஆன் 25:67 ]

இந்த வசனத்தில் அல்லாஹ், நாம் எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறான். நம்முடைய தேவைகளுக்காக செலவு செய்வதை மார்க்கம் தடுக்கவில்லை. ஆனால் அதில் வீண் விரையம் வந்துவிடக்கூடாது. மேலும் கஞ்சத்தனமாக இல்லாமல் நடுநிலையாக இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்காட்டுகின்றான் . ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பாலோரின் நிலை என்ன..? 'வைச்சா குடுமி; இல்லைன்னா மொட்டைஎன்பார்களே அதுபோன்று, ஒன்று ஆடம்பரம் என்ற பெயரில் வீண் விரயம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது சிக்கனம் என்ற பெயரில் வடிகட்டிய கஞ்சர்களாக இருக்கிறார்கள். வசதி படைத்த முஸ்லிம்களின் வீடுகளில் தேவைக்கதிகமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு அவை விரையமாக்கப்படுகிறது. இதுபோக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களில் தங்களின் 'பணத்திமிரை' ஊரறிய செய்ய தேவைக்கு அதிகமாக உணவுகள், ஆடம்பர செலவுகள், மார்க்கம் அனுமதிக்காத பல்வேறு அனுஷ்டானங்கள் இவைகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்கள் வீன்விரையம் செய்யப்படுகிறது. இப்படி வீன்விரையம் செய்பவர்கள் பற்றி இதோ அல்லாஹ் கூறுகின்றான்;

மேலும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)[அல்-குர்ஆன் 4:38 ]

மேலும் அல்லாஹ்கூறுகின்றான்;மேலும் விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தான் தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.[அல்-குர்ஆன் ]

இறைவனின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு வீன்விரையம் தவிர்ப்போம். நம்முடைய தேவைகளை கணக்கிட்டு தேவையான உணவுகளை தயாரிப்போம். திடீர் என்று ஒரு விருந்தாளி வந்தாலும் அவர்களுக்கென மாற்று உணவு தயாரிக்க இப்போதுள்ள நவீன காலத்தில் உடனே சாத்தியமானதுதான். அப்படி இல்லையென்றால் கூட ஒருவர் உணவு இருவருக்கு போதுமானது என்ற நபிமொழிக்கு ஏற்ப நம்முடைய உணவை பங்கிட்டு வழங்கினால் அதில் அல்லாஹ் நிச்சயமாக பரக்கத் செய்வான். மேலும் வசதி படைத்தவர்க்ள அணியும் ஆடைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியாதவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உபயோகித்த ஆடைகளை தேவையுடையவர்களை தேடி வழங்கினால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும். மாறாக நாம் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்; நாம் அணிந்த ஆடையை சாதரண ஒருவன் அணிவதா..? என்ற கர்வத்துடன் தூக்கி குப்பையில் வீசினால் இதுவும் வீண் விரயமாகும். இதுவும் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியதாகும்.

அடுத்து அல்லாஹ் செல்வத்தை தந்திருந்தும் கஞ்சத்தனம் செய்பவர்கள் பற்றி எடுத்துக்கொண்டால் இவர்கள் தங்களை மிகப்பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் கூத்து சொல்லிமாளது. ஒரு சோப்பு வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு இத்துணை நாளைக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கெடு விதிப்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட கெடுவுக்கு முன்னால், அந்த மனைவி ஏங்க! சோப்பு காலியாயிருச்சு என்று சொன்னால் அவ்வளவுதான் இவன் அதற்காக போடும் சத்தம் அடுத்த வீடுதாண்டி கேட்கும். சோப்பு என்பது கரையக்கூடியது அது என்ன கல்லிலா தயாரிக்கப்பட்டது அப்படியே இருப்பதற்கு..? அல்லது அது என்ன சாப்பிடக்கூடிய பொருளா..? மனைவி லேசா கடிச்சிருப்பா என்று சொல்வதற்கு ..? இது உதாரணம் தான்! இவ்வாறான கஞ்சர்களை, சாப்பிட்ட கையால் காக்கா விரட்டமாட்டன் என்பார்கள்ஏனெனில் இவன் கையில் ஒட்டியிருக்கும் சோத்து பருக்கை கீழே விழுந்து அதை காக்கா தின்றுவிடக்கூடாதாம். இவ்வாறு கஞ்சத்தனம் செய்பவர்களை பற்றி அல்லாஹ்,

 
அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (47:38)

எனவே, அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை அவன் விதித்த வரம்புகளுக்குட்பட்டு அனுபவிப்போம். மேலும் அவன் வழியில் செலவும் செய்வோம். நமது சந்ததிகளுக்காக சேமிக்கவும் செய்வோம். அதே நேரத்தில் நம்முடைய உள்ளத்தில் கஞ்சத்தனம் வந்துவிடாமலும், நம்முடைய செயலில் வீண் விரையம் வந்துவிடாமலும் பார்த்துக் கொள்வதோடு, அதற்காக அல்லாஹ்விடத்திலும் பிரார்த்திப்போம்.

குறிப்பு; இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் உலக சிக்கன நாளை ஆதரித்து இக்கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக இந்த நாளில் எழுதினால் மாற்றார்களும் சிக்கனம் குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளங்கிக்கொள்வார்கள் என்பதற்காக எழுதப்பட்டது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை: