அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 17 ஜூன், 2011

மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம்!

பிஸ்மில்லாஹ்....

கட்டுரையாளர்;முஹம்மட் அர்ஷாத் அல் அதரி arshathalathary@gmail.com

‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.’ (அல்குர்ஆன் 09:36)

ரஜப் புனிதமிக்க மாதம்
ரஜப் என்பது இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் ஏழாவது மாதம் ஆகும். அம்மாதத்தினைப் பற்றி அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடும் போது,

‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 09:36)

அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்ற புனிதமான அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரம் ரஜப் என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்;

‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதா துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி நூல்: ஸஹீஹுல் புஹாரி- 3197)


இவ்வாறாக அருள்மறைக் குர்ஆனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிறப்பித்துக் கூறுகின்ற ரஜப் மாதத்திற்கென ஏதேனும் விஷேட வணக்க வழிபாடுகள் நமக்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றதா? என நோக்குவோமாயின் திருமறைக் குர்ஆனிலோ ஆதாரபூர்வமான நபி மொழிகளிலோ ரஜப் மாதத்திற்கென பிரத்தியேக வணக்க வழிபாடுகள் எதுவும் கற்றுத் தரப்படவில்லை என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ரஜப் மாதமும் அரங்கேற்றப்படும் அநாச்சாரங்களும்

எமது இஸ்லாமிய சமுதாய மக்களால்; ரஜப் மாதத்தின் பெயரால் பல்வேறு அநாச்சாரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மேலும் கண்ணியமிகு மார்க்க அறிஞர்களால் ரஜப் மாதத்தின் பெயரால் மிம்பர் மேடைகளிலும் சொற்பொழிவுகளிலும் பல்வேறு ஆதாரபூர்வமற்ற செய்திகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் கூறப்படுகின்றன. அவ்வாறான ஆதாரபூர்வமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சிலவற்றை நோக்குவோம்.


  • ‘நிச்சயமாக சுவனத்தில் ஓர் ஆறு உண்டு. அதற்கு ரஜப் என்று சொல்லப்படும். அதன் நீர் பாலை விடக் கடும் வெண்மையானதும் தேனைவிட சுவையானது மாகும். எவரொருவர் ரஜப் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் அவ்வாற்றிலிருந்து நீர் புகட்டுவான்.’
இச் செய்தியில் ‘மூஸா மன்ஸுர் பின் யதீத்’ என்கின்ற யாரென்று அறியப்படாத இரண்டு நபர்கள் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ரஜப் மாதம் வந்து விட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்; அல்லாஹ்வே! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் வெள்ளிக்கிழமை இரவு வெண்மையானதும் அதன் பகல் பசுமையானதும் எனக் கூறுவார்கள்.’
இச் செய்தியில் ‘ஸாயிதா பின் அபிர்ருக்காத்’ என்கின்ற ஹதீஸ்கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ரஜப் மாதம் அல்லாஹ்வின் மாதமாகும். ஷஃபான் எனது மாதமாகும். ரமழான் எனது சமூகத்தினரின் மாதமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
இச் செய்தியில் இடம்பெறும் ‘அல்கமா’ என்பவர் நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்களிடமிருந்து எதனையும் செவியுறவில்லை. மேலும் இச் செய்தியில் இடம்பெறும் ‘ஹிசாயி’ என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ஏனைய மாதங்களோடு ஒப்பிடுகையில் ரஜப் மாதத்தின் சிறப்பு ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கின்ற சிறப்பை போன்றதாகும்.’
மேலுள்ள செய்தியில் நபிமொழிகளை இட்டுக்கட்டி கூறுபவர் என இமாம்களுக்கு மத்தியில் பிரபல்யமான ‘ஹிபத்துழ்ழாஹ் இப்னுல் முபாரக் அஸ்ஸக்தி’ என்பவர் இடம்பெறுவதால் இது ஆதாரப்பூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்திற்குப் பின் ரஜபிலும் ஷஃபானிலும் நோன்பு நோற்பார்கள்.’
இச் செய்தியில் ‘யூசுப் பின் அதிய்யா’ என்கின்ற ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ரஜப் மாதம் அல்லாஹ்வின் மாதமாகும். யார் ரஜப் மாதத்தின் ஒரு தினத்தில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு மிகப்பெரும் இறைதிருப்தி கிடைப்பது கடமையாகி விடும்.’
மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அபூஹாரூன்’ எனும் ‘மத்ரூக்’ ‘கைவிடப்பட்டவர்’ என ஹதீஸ்கலை அறிஞர்களால் ஓரங்கட்டப்பட்ட ஒருவர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘யார் ரஜப் மாதத்தின் முதலாவது இரவில் மஃரிப் தொழுகையைத் தொழுது பின்னர் 20 ரக்அத்துகளைத் தொழுது ஒவ்வொரு ரக்அத்திலும் சூறா பாத்திஹாவையும் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஒரு தடவையும் ஓதி ஒவ்வொரு ரக்அத்திலும் பத்து முறை ஸலவாத்துச் சொன்னால் அவருக்கு கிடைக்கும் வெகுமதிகளை நீங்கள் அறிவீர்களா? என வினவிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவரது பொருளாதாரத்தையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பதோடு கப்ரின் வேதனையை விட்டும் அல்லாஹ் அவரைப் பாதுகாக்கின்றான். மேலும் அவர் எவ்வித வேதனையோ கேள்வி கணக்கோ இன்றி மின்னல் வேகத்தில் ‘ஸிராத்’ எனும் பாலத்தைக் கடந்து செல்வார் எனக் கூறினார்கள்.’
இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘எவரொருவர் ரஜப் மாதத்தின் மூன்று நாட்கள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகின்றான். ஒருவர் ஏழு தினங்கள் நோன்பு நோற்றால் அவரை விட்டும் நரகத்தின் ஏழு வாயில்களையும் மூடிவிடுகின்றான்.’
இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அம்ருப்னு அஸ்ஹர்’ பொய்யரென இமாம் ‘யஹ்யா இப்னு மயீன்’ மற்றுமுள்ள ஹதீஸ் கலை அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளதால் இச் செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘நிச்சயமாக ரஜப் மாதம் மகத்தான மாதமாகும். யார்; அதில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஆயிரம் வருடங்கள் நோற்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான்.’
மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘இஸ்ஹாக் பின் இப்றாஹிம் அல்குத்தலி’ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி பலவீனமானவர் ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘எவரொருவர் ரஜப் மாதம் நோன்பு நோற்று அதில் நான்கு ரக்அத்துகள் தொழுதால் சுவனத்தில் அவரது தங்குமிடத்தைக் காணும் வரை அல்லது அவருக்கு காண்பிக்கப்படும் வரை மரணிக்கமாட்டார்.’
இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேலும் இச்செய்தியில் இடம்பெறும் உஸ்மான் பின் அதாஃ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர். ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

ரஜப் மாதமும் விஷேட உம்ராக்களும்
ரஜப் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்கள் விஷேட உம்ரா பயணம் மேற்கொள்கின்றனர். உம்ரா பயணம் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமே. ஆனால் அதனை ரஜப் மாதத்தில் நிறைவேற்றுவது சிறப்புக்குரியது எனக் கருதுவது நபிகளாரின் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும்.

 அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்க கூடிய நபிமொழி ரஜப் மாதத்தை தெரிவு செய்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விஷேட உம்ராக்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதனை தெளிவுபடுத்துகின்றது.


‘ஆயிஷா (ரழி) அவர்களிடம் நான் (நபிகளாரின்; உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை! என்றார்கள்.’ (அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்] நூல்: ஸஹீஹுல் புஹாரி-1777)


கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) தமது மவ்லூஆத் என்ற நூலில் தொகுத்தளித்துள்ளார்கள்.

நன்றி;அல்-அதர் இஸ்லாமிய மாத இதழ்.

கருத்துகள் இல்லை: