அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருநேரத்தை, ஒருநாளை,ஒருமாதத்தை, ஒருஆண்டை சிறப்பித்து சொல்வதாக இருந்தாலும் அல்லது மேற்கண்ட விசயங்களை கெட்டவை என்று கருதுவதாக இருந்தாலும் அவை அல்லாஹ்வாலோ,அல்லது ரசூல்[ஸல்] அவர்களாலோ சொல்லப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு சொல்லப்படாத எதுவும் மார்க்கமாகாது என்பதுதான்  அடிப்படையான விஷயமாகும்.

12 மாதங்களில் இஸ்லாம் நான்கு மாதங்களை புணிதமாதம் என்று அடையாளம் காட்டி இந்த மாதங்களில் போர்செய்வது கூடாது என்று தடுத்திருக்கிறது. அவை முறையே துல்கஃதா,துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகியவையாகும். அதுபோல பீடை மாதங்கள் என்று ஏதாவது ஒருமாதம் மார்க்கத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம்  சமுதாயம் ஸஃபர் மாதத்தை பீடைமாதம் எனக்கருதி அம்மாதத்தில் சுபகாரியங்கள் எதையும் செய்வதில்லை.

இந்துக்கள் ஆடிமாததை பீடைமாதமாக கருதி, அம்மாதத்தில் சுபகாரியங்களை மேற்கொள்ளமாட்டார்கள். கடைகளில் 'ஆடித்தள்ளுபடி' என்று இருப்புகளை தள்ளிவிடுவார்கள். அதுபோல முஸ்லிம்களும் ஸஃபர் மாதத்தை தள்ளுபடி மாதமாக்கிவிட்டனர். ஒரு மாதத்தை பீடை என நம்புவது முஸ்லிம்களின் வழிமுறையல்ல. மாறாக மக்கத்து காஃபிர்களின் வழிமுறையாகும்.

அறியாமைக்காலத்தில் மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடைமாதமாக கருதிவந்தனர். நபி[ஸல்]அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் செய்தனர்.ஷவ்வால் மாதத்தில்தான் நபியவர்களுடன் இல்லறவாழ்வை தொடங்கினேன். என்னைவிட நபியவர்களுக்கு விருப்பமான மனைவி யாரும் உண்டா? என்று அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கும் செய்தி முஸ்லீம்,அபூதாவூத் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.

பீடைமாதம்  என்று கருதப்பட்ட மாதத்தில், அதை உடைத்து எரியும்வன்னம் நபியவர்கள் ஆயிஷா[ரலி]அவர்களை திருமணம் செய்து, சிறப்புற வாழ்ந்துகாட்டி,அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் மடியிலேயே உயிர்துறந்தார்களே! இதிலிருந்து விளங்கவில்லையா? பீடைஎன்று எதுவுமில்லை என்று.

மேலும், ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் நல்லது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் தீயது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? உதாரணத்திற்கு பத்துமணிக்கு எனக்கு குழந்தை பிறக்கிறது. இந்தநேரம் எனக்கு மகிழ்ச்சியான நேரம். என்வீட்டிற்கு நாலுவீடுதள்ளி ஒருவரின் குழந்தை அதேநேரத்தில் இறந்துவிடுகிறது. இது அவருக்கு சோகமான நேரம். ஒருநிமிடத்தில் உலகத்தில் அனைவருக்கும் ஒரேமாதிரி சம்பவங்கள் நிகழாதபோது, ஒருமாதத்தை பீடைஎன ஒதுக்குவது பகுத்தறிவிற்கு ஏற்றதா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். [புகாரி]

மேலும் இம்மாதத்தில் பீடையை போக்குகிறேன் என்ற பெயரில் மாவிலையில் எழுதிக்குடிப்பது, கடலில் குளிப்பது, புல்வெளியை மிதிப்பது இப்படியான மூடபழக்கங்களும் அரங்கேறுகிறது. இது நிச்சயமாக மார்க்கம் காட்டித்தராத வழியாகும். மேலும் ஒடுக்கத்துப்புதன் என்ற ஒரு வார்த்தையைக்கூட அல்-குர்'ஆனிலோ, ஹதீஸிலோ காணஇயலாது.

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)

எனவே, ஒருகாலத்தில் முஸ்லிம்களுக்கும்-மார்க்கத்திற்கும் மத்தியில் இருந்த இடைவெளியை பயன்படுத்தி வயிறையும்,பாக்கெட்டையும் ஒருசேர நிரப்ப எண்ணியவர்களின் கண்டுபிடிப்பே  ஸஃபர் பீடையும், ஒடுக்கத்துபுதனும் என்பதை விளங்கி இந்த மூடநம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விலகவேண்டும். மேலும், ஜாஹிலியாக்களின் அறியாமையை நபி[ஸல்] அவர்கள் எப்படி செயல்வடிவில் உடைத்து எரிந்தார்களோ அதுபோல, தவ்ஹீத்வாதிகள் இந்த ஸஃபர்மூட நம்பிக்கையை உடைத்தெறிய, ஸஃபர்மாதத்தில் தங்கள் குடும்ப திருமண மற்றும் சுபகாரியங்களை நடத்த முன்வரவேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் உள்ளதை மட்டும் நம்பக்கூடிய,அதனடிப்படையில் அமல் செய்யக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!

கருத்துகள் இல்லை: